Sunday, December 03, 2006

குறும்பு - 1

வெள்ளந்தியா சுத்தி வந்த
காலந்தான் மறக்கவில்லை

அக்குறும்பு செய்யாதீன்னு
அம்மாச்சி சத்தம் போட
சத்தம் கேட்டு குஷியாகி
கூடைக் கோழி திறந்து விட்டு
எதை தொறத்தறதுன்னு முழிக்க
வைச்சு அக் குறும்பில்
வெள்ளந்தியா சிரிச்சு திரிஞ்ச
காலந்தான் மறக்கவில்லை

காலைல போன புள்ள
காணலையேன்னு வீட்டிலதான்
அப்பனாத்தா கவலை கொள்ள
ரெண்டு ரூபா பந்துமா
தென்னை மட்டை பேட்டுமா
இருட்டியும் தெரு லைட்டோரமா
வெள்ளந்தியா விளையாண்டு பறந்த
காலந்தான் மறக்கவில்லை

எலந்த வடை ருசிக்கு முன்னே
கோடி ரூபா தேவையில்லை
வாங்கி தின்ன கொள்ளை
காசு எல்லாம் தேவையில்லை
கண்டதை வாங்கி திங்குதேன்னு
அப்பன் ஆத்தா கவலை கொள்ள
வெள்ளந்தியா தின்னு ரசிச்சு ருசிச்ச
காலந்தான் மறக்கவில்லை

சுரைக்காய் எல்லாம் கட்டினதில்லை
புதுசாப் போட்ட சொக்காயோட
சிநேகிதக்காரங்க தண்ணில போட
ததக்கா பிதக்கான்னு நீச்சல் கத்து
தூக்கி போட்ட பயலுகளை
எல்லாம் தண்ணில அமுக்கி அமுக்கி
வெள்ளந்தியா துள்ளி நீந்தின
காலந்தான் மறக்கவில்லை

பக்கத்து வீட்டு பாரதி அக்கா
வயசுக்கு வந்ததுக்கு அப்புறமும்
ஜடையை புடிச்சு இழுத்துட்டு
அவிங்கம்மா அடிக்கு தப்பி
அவிங்க ஜடையையும் இழுத்து ஓடி
பின்னால தாஜா செஞ்சு
வெள்ளந்தியா வலைய வந்த
காலந்தான் மறக்கவில்லை

சோறு தண்ணி தேவையில்லை
அப்பன் ஆத்தா நெனைப்பில்லை
வானம் எல்லைன்னு தோணவில்லை
மழையில ஜலதோஷம் நினைச்சதில்லை
இருட்டைத் தவிர பயமேயில்லை
கவலையோட அர்த்தமே தெரிஞ்சதில்லை

வெள்ளந்தித்தனம் மறந்(த்)து போன
இன்னைக்கும்
வெள்ளந்தியா சுத்தி வந்த
காலம் மட்டும் மறக்கவில்லை

Monday, November 20, 2006

இலவசம் இளப்பம் காதல்

"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியெடுக்கும்
தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசியிருக்கும்
பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே”

கல்பனா பக்கத்தில் கொஞ்ச நேரம் இருந்தா இந்தப் பாடலைக் கேட்கலாம். கல்பனாவுக்கு எல்லாமே தேடல் தான். அவங்க அப்பா கத்துக் கொடுத்தது. சின்ன வயசில் அது என்ன? இது என்ன? என்று கேள்வி கேட்கும் போது பொறுமையா அது என்ன என்று சொல்லிக் கொடுப்பார். ஆனால் அதற்கு அப்புறம் வேற எதைப் பத்தியும் கேட்க முடியாது. அதுக்குள்ள இவங்க அப்பா அதைப் பத்தி கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுவார். பேரை மட்டும் தெரிந்து கொள்ளாமல் அதனைப் பற்றி கொஞ்சம் விவரமும் தெரியும் வரை விட மாட்டார்.

சாமின்னா என்னான்னு தெரியணுமா? எனக்கு தெரிஞ்சது இது. இது அவங்க சொன்னது. இது இன்னொருத்தர் சொன்னது. இங்க இது மாதிரி சொல்லி இருக்கு. ஆக இதில் இருந்து சாமின்னா என்னான்னு நீயே முடிவு பண்ணிக்கோ அப்படின்னு சொல்லீடுவார்.

"இன்னைக்கும் எல்லாருமே கடிவாளம் போட்ட குதிரை மாதிரி எல்லாரும் யாரோ எப்பவோ சொன்னதை அப்படியே நம்பீட்டு இருக்காங்க, மாற்றம் ஒண்ணு மட்டும் தான் நிலையானதுன்னு எல்லோரும் புரிஞ்சுக்கணும். மனிதன்,மதம்,அரசாங்கம்,கொள்கைகள் எல்லாமே சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரியும் காலகட்டத்துக்கு தகுந்த மாதிரியும் மாறிகிட்டே இருக்கணும் அப்போ தான் நிலைக்க முடியும். பழையன் கழிதலும், புதியன புகுதலும் என்பது தொடர்ச்சியா நடந்துகிட்டே இருக்கணும்.

மாற்றங்களை யாரும் ஒத்துக்கலேன்னாலும் நடந்துகிட்டே தான் இருக்கும். அதை ஒத்துகிட்டு அமைதியா வழிவிடாம எங்க அப்பன் பாட்டன் காலத்தில் இருந்து இருக்கறதுன்னால நான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு சில பேர் நினைக்கறதுனால தான் எல்லாப் பிரச்சனையும்.

இதில என்ன ஒரு வேதனையான விஷயம்ன்னா ஒரு பழையதுக்கு பதிலா புதுசா ஒண்ணை நுழைக்கறவங்களே அது பழசாகும் வேற புதுசா ஒண்ணு வரும் பொழுது குறுக்கே நிற்கறாங்க இதனால் எத்தனை பிரச்சனைகள் தெரியுமா. மனித சரித்திரம் புல்லா இது போலத் தான் நடந்துட்டே இருக்கு."

என்று பேசிக் கொண்டே வந்த கல்பனா அபி கவனம் எங்கோயோ போவதைப் பார்த்து விட்டு

"ஏண்டா குரங்கு நான் எவ்வளவு சீரியஸா பேசீட்டு இருக்கேன் அங்க அந்த மஞ்ச சுடிதாரைப் பார்த்து ஜொள்ளு விட்டுட்டு இருக்கியா?" என்று தோளில் ஓங்கிக் குத்தினாள்.

"இல்லை இல்லை. மதங்கற அமைப்பு ரொம்ப தப்புதான். உலகில் பல அநியாயத்துக்கும் அதுதான் காரணமா இருக்கு நான் ஒத்துக்கறேன்." என்றான் அபி.

"ஏண்டா நான் பேசுன ஒரு வார்த்தையைக் கூட கவனிக்கலியா?" என்று மீண்டும் குத்தினாள் கல்பனா.

"இல்லை இல்லை மதம் பத்தி பேசலியா? அப்போ பிளாக் ஹோல்சைப் பத்தியா? ஐய்யோ அடிக்காத ப்ளீஸ். அப்போ தேடல் பத்தி பேசினியா? ஐயோ அடிக்காத அடிக்காத ப்ளீஸ்" என்றான் அபி.

"போடா பன்னி, குரங்கு, கரடி எங்கூட பேசாத போடா" என்று திட்டிக் கொண்டே வந்தாள்.

"அய்யோ சாரிமா சாரிமா நீ என்ன டாபிக்கைப் பத்தி பேசினேன்னு சொல்லு நீ என்ன பேசுனேன்னு நான் அப்படியே திரும்பி பேசிக் காட்டுறேன். ப்ளீஸ் ப்ளீஸ்." என்றான் அபி.

அவனுடன் சண்டைப் போட்டாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை ரெண்டு நிமிஷம் கூட தாங்காது என்று தெரிந்து வைத்திருந்த கல்பனா. "ஏண்டா நான் எவ்வளவு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசிட்டு இருக்கேன். போயும் போயும் அந்த யெல்லோ சுடிதாருக்காக நீ இப்படி பண்ணீட்டியேடா?" என்றாள்.

"எல்லாத்துலேயும் தொலை நோக்குப் பார்வை வேணும்ன்னு சொல்லுவே இதில் மட்டும் உனக்கு அது இல்லையே. நான் அந்த யெல்லோ சுடிதாரைப் பார்க்கலே. அதையும் தாண்டி ஒரு பிங்க் கலர் டாப்ஸ் போட்டுகிட்டு ஒரு குட்டி நிக்குது பாரு அதைத் தான் பார்த்தேன்." என்றான் அபி.

"டேய் உன் ரேஞ்சுக்கு தகுந்த மாதிரி பாருடா. குரங்கு மாதிரி இருந்துட்டு உனக்கு கிளி கேட்குதா? அடங்குடா" என்றாள் கல்பனா.

ஏன் எனக்கு என்ன குறைச்சல் என்று ஒரு ஒரு நிமிஷ சண்டை மீண்டும் ஆரம்பமானது.

அபி கல்பனா அப்பாவின் உயிர் தோழனின் பிள்ளை. இருவரும் சிறு வயதில் இருந்து இணைபிரியாத நண்பர்கள். அபி கல்பனாவிற்கு நேர் எதிர். எல்லாத்தையும் அனுபவிக்கணும் ஆராயக் கூடாது என்று நினைக்கும் ஆள்.

வாழ்க்கையே கண் மூடி கண் திறக்கறதுக்குள்ளே முடிந்து விடும் அதனால் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கை கொண்டவன்.

இந்த இரு துருவங்களும் பிறந்ததில் இருந்து பிரிந்ததை கிடையாது. ஒட்டிப் பிறந்த சயாமீஸ் டிவின்ஸ் மாதிரி சேர்ந்தே இருப்பார்கள்.

பூப்பெய்திய காலத்தில் கல்பனா அம்மா சொன்ன தகவல்களைக் கல்பனா அபியிடம் சொல்ல கல்பனாவை விட அதிக கவலைப் பட்டு ஒரு நாள் முழுக்க சாப்பிடவே இல்லை அபி.

இருவரும் ஒருவர் காலை ஒருவர் வாரி விடுவதிலும் வல்லவர்கள்.

அதுவும் கல்பனாவோட ரகசிய டைரி பத்தி அபி கிண்டல் அடிக்க ஆரம்பிச்சா கல்பனா உடனே டென்ஷன் ஆகி விடுவாள்.

கல்பனா பத்தி அபிக்கு தெரியாதது என்று ஒன்றுமே இல்லாவிட்டாலும் கல்பனா ரகசியமா ஒரு டைரி எழுதி வந்தாள். அதை அபிக்கு தெரியாமல் பல காலம் ஒளித்து வைத்தாலும் கடைசியா அபி கண்ணில மாட்டீடுச்சு. விடுவானா அன்னைக்கு இருந்து ஒரே கிண்டல்தான்.

கல்பனாவுக்கு ராஜகுமாரன் வெள்ளைக் குதிரையில் வந்து இளவரசியை மீட்டுச் செல்வது போன்ற கதைகள் மிகவும் பிடிக்கும். அவளும் அவளுடைய ராஜகுமாரனைப் பற்றி கற்பனைகளை எழுதி வைத்திருந்தாள் அதுதான் அபி கையில் சிக்கிக் கொண்டு விட்டது. அன்றையில் இருந்து பயங்கரக் கிண்டல்தான்.

அதுவும்

தென் பொதிகைக் காற்றும்
தேமதுர இசையும்
அந்தி நேர வண்ணங்களும்
காற்றில் தவழுந்து சேரும் சாரல்களும்
நீ இருக்கிறாய் என்பதை
உறுதிப் படுத்திக் கொண்டிருக்கின்றன

இதை ஒவ்வொரு தடவையும் சொல்லி கிண்டல் பண்ணி சிரிப்பது அபியின் வழக்கம்.

கல்பனாவுக்கு கல்யாண வயது வந்து விட்டதாக அவளுடைய அம்மா புலம்ப ஆரம்பித்து 3 வருடங்கள் ஆன பிறகு கல்பனாவின் அப்பா கல்யாணப் பேச்சை மெதுவாக கல்பனாவிடம் ஆரம்பித்தார்.

"அம்மா ரொம்ப புலம்ப ஆரம்பிச்சிட்டா. இதை பத்தி என்ன யோசனை பண்ணி இருக்கே?" என்று கேட்டார்.

அம்மா கேட்கும் போதெல்லாம் போம்மா உனக்கு வேற வேலையே இல்லை என்று முகம் சுழித்துக் கொண்டிருந்த கல்பனாவுக்கு இப்பொழுது என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் அப்பா நன்றாக யோசிக்காமல் அவளிடம் பேச்சை ஆரம்பிக்க மாட்டார் என்று அவளுக்குத் தெரியும்.

"எனக்கு ஒண்ணும் யோசனையே இல்லைங்க அப்பா?" என்று கூறினாள் கல்பனா.

"ஒரு நல்ல வரன் வந்திருக்கு பையன் உனக்கு ஏத்த மாதிரி இருப்பான்னு தோணுது. பார்க்க வரச் சொல்லாமா?" என்று கேட்டார் கல்பனாவின் அப்பா.

அதற்குள் ஒரே குழப்பத்தில் ஆழ்ந்த கல்பனா "நீங்க பார்த்து எது செய்தாலும் ஓகே தான்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

நேராக அபியின் வீட்டுக்கு வந்து அவனுடைய ரூமுக்கு சென்றாள் அங்கே ஒரு கர்ண கொடூரமான ஓசையுடன் குறட்டை விட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான் அபி. பக்கத்தில் சென்று "டே சனியனே எந்திரிடா" என்று அவனை உலுக்கினாள் கல்பனா.

"ஏய் குட்டிச் சாத்தான் நிம்மதியா தூங்க விடுடி" என்றபடி புரண்டு படுத்தான் அபி.

"எந்திரிடா" என்று மீண்டும் உலுக்கினாள் கல்பனா.

"ஏண்டி என்னை இப்படி வதைக்கற" என்றபடியே கண்களைத் திறந்த அபி கல்பனாவின் முகத்தை பார்த்தவுடன் "என்ன ஆச்சு?" என்றான் சீரியஸாக.

"வீட்டுல கல்யாணத்தைப் பத்தி திரும்ப பேசறாங்கடா" என்றாள்.

"அவ்வளவுதானா? நான் என்னமோன்னு நினைச்சேன். அதான் ஸ்டாண்டர்டா பதில் வைச்சிருப்பியே உனக்கு வேலையே இல்லைன்னு. நானும் ஆண்டிக்கிட்ட சொல்லீட்டே தான் இருக்கேன் சீக்கரம் கல்யாணம் பண்ணிக் குடுங்க நானாவது நிம்மதியா தூங்குவேன். காலைல 6 மணிக்கு எழுப்பி விடுறியே உனக்கே இது நியாயமா இருக்கா?" என்று சொல்லிக் கொண்டே வந்தவன் கல்பனாவின் முகத்தைப் பார்த்து அமைதியானான்.

"இந்த தடவை அப்பா இந்த விஷயத்தை பத்தி பேசினார்" என்றாள் கல்பனா.

ஒரு இரண்டு நிமிட மௌனம் நிலவியது அறையில். "அப்பா பேசினாரா? என்ன சொன்னார்?"

"நாளைக்கு காலைல பொண்ணு பார்க்க ஒருத்தர் வராங்களாம்"

"ஓ அப்படியா?" என்றான் அபி ஒரு இரண்டு நிமிட மௌனத்திற்கு பிறகு

"அது சரி உன்னோட டைரி எழுதி இருந்ததெல்லாம்?"

பேசாமல் அமைதி காத்தாள் கல்பனா.

"அதெல்லாம் அப்படியே மறந்திடப் போறியா?" என்றான் அபி.

"எல்லாப் பொண்ணுங்களுக்கும் ஒரு ராஜகுமாரன் வருவான்னு கனவு இருக்கத்தான் செய்யுது ஆனா எத்தனை பேருக்கு அந்த மாதிரி வாய்ப்பு அமையுது?"

அபி பேச்சை மாற்றுவதற்காக "ஹீம் விடு பார்த்துக்கலாம் இந்தப் பையன் தான் நீ நினைச்ச ராஜகுமாரனோ என்னமோ? சரி பொண்ணு பார்க்க வரப் போறாங்க எந்த டிரெஸ் போடப் போறே?"

"டிரெஸ் என்ன எதையாவது போட வேண்டியது தான்"

"என்ன எதையாவது போடறியா? ஒரு நாளைக்காவது ஊரில பொண்ணுங்க எல்லாரும் டிரெஸ் போடுற மாதிரி போட மாட்டியா? ஆம்பிளைப் பசங்க மாதிரியே இன்னைக்கும் டிரெஸ் போடாதே சரியா? இன்னைக்கு முதல் வேலையா உனக்கு ஷாப்பிங் பண்ணி டிரெஸ் எடுக்கணும் வீட்டுக்குப் போய் கிளம்பு நானும் இன்னும் 1/2 மணி நேரத்தில கிளம்பி வர்றேன்."

அன்று முழுவதும் ரெண்டு பேரும் ஊர் முழுக்க சுற்றி ஷாப்பிங் செய்து திரும்பினார்கள் இருவரும்.

அடுத்த நாள் காலை 8 மணிக்கு எல்லாம் கல்பனாவின் வீட்டுக்கு வந்த அபி "ஆண்டி அவளுக்கு இந்த பிங்க் கலர் சாரி, அப்புறம் இந்த பெரிய நகையா எதுவும் போட்டு விட்டுடாதீங்க. சும்மா மெல்லிசா ஒரு தங்க நகை, அப்புறம் இந்த முத்து வாங்கி வைச்சீங்களே அதை போட்டு விடுங்க. அப்புறம் அவளுக்கு மேக்கப்ன்னா என்னான்னே தெரியாது. உங்க முகத்தில இருக்கற மாதிரி நிறைய பவுடர் அப்பி விட்டுடாதீங்க." என்றெல்லாம் கல்பனாவின் அம்மாவுக்கு இன்ஸ்டிரக்ஷன் கொடுத்துக் கொண்டிருந்தான்.

"சரி பொண்ணு பார்க்க வரவங்ககிட்ட நீ யாரையாவது புதுசா மீட் பண்ணும் போது uncomfortableஆ முகத்தில் தெரியற மாதிரி uncomfortable ஒரு சிரிப்பியே அது மாதிரி சிரிச்சிடாதே. வீட்டில இருக்கும் போது இளையராஜா பாட்டு கேட்டா உன்னோட முகத்தில ஒரு அப்படியே லைட்டா ஸ்மைல் பண்ணுவியே அது மாதிரி முகத்தை வைச்சுக்கோ. இளையராஜா பாட்டு ஒண்ணை ஞாபகப்படுத்திக்கோ சரியா?" என்று படபடவென்று பொரிந்தான் அபி.

"சார் நீங்க கொஞ்சம் வெளியே இருந்தீங்கன்னா அவளை ரெடியாக்குவோம் நீங்க இங்க இப்படியே இருந்தீங்கன்னா ஒண்ணும் பண்ண முடியாது. சரியா?" என்று சொன்னாள் கல்பனாவின் அக்கா முறை வரும் சொந்தக்காரர்களில் ஒருவர்.

"ஹீம் சரி சரி" என்றபடி வெளியே சென்றான் அபி.

அரை மணி நேரம் கழித்து "டேய் இங்க வாடா" என்ற குரல் கேட்டு உள்ளே சென்றான் அபி.

அங்கே முழு அலங்காரத்தில் அன்றலர்ந்த மலர் போல நின்றிருந்தாள் கல்பனா.

"என்னடா அப்படி பார்க்கறே எப்படி இருக்கு டிரெஸ்?"

"Perfect. ஒரு நிமிஷம் இரு வெளியே என்னைக் கூப்பிட்டாங்க வந்திடறேன்"

"டேய் இருடா" என்று கூப்பிட கூப்பிட வெளியே சென்றான் அபி.

10 மணி ஆயிற்று மாப்பிளை வீட்டுக்காரர்கள் வந்து விட்டார்கள். மாப்பிளை பொண்ணு பார்க்க பகட்டா எல்லாம் இல்லாமல் சும்மா சாதாரணமாக ஜீன்ஸ் டீசர்டில் வந்திருந்தார்.

கல்பனா வெளியே வந்து அவர்களுக்கு எல்லாம் வணக்கம் சொல்லி விட்டு உட்கார்ந்தாள். மனதிற்குள் எங்கே போனான் இந்த அபி இதோ வர்றேன்னுட்டு காணாம போயிட்டான். மாப்பிளையைப் பார்த்து ஒப்பீனியன் சொல்லாம எங்கே போயிட்டான் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாள்.

கல்பனாவின் அப்பா என்னோட அந்த கலெக்ஷனைப் பாக்கறீங்களா? என்று தனியா பேச வைக்கலாம் என்று மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை தனியாக அழைத்து சென்றார்.

கொஞ்ச நேரம் அங்கே ஒரு விதமான அமைதி நிலவியது.

"ஹாய்" என்றார் மாப்பிள்ளை கல்பனாவிடம். "ஹாய்" என்றாள் கல்பனா.

"போட்டோவில பார்த்தை விட வித்தியாசமா இருக்கீங்க. ரொம்ப மாடர்னா போட்டோவில இருந்தீங்க. இப்போ டிரெடிசனலா டிரெஸ் பண்ணிட்டு இருக்கீங்க."

"By the bye உங்க டிரெஸ் செலக்ஷன் சூப்பர் ரொம்ப அழகா இருக்கீங்க" என்றார் மாப்பிள்ளை.

கல்பானவுக்கு தன்னுடைய போட்டோ கொடுக்கப் பட்டதெல்லாம் தெரியாது. ஆகவே மௌனம் காத்தாள்.

"இது மாதிரி பொண்ணு பார்க்க வர்றது எல்லாம் எனக்கு அவ்வளவா இஷ்டம் இல்லை அம்மா சொன்னாங்களேன்னு வந்தேன்." என்றார் மாப்பிள்ளை.

கல்பனா புன்னகைத்தாள்.

"நம்ம சிஸ்டமே இது மாதிரிதான் இருக்கு பாருங்க உங்களுக்கும் எனக்கும் எவ்வளவு ஒத்து வருமுன்னு கூடத் தெரியாது ஆனா வாழ்க்கை முழுக்க சேர்ந்தே இருக்கறதைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சிட்டோம்" என்றார் மாப்பிள்ளை.

"எனக்கும் இது போலத்தான் தோணுது. கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி ஒருத்தரைப் பத்தி தெரியாமா கல்யாணம் பண்ணிக்கறது கஷ்டம்தான்" என்றாள் கல்பனா.

"கரெக்ட்டுங்க. காதல்ங்கறது என்ன? நுணுக்கமா இன்னொருத்தரைப் பத்தி தெரிந்து வைச்சிக்கறது தானே? கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி நான் கல்யாணம் பண்ணிக்க போற பெண்ணுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது. என்ன டிரெஸ் போட்டா நல்லா இருக்கும் இருக்காது. அந்தப் பெண் எத்தனை விதமா ஸ்மைல் பண்ணுவீங்க? உங்க ஸ்மைலை வைச்சே அந்தப் பெண் என்ன நினைக்கிறாங்க. அப்படீன்னெல்லாம் நினைச்சேன். உங்களுக்கு கடவுள் பத்தி என்ன views? உங்களுக்கு என்ன பேசினா பிடிக்கும் என்ன பேசினா பிடிக்காது? என்ன சாப்பாடு பிடிக்கும் என்ன பிடிக்காது. இப்படி எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் நினைச்சேன். அதே மாதிரி என்னைப் பத்தியும் எல்லாமே தெரிஞ்சிருக்கணுமுன்னு நினைச்சேன். ஆனா பாருங்க நம்ம ரெண்டு பேருக்குமே அது மாதிரி எல்லாமே தெரிஞ்சவங்கன்னு யாருமே இல்லைன்னு நினைக்கறேன்?" என்றார் மாப்பிள்ளை.

கல்பனாவின் முகம் அதற்குள் மாறி இருந்தது. "என்னங்க ஆச்சு ஏன் என்னமோ மாதிரி ஆயிட்டீங்க" என்று கேட்டார் மாப்பிள்ளை

"என்னைப் பத்தி தெரியாத சில விஷயங்களைக் கூட தெரிஞ்சுகிட்ட ஒருத்தர் இருக்காருங்க. எல்லாத்திலேயும் தேடல் இருக்கணுமுன்னு நினைப்பேன் நான் அதனால என் பக்கத்திலேயே இத்தனை நாள் இருந்த ஒருத்தரை கவனிக்காம இருந்திருக்கிறேன் நான் எப்பவுமே என் பக்கத்தில இருந்ததால கொஞ்சம் தள்ளி நின்னு கவனிக்காம விட்டுட்டேன் நான். இலவசமா கிடைச்சதால இளப்பமா நினைச்சிட்டேன் நான்" என்றாள் கல்பனா.

ஒரு இரண்டு நிமிட மௌனத்திற்கு பிறகு கல்பனா "சாரிங்க இதனால் எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க" என்றாள்.

"இல்லீங்க தப்பா நினைக்கறதுக்கு ஒண்ணுமே இல்லை." என்றார் மாப்பிள்ளை.

கல்பனா அபியின் ரூமுக்குள் நுழையும் சமயம் கம்ப்யூட்டரில்

"Its only words and words are all I have to take your heart away"

என்று பாட்டு கசிந்து கொண்டிருந்தது.

மெதுவாக நுழைந்த கல்பனா "நீ ரெண்டு வகையா சிரிப்பேன்னு தெரியுமா உனக்கு? ஒண்ணு உன்னோட அசட்டு சிரிப்பு. இன்னொன்னு தினமும் காலைல என்னைப் பார்க்கும் போது இப்போ உன்னோட முகத்தில இருக்குதே அந்த மாதிரி சிரிப்பு."

"இத்தனை நாள் இதைப் பத்தி நான் யோசிச்சதே இல்லை" என்றாள் கல்பனா.

மெதுவாக பக்கத்தில் வந்த அபி அவளுடைய கரங்களைப் பற்றினான். எத்தனையோ தடவை ரெண்டு பேரும் கையோட கை தோளோடு தோள் என்றிருந்தாலும் இந்த தடவை வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தாள் கல்பனா. தன்னுடைய ராஜகுமாரன் கவர வந்ததை உணர்ந்த கல்பனா முதல் முறையாக சிலிர்ப்பு அடைந்து வெட்கப் பட்டு தலை குனிந்தாள்.

Thursday, November 16, 2006

ஆன்மீகமும் மதமும் நாத்திகமும்

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"

இல்வாழ்க்கைக்கு பண்பு உண்டெனில் அது அன்புடனும், அறத்துடனும் வாழ்க்கையை நடத்துவதே என்ற இந்த ஒன்றரை வரிக் குறள் சொல்லி இருப்பதை விட சிறப்பாக வாழ்க்கை நெறிமுறைகளைப் எந்த மத நூல்களும் சொல்லி விட முடியாது. சராசரி மனிதன் ஒருவனுக்கு இந்த ஒன்றரை வரிகளே போதுமானது. வாழ்க்கை நெறிகளை அமைத்துக் கொள்ள மற்ற ஆயிரத்து முன்னூற்றி இருபத்தொன்பது குறள்களும் கூட அவசியமற்றதாகி விடுகிறது.

உண்மையான ஆன்மீகத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது வேதாத்திரி மகரிஷி அவர்கள். அகத்தாய்வு என்றும் குண்டலினி என்று பல வேறு அற்புதமான விஷயங்களை எனக்கு சொல்லி கொடுத்த ஆன்மீக குரு அவர்.

மகரிஷியின் சிந்தனைகளில் மிக முக்கியமானது "பிறருக்கு உடலாலும் மனதாலும் துன்பம் நினையாதே" என்பதுதான்.

வள்ளுவரின் குறளுக்கும் மகரிஷியின் சிந்தனைக்கும் பல ஒற்றுமைகளைக் காணலாம்.

அவர் தன் வாழ்க்கையின் கடைசி கால கட்டத்தைக் கழித்தது ஓம்கார மண்டபத்தில்.

சைவ சிந்தாதத்தின் ஒரு முக்கியமான அம்சமான ஓம் வடிவிலான அந்த மண்டபத்தில் யார் நுழைந்தாலும் அங்கே எழுதப் பட்டிருக்கும் இந்த வாக்கியத்தைக் காணலாம்.

"உலகில் உள்ள மதங்களை எல்லாவற்றையும் நீக்கி மக்களிடையே ஒற்றுமை வளரச் செய்ய வேண்டும்." என்பது தான் அந்த வாக்கியம்.

மதமும் ஆன்மீகமும் ஒன்றே என்பதை எனக்கு உடைத்துக் காட்டிய வாக்கியம் இது.

மதம் என்ற அரசியல் அமைப்புக்கும் ஆன்மீகம் என்ற சிந்தனைக்கும் உள்ள பல வேறுபாடுகளை உணர்ந்தும் வாக்கியம் இது.

இன்றைய மதம் என்பது மனிதனுக்கு புரியாத வகையிலும் அவனை ஒரு பிரமிப்புக்கு ஆட்படுத்தி, பயமுறுத்தி, பரவச நிலை போன்ற தந்திரமான வார்த்தைகளை பயன் படுத்தி ஆளுமை செய்யவே பயன்படுகிறது.

சமஸ்கிரத மந்திரங்கள் சக்தி வாய்ந்தவை என்று மாயையை உண்டாக்குவது. ஏன் என்று கேட்டால் அதனை விளக்க மறுப்பது(பதில் தெரியாமல் முழிப்பது என்றும் வைத்துக் கொள்ளலாம்) இப்படி மந்திர தந்திரங்கள் மூலமாக ஆளுமை செய்யவே ஆசைப் படுகிறது.

இந்து மதம் என்று மட்டும் இல்லை இஸ்லாம் கிறிஸ்துவம் எல்லாமே இதைத் தான் செய்ய ஆசைப்படுகிறது. ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு மிக மட்டமான தலைமைகள் இருக்கின்றன.

இன்று பால் தாக்கரே, நரேந்திர மோடி இந்து மதக் காவலர்கள் தலைவர்கள் என்று கூறி செய்யும் அக்கிரமங்கள் இல்லையா?

அதே போல சிலுவைப் போர் தொடுக்க சொன்ன போப், பல கொலைகளை தன்னுடைய அதிகாரத்தின் மூலம் செய்த போப் என்று கிறிஸ்துவத்திலும் பல அக்கிரமக்கார தலைவர்கள் இருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் ஒரு பெண் அதிகமாக படித்து விட்டாள் என்று அந்த கிராமத்தின் மதத் தலைமை ஒரு வாரம் அந்தப் பெண்ணை அடைத்து வைத்து கற்பழித்ததாக குமுதத்தில் படித்தேன்.

மதம் என்னும் அரசியல் அமைப்பை எதிர்ப்பதற்கு இதுவே காரணிகள்.

மிதவாதிகள் இதன் பெயரில் நடக்கும் அக்கிரமங்களை கண்டு கொள்ள மாட்டார்கள். மதம் என்னும் அரசியல் அமைப்பு தன்னுடைய கைகளில் அதிகாரம் வேண்டும் என்பதற்காக மக்களை கொன்று எடுத்தாலும் யாருக்கும் கவலை இல்லை.

இன்று வேற்று மதத்தை சாடி தன் மதம் பெரிது என்று பேசும் அனைவரும் அதிகாரம் மாயை என்பது எல்லாம் தன் கைகளை விட்டு போய் விடக் கூடாது என்பதற்காக துவேசங்களை வளர்ப்பதே மதத்தின் அசிங்கமான அரசியல் பக்கத்தைக் காட்டுகிறது.

நாத்திகம், ஆன்மீகம் என்பதற்கு எந்த அளவு வித்தியாசம் இருந்ததோ என்னைப் பொறுத்த வரை அதே அளவு வித்தியாசம் ஆன்மீகத்திற்கும் மதங்களுக்கும் உண்டு

நாத்திகம் என்பதற்கும் பகுத்தறிவிற்கும் அதே போல வித்தியாசங்கள் உண்டு. ஆன்மீகத்தில் பகுத்தறிவிற்கு அவசியமாகிறது.

மதம் என்பதற்கு பகுத்தறிவுதான் எதிரி. கேள்விகள் கேட்டு உண்மை அறிவது பகுத்தறிவு ஆன்மீகம். கேள்வி கேட்டவர்களை பகுத்து அறிய முற்படுபவர்களை heretic என்று தூக்கில் இடுவது கொலை செய்வது ஒதுக்கி வைப்பது மதம்.

ஆன்மீகம் என்பது இறைவனை அறிவது வாழ்க்கையில் யாருக்கும் துன்பம் விளைவிக்காமல் இருப்பது.

மதவாதிகளுக்கு இந்த இரண்டு கொள்கைகளுமே கிடையாது. இறைவனை உணர தனக்கு சொல்லிக் கொடுக்கப் பட்ட வழிமுறைகளை பெரிது என்று சண்டை போட்டுக் கொள்வது. பிறரை துன்பம் அடைவதைப் பற்றி கவலைப் படாமல் இன்பமுறுவது இது தான் மதம்.

தீண்டாமையை எதிர்க்க காந்தியடிகள் ஒரு ஊருக்கு சென்ற பொழுது அவருக்கு அங்கே மிகப் பெரிய எதிர்ப்பு கிடைத்ததாக "இந்து மதம் எங்கே போகிறது" என்ற புத்தகத்தில் எழுதப் பட்டிருந்தது.

ஜாதிகளை எதிர்ப்பதும் தவறு என்று இன்றும் கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால் ஜாதி என்பது தான் மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே மிக கீழ்தரமானது என்பது வெள்ளிடமலை.

மதம் என்பதை இன்று எதிர்க்கும் சமயமும் இன்று எதிர்க்கும் சமயம் அதே போலத்தான் எதிர்ப்புகள் வருகின்றன. ஜாதியைப் பற்றிய மிதவாத சிந்தனை சில காலங்களுக்கு முன் எப்படி இருந்ததோ அதே போலத் தான் இன்றைய மத மிதவாத சிந்தனைகளும் உள்ளன.

இன்றுள்ள பல மதங்களும் சண்டை போட்டுக் கொள்வது பல அரசியல் அமைப்புகள் அடித்துக் கொள்வதும் ஒன்றே தான். எல்லாமே தவறானவை அவற்றுள் எந்த அரசியல் அமைப்பு வெற்றி பெரும் என்றே அடித்துக் கொள்கின்றன.

ஜாதிகள் விட மத அமைப்புகள் மிக மிக கீழ்தரமானவை என்ற சிந்தனைகளும் தோன்றும் காலம் வரும்.

மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் பலருக்கும் புரியும் காலம் வரும்.

அந்த சமயத்தில் மதம் என்ற அரசியல் அமைப்பிற்கு ஆதரவு தராமல் உண்மையான ஆன்மீக சிந்தனைகள் அறிவுப் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் பரவும். அன்று எல்லா மதங்களும் outdated ஆகிவிட்டது என்று மக்கள் உணரும் சமயம் வரும்.

மதம் மனித குலத்தை அழிக்காமல் விட்டால் அந்தக் காலமும் வரும்.

கடைசியாக 10000 வருடங்களுக்கு முன்னால் தோன்றிய நாகரீகத்தின் சின்னங்களை 4000 வருடங்கள் கழித்து மதம் தனக்குள்ளே எடுத்துக் கொண்டது, 4000 வருடங்கள் கழித்து தோன்றிய மதத்தின் சின்னங்களை 10000 வருடம் முன்பே தோன்றிய நாகரீகம் எடுத்துக் கொள்ளவில்லை என்பதாவது சிலருக்குப் புரியும்( கடைசி பத்தி என்னுடைய சென்ற பதிவையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் படித்தால் மட்டுமே புரியும் :-))) )

Sunday, November 05, 2006

மதம், வாழ்க்கை நெறி புடலங்காய்

பலர் மதம் என்பது நாகரீகங்களைத் தோற்றுவித்தது. மதம் என்ற அமைப்பு புனிதமானது சிலரால் மட்டுமே மதம் என்ற அமைப்புக்கு கெட்ட பெயர் வருகிறது என்பது போலவும் கருதுகிறார்கள். மறுபடியும் சரித்திரத்தை புரட்டிப் பார்க்கிறேன்.

ஹிந்து மதம் என்பது 3500 ஆண்டுகளுக்கு முன்னால் உருவானதாக தெரிகிறது. ஜுடாயிஸம்(வஜ்ராவால் சுட்டிக் காட்டப்பட்டு திருத்தப்பட்டிருக்கிறது) 3000 ஆண்டுகளுக்கு முன்னால் உருவானது.

ஹரப்பா நாகரீகம் 9000-10000 ஆண்டுகள் முன் கூட இருந்திருக்கிறது என்பதை இன்று கண்டறிந்திருக்கிறோம்.

அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள ஹரப்பா மொகஞ்தாரோ ஆகியவற்றின் புகைப்படங்களைக் கீழே உள்ள சுட்டியில் பாருங்கள்.

http://www.mohenjodaro.net/index.html

கிண்றுகள், நெல் சேமிக்கும் கிடங்கு, குளியலறை, சுகாதார மையம் எல்லாம் பார்க்கலாம் ஆனால் இதில் எங்கேனும் மதம் சம்பந்தமான கோயில்லகளோ மசூதிகளோ இல்லை வேறு அடையாளங்களோ தென் படுகிறதா? நாகரீகத்தின் தோற்றத்திற்கும் மதங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை இதை விட தெளிவாக நாம் அறிய முடியுமா?

இந்த உலகில் நடந்த மிகக் கொடூரமான இனப் படு கொலைகளுக்கு மதமே காரணியாக இருந்திருக்கிறது. இனப் படு கொலை என்றதும் holocaust மட்டுமே நமக்கெல்லாம் ஞாபகம் வரும். யூதர்கள் பல வகையில் நமக்கு அதனை நினைவுறுத்திக் கொண்டே இருப்பதால் அது மட்டுமே நமக்கு ஞாபகம் இருக்கிறது.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் மதம் நுழைந்தவுடன் என்ன நடந்தது?

முதலில் ஆஸ்திரேலியா இங்கு நடந்த இனப் படுகொலை போல எங்குமே நடந்ததில்லை. பழங்குடியினரைக் கொன்றால் ஒரு கொலைக்கு ஒரு பவுண்ட் என்று நடத்த படுகொலைகள் நமக்கு ஞாபகம் இருக்காது. complete wipe out ஆனது ஒரு இனம் ஆஸ்திரேலியாவில். What is history but a fable agreed upon? இது எவ்வளவு உணமை என்று தான் தோன்றுகிறது.

அமெரிக்கா சிவப்பிந்தியர்கள் மேல் நடத்திய தாக்குதல்கள் இனப் படுகொலைகள் அதிகம் வெளியே வராது இன்று,

ஆப்பிரிக்காவின் நிற வெறி கொடுமை(apartheid) பற்றி சொல்வவே தேவையில்லை.

அப்புறமாக யூதர்கள். யூதர்கள் ஒரு சாராரை மதத்தால் அடிமைப் படுத்தினர். மோஸஸ் காலத்தில் இருந்து இது கிறிஸ்து என்ற யூதர் வரும் வரை தொடர்ந்தது. பின்னர் பல யூதர்களே கிறிஸ்துவர்களானார்கள். அதற்கு பிறகு பின்னர் கிறிஸ்துவர்கள் இப்பொழுது குறைவான அளவில் இருந்த யூதர்களைக் கொன்று குவிக்கின்றனர். எதற்காக கொல்கிறார்கள் என்றால் அவர்களும் யூதர்கள் என்பதால். இவர்கள் மூதாதையினர் பலர் யூதர் என்பதே தெரியாமல்.

இந்தியாவில் இந்து - முஸ்லீம் பிரச்சனையும் இதே போலத்தான். எந்த மன்னன் வந்தாலும் காலை முத்தமிட்டு தலையில் ஏறி உட்கார்ந்து கொள்ளும் கூட்டம் முஸ்லீம் மன்னன் காலில் விழ அவர்கள் தலை துண்டிக்கப்பட்டது(இது ஒரு சாராரைக் குறிப்பது போல இருந்தாலும் இவை சரித்திர உண்மைகள்). அந்தக் காலத்தில் இருந்து தணியாத வெறி கொண்ட கூட்டம் முஸ்லீம்கள் மேல் வெறி கொண்டு அழைகிறது.

இன்று முஸ்லீம்களாய் இருப்பவர் பலர் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்திருக்கலாம். அது கூட புரியாத வெறி கொண்ட கூட்டம் இன்று ஒருவர் மேல் ஒருவர் வெறி கொண்டு சுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மதம் என்பது இதற்கு தான் பயன் படுகிறது.

மிருகத்தில் இருந்து மனிதனானான். இன்று மதம் கொண்டு தன்னுடைய irrational உணர்வுகளால் மிருகமாகிக் கொண்டிருக்கிறான்.

வாழ்க்கை நெறி வாழ்க்கை நெறி என்று சொல்பவர்கள் அனைவரிடமும் கேட்கிறேன். விதவைகள் கொலை செய்யும் சதி பழக்கம் வாழ்க்கை நெறியா? சின்ன பெண்களை பால்ய விவாகம் என்ற பெயரில் கல்யாணம் செய்து வைத்து அவர்கள் கணவர்கள் இறந்தவுடன் வாழ்க்கை முழுவதும் கொடுமைப் படுத்துவதுதான் வாழ்க்கை நெறியா? ஜாதி மூலம் அடிமைப் படுத்துவது வாழ்க்கை நெறியா?

வாழ்க்கை நெறியாம் வாழ்க்கை நெறி, புடலங்காய் வாழ்க்கை நெறி.

இவை தான் இந்து மதத்தின் வாழ்க்கை நெறிகளாக கடைபிடிக்கப் பட்டது, மிகச் சிறப்பான வாழ்க்கை நெறிகள் இல்லையா?

இன்று நரேந்திர மோடி போன்ற கொலையாளிகள் தான் இது போன்ற வாழ்க்கை நெறிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இன்னொரு பக்கம் இன்னும் அழகான வாழ்க்கை நெறி சொல்லப் படுகிறது. சானியா மிஸ்ராவின் fore handஐயும் back handஐயும் பார்க்காமல் அவர் தொடையை பார்த்து ரசித்த சிலர் அவர் தொடை தெரிகிறது என்று கத்தகிறார்கள். இவர்கள் மனது விகாரம் பிடித்திருப்பதால் அந்த பெண்மணியின் ஆடை அணியும் விதம் மாறவில்லை? உலகம் எங்கிலும் எல்லோரும் இதே போல ஆடை தான் அணிகிறார்கள். இவர் மட்டுமா அணிந்தார்?

யார் யாருடைய மனதின் விகாரத்தைப் பற்றி பேசுகிறார்கள். விகாரங்களின் உற்பத்தி நிலையமாக செயல் படுவதே மதம் என்னும் மாயை சூழ்ந்திருக்கும் மனங்கள்தான்.

mystic என்பதை விளக்குவதிலும் மதங்கள் மிகவும் பின்தங்கியே இருக்கின்றன. எத்தனை காலத்திற்குதான் ஆறு நாள், ஏழு நாள், முட்டை, இல்லை யாருக்கும் புரியாத வகையில் ஒரு touch of mystery உடன் கூடிய பழம் கதைகளையே கேட்டுக் கொண்டிருப்பது? யாரேனும் புது மதம் ஆரம்பித்து Black Holes, Singularity என்று இன்று அவர்களுக்கு தெரிந்ததை எழுதி வைத்தால் பரவாயில்லை. அதுவும் கொஞ்ச நாளில் விளக்க வர outdate ஆகி விடும் என்பது வேறு விஷயம்.

அல் கொய்தா அமைப்பு அமெரிக்காவை எதிர்ப்பதாலும், அமெரிக்கா இஸ்ரேலுக்கு இருக்கும் நட்பால், அல் கொய்தாவை உலகமெங்கிலும் உள்ள முஸ்லீம்கள் ஆதரித்தால் எப்படி முட்டாள் தனமாக இருக்குமோ அதே போலத் தான் மதமும்.

சானியா மிஸ்ரா விஷயத்தில் மன விகாரங்களை வெளிப்படுத்துகிறவர்கள் மதத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள். நரேந்திர மோடி போன்ற பயங்கரவாதிகள் மதத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள். படித்த பெண்களை சூனியக்காரிகள் என்று எரிக்க மதம் உதவுகிறது. எத்தனை காலம் தான் ஒரு பயங்கரவாத அமைப்பை நாம் ஆதரித்துக் கொண்டிருக்கப் போகிறோம்.

உங்கள் மனது சஞ்சலப் படும் பொழுது தேவை என்றால் நல்ல மியூசிக் கேளுங்கள். மதங்களை ஆதரித்து முட்டாள்தனம் செய்யாதீர்கள்.

மதம் நாகரீகத்தை வளர்க்க உதவுகிறது என்று யாரோ சொன்னார்கள். எனக்கு என்னவோ அது காட்டு மிராண்டித் தனத்தை வெளிக்காட்டவே உதவுவது போலத் தோன்றுகிறது.

இன்று மதத்தை பின்பற்ற விரும்புவர்கள் அனைவரும் அவர்கள் அமைப்பு தவறு செய்யும் பொழுது அதற்கு மிக அதிக அளவில் எதிர்ப்பு காட்டி அதனை மாற்ற முயலவில்லை என்றால் மதத்தின் பெயரால் நடக்கும் ஒவ்வொரு கொடுமைகளுக்கு நீங்களும் ஒரு காரணம்.

Thursday, November 02, 2006

எது மிக தீங்கான மதம்?

இந்தப் பதிவு சரித்திர நிகழ்வுகளின் ஒரு நினைவூட்டல் மட்டுமே.

பொதுவாக ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இஸ்லாம் மீதும், கிறிஸ்துவம் மீதும் புழுதி வாரி போட்டுக் கொண்டு அவர்கள் மதம் எதோ புனிதமானது என்பது போல பேசிக் கொண்டிப்பார்கள். அதே போல இஸ்லாமியர்கள் ஹிந்து மதத்தின் மேல் புழுதி வாரிப் போட்டு தங்கள் மதம் எதோ ரொம்ப புனிதமானது என்பது போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லா மதங்களிலும் பொதுவானது.

மற்றவர் மேல் புழுதி வாரி அடித்து தன் தவறுகளை மூடி மறைக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு நினைவூட்டல். அவரவர் முதுகில் இருக்கும் அழுக்கை சுட்டிக் காட்டலே இதன் நோக்கம்.

அது மட்டும் அல்லாமல் அரசியல் ரீதியாக சிலர் ஒரு மதத்தின் மேல் மட்டும் காட்டம் கொண்டவர்களாக இருப்பதால் இஸ்லாமியர்கள் அவர்களுக்கு ஆதரவாகவும் இவர்கள் அவர்களுக்கு ஆதரவாகவும் செயல் படுவதுமாக இருக்கிறது.

இன்று நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் என்று கூறி கொள்ளும் பல அரசியல்வாதிகளே நம்முள் நிறைந்திருக்கிறார்கள். ஆகவே ஒரு உண்மையான பகுத்தறிவாளனின் பதிவு இது.

இன்றுள்ள சூழ்நிலையில் எல்லா மதங்களுமே தீங்கானவை என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை ஆகவே இதில் ஒவ்வொரு மதத்தினரின் கடந்த கால சாதனைகள், சமீப கால சாதனைகள், நீண்ட கால சாதனைகள் எல்லாவற்றையும் பட்டியலிடலாம் என்று யோசித்து இந்தப் பதிவை இட்டிருக்கிறேன்.

ஹிந்து மதம்

கடந்த கால சாதனைகள்

ஒற்றுமை என்ற ஒன்றே இல்லாமல் இருந்தது. அடிக்க வேறு மதத்தினர் இல்லாமல் இருந்த சமயம் தன்னுள்ளேயே அரி, சிவன் என்று அடித்துக் கொண்டது. அடிப்படைக் கொள்கையான எல்லாமே இறைமயம் என்பதை கொஞ்சம் கூட பின்பற்றப் படாதது.

சமீபத்திய சாதனைகள்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை, பாபர் மசூதி இடிப்பு, கோத்ரா, இஸ்லாம் தீவிரவாதம் வளர ஊற்றுக் கண்ணாக திகழ்வது என்று கணக்கற்றவை.

நீண்ட கால சாதனை

ஜாதி என்ற விஷச் செடியை மக்கள் மனதிற்குள் விதைத்தது. பலவாயிரம் வருடங்கள் ஒரு சாராரை அடிமைப் படுத்தி வைத்தது.

இஸ்லாம்

கடந்த கால சாதனைகள்

அடிப்படையிலேயே தன் மதத்தினரைத் தவிர எல்லோரையும் காபிர் என்று ஒதுக்கி பிரிவினைகளை உண்டாக்கியது. இவரைக் கொல்லலாம் அவரைக் கொல்லலாம் என்று வன்முறையை சரி என்று சொல்லும் ஒரே மதம். இறை தூதராக கருதப்படும் முகமதுவே பல போர்களை தன்னுடைய வாழ்நாளில் மேற்கொண்டதுவே இதற்கு உதாரணம்.

சமீபத்திய சாதனைகள்

கணக்கற்ற தீவிரவாத செயல்கள், செப் 11, போப்பைக் கொல்ல பகிரங்கமாக அறிவித்தது. ஜிகாத் புனிதப் போர் என்ற பெயரில் அப்பாவிகளை கொலை செய்வது.

நீண்ட கால சாதனை

கணக்கிலடங்காத குண்டுவெடிப்புகள், பெண்களை அடிமையாக நடத்துவது.

கிறிஸ்துவம்

கடந்த கால சாதனைகள்

சிலுவை யுத்தம், சூனியக்காரிகள் எரிப்பு என்று படித்த பெண்களை எரித்தது.

சமீபத்திய சாதனைகள்

ஜீஸஸ் வெள்ளையானவர் என்று நிற வெறி காலத்தில் கருப்பர்களை கொலை செய்தது.

நீண்ட கால சாதனை

மதத்தின் பெயரால் போர் என்பதை தொடங்கி வைத்தது. மதத்தின் பெயரால் இன்று உலகில் நடக்கும் பல பிரச்சனைகளை (பாலஸ்தீனப் பிரச்சனை உட்பட) தொடங்கி வைத்தது.

மனித குலத்திற்கு தீங்கு விளைவிப்பதில் எல்லா மதங்களும் 100/100 மதிப்பெண் பெறுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இதில் ஒன்றோடு ஒன்று சளைத்தது அல்ல என்றும் எனக்குத் தோன்றுகிறது. இதில் குறிப்பிட்டுள்ள மதங்கள் மட்டும் அல்ல ஜியோனிஸம், பௌத்தம் என்று எல்லா மதங்களுக்கும் இந்தப் பெருமை உண்டு.

Tuesday, October 17, 2006

இந்தியாவில் வலை மேய்பவர்கள்.

விஷய தானம் rediff

Around 38 per cent of all Internet users in India are 'heavy users' and on an average spend about 8.2 hrs per week on the Internet, according to the, I-Cube 2006 report by the Internet And Mobile Association of India and IMRB International.

The report also revealed that the percentage of heavy Internet users in India is rapidly increasing: from 16% in 2001, 20% in 2004 to 38% in 2006 of the overall Internet users.

Similarly, the percentage of light Internet users has steadily declined from 63% in 2001 to 28% in 2006.

The study further states that school going kids spend an average of 322.3 minutes a week on the Internet, while college going students spend an average of 433.2 minutes a week.

Older men spend an average of 580.5 minutes a week. Among women, working women spend an average 535.3 minutes and non-working women spend 334.5 minutes a week.

Monday, October 16, 2006

விடுதலை தேன்கூடு-போட்டி

"எனக்கு விடுதலை வேணும்" என்றான் அபி கல்பனாவிடம்.

பெரும் பாலும் சின்ன வயதில் இருந்து ஒருவரை இன்னொருவர் அறிந்திருக்கும் சமயம் எப்படி சந்தித்தோம், எப்பொழுது முதன் முதலில் பார்த்தோம் என்பதெல்லாம் தெரிந்திருக்காது. சிறு வயதில் சேர்ந்து செய்த தவறுகள், சேர்ந்து விளையாடிய விளையாட்டு என்றெல்லாம் வேண்டுமானால் ஞாபகம் இருக்கலாம். ஆனால் முதன் முதலில் எப்பொழுது சந்தித்தோம் என்பதெல்லாம் ஞாபகம் இருப்பது கடினம்.

ஆனால் சில சந்திப்புகள் மனதை விட்டு விலகாது.

காதல் காரணமாக இருக்கலாம் பார்த்த கணத்தில் அழகைப் பற்றிய அனைத்து வர்ணணைகளும் அர்த்தம் பொதிந்ததாக மாறிய கணமாக இருக்கலாம்.

ஆனால் சிலரைப் பார்த்த உடன் மனதில் ஒரு வெறுப்பு தோன்றும், ஏன் என்றே தெரியாமல் அங்கே போய் அவனை அப்படியே என்று நாடி நரம்பெல்லாம் ஒரு கோபம் படரும். அப்படிப் பட்டவர்கள் சிலர் மேல் இருக்கும் கோபம் நாளாக நாளாக குறைந்து கூட போய் விடலாம் ஆனால் அது அதிகரித்தால் அந்த முதல் சந்திப்பு எப்படி மறக்கும்?

அபியும், கல்பனாவும் முதன் முதலாக சந்தித்துக் கொண்ட பொழுது அப்படித்தான் ஒருவர் மேல் மற்றொருவருக்கு கோபம் வந்தது. அந்த கோபம் வாழ்க்கை முழுவதும் அவர்களுடனே தங்கி விட்டது.

அபியின் அம்மா அவன் ஐந்தாவது படித்துக் கொண்டிருக்கும் பொழுது அபியின் அப்பாவின் வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் கடவுள் கிட்ட போய் விட்டதால் அவன் வேறு ஊருக்கு வர வேண்டியதாகி விட்டது.

புது பள்ளி புதிதான சூழ்நிலை முதல் நாள் முதல் பாடம் சரித்திரம். அபி ஒரு குட்டி ஜீனியஸ் என்று அவன் அம்மா அவனை எப்பவும் கொஞ்சுவார் அதில் அவனுடைய பள்ளி ஆசிரியர்களுக்கும் அவ்வளவு கருத்து வேறுபாடு இல்லை. அவன் இருக்கும் வரை அவன் வகுப்பில் யார் இரண்டாவது ரேங்க் என்பதற்கு மட்டுமே போட்டி இருக்கும். அபியை மிஞ்ச ஆள் இல்லை என்பதில் யாருக்குமே இரண்டாவது கருத்தே இல்லை. அதிலும் அவனுக்கு மிகவும் பிடித்த பாடம் சரித்திரம்.

சரித்திர ஆசிரியருக்கு பழுத்த பழம் முதல் நாளே பாடம் ஆரம்பித்தால் விடுமுறை முடிந்து வந்திருக்கும் மாணவர்களுக்கு அது அயர்ச்சியாக இருக்கும் என்பதை தெரிந்திருந்தது. ஆகவே முதல் நாளே போட்டி ஒன்றை வைத்து பரிசு கொடுத்தால் மாணவர்களை உற்சாகப் படுத்தலாம் என்று திட்டமிட்டிருந்தார்.

போட்டி என்று வந்து விட்டால் யார் வெற்றி பெறுவார் என்பதும் சரித்திர ஆசிரியருக்குத் தெரியும் இருந்தாலும் போட்டி வைத்தால் மாணவர்கள் உற்சாகப் படுவார்கள் அது மட்டும் இல்லாமல் சென்ற வருடம் படித்ததை அப்படியே நினைவு படித்திய மாதிரியும் இருக்கும் என்று நினைத்திருந்தார்.

முதல் கேள்வியாக இந்திய தேசிய காங்கிரஸைக் கண்டு பிடித்தவர் யார் என்று கேட்டார்.

"ஹுயூம்" என்று பதில் வர வழக்கமாக கேட்கும் பெண் குரல் இல்லாமல் ஆண் குரல் கேட்கிறதே என்று தன் மேஜையை விட்டு நிமிர்ந்து பார்த்தார் சரித்திர ஆசிரியர். அவர் மட்டும் அல்ல வகுப்பில் உள்ள பலரும் அபியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களும் வழக்கமாக கேட்கும் கல்பனாவின் குரலைத் தான் எதிர் பார்த்து இருந்தார்கள்.

ஏன் எல்லோரும் இப்படிப் பார்க்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டே அப்படியே திரும்பி எல்லோரையும் பார்த்த அபியின் கண்கள் அவனுக்கு முன்னால் உட்கார்ந்து யார் என்று எட்டிப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்த பெண் கண்களுக்குத் தெரிந்தாள்.

"கேள்வி கேட்டால் யாருக்குத் தெரியுமோ அவர்கள் கையை தூக்கினால் போதும்" என்ற சரித்திரப் பேராசிரியரின் குரல் அனைவரையும் மறுபடியும் அவரை பார்க்கும் படி வைத்தது.

"மூன்றாம் பானிபட் யுத்தம் எந்த ஆண்டு துவங்கியது?" இரண்டு கைகள் உடனே மேலே சென்றன. முதல் கேள்விக்கு பதில் அபி சொன்னதால் "கல்பனா" என்று சொன்னார் சரித்திர பேராசிரியர் "January 14, 1761" என்று வந்தது பதில். அபிக்கு உடனே ஒரு எரிச்சல் சரித்திர ஆசிரியர் மீது. எனக்கு பதில் தெரியுன்னு கையைத் தூக்கி இருக்கறேன் என்னைக் கேட்காம என்ன இந்தப் பொண்ணைக் கேட்டுகிட்டு? அடுத்த கேள்வி "தியோசோபிக்கல் சொஸைட்டி இந்தியாவில் ஆரம்பித்தது யார்" இரண்டு கைகள் வழக்கம் போல மேலே உயர்ந்தன. இந்த முறை "அபி" என்றார் சரித்திர ஆசிரியர். "ஆல்காட், பிளவாட்ஸ்கி" என்று சொன்னான் அபி. இந்த முறை எரிச்சல் கல்பனாவுக்கு. இப்படி சரித்திர ஆசிரியர் கேள்வி மேல் கேள்வி மாற்றி மாற்றி கேட்க சரித்திர ஆசிரியர் மேலிருந்த எரிச்சல் எல்லாம் எரிச்சலாகவும் கோபமாகவும் கல்பனாவுக்கு அபி மேலும் அபிக்கு கல்பனா மேலும் திரும்ப ஆரம்பித்தது.

வகுப்பின் இறுதியில் சரித்திர ஆசிரியர் அவருடைய வகுப்பில் இரண்டு ஜீனியஸ் இருப்பதை கண்டு மனம் மகிழ்ந்தார். அவருக்கு தெரிந்து விட்டது இந்தப் போட்டி இந்த வகுப்புடன் முடிந்து விடாது என்பதில் மேலும் மகிழ்ச்சி அடைந்தார்.

இவர்கள் இருவரின் திறமையும் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் வெகு சீக்கிரம் பரவி விட்டது. இருவரும் போட்டி போட்டுக் கொண்டு இருவரும் ஆசிரியர்களுக்கு மேல் தெரிந்து கொண்டு விட ஆசிரியர்களின் பாடு திண்டாடமாகி விட்டது.

இது இன்னொரு வகைப் போட்டியையும் தூண்டி விட காரணமாகி விட்டது. அவர்கள் வகுப்பில் இருக்கும் ஆண்கள் அனைவரும் அது வரை கல்பனாவின் திறனுடன் போட்டி இட முடியாததால் சில ஆசிரியர்கள் பெண் பிள்ளைகளிடம் தோற்கிறீர்களே என்று சொல்லி வர, அபியின் வரவு அவர்களுக்கு வரப் பிரசாதமாகி விட்டது. எப்பொழுது அபி கல்பனாவை விட போட்டியில் முன்னேறுகிறானோ அப்பொழுது எல்லாம் வகுப்பில் இருக்கும் ஆண் பொடுசுகள் பெண்களைச் சீண்டுவதும் அதனாலேயே கல்பனா முண்ணனியில் இருக்கும் சமயம் பெண் பிள்ளைகள் ஆண்களை சீண்டுவதுமாக இந்தப் போட்டி பொறாமை எப்பொழுதும் உச்சத்தில் இருந்தது.

இதற்கு நடுவில் அபி ஒரு ஈர்ப்புக்குறிய ஆணாகவும். பள்ளியில் உள்ள அனைவருக்கும் காதல் பற்றிய சிந்தனைகளை உண்டாக்கும் அளவு அழகிய பெண்ணாகவும் மாறுவதை இருவருமே அறிந்திருக்கவில்லை. இவர்களுக்கு இடையில் இருக்கும் போட்டி தான் முக்கியமாகப் பட்டது இருவருக்குமே.

இப்படியே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கல்பனா ஒரு மார்க் அதிகமாக எடுத்தது, அபி +2 பொதுத் தேர்வில் ஒரு மார்க் கல்பனாவை விட அதிகமாக எடுத்தது என்று இருவருமே தமிழகத்தின் முதல் நிலை பொறியியல் கல்லூரியில் இருவரும் காலெடுத்து வைத்தார்கள்.

இருவருக்குமே ஆச்சரியம் என்னவென்றால் இருவருமே பொறியியல் பாடம் தேர்வு செய்தது தான். இருவருமே மருத்துவத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இருவருமே அதைத் தேர்வு செய்யாமல் ஒரே பொறியியல் கல்லூரியில் ஒரே பாடப் பிரிவை தேர்தெடுத்திருப்பது ஆச்சர்யமளித்தது. ஆனால் இன்னும் நான்கு வருடம் இவனுடனே போட்டி போட வேண்டும் என்பது மேலும் எரிச்சல் அளித்தது.

அதுவும் இவர்களின் போட்டி உச்சத்தில் இருந்தது +2 பொதுத் தேர்வின் சமயம்தான். அதுவும் அபி கல்பனா தன்னை விட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்திருந்தது அவனைக் காயப் படுத்தி இருந்தது. பொதுத் தேர்வு என்று வரும் சமயம் ஆசிரியரை சோப்பு போட்டு கல்பனா அளவுக்கு மார்க் எடுக்க முடியவில்லை என்று அவளது தோழியர் அடித்த கமெண்ட் அவனைப் புண்படுத்தி இருந்தது.

ஆகவே கஷ்டப்பட்டு ஒரு மார்க் +2 தேர்வில் அதிகம் பெற்று விட அவன் நண்பர்கள் கல்பனாவின் தோழிகளைப் பார்த்து அடித்த கமெண்ட் கல்பனாவை மேலும் புண்படுத்தி இருந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருந்தால் போதும் என்ற சூழ்நிலை உருவாகி இருவரும் வேறு வேறு கல்லூரியில் சேர்வோம் என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரே கல்லூரியில் பார்த்துக் கொண்டது ஒரு ஆயாசத்தை ஏற்படுத்தியது.

அபி தன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வெளிநாடு சென்று மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

ஆனால் அவன் கல்லூரி சேர்ந்த முதல் நாளே அந்த எண்ணம் மாறி விட்டது. அந்தக் கல்லூரியுடன் ஒரு நிறுவனம் இணைந்து செயல் பட்டு வந்தது. அந்த நிறுவனம் வருடா வருடம் அந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவி வந்தது. எல்லா முண்ணனி தொழில் நுட்பங்களும் அந்தக் கல்லூரியில் இருப்பதற்கு அந்த முண்ணனி நிறுவனமே காரணியாக இருந்தது. அந்த நிறுவனம் அந்தக் கல்லூரியில் இருந்து ஒரே ஒரு மாணவரை மட்டும் வருடா வருடம் எடுப்பார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் வகுப்புகள் ஆரம்பிக்கும் முன் அந்த நிறுவனத்தின் தலைவர் புதிதாக தொடங்கும் வகுப்பில் ஒரு சின்ன உரை நிகழ்த்தி ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து கொள்ளச் சொல்லுவார். அதோடு ஏன் அந்த மாணவரை இந்த நிறுவனம் கவனிக்க வேண்டும் என்ற கேள்வியும் வைக்கப்படும். அறிமுகத்தின் சமயத்தில் இருந்தே அந்தக் நிறுவனம் மாணவர்களை கவனிக்கத் தொடங்கி விடும்.

அபிக்கு இதில் ஆர்வமே இல்லை அவன் ஆர்வமெல்லாம் அவன் மேல்நாட்டுக்குச் சென்று மேல்படிப்பு படிப்பதில் தான் இருந்தது.

கல்பனா வழக்கம் போல முதல் வரிசையில் அமர்ந்திருந்தாள். இந்தப் பெண்களுக்கு முதல் வரிசையில் அமர்வது குறித்து அப்படி என்ன ஆர்வமோ என்று நினைத்துக் கொண்டான் அபி. கல்பனாவை நிறுவனத் தலைவர் அறிமுகம் கொடுக்கச் சொன்னதும் மிடுக்காக நடந்து சென்ற கல்பனா "என் பெயர் கல்பனா. என் தந்தையார் பால்ராஜ், அம்மா சுசிலா. எனக்கு வாழ்க்கையில் இரண்டாவதாக வருவது பிடிக்கவே பிடிக்காது. ஒரே முறை தான் இரண்டாவதாக வந்திருக்கிறேன். இனி மேல் அப்படி வரும் எண்ணம் இல்லை. உங்கள் நிறுவனம் முதல் வரும் மாணவர்களை எடுக்கும் என்று எனக்குத் தெரியும். ஆகையால் தான் சொல்கிறேன் என்னை உங்கள் நிறுவனம் எடுக்க வேண்டும்." என்று சொல்லி விட்டு அமர்ந்தாள். அவளுடைய தன்னம்பிக்கையைக் கண்டு அங்கு உள்ளவர்களுக்கு ஆச்சர்யம் மிகுந்தது ஒருவனைத் தவிர.

அடுத்து அபி வந்து பேசும் சமயம் அவனுக்கு மேல்படிப்பு மேல் இருந்த ஆர்வம் அனைத்தும் காணாமல் போயிருந்தது. தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டு "நான் கடைசியாக வந்தத் தேர்வில் முதலாக வந்தவன். எனக்கு இரண்டாவதாக போவது பிடிக்காது. ஆகவே முதல் மாணாக்கனாகப் போவது நானே. எனவே உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த நபர் நானே" என்று சொல்லி அமர்ந்தான்.

பிறகு நடந்த தேர்வு, பேச்சுப் போட்டி, விவாத மேடைகளில் அனல் பறக்க ஆரம்பித்தது. இருவரும் மட்டுமே போட்டி இருக்கும் என்று தெரிந்தாலும் இருவரின் பகையும் கல்லூரி முழுக்க பரவி இருந்ததால் இவர்கள் கலந்து கொள்ளும் போட்டிகளில் கூட்டமும் மிகுந்தது.

இப்படி மூன்று ஆண்டுகள் சென்ற நிலையில் கல்பனாவின் அப்பா திடீர் என மரணமடைந்தார். கல்லூரி முழுக்க தன் அழகாலும் அறிவாலும் நண்பர்களைப் பெற்றிருந்த கல்பனாவின் தந்தை மரணத்திற்கு அவனுடைய வகுப்பில் இருந்த அனைவரும் சென்றார்கள். அபியும் உடன் சென்றான். முதல் முறையாக தன் தந்தையின் மரணத்தின் பொழுதுதான் கல்பனாவை போட்டியாளராகப் பார்க்காமல் ஒரு சராசரி மகளாக மனுஷியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அழுகையுடனே எல்லா ஏற்பாடுகளையும் மேற்பார்வை செய்து கொண்டு இருக்கும் கல்பனாவைப் பார்க்கும் பொழுது ஏனோ அவனுக்கு அவன் அம்மா ஞாபகம் வந்தது. கல்பனாவுக்கு அவ்வளவு சோகத்திலும் அபி முன் அழுகிறோமே என்ற கவலை இருந்தது. அதனால் அவன் பக்கம் இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்க்க அவன் முகத்தில் தெரிந்த சோகம், கரிசனம் எல்லாம் உண்மையாகப் பட முதன் முறையாக அவனை வேறு விதமாக பார்க்க தொடங்கினாள்.

காரியம் எல்லாம் முடிந்து வந்த சில நாட்களிலேயே ஒரு தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. இருவருக்கும் மதிப்பெண்களில் அதிக இடைவெளி இல்லாததால் இருவரும் மீண்டும் கடினமாக உழைக்கத் தொடங்கினர்.

கல்லூரி அருகே ஒரு பூங்கா இருக்கிறது. பொதுவாக மாணவர்கள் அங்கு சென்று அமர்ந்து கொண்டிருப்பது உண்டு.

ஒரு சமயம் அந்த சமயம் நடந்து போய்க் கொண்டிருந்த அபிக்கு பெண் ஒருத்தி விசும்புவது போலக் கேட்டது. என்னவென்று அந்தப் பக்கம் சென்று பார்த்தால் கல்பனா அங்கு அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அபிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை தந்தை இறந்த சமயம் கூட இந்தப் பெண் இவ்வளவு அழுததில்லையே என்னவாயிற்று என்று அருகே சென்று அமர்ந்தான்.

யாரோ பக்கத்தில் வந்து அமர்ந்ததை உணர்ந்த கல்பனா சட்டென்று தன் அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள் அங்கு அபி உட்கார்ந்திருந்ததைக் கண்டு அவளுக்கு வெட்கமாக போய் விட்டது.

தன்னை நிலைப் படுத்திக் கொண்டு இரண்டு நிமிடம் அங்கு அமர்ந்திருந்தாள். பின் எழுந்து செல்ல முயற்சிக்க சட்டென அபி "எனக்கும் எங்க அம்மா ஞாபகம் அடிக்கடி வரும்" என்று கூறினான்.

எழுந்து செல்ல முயற்சித்த கல்பனா அப்படியே உட்கார்ந்தாள். "எனக்கு 10 வயசு இருக்கும் போதே எங்க அம்மா இறந்துட்டாங்க. அம்மாதான் எனக்கு எல்லாம் ஸ்கூலைத் தவிர எங்க அம்மா பின்னாடியே தான் சுத்துவேன். கடைக்கும் எங்க போனாலும் என்னை விட்டுட்டே போக மாட்டாங்க." என்ன இது அவன் கண்களிலும் கண்ணீரா? இல்லை நம்ம கண்ல கண்ணீர் இருக்கறதுனால அப்படித் தெரியுதா என்று யோசித்தாள் கல்பனா. "எங்க அம்மா என்னை விட்டுப் போன சமயம் தான் எனக்கு வாழ்க்கையிலேயே ரொம்ப கஷ்டமான நேரம் எனக்கு. எனக்கு எல்லாப் பிரச்சனைகளும் வந்தது அந்த சமயம்தான்" என்று சொல்லி ஒரு இடைவெளி விட்டு "உன்னோடு மீட் பண்ணிணது கூட அந்த சமய்த்தில தானே?" என்று ஒரு சின்ன புன்னகையுடன் சொன்னான்.

கல்பனாவிற்கும் புன்னகை வந்தது அடக்கிக் கொண்டு போலிக் கோபத்துடத்துடன் "என் வாழ்க்கையில கூட ஏழரை நாட்டுச் சனி அப்போதான் ஆரம்பிச்சிருக்கணும்" என்றாள்.

"அறிவியல் இந்த அளவு வளர்ந்திருச்சு என்ன இன்னும் சனி, வெள்ளின்னுட்டு இருக்கே நீ" என்றான் அபி. உடனே "எந்த அளவு வளர்திருச்சு? சிங்குலாரிட்டின்னு ஒரு சிக்கல். Evolutionல probablity கம்மி இப்படி எல்லாத்திலயும் பதில் தெரியாம முழிச்சுட்டு தானே இருக்கு?" என்றாள் கல்பனா.

இப்படியாக இவர்களின் விவாதம் தொடர்ந்தது. விவாதம் முழுவதும் அபியின் புன்னகையின் நீளம் அதிகமாகிக் கொண்டே தான் சென்றது. கல்பனாவிற்கும் மனது லேசான மாதிரி இருந்தது. கடைசியாக இருவரும் ஒருவரை மற்றொருவர் திட்டிக் கொண்டே பிரிந்து சென்றார்கள். அடுத்த ஒரு வாரம் அந்த கல்லூரியே அவர்களை வேடிக்கை பார்க்கும் அளவுக்கு இருவரும் பக்கத்தில் அமர்ந்து விவாதிப்பதும் கடைசியாக சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து செல்வதுமாக இருந்தார்கள். முதலில் இவர்கள் இருவருடைய நண்பர்களும் சண்டையா இருக்கே பிரச்சனையாகி விடுமோ என்று பயந்தார்கள். ஆனால் ஒவ்வொரு தடவை தனியாக செல்ல வேண்டிய சமயம் வரும் போது சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து செல்வதை ஆச்சர்யமாக பார்த்தார்கள்.

மேலும் படத்திற்கு செல்வது என்ற ஆச்சர்யகரமான செயல்களையும் இருவரும் செய்ய ஆரம்பித்தார்கள். இதற்கு முன் இவர்கள் படத்திற்கு கூப்பிட்டால் அவன் என்னை விட அதிகமாக படித்து விடுவானோ என்றோ இல்லை அவள் என்னை மிஞ்சி விடுவாளோ என்றோ செல்லாமல் இருந்தார்கள். ஆனால் இருவருமே செல்வதால் ஒருவர் மற்றொருவரை விட அதிகமாக முன்னேறி விட முடியாது என்று நம்பிக்கையில் செல்ல ஆரம்பித்தார்கள்.

அந்த முறை தேர்வு முடிவுகள் வரும் சமயமும் இருவரும் மற்றவர்களை விட பல மடங்கு அதிக மதிப்பெண் எடுத்திருந்ததைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். அவர்களுக்குத் தெரியாது ஒவ்வொரு முறையும் இவர்கள் இருவரும் தேர்வுக்கு பாடம் ஆரம்பிக்கும் முதல் நாளே தயாராக இருந்ததும், மற்றவர் மேல் கொண்டிருந்த போட்டியினாலேயே திரும்ப திரும்ப படித்ததையும்.

ஒவ்வொரு முறை இவர்கள் சந்திக்கும் பொழுதும் பயங்கரமாக சண்டை போடுவதும் உடனே மறுபடியும் ஒன்று சேர்ந்து கொள்வதும் எல்லோருக்கும் ஆச்சரியம் அளித்தது.

இது இவர்கள் இருவருக்குள் இருக்கும் போட்டியை குறைக்கவில்லை. இருவரும் முன் போலவே ஆக்ரோஷத்துடன் போட்டி போட்டுக் கொண்டார்கள்.

ஆனால் பொறாமை இருக்கவில்லை. இப்பொழுது எல்லாம் இருவரும் போட்டியில் எந்த அளவு போட்டியில் வெல்ல வேண்டும் என்று எண்ணிணார்களோ அதே அளவு தோற்க வேண்டும் என்றும் விரும்ப ஆரம்பித்தார்கள்.

இதற்காக வென்ற பின் ஒருவரை ஒருவர் நக்கல் அடிப்பதை நிறுத்திக் கொள்ளவில்லை. ஆனால் மற்றொருவர் வென்றதால் மனம் மகிழ்ந்த ஒருவரும், மற்றவர் தோற்றதால் லேசாக கவலை கொண்ட மற்றொருவரும் இருந்ததால் எல்லா வெற்றிகளும் இவர்களது வெற்றிகளானது, எல்லாத் தோல்விகளும் இவர்களின் வெற்றியானது.

இப்படி அந்த நிறுவனம் நடத்தும் நேர்முகத் தேர்வு நாள் நெருங்க நெருங்க எல்லோருக்கும் தெளிவாகி விட்டது போட்டி இவர்கள் இருவருக்கும் தான் என்று ஆகவே இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று பெரிய விவாதமே நடக்க ஆரம்பித்து விட்டது.

அதற்கு முந்திய நாள் தான் கல்பனா அபியை சந்தித்து முதல் வரிகளைக் கூறினான்.

கல்பனா என்ன சொல்கிறான் என்று நிமிர்ந்து பார்த்தாள்.

"உன் கூட இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் நான் சண்டை போட்டுகிட்டே இருக்கேன். என்னோட கருத்துகளுக்கு இவ்வளவு எதிர்பதமா இருக்கற ஆளை நான் பார்த்ததே இல்லை. நீ என்னை எடுத்து எறிஞ்சு பேசறது, மட்டமா எனக்கு ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசறது, உனக்கு இருக்கற அகம்பாவம் எல்லாத்தையும் நினைச்சா எனக்கு எவ்வளவு கோபம் வருது தெரியுமா? நான் எதாவது புத்திசாலித் தனமா சொன்னாலும் அதுக்கு அதை விட புத்திசாலித்தனமா எதாவது சொல்லி விவாதத்துக்கு ஒரு புல் ஸ்டாப்பே வைக்க விடாம செய்யறதை நினைக்கும் போது பயங்கர கோபம் வருது." என்று சொல்லி ஒரு சின்ன இடைவெளி விட்டான்.

கல்பனா அவன் இன்னும் முடிக்கவில்லை என்று எப்படியோ தெரிந்தது அதனால் அமைதியாக இருந்தாள்.

"ஆனால் உன்னை விட்டு பிரிஞ்சதுக்கு அப்புறம் உன்னைப் பத்தி யோசிக்காம இருக்கவே முடியல. என் மேல கோபப் படும் போது கண்ணை பெருசாகி அதை உருட்டுவியே அதை ஏன் நினைச்சு நினைச்சுப் பார்க்கறேன்னு தெரியல. என்னை எதாவது நல்லா திட்டீட்டு இருக்கும் போது பாதில அந்தத் திட்டை நிறுத்த உதட்டைக் கடிச்சுக்குவியே அதையும் நினைச்சுப் பார்க்காம இருக்க முடியல.நாம பேசும் போது நீ பேசறதை கவனிக்காம உன்னோட கை முடியை ஒதுக்கி விடுதே அந்த அழகை ரசிக்கறனே அது ஏன்னு தெரியல. உன் கூட நடக்கற சமயம் வேற எதுவுமே இந்த உலகத்தில தேவை இல்லைன்னு தோணுதே அது ஏன்னு தெரியல. எனக்கு நீ வேணும் என்னோட தனிமை ஒரு சிறைன்னு உன்னைப் பார்த்ததில் இருந்து தான் தெரிஞ்சுகிட்டேன். அந்தச் சிறைல இருந்து எனக்கு விடுதலை வேணும்" என்றான் அபி.

புண்கண்ணீர் பூசல் தருமா தெரியலை ஆனால் கல்பனாவின் கண்களில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. ஆனா அதெல்லாம் பத்திக் கவலைப் படாம "என்ன நீ லவ் பண்ணறேன்னு சொன்ன நான் அப்படியே திரும்ப சொல்லீருவேனா? லவ் பண்ணறேன்னு ஒரு ரொமான்டிக்கா கூட சொல்ல தெரியல. கோபப்படுறேன் திட்டறேன்னு சொல்லீட்டு உன்னைப் போய் லவ் பண்ணணுமா? சரியான லூஸ் நீ" என்றெல்லாம் திட்டிக் கொண்டே அவன் அருகில் வர இருவரும் அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.

அடுத்த நாள் இருவருக்குமே வேலை கிடைத்தது என்று சொன்னால் கல்பனாவுக்கு கோபம் வந்து விடும். முதலில் கல்பனா பெயர் சொன்னதால் அவளுக்குத் தான் வேலை கிடைத்ததாம் அப்புறம் போனாப் போகுதுன்னு அவனுக்கும் கொடுத்தார்களாம். இப்படித் தான் சொல்லி வருகிறாள். அபிக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை அவன் இப்பொழுது தேனில் குளிக்கும் வண்டாகி விட்டானே.

Saturday, October 07, 2006

மரண தண்டனை சிந்தனைகள்

காலையில் வந்து தமிழ் மணத்தை திறந்து பார்த்தால் ஒரே மரண தண்டனை பற்றிய செய்திகளா இருந்தது. செல்வன் ஆவேசமா தன் கருத்துக்களை சொல்லி இருந்தார். நல்லடியார் மதம் சார்ந்து கருத்துக்களை சொல்லி இருந்தார். உஷா அவர்கள் ஒரு விதமாக தன் கருத்துக்களை சொல்லி இருந்தார். குழலி தன் கருத்துக்களை குற்றவாளிகள் பார்வையில் இருந்து பார்க்கற மாதிரி சொல்லி இருந்தார். முதலில் என் கருத்தை பின்னூட்டமா வெளியிடலாம் என்றுதான் எண்ணி இருந்தேன் அப்புறம் தான் தனியா வெளியிடுவோம் என்று தனிப் பதிவாக போட்டிருக்கிறேன்.

முதலில் தண்டனை என்ற இந்த பழக்கம் எப்படி வந்திருக்கும் சமூகத்தில் வாழும் மனிதர்கள் தங்களுக்கு இடையே வாழ வேண்டும் என்றால் இது இதை எல்லாம் செய்ய வேண்டும் என்று வரைமுறைகளை வகுத்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த வரையறைகள் மீறப் படும் சமயம் மீறுபவர்கள் தண்டனைக்கு உரியவர்களாவர்கள் என்று சட்டம் அமைந்திருக்க வேண்டும்.

இந்த சமூகத்தில் ஒருவன் இருக்கிறான். அவன் பசியால் திருடி விட்டான் என்று வைத்துக் கொள்வோம். மேலும் அவன் திருடும் முன் தன்னால் இயன்ற வரை பசியை தணித்துக் கொள்ள சமூகம் வரையுறுத்துள்ள விதிமுறைகளை கடைப்பிடித்து முயற்சிக்கிறான என்றும் வைத்துக் கொள்ளலாம். ஆனாலும் அவனால் இயலவில்லை. கடைசியாக பிச்சை கேட்கிறான். ஆனால் சமூகம் அவனுக்கு பிச்சை கூட கொடுக்கவில்லை. அவனை விரட்டி விட்டு மிச்ச சாப்பாட்டை சாக்கடையில் கொட்டி விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.

அவனுக்கு தண்டனை கொடுக்கப் பட வேண்டுமா?

சமூகம் மிகக் கொடுமையான தண்டனைகளுக்கு மரணம் என்பதை தண்டனையாக வைத்திருக்கிறது.

பசி எடுத்தவன் திருடும் சமயம் ஒருவனை கொலை செய்து விடுகிறான். கொலை செய்து விட்ட அவனுக்கு தண்டனை கொடுக்கப் பட வேண்டுமா?

பசி எடுத்தவன் ஒரு கொலை செய்து கொஞ்ச காலம் பசியாற்றி விடுகிறான் கொஞ்ச காலம் கழித்து மறுபடியும் பசி எடுக்க இன்னொரு கொலை செய்து விடுகிறான். இப்பொழுது அவனுக்கு தண்டனை கொடுக்கப் பட வேண்டுமா?

இந்த குற்றங்களை பசித்தவன் புரிந்தானே அதில் சமூகத்தின் பங்கு இருக்கிறதா?

சரி ஔஔஔஅப்சலை தூக்கில் போட வேண்டுமா என்றால் கண்டிப்பாக தூக்கில் போட வேண்டும் என்றுதான் சொல்லுவேன்.

ஆனால் அவனை தூக்கில் இடப் பட வேண்டுமா என்ற கேள்வி எழும் சமயம் இதில் இந்த சமூகத்தின் தவறும் இருக்கிறதா என்று என்னை நானே கேட்டுக் கொள்வேன்.

survival to the fittest இதுதான் இன்று உலகில் எல்லா உயிர்களையும் இயக்கிக் கொண்டிருக்கும் தாரக மந்திரம்.

மனிதன் மட்டும் அல்ல எல்லா உயிரினங்களும் இதற்காகத் தான் இயங்கி கொண்டிருக்கின்றன.

மரண தண்டனை கொடுக்கப் படும் ஒவ்வொருவருக்கும் நான் சார்ந்திருக்கும் சமூகம் அந்த தண்டனைக்கு காரணியாக எதோ ஒரு வகையில் இருக்கிறது என்ற எண்ணம் என் மனதில் வந்தால் எனக்கு கொஞ்சம் சோகமும் வருகிறது.

அதற்காக சமூகத்தில் உள்ள அனைவரும் சோகம் கொள்ள வேண்டும். ஏனெனில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் நமக்கும் கொஞ்சமாவது நம்மைச் சுற்றி இருக்கும் சமூகத்திடம் அக்கறை இருக்க வேண்டும்.

இந்த மரண தண்டனைகள் கொடுக்கப் படுவதால் ஒரு வெற்றியும் கிட்டுவதாக எனக்கு எந்த வித மகிழ்ச்சியும் இல்லை.

Thursday, October 05, 2006

காந்தி மஹான்

மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியே நீ ஒரு மஹான். உன்னில் குறைகள் இல்லை, நீ தவறுகள் செய்யவில்லை என்று சொன்னால் அது உண்மை இல்லை என்று எனக்குத் தெரியும்.

உன்னிடம் குறைகள் இருந்தால் என்ன? உன் குறைகளையா நான் பின்பற்றப் போகிறேன் உன் நிறைகள் அல்லவா எனக்கு முக்கியம்?

டிராபிக்கில் ரெட் விழுந்த உடன் வண்டியை கோட்டிற்கு அருகே நான் நிறுத்த பின்னால் வண்டியில் இருந்தவர் என்னை திட்ட, கோபம் பொத்துக் கொண்டு வந்தாலும் உன்னைப் போன்றவர்கள் எனக்கு சொல்லித் தந்ததால் அல்லவா என்னால் அமைதியாக அவருக்கு பதில் சொல்ல முடிந்தது. அங்கு திரும்ப திட்டி எல்லோருக்கும் சங்கடம் ஏற்படுத்தாமல் இருக்க எனக்குக் கற்றுக் கொடுத்தவர்களில் நீயும் ஒருவன் அல்லவா?

மரியாதையாக பேசாத பலரிடம் கூட திரும்ப முகம் சுழிக்காமல் நாம் கொடுக்க வேண்டிய மரியாதையுடன் பேச எனக்கு கற்று தந்தது நீ அல்லவா?

மத தலை தூக்கி ஆடிய நவகாளிக்குச் சென்றாய், அங்கிருந்து பல இடங்களுக்கும் சென்று அன்புதான் கடவுள் என்று பல கோரங்களை தவிர்த்து வைத்தாய். இன்று எனக்கு அன்புதான் கடவுள் என்று கற்றுக் கொடுத்த பலரில் நீயும் ஒருவன் அல்லவா?

பொறுமை எவ்வளவு அவசியம் உணர்த்தும் வகையில்தான் உன் வாழ்க்கையில் எத்தனை உதாரணங்கள், பொறுமையால் எத்தனை காரியங்களை செய்திருக்கிறாய். பொறுமையை எனக்கு கற்றுக் கொடுத்த பலரில் நீயும் ஒருவன் அல்லவா?

எதிரிக்கு துன்பம் நினைக்காதே என்று எனக்கு எனக்கு கற்றுக் கொடுத்த பலரில் நீயும் ஒருவன் அல்லவா?

இன்றைய உலகில் அன்பு அறம் மேல் யாருக்குமே நம்பிக்கை இல்லாத சமயத்தில் எல்லோரும் பொறுமை இல்லாமல் கோபம் கொண்டு இருக்கும் சமயத்தில் அன்பின் பலத்தை உன்னைப் போன்றவர்களாலேயே உணர்ந்திருக்கிறேன்.

மனித உயிரே மலிவாய் போய் விட்ட இன்றைய நிலையில் எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும் என்று உன்னைப் போன்ற சிலரைக் கண்டே உணர்ந்து கொள்கிறேன்.

மத வெறி மனித குலத்தையே அழிக்கும் வல்லமை பெற்றிருக்கும் இக்காலத்தில் எல்லா மதங்களையும் எப்படி அரவணைக்க வேண்டும் என்பதை உன்னைப் போன்ற சிலரைக் கண்டே உணர்ந்து கொள்கிறேன்.

உன்னிடம் குறைகள் இருந்தால் என்ன? உன் குறைகளையா நான் பின்பற்றப் போகிறேன் உன் நிறைகள் அல்லவா எனக்கு முக்கியம்?

அன்பு அறன் மீது யாருக்குமே நம்பிக்கை இல்லாத இந்தக் காலத்தில் அன்பையும் அறனையும் எனக்குக் கற்றுத் தந்த நீ எனக்கு ஒரு மஹான்.

வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.

வாழ்க வையகம்.

Friday, September 22, 2006

காதல் ஒரு வார்த்தையில்

கௌதம் போட்டியில் போட்டது கொஞ்சம் டீசன்டா இருக்கறதுனால என் பதிவில் போட்டுகிட்டேன் :-)))).

காதல் ஒரு வார்த்தையில் வருணனை

விவரிக்க
பலவாயிரம் காப்பியங்களால் இயலவில்லை
நூற்றாண்டுகளாய் வார்த்தைகள் போதவில்லை
வார்த்தைகளில் விவரிக்க மொழிகளில்லை
கேள்விக்கு என்னிடம் பதிலுமில்லை
என்னவள் என்றுரைக்க என்னிடமில்லை
காதலில் மிச்சமாய் வேறெதுமில்லை

நினைவுகள்

Wednesday, September 20, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம் - II

மீசை அரும்பிய நாளில் அருகியது
மனதில் தணிக்க இயலாத தாகமொன்று

பகலவன் ஈர்ப்பால் பூமி சுற்றுகிறது
கன்னியர் பால் கொண்ட ஈர்ப்பு
தாகம் தணிப்பதாய் மனதை சுற்றிவிட்டு
தாகத்துக்கு நீருட்டி தாகம் வளர்த்தது

மேகம் காணாத விளைப் பயிர்
கன்னி தலை சாய்க்காத தோள்
இவை இரண்டும் இருந்துதான் பயனென்ன

பயனில்லா தோளும் அடங்கா தாகமும்
கொண்டு வாழ்க்கை சக்கரத்தில் சுழன்ற
சமயத்தில் தான் கண்டேன் கன்னியை

மழை வாசத்தில் தோகை விரித்தாடும்
மயிலின் பரவசம் விவரிக்க வார்த்தையேது
மனம் கவர்ந்த மங்கையரைக் கண்ட
மனிதனின் காதலை விவரிக்க வார்த்தையேது

பலவாயிரம் உயிர் அணுக்களுடன் ஒட்டப்
பந்தயத்தில் வென்றது அவளைக் காணவே

இதயம் ஓய்வில்லாமல் துடித்து அன்றுவரை
பழுதில்லாமல் இயங்கியதும் அவளைக் காணவே

கண்டேன் அவளை கண்டேன் அவளை
களிப்பில் காலம் உறைந்த சமயமது
அப்பொழுது அறியேன் காலம் உறைந்தால்
அதனை சமப்படுத்த விரைந்து ஓடுமென்று
ஓடியது வாழ்க்கை சக்கரத்தில் சுழற்றி

மனிதனின் கண்களுக்கு தெரியும் நீலவானம்
ஒளிச் சிதறல்களால் ஏற்படும் மாயை
அறிந்தும் உணர்ந்து இருக்கிறான் மனிதன்
இருப்பினும் இன்னும் இருக்கிறது ஆகாயம்
இருக்கும் மனிதன் உள்ளவரை மாயையாய்

அவள் உயிரணு பந்தயத்தில் வெல்ல
உந்து சகதி நானல்ல என்றறிந்தேன்
தாகம் தணிக்காத கானல்நீர் என்றுணர்ந்தேன்
இருந்தாலும் இன்னும் இருக்கிறாள் மனதுக்குள்
இருப்பாள் வாழும்வரை ஒருதலை ராகமாய்


முதல்ல ஒரு படைப்பை அனுப்பிச்சேன் அது ரொம்ப நெகடிவா குற்றம் குறைகளை மட்டும் சொல்றா மாதிரி தெரிஞ்சதால இதை எழுதி அனுப்பிச்சேன். நன்றி தமிழ் சங்கம் நான் தமிழில் எழுத வாய்பளித்ததற்கும், நான் அனுப்பியதை திட்டி திரும்ப அனுப்பாமல் இருந்ததற்கும் :-))).

Tuesday, September 19, 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்

உலகின் எல்லா மூலைகளிலும் பொதுவுடமை
மலிவாய் சுலபமாய் எடுக்கப் படுகிறது
மனிதவுயிர் சகஜமுமாகி விட்டது இந்நிகழ்வுகள்
இலங்கை பாலஸ்தீனம் லெபனான் மும்பை

இன்னும் இருக்கிறது ஆகாயம்.

இறை தேடினான் மனிதன் அன்று
தெளிந்துணர்ந்த சிலரால் தானும் உணர்ந்தாய்
தனியார் மயமாக்கி இறையின் பெயரால்
இரை ஆகிறான் மனிதன் இன்று

இன்னும் இருக்கிறது ஆகாயம்.

இறக்கின்றனர் பாலகர் பசியால் விவசாயி
வறுமையால் ஒருவேளை உணவுண்டு வாழ்கிறது
பெரும்பான்மை கோடி குவிக்கிறார்கள் அரிதாரிகள்
அவர்களுக்கே உயிர் என்கிறார்கள் மூளையில்லாதவர்கள்

இன்னும் இருக்கிறது ஆகாயம்.

துவேஷங்களைப் பரப்பிகிறார் மனிதர்கள் பலர்
துவேஷங்களால் இறக்கிறார் பச்சிளம் பாலகர்
கண்டித்தால் அன்பைப் பாராட்டினால்(கோ.வி.) கோபம்
குறையென்றால் கண்டிக்கிறது பெருங்கூட்டம் தமிழ்மணத்தில்

இன்னுமா இருக்கிறது ஆகாயம்.

ஏ ஆகாயமே
மனிதனின் செயல்களால் கண்ணீர்தான் வடிப்பாயா?
விண்கல்லால் டைனோசர் இனமழித்தது போல்
என்றழிக்கப் போகிறாய் கேடுகெட்ட மனிதரை

தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்து என்ன எழுதுவது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு
போட்டி நடத்தி தலைப்பு கொடுப்பவர்களுக்கு நன்றி.

இந்தப் பதிவின் தாக்கத்தில் எழுதியது

Sunday, September 17, 2006

ஒரு மாலை இள வெயில் நேரம்

தமிழ் மணம் அறிமுகமான சமயத்தில் இருந்து 3 மாதங்களுக்கு முன் வரை மும்பையில் இருந்ததால் எந்த ஒரு வலைப் பதிவாளரையும் சந்தித்தது இல்லை. பெங்களூர் வரும் வரை எந்த ஒரு வலைப் பதிவாளருடனும் தொடர்பு கொண்டதும் இல்லை.

மேலும் சிறப்பான எழுத்தாற்றல் இல்லாததாலும், வலை அரசியலில் சார்பு நிலை எடுக்காமல் இருந்ததாலும் அதிகமாக வலைப் பதிவாளர்களுடன் தொடர்பு இருந்ததில்லை.

வலைப் பூக்களில் அரசியல் இருக்கலாம், சண்டைகள் இருக்கலாம் அது எல்லை மீறியும் செல்லலாம் இருப்பினும் திராவிடர், பிராமிணர், ஹிந்து, முஸ்லீம், இது எதிலும் சாராதவர் என்று குழு குழுவாக பிரிந்து செயல் படும் அனைவரையும் இணைப்பது தமிழ் மேல் நம் அனைவருக்கும் இருக்கும் ஈர்ப்புதான்.

என்ன பிரிவினைகள் இருந்தாலும் தமிழ் தாயின் குழந்தைகள் என்று நாமெல்லாம் இணைந்திருப்பதால் அப்படி ஆர்வம் உள்ள அனைவரையும் சந்திக்கும் ஆவல் எனக்குள் இருந்தது.

இது போக வலைப் பதிவுகளில் ஒரு வருடமாக மட்டுமே இருப்பதால் கொஞ்சம் முன்னால் இருந்து இருக்கும் சிலரை சந்தித்து history of blogging தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருந்தேன்.

பெங்களூர் வந்ததில் இருந்து அதற்கு கிடைத்த முதல் வாய்ப்பாக டோண்டு அவர்களின் பெங்களூர் வருகை அமைந்திருந்தது.

பெங்களூர் புதிது என்பதால் எப்படி லால் பார்க் செல்வது என்பதெல்லாம் தெரியாததால் முழித்துக் கொண்டிருந்த எனக்கு சிவ பிரகாசம் அவர்கள் தானும் அந்த வழியாக செல்வதாக கூறியதால் அவரை வீட்டருகே சந்தித்து அவருடன் இணைந்து லால் பார்க் சென்றேன்.

செல்லும் வழியிலேயே டோண்டு அவர்கள் லால் பார்க் வந்து விட்டதாக சிவ பிரகாசம் அவர்களில் கை தொலை பேசிக்கு அழைப்பு வந்தது. ஒரு வழியாக கடைசியாக லால் பார்க் சென்று வண்டியைப் பார்க் செய்த சமயம் சிறிது பதட்டமாகக் கூட இருந்தது.

லால் பார்க் கண்ணாடி வீட்டிற்கு பக்கத்தில் சென்று ஒரு வழியாக கடைசியாக டோண்டு, மியூஸ், மகாலிங்கம் ஆகியோரை சந்தித்தோம். அதன் பின் ஹாய் கோபி, மௌள்ஸ், செந்தழல் ரவி அவருடைய நண்பர் மோகன் குமார் ஆகியோர் வந்திருந்தனர்.

டோண்டு அவர்கள் போட்டோவில் பார்ப்பதை நிறம் கம்மியாக இருந்தார், நிறைய பேசுகிறார். மியூஸ் இவருடைய பின்னூட்டங்கள் சில இடங்களில் மிக புத்திசாலித்தனமாக ஆழமான சிந்தனையுடன் இருக்கும். சில இடங்களில் பைத்தியக்காரத்தனமாக இருக்கும். ஆனால் ஆள் பார்ப்பதற்கு சாதுவாக இருக்கிறார் பிறை வடிவில் ஒரு சந்தனப் பொட்டு வைத்துக் கொண்டு அமைதியாக இருந்தார். இவரை eccentric ஆக கற்பனை செய்து வைத்திருந்த எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது. ஹாய் கோபி அவர்களின் பதிவுகள் எனக்கு பழக்கம் இல்லை ஆனால் மிகவும் நன்றாக பேசுகிறார் jovial டைப் நல்லா அரட்டை அவரோட. ஆனால் எல்லா பேச்சிலர்கள் போலவேதான் இவரும் இருக்கிறார். இதற்கு மேல் அவர் சென்சார் செய்யுமாறு கேட்டுக் கொண்டதால் அவ்வளவுதான். மௌள்ஸ் வலைப் பதிவுகளை ஒரு 15 நாட்களாகத் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார். பைஜாமா ஜிப்பாவில் ஸ்மார்ட்டாக வந்திருந்தார். சிவப் பிராகசம் அவர்கள் வலைப் பதிவுகளில் பின்னூட்டம் மட்டும் இடுபவர் ஒரு ஸ்கூட்டர் வைத்திருக்கிறார் மிக மெதுவாக ஓட்டுகிறார் அவரைத் தொடர்ந்து என்னுடைய பைக்கில் வருவது மிகக் கடினமாக இருந்தது. மகாலிங்கம் அவர்கள் வலைப் பதிவுகளை படிப்பதுடன் சரி என்றும் ஆர்வத்தில் வந்துள்ளதாகவும் கூறினார். அமைதியாக அங்கு நடப்பதை கவனித்து வந்தார். அனுபவம் நிறைந்த அவரைப் போன்றவர்கள் எல்லாம் கூட தமிழ் மணம் படிப்பதை நினைக்கும் பொழுது, இது போன்று எத்தனைப் பேர் படிக்கிறார்கள் என்று எண்ணும் பொழுது தமிழ் மணத்தில் எழுதும் அனைவருக்கும் எத்தனை பொறுப்புகள் உள்ளது என்று தோன்றியது. கடைசியாக செந்தழல் ரவி இவர் இருக்கும் இடமெல்லாம் இருப்பார்கள் அனானி என்பது போல மோகன் குமார் என்ற அனானி நண்பருடன் வந்தார். போட்டோவில் பார்ப்பதை விட இளமையாக இருக்கிறார். வரும் பொழுதே என்னையும், மியூஸையும் என்ன நான் சண்டை போடுற ஆளுங்க எல்லாம் இருக்கீங்களா? சண்டையை ஆரம்பிக்கலாமா என்று கேட்டுக் கொண்டே வந்தார்.

சந்திப்பில் பேசியது டோண்டுவுடனான சந்திப்பில் போண்டா இல்லாமலா ஆகவே போண்டா போன்றவைகள் குறித்து மீண்டும் எழுதுகிறேன்.

Wednesday, September 13, 2006

குறள்(ரல்)

தமிழ் மணத்தில எந்தக் குறளை வேணும்னாலும் எப்போ வேண்டுமானாலும் எடுத்துப் போடலாம் ஏனென்றால் கண்டிப்பாக யாராவது ஒருவருக்குத் தேவைப்படும்.

எனோ இதையெல்லாம் இன்னைக்கு போடணும்ன்னு தோணுச்சு.

யாரும் படிக்கப் போறதில்லை படிச்சாலும் இதெல்லாம் வாழ்க்கைக்கு உதவாதுன்னு விட்டு விடத் தான் போறாங்க இருந்தாலும் குறள் இருக்குன்னு சொல்றது தப்பில்லையே.

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.


மற்றவர் பின் சென்று அவரைப் பற்றித் தவறாகப் பேசுவது தான் நீங்கள் இந்த உலகில் செய்யும் மிகப் பெரிய பாவச் செயல்.

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.


நாம் எதிரியாக கருதுபவருக்குக் கூட தீங்கு செய்யாமல் இருப்பதே ஒருவருக்கு இருக்கும் பண்புகளில் தலையான பண்பாக கருதப் படும்.

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.


பிறரைக் குற்றம் சொல்பவர்களே மற்றவர் குற்றங்களை பார்க்கும் முன் உங்கள் குற்றங்களை அறிந்து கொண்டால் இந்த உலகின் எந்த கெடுதலும் உங்களை தீண்டாது.

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.


பலர் வெறுப்படையும் வகையில் வார்த்தைகளைச் சொல்லுபவன் எல்லோராலும் வெறுக்கப் படுவான்.

குறள் விளக்கம் எதோ எனக்கு தெரிஞ்சதை போட்டிருக்கேன் எல்லாம் context சரியாக இருக்கும் என்றுதான் நினைக்கிறேன்.

தவறாக பொருள் சொல்லி இருந்தால் யாராவது சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

அறிவியலும் ஆன்மீகமும் - 4

காஸ்மாலஜி என சொல்லப் படும் பிரபஞ்சத்தின் தொடக்கம் குறித்த அறிவியல் துறையில் சில ஆண்டுகளாக Big bang என்று சொல் தான் தாரக மந்திரமாக இருந்து வருகிறது. இன்று காஸ்மாலஜியில் நடக்கும் எல்லா ஆராய்ச்சிகளுக்கும் எதோ ஒரு வகையில் அடிப்படையாக் இருப்பதும் Big Bang தான்.

ஜார்ஜஸ் லெம்யாட்ரி ( Georges Lemaître ) என்ற ரோமானிய கிறிஸ்துவப் பாதிரியார் தான் முதன் முதலில் 1927ம் ஆண்டு Big Bang மூலமாக இந்தப் பிரபஞ்சம் தோன்றி இருக்கலாம் என்று சொன்னவர். பின் ஹீயூபில் இது சாத்தியமே என்பதை பின் நிரூபித்தார். Big Bang தியரி என்ன சொல்கிறது என்பதை எப்படி இதனை நிருபணம் செய்தார் என்ற நோக்கில் பார்த்தால் இன்னும் தெளிவாக விளங்கும். இதற்கு நாம் ஒளியின் சில தன்மைகளை தெரிந்து கொள்வது அவசியமாகிறது ஒளியின் அலைகளாக பயணம் செய்கிறது இதில் wavelength என்பது ஒரு அலைக்கும் இன்னொரு அலைக்கும் இடையில் உள்ள தூரம்( தூரம் என்றதும் எதோ கிலோமீட்டர் கணக்கில் நினைத்து விடாதீர்கள்(1/100000000000000000 மீட்டர்). இதில் blue shift, red shift என்று சொல்லுவார்கள் அதாவது ஒரு ஒளி உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்றால் blue shift ஆகும் உங்களை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது என்றால் அது red shift ஆகும். இன்னும் எளிமை படுத்தி சொல்ல வேண்டுமெனில் சிகப்பு நிறத்தில் இருக்கும் வெளிச்சமே அதிக தொலைவுக்கு செல்லும் என்று கொள்ளுங்கள். ரயில்வே லெவல் கிராஸிங், போக்குவரத்து லைட் எல்லாமே சிகப்பு நிறத்தில் அமைந்துள்ளது இதனால் தான்.

ஹீபில் என்ன கண்டறிந்தார் என்றால் பூமியில் இருந்து பல ஒளி நூற்றாண்டுகள் தள்ளி இருக்கும் நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளியானது மெல்ல red shift ஆகிக் கொண்டிருக்கிறது என்று. இதன் மூலம் கண்டறிவது என்ன என்றால் மெல்ல அந்த நட்சத்திரங்கள் எல்லாமே பூமியை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது. அதாவது இந்தப் பிரபஞ்சம் மெல்ல விரிவடைந்து கொண்டிருக்கிறது. விரிவடைந்து கொண்டிருக்கிறது என்றால் இன்று இருந்ததை விட நேற்று அருகில் இருந்தது அதற்கு முன் தினம் இன்னும் அருகில் இருந்தது என்று வைத்துக் கொண்டால் நாம் பின்னோக்கிச் செல்ல செல்ல இன்று பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே அருகருகே இருந்திருக்க வேண்டும் அல்லவா? அதாவது பிரபஞ்சம் என்பது ஒரு சிறிய புள்ளியான இடத்தில் இருந்து தோன்றி இருக்க வேண்டும்.

அந்த புள்ளி வடிவான நேரத்தில் இருந்து மிக விரைவாக அனைத்தும் வெடித்து சிதறியது போல bang என்று விரிவடைந்திருக்க வேண்டும் என்பது தான் big bang தியரி. ஒரு விஷயத்தை இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று விளக்குவது சுலபம். ஆனால் இப்படி நடக்கும் சமயம் அந்த சமயத்தில் என்னென்ன எப்படி எப்படி இருந்திருக்கும் என்று விவரிப்பது மிகக் கடினம். அதாவது அவன் அவளிடம் ஐ லவ் யூ என்று சொன்னான் என்று சொல்லி விடுவது சுலபம். ஆனால் அந்த சம்யத்தில் அவன் மன நிலை எப்படி இருந்தது அவன் இதயத் துடிப்பு எவ்வளவு அதை சொல்லும் சமயம் என்ன நினைத்துக் கொண்டிருந்தான் அதே சமயம் அந்தப் பெண் என்ன நினைத்திருப்பாள். அவளின் இதயத் துடிப்பு எவ்வளவாக் இருந்திருக்கும் உடனே என்ன நினைத்திருப்பாள். இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் தேவையில்லை என்று சில சமயங்களில் ஒதுக்கி விடலாம். ஐ லவ் யூ என்று சொன்ன உடன் அவனுக்கு கன்னத்தில் பரிசாக கிடைத்தது முத்தமா? அடியா என்பதுதான் முக்கியமாக படும்.

ஆனால் காஸ்மாலஜியில் இதை எல்லாம் ஒதுக்கி விட முடியாது ஏனென்றால் இவை அனைத்துமே காஸ்மாலஜியில் மிக அவசியமாகிறது. இப்படி எல்லா விஷயங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு விஞ்ஞானிகள் இதனை விளக்க முயற்சி செய்யும் சமயம் தான் அவர்கள் singularityல் சிக்கிக் கொண்டார்கள்.

நம் பூமி சூரியனை ஏன் சுற்றுகிறது? சூரியன் பூமியை ஈர்க்கிறது அதே சமயம் சந்திரன் பூமியை சுற்றிவதற்கு காரணமும் ஈர்ப்பு விசையால்தான். இந்த ஈர்ப்பு விசை தூரத்தால் பாதிக்கப் படும். சந்திரன் சூரியனைச் சுற்றாமல் பூமியை சுற்றுவதற்கு காரணம் பூமிக்கு அருகில் இருப்பதால் தான். இப்படி எல்லாமே ஒரே புள்ளியில் இருந்துதான் தோன்றியது என்று சொன்னால் அந்த சமயத்தில் ஈர்ப்பு விசை என்பது எப்படி இருந்திருக்கும். அந்த சமயத்தில் புள்ளியாக இருந்த பிரபஞ்சம் பில்லியன் பில்லியன் டிகிரிகளாக இருந்திருக்கும். அதே சமயம் density என்பது மிக மிக அதிகமாக இருந்திருக்கும். pressue மிக மிக அதிகமாக இருந்திருக்கும். இந்த ஒரு சூழ்நிலையில் எந்த ஒரு physics equationனும் விளக்க முடியாத ஒரு சூழ்நிலை தான் singularity.

All physics equations and laws we have will be broken down during singularity.

Big bang theoryயை முதன் முதலில் ஒரு ரோமானிய பாதிரியார் வெளியிட்டார் என்பது மிக ஆச்சர்யமான ஒரு நிகழ்வு. ஏனெனில் கலீலியோ காப்பர்நிக்கசின் தத்துவங்களை சப்போர்ட் செய்தார் என்று அவரை கைது செய்த வாடிகன் இது போன்ற ஒரு அறிவியல் விளக்கத்தை உலகம் ஏழு நாட்களில் தோற்றுவிக்கப் பட்டது என்ற பைபிளை அப்படியே நம்பிக் கொண்டிருந்த சர்ச் இதனை அனுமதித்தது ஆச்சர்யமான ஒரு விஷயமே. ஆனால் சர்ச் இதனை அனுமதித்ததற்கு மிக முக்கியமான காரணம் big bang என்ற ஒன்று நடந்தது உண்மை ஆனால் அந்த big bang உருவாகுவதற்கு காரணம் இறைவனே என்று சொல்லலாம் என்றுதான். ஆனால் அதனை அனுமதிக்கக் கூடாது big bang என்ற ஒன்று அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும் என்று நினைத்த விஞ்ஞானிகள் அதனை physics and mathematical equations மூலமாக தமதாக்கிக் கொண்டார்கள். இருந்தாலும் இந்நாள் வரை singularity என்பதைப் பற்றி எந்த சயன்டிஸ்டும் விளக்க முடியாததால் வாடிகன் அந்த பாயிண்டை Genesis என்று இன்றும் விளக்கிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இதன் மூலம் ஒன்று மட்டும் தெளிவாகிறது என்ன என்றால் நம்முடைய மதங்கள் நமக்கு இன்று வரை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதிலும் சில முரண்பாடுகள் உள்ளன என்பதுதான். ஹிந்து மதம் சொல்வது போல பிரம்மன் என்ற ஒருவர் இந்த உலகை படைக்கவில்லை. கிறிஸ்துவ மதம் சொல்வது போல ஏழு நாட்களில் இந்த உலகம் உருவாக்கப் படவில்லை. இஸ்லாம் சொல்வது போல ஆறு நாட்களில் இந்த உலகம் உருவாக்கப்படவில்லை. இன்று நாம் இருப்பது போல ஒரு பால்வெளி உருவாவதற்கு பல பில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்க வேண்டும். அதை எல்லாம் தாண்டி பூமியில் முதல் உயிர் உருவாவதற்கு இன்னும் சில மில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்க வேண்டும்.

இந்த பூமி உருவானது ஒரு cosmic accident. இந்த பூமியில் நாம் உருவானது இன்னொரு cosmic accident. இதை ஏற்றுக் கொள்ள மனித ஈகோவுக்கு கஷ்டமாகக் கூட இருக்கலாம் ஆனால் இவை அனைத்தும் உணமை என்பதை மறுப்பதற்கில்லை என்று என்னுடைய pesimisstic mind சொல்கிறது.

optimistic mind இந்த cosmic accident நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன 1/1000000000000000000000000000000 அப்படி இருந்தும் இந்த cosmic accidents நடந்திருக்கிறதே அப்படியானால் இதனை விளக்க முடியுமா உன்னால் may be எங்கோ ஒரு டிவைன் Intervention நடந்ததால் தான் இது சாத்தியமாகி இருக்கும் என்றே நம்பு என்று கூறுகிறது.

இதில் எந்த மனம் சொல்வதை நம்புவது என்பது இன்னும் புரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் மதத்தின் பெயரால் இன்று இந்த உலகில் நடந்து கொண்டிருக்கும் சண்டைகள் அனைத்துமே மிகப் பெரிய முட்டாள்த்தனம் என்றுதான் தோன்றுகிறது. எல்லா மதங்களிலும் தவறுகள் இருக்கின்றன. எந்த மதத்தின் கொள்கைகளுமே நூறு சதம் சரியானது அல்ல என்பதை நாம் எப்படி உருவானோம் என்பதை எல்லா மதங்களும் விளக்கும் விதத்தில் இருந்தே கண்டு கொள்ள முடிகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் நடக்கும் சண்டைகளிலும் சச்சரவுகளிலும் ஒரு பாயிண்டுமே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

என் மதம் தான் பெரியது, மதம் மாற்றம் சரி தவறு என்று சொல்வது, புனிதப் போர், கோயில் இடிப்பு எல்லாமே அர்த்தமில்லாதது என்றுதான் தோன்றுகிறது.

என் மதம் மூலம் தான் சரியான மார்க்கத்தில் செல்ல முடியும் என்பதெல்லாம் நகைப்புக்குறியதாகத் தான் தோன்றுகிறது.

மேலும் எனக்குத் தெரிந்த ஆன்மீகமும் அறிவியலும் தொடரும்.

Tuesday, September 12, 2006

orkutலிம் போலிகள்

மனிதர்களுல் பொது சிந்தனை எங்கெங்கு எந்த எந்த விஷயங்களில் எல்லாம் இருக்கிறது.

Orkuttians beware.

http://www.ibnlive.com/news/warning-orkutting-can-turn-ugly/21144-3.html

Monday, September 11, 2006

செப்டம்பர் 9/11 சில சிந்தனைகள்

இறந்தவர்களின் எண்ணிக்கை 35,000. என்ன எண்ணிக்கை தவறாக சொல்கிறேன் என்றுஎண்ணாதீர்கள். இதுவும் செப் 11 போன்ற ஒரு நிகழ்வுதான் ஆனால் விமானம் சென்று ஒருவளாகத்தின் மேல் மோதியதால் நேர்ந்த நிகழ்வு அல்ல.
.
.
.
ஒரு வேலை உணவு இல்லாமலும் உணவுப் பற்றாக்குறையால் வரும் நோய்களாலலும் ஒரு நாளில் இறப்பவர்களின் எண்ணிக்கை இது.

இதே போன்று எய்ட்ஸால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் செப் 11 அன்று இறந்தவர்களின்எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகம்.

இன்று வார் ஆன் டெரரிஸம் என்ற பெயரில் பல பில்லியன் டாலர்களை செலவழித்து வரும் மனிதன் உணவில்லாமல் இறக்கும் குழந்தைகளுக்காக எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதையோசிக்க வேண்டும்.

நாம் போரிட வேண்டியது உலகில் இருக்கும் வறுமையை, நாம் தீர்வு காண வேண்டியது இன்னும்60 ஆண்டுகளில் பூமியில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அறிக்கைகள் வந்து கொண்டிருக்கிறதேஅந்த தண்ணீர் பஞ்சத்திற்கு. வேரறுக்க வேண்டியது மனித குலத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்பல வேறு நோய்களை.

மனிதன் உணர்ந்து கொள்வானா?

Wednesday, August 30, 2006

Are spiritual masters schizophrenic சிந்தனைகள்

விவாதம் மிக நன்றாக சென்று கொண்டிருந்தது. அதனால் ஊடால் புகுந்து என்னுடைய கருத்தையும் கொஞ்சம் சொல்லாமுன்னு அடிச்சேன் அதை இங்க பதிவா இட்டிருக்கேன்.

இந்த விஷயத்தில பார்த்தீர்களானால் ராம கிருஷ்ண பரமஹம்சர் இருந்த கால கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு மனநிலை சரி இல்லை என்று வைத்துக் கொள்வோம் உடனே என்ன சொல்வார்கள் பேய் பிடித்து விட்டது என்று உடனே பூசாரியிடம் சென்று வேப்பிலை அடித்து அமர்களப் படுத்தி விடுவார்கள்.

மேலும் இந்த கால கட்டம் என்பது அறிவியல் வளர்ச்சி குறைவாக இருந்த காலம் எல்லாமே Deity தான். சூரியன் முதற் கொண்டு அனைத்தயுமே மக்கள் கடவுளாக வழி பட்டு வந்த காலம். சூரியன் என்பது ஒரு நட்சத்திரம் அதுவும் ஒரு பெரிய நட்சத்திரம் இல்லை மத்திய சைஸ் நட்சத்திரம் என்று தெரிந்திருக்கவில்லை.

இது போன்ற சூழ்நிலையில் மக்கள் தங்களால் விளக்க முடியாத அனைத்து விஷயங்களுடனும் ஒன்று பயத்துடனோ இல்லை மரியாதையுடனோ பார்த்து வந்த கால கட்டம் அது.

இது போன்ற சூழ்நிலையில் ராம கிருஷ்ண பரமஹம்ஷர் schizophrenic ஆக இருந்து அதனை மக்கள் பேரானந்தம் என்று எடுத்துக் கொள்ள வாய்ப்பிருந்திருக்கிறதா என்றால் கண்டிப்பாக இருந்திருக்கிறது.

ஆனால் நம்மால் அதனை உறுதி படுத்தவோ இல்லை இல்லை என்று மறுக்கவோ இயலாது. அப்படி உறுதி செய்வதும் தவறாகி விடும், மறுப்பதும் தவறாகி விடும்.

இங்குதான் ம்யூஸ் அவர்களின் இந்தக் கருத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

///
இவர்களை தெய்வமாகக் காண்பவர்களுக்கு அந்த நம்பிக்கையின்மூலம் கிடைக்கின்ற மன ஆறுதல், பாதுகாப்பு உணர்வு, பாஸிட்டிவ் உணர்வுகள், பயங்களிலிருந்து தப்புதல் போன்றவை நம்பாதவர்களுக்கு நம்பாமலிருப்பதன் மூலம் ஏற்படுகின்றது. எனவே இரண்டிற்கும் அதிக வித்யாசமில்லை.
///

Muse has put it beautifully here.எனக்கும் இது போன்ற நம்பிக்கைகள் உண்டு கடவுளை நம்புவதன் மூலம், ராம கிருஷ்ண பரமஹம்சர் பேரானந்த நிலையை அடைந்தார் என நம்புவதன் மூலம் ஒருவனுக்கு மன தைரியம், நம்பிக்கை போன்ற பாஸிடிவ் விஷயங்கள் மட்டும் கிடைக்கிறது என்றால் we shouldnt have discussed this at all.

ஆனால் பாஸிடிவ் விஷயங்கள் மட்டும் தான் கிடைக்கிறதா என்றால் இல்லை.

மதங்களால் நன்மைகள் மட்டுமே இல்லை அதனால் பல பிரச்சனைகளும் வருகின்றன. (என்னைப் பொறுத்த வரை மதங்கள் தான் மனித குலத்துக்கு மிகப் பெரிய பிரச்சனை என்னுடன் பலர் வேறுபடுவர் மேலும் இது இங்கு விவாதிக்கப் படவில்லை ஆனால் மதங்களால் மனிதர்களுக்கு தொல்லைகள் உண்டு என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்).

மேலும்

டாவின்ஸி கோட் நாவலில் ஒரு வரி வரும். we worship the gods of our fathers. என்னடா கடவுள் அன்றைக்கும் ஒன்றுதான் இன்றைக்கும் ஒன்றுதான் ஆகவே என்ன பெரிய ஸ்டேட்மெண்ட் என்று நினைகாதீர்கள். நாம் செய்வது நம் fore-fathers கடவுளை என்றால் அவர்கள் தவறாக எதையோ கடவுள் என்று நினைத்து தவறாக செய்து workship கொண்டிருந்தால்?

இது போன்ற ஒரு சூழ்நிலையில் இந்த விவாதம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகத் எனக்கு தோன்றுகிறது.

உங்களின் முக்கியமான கேள்விக்கே நான் வரவில்லை என்று நினைக்கிறேன் அதற்குள் என்ன இவ்வளவு பெரிய பதில் என்று எண்ண வேண்டாம். உங்களின் கேள்விக்கு பதிலை அளிக்கும் விதமாக என்னுள் இருக்கும் ஆன்மீகம் குறித்த சிந்தனைகளை அப்படியே வெளிப்படுத்தியும் உள்ளேன்.

இப்பொழுது உங்களின் கேள்விக்கு செல்கிறேன்.

இப்பொழுது உங்களின் கேள்விக்கான விஷயத்திற்கு வந்து விட்டேன்.

அதாவது இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் அந்த கால கட்டத்தில் வாழ்ந்த சிலருடைய கருத்துக்களை கணக்கில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ம்யூஸ் அவர்கள் விவேகானந்தரே ராம கிருஷ்ண பரமஹம்சரை பைத்தியமாக இருக்க வாய்ப்புள்ளது என்று ஒரு காலகட்டத்தில் கருதினார் என்று கூறியுள்ளார், பின் அவருடைய கருத்துக்களை நம்பி அவருடைய கொள்கைகளைப் பின்பற்றினார் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் விவேகானந்தரினால் மட்டுமே Influence ஆகி ஒரு முடிவுக்கு வருவதும் தவறாகும்.

மேலும் தெ.கா. அவர்களின் கருத்துக்களையும் இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும் எந்த அடிப்படையில் நாம் ஒருவரை மனநிலை சரியில்லாதவர், மனநிலை சரியுள்ளவர் என்று பிரிக்க முடியும்? எதோ ஒரு படத்தில் வரும் வசனம் போலத்தான் சென்று விடும் அவன் பணப் பைத்தியம், அவன் பெண் பைத்தியம் என்று எல்லோருமே ஒரு வகைப் பைத்தியம்தான்.

இவையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது மிக மிக குழப்பமாகத்தான் இருக்கிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில் எதுவும் முடிவு செய்ய முடியாத நிலையில் conclusion என்பது ஒவ்வொரு மனிதர்களிடமும் விட்டு விடுவது தான் சரி என்று தோன்றுகிறது கடவுள் என்று நினைத்தால் கடவுள் இல்லையென்றால் கல் என்பது போல. ஆனால் இது போன்றும் இருக்கலாம் என்ற மாற்று சிந்தனைகளையும் கண்டிப்பாக போதனை செய்ய வேண்டும். ராமர் என்பவர் ஒருவருடைய கற்பனையில் மட்டுமே வாழ்ந்து வந்திருக்கிறார், அவர் உண்மையல்ல என்று எல்லோரும் நம்பாவிட்டாலும் அந்த மாற்று சிந்தனை போதிக்கப் பட்டிருந்தால் நமக்கு சகிப்புத் தன்மை என்பது அதிகரித்திருக்கலாம் என்று நினைப்பதுண்டு அது போல தான் இந்த விஷயமும்.

Thursday, August 24, 2006

முதல் கதை முயற்சி

தாவணி கட்டிகிட்டு வந்த அந்த பெண்ணை ஏர்போர்ட்டில் பார்த்து 'தாவணி போட்ட பொண்ணா? ஆபீஸ், காலேஜ் மாதிரி இங்கயும் முழிச்சுகிட்டே கனவு காண ஆரம்பிச்சிட்டேனா? நம்ம வாழ்க்கையில திரும்பவும் தாவணி போட்ட பொண்ணை அதுவும் தாவணி போட்ட சிட்டிப் பொண்ணை அதுவும் தாவணி போட்டு சூட் ஆகிற சிட்டிப் பொண்ணை பார்ப்பேன்னு நினைச்சு கூட பார்க்கலயே டேய் நீ வாழ்க்கையில் எல்லாத்தையும் பாத்துட்டடா' இப்படி நினைச்சுட்டு இருக்கும் போதே மறுபடியும் டென்ஷன் ஆரம்பிச்சுடுச்சு.

'ஏண்டா மொத மொதல்ல பிளைட்டைப் பிடிச்சு பாரின் போற அந்த நேரத்தில என்னடா வாழ்க்கையில் எல்லாம் பாத்துட்டேன் வைச்சுட்டேன்னு? ஏற்கனவே வயிறு கலங்கிகிட்டு இருக்கு இதில இப்படி எல்லாம் யோசனை வேற. இந்த விசா பிராப்ளம் வந்து டீம் இல்லாம தனியா ஒரு பிளைட்டுல வந்து மாட்டீட்டேனே? டீம்ல கூட போயிருந்தாவாவது கடலை போடறதுக்கு ஒரு பொண்ணாவது இருந்தது. நீ கொஞ்ச நேரம் நான் கொஞ்ச நேரமுன்னு மாத்தி மாத்தி கடலை போட்டிட்டு இருந்தா? பிளைட்டுல என்ன ராக்கெட்டுலயே போனாக் கூட வித்தியாசம் தெரியாது.'

'ஆஹா செக்கிங் கூப்புட்டாங்க என்னய கூட செக்கிங்க் பண்ணுறாங்கன்னு நினைச்சா சிரிப்பா தான் இருக்கு? பால் வடியுற மூஞ்சின்னு சொல்லுற எங்க அம்மா, பலப் பல பிகருங்க எல்லாரையும் இங்க கூட்டிட்டு வந்து இவங்ககிட்ட காட்டணும் அப்பாடி ஒரு வழியா முடிஞ்சுது. என்ன இது? ஏரோபிளேனுக்குன்னு டிக்கெட் வாங்கீட்டு பஸ்ல ஏத்தறாங்க என்ன நடக்குது இங்க? யாரையாவது கேக்கலாமா? வேண்டாம் வேண்டாம் நாம பாட்டுக்கு பிளைட்ல போகப் போறோமுன்னு ஜீன்ஸ் ஜெர்கின்னு ஒரு ரேஞ்சா வந்திருக்கறோம் கேள்வியைக் கேட்டு அசிங்கபடக் கூடாது எல்லாம் தெரிஞ்சா மாதிரி அப்படியே மெயின்டெயின் பண்ணிக்கிடுவோம்.'

'என்னா பஸ் இது உட்கார இடம் கூட இல்லாம? நின்னுகிட்டு போக வேண்டியதா இருக்கு கம்பெனில அமெரிக்கா அனுப்புறோமுன்னு எங்கயா அனுப்புச்சீங்க. ஓ பிளைட்டு பக்கத்தில கொண்டு போய் நிறுத்தீட்டாங்க? இதுக்குதான் பஸ்ஸா? என்னமோ போ எல்லாமே தெரிஞ்சா மாதிரி எவ்வளவு நேரம்தான் நடிக்கிறது?'

'சரி சரி மேல ஏறியாச்சு. கொஞ்ச நேரமா கொஞ்சம் கம்மியாகி இருந்த டென்ஷன் இப்போ உச்சதுக்கு வந்துடுச்சே? அஹா பொம்பள புள்ளங்க கிட்ட பந்தா விடணும்கறதுக்காக சாமி உன்னைப் பத்தி கண்டதையும் பேசி இருக்கேன் அதையெல்லாம் மனசுல வைச்சுக்காதப்பா என்னை முன்னாடி காப்பாத்தின மாதிரி இப்பவும் காப்பாத்தீடு சாமி.'

'சரி சீட் பெல்ட் போடச் சொல்லுறாங்க இந்த டென்ஷன்ல கை எல்லாம் நடுங்கறதுல ஒண்ணுமே முடியலியே என்ன பண்ணறது. ஆஹா பக்கத்தில் இருக்கறவர் உதவி செய்யறாரு. முத முதல்ல பிளைட்டுல வர்றீங்களா கேக்கறார் ஆமா சொல்லுறேன் கவலைப் படாதீங்க எல்லாம் ஓகேவா இருக்கும்ன்னு சொல்லறாரு. பரவாயில்லை நல்ல மனுஷனா இருக்கறாரு. அவரும் முத தடவை போகும் போது யாராவது இப்படி சொல்லியிருப்பாக போல.'

'சரி பிளைட்டு கிளம்புதே பரவாயில்லை ஒண்ணும் தெரியல ஆஹா என்ன இது வேகமாப் போகுது மேலப் போக போக இந்த ஆட்டம் ஆடுது. சாமி என்னைக் காப்பாத்து சாமி இனிமே உன்னைப் பத்தி தப்பாவே பேச மாட்டேன் எம்புட்டு அழகான பிகரா இருந்தாலும் பந்தா விடறதுக்காக ஐடியல் வோர்க்சிப் மட்டம் மக்கள் மூடத்தனமா இருக்காங்கன்னு பேச மாட்டேன் ஆத்தா மாரியாத்தா என்னைக் காப்பாத்தாத்தா. முருகா என்னை காப்பாத்து. ஆஹா இப்போ மறுபடியும் பிளைட் ஒழுங்கா சீராடுச்சே எல்லா சாமியும் என்னைக் காப்பாத்தீட்டீங்களா?'

'சரி சரி என்ன இது பிளைட் ரொம்ப நேரமா போயிட்டு இருக்கு என்ன பண்ணறது. இதில பிஸினஸ் கிளாஸுன்னா ரொம்ப வசதியா இருக்குமாமே? எல்லா சவுகரியமும் இருக்குமாமாம் நிறைய சாப்பிட எல்லாம் தருவாங்களாமே? இந்த கம்பெனிக்கு என்ன குறைச்சல் பிஸினஸ் கிளாஸ் டிக்கெட் எடுத்துக் கொடுத்தா என்ன குறைஞ்சா போயிடுவாங்க? எங்க பீ.எம். ஒரு வேலையும் செய்யறதில்லை சும்மா ஒக்காந்து ஷேர் மார்கெட்டையும், எக்ஸல் ஷீட்டையும் வெறிச்சு வெறிச்சு பார்த்துகிட்டு இருக்கான் அவனுக்கு எல்லாம் பிஸினஸ் கிளாஸ் என்னை மாதிரி ராத்திரி எல்லாம் கண்ணு முழிச்சு கோட் அடிக்கறோம் நமக்கு மட்டும் எகானமி கிளாஸ்? என்ன உலகமடா இது? உழைக்கறவங்களுக்கு மதிப்பே இல்லை.'

ஆஹா என்ன இது மறுபடியும் பிளைட்டு இந்த ஆட்டம் ஆடுது? வயித்தைக் கலக்குதே? நான் பேஸ்து அடிச்சா மாதிரி உட்காந்திருக்கறதைப் பார்த்துட்டு பக்கத்தில இருக்கறவர்தான் ஏர் டர்புளன்ஸ் அப்படித்தான் இருக்குங்கறார். ஆத்தா என்ன இது இந்த ஆட்டம் ஆடுது நம்மூர் ஓட்ட பஸ்ஸும் இப்படிதான் ஆடும் ஆனா இது அந்தரத்தில இல்ல ஆடுது? இனிமே என்னதான் ஆனாலும் பிளைட்டுல மட்டுமே ஏறவே கூடாதுப்பா. என்ன விளையாட்டு இது நான் வரலை திரும்பிப் போகும் போது கப்பல்ல ஏறி போயிக்குறேன் அப்பா இது நமக்கு ஒத்து வராது. சாமி என்னை காப்பாத்து சாமி. ஆஹா மறுபடியும் சரியாயிடுச்சு. நல்ல வேலை டீசண்டா இருக்கட்டுமே சாக்லேட்டுல இருந்து எல்லாமே கம்மியா எடுத்துகிட்டேன். இல்லை எனக்கு வயித்த கலக்கற கலக்குக்கு பிளைட்டு நாறிருக்கும்.

அப்பாடி ஒரு வழியா வந்து இறங்கியாச்சு இப்போதான் நிம்மதி. செக்கிங் மறுபடியும் சிரிப்புதான் வருது என்ன சொல்லறது. இந்த அமெரிக்காவில ஜீன்ஸ் எல்லாரும் லோ ஹிப்புலதான் கட்டுவாங்க போல. அமெரிக்காகாரனுங்க குடுத்து வைச்சவனுங்க. இது என்ன இது என்னைப் பார்க்க டீம்ல இருந்து எல்லாரும். பக்கத்தில தான் இருக்கறதுனால வந்திருப்பாங்க போல. பிளைட் எப்படி இருந்துச்சுன்னு கேக்கற டீம் மேட் ஒருத்தி.

"Fantastic. ஏறுனதும் தெரியல இறங்கினதும் தெரியல." என்று சொல்லி விட்டு டீம் மேட்டிடம் "என்ன அமெரிக்க வந்தும் தாயத்து கயிறுன்னு கைல எல்லாம் கட்டீட்டு இருக்க. This is the land of technology. Grow up"ன்னுட்டு சொல்லிகிட்டே நடக்கிறேன்.

Thursday, August 17, 2006

சுதந்திர தின சிந்தனைகள்

நாடு என்பது என்ன? எல்லைக் கோடுகள் நம்மைப் யாரிடம் இருந்து பிரிக்கிறது? 47க்கு முன் நம் சோதரர் இன்று அவர்களால் தான் நமக்கு மிகப் பெரிய அபாயம். எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம்?

"தனி ஒரு மனிதனுக்கு உண்வில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்று மனித நேயத்தை வழியுறுத்தி முழங்கினானே ஒரு கவிஞன் அவன் கனவு மெய்படும் திசைக்கு எதிர் திசையில் அல்லவா சென்று கொண்டிருக்கிறோம்.

தன் குலத்தையே நொடிகளுக்குள் அழிக்கும் திறனை வளர்த்துக் கொண்டவன் மனிதன். இன்று அழிவு என்று வந்தால் அழியப் போவது மனிதர்களுல் ஒரு பகுதியினர் மட்டும் அல்லர், முழு மனித இனமே அழிந்து விடும் சூழ்நிலைதான் நிழவுகிறது.

லெபனானில் நடந்த தாக்குதல்கள் Nuclear Holocast ஆக மாறி விட எத்தனை நேரம் பிடித்து விடும்.

உலகம் எங்கிலும் இந்த நிலை என்றால் நமக்கு தலையிலும் பிரச்சனை வாலிலும் பிரச்சனை.

பாகிஸ்தான் இந்தியா பிரச்சனையினால் இறப்பது தம் தூரத்து ரத்தச் பந்தங்கள் தான் என்பதை எப்பொழுது நாம் உணரப் போகிறோம்? காஷ்மீர் என்ற சொர்கத்தை இன்னும் நரகமாகவே வைத்திருக்கிறோமே என்று அதனை தீர்க்கப் போகிறோம்? அந்த ஊர் குழந்தைகள் வெடி குண்டுப் சத்தத்திற்கு நடுவில் தூங்காமல் தாலாட்டிற்கு நடுவில் தூங்கும் காலம் வரும்?

இலங்கை என்று இயற்கை எழில் கொஞ்சும் பூமிக்கு விடியல் வரப் போகிறது?

எது மாறினால் இது போன்ற கொடுமைகளில் இருந்து விடிவு கிடைக்கும்?

அரசாங்கமோ மாறுவதாலா? இல்லை நாட்டின் பாலிஸி மாறுவதாலா?

மாற வேண்டியவை அவை அல்ல மனிதனின் மனோபாவம் தான். இனம் மதம் என்று தன்னைத்தானே பிரித்துக் கொண்டிருப்பது மனிதன் தான் ஆகையால் மாறுதல் என்பது அவனிடத்தில் தான் வர வேண்டும்.

காஷ்மீர் பிரச்சனை தீர வேண்டுமெனில் மாற வேண்டியது மனிதனை பிடித்திருக்கும் மதம் தான். இலங்கைப் பிரச்சனைகள் தீர இன குறித்த மனிதனின் மனோபாவம் தான் மாற வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள், சிங்களத்தவர்கள் என்ற எண்ணம் போய் அனைவரும் மனிதரே என்ற எண்ணம் தழைத்தோங்கினால் இலங்கைப் பிரச்சனை தீர்ந்து விடும்.

ஹிந்து முஸ்லீம் என்ற பாகுபாடுகள் இல்லையெனில் பாகிஸ்தான் உருவாகியே இருக்காது காஷ்மீரும் பிரச்சனைக்குள்ளாகி இருக்காது.

இந்த பாகுபாடுகள் அனைத்தும் தீர்ந்து போக வேண்டுமெனில் அன்பு வழியில் சென்றால்தான் அது முடியும்.

பிரச்சனைக்கு அடிப்படை, அந்த அடிப்படைக்கு அடிப்படை என்று போய்க் கொண்டே இருந்தால் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணியாக மனிதனின் ஈகோ தான் இருக்கும் என் மதம் என் இனம் என் ஜாதி என் மொழி பேசுபவர்கள் என்று நமக்கே நம்மவர் என்னுடையது என்ற ஈகோதான் இது அனைத்திற்குமே காரணம்.

சுஜாதாவின் ஒரு கதை எதுவென்று தெரியவில்லை வருங்காலத்தில் நடக்கும் கதை நிகழ்காலத்தில் இருந்து வருங்காலத்துக்கு கூட்டிச் செல்லப்பட்ட மனிதனின் எண்ணங்களால் எப்படி வருங்காலத்தில் இருக்கும் அனைத்துமே அழிந்து போய் விடக் கூடும் என்பது போன்ற கதை அது.

இன்று நிகழ்காலத்தில் அதுதான் நிகழ்ந்து வருகிறது மனிதனின் ஈகோ அவனுடைய அழிவுக்கு வழி வகுத்துக் கொண்டிருக்கிறது.

மாற்றம் என்பது சிறிய அளவில் தான் ஆரம்பிக்கும்.

Pay It Forward என்ற படம் ஒன்று அதில் வரும் சிறுவன் ஆரம்பிக்கும் என்ற படம் ஒன்று அதில் வரும் சிறுவன் ஆரம்பிக்கும் Pay It Forward என்ற ஸ்கீம் ஆரம்பிப்பான். அதாவது அந்தச் சிறுவன் இரண்டு பேருக்கு உதவி செய்வான் அதற்கு பலனாக வேறு இருவருக்கு உதவி செய்யச் சொல்லுவான் அது போல அனைவரும் அனைவருக்கும் உதவிக் கொள்ள அந்த நகரமே ஒரு பெரிய மாற்றத்தை அடைந்து விடுவதாக காட்டியிருப்பார்கள்.

அது போன்ற டிராமேட்டிக் மாற்றங்கள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவென்றாலும் நாம் இன்று நம்முடைய துவேஷங்களை அது எவ்வளவு நியாயமான துவேஷமாக இருந்தாலும் ஒழித்து விட்டு அன்பு வழியில் செல்லத் துவங்கினால் மட்டுமே மனித குலம் அடுத்த கால் நூற்றாண்டைத் தாண்டும்.

நம் நாடு என்ற பெருமிதத்துடன் இந்த சுதந்திர தினத்தை கொண்டாடிய நாம் இந்தியாவின் இறையாண்மைக் கொள்கையான அன்பு வழியில் சென்று நம்முடைய துவேஷங்கள், வெறுப்புகள் அனைத்தையும் மறந்து ஒரு சிறந்த பாரதத்தையும், இந்த பூமியை ஒரு சிறந்த இடமாக்க முயற்சிகள் செய்வோம்.

ஜெய் ஹிந்த்.

Wednesday, August 09, 2006

ஆன்மீகம் அறிவியல் அகங்காரம் - 3

சார்பு நிலைத் தத்துவம் குறித்து மேலும் ஒரு எடுத்துக் காட்டுடன் ஒரு விளக்கம்.

சோமு, ராமு இருவரும் இரட்டைப் பிறவிகள் என்று வைத்துக் கொள்வோம். இதில் ராமு ஒரு ராக்கெட்டில் ஏறி 8 ஒளி வருடங்கள் தள்ளி இருக்கும் ஒரு நட்சத்திரத்திற்கு போகிறான் என்று வைத்துக் கொள்வோம். இதில் ஒளி வருடம் என்பது ஒளி ஒரு வருடத்தில் பயணப்படும் தொலைவு அதாவது (3,00,000 *60*60*24*365 கிலோமீட்டர்கள்). இருவரிடமும் ஒரு தொலைநோக்கி இருக்கிறது அந்த தொலை நோக்கியில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியும். அந்த நட்சத்திரத்தையும் பார்க்க முடியும். ராமு ராக்கெட்டில் நொடிக்கு 2,40,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முடியும் என்று வைத்துக் கொள்வோம். ராமு ராக்கெட்டில் கிளம்பும் சமயம் ஜனவரி 1 2000 என்று வைத்துக் கொள்வோம். ஆகவே இந்த நட்சத்திரத்தை அவன் 10 வருடங்களில் சென்றடைவான்.

இங்கு மேலும் ராமுவிடம் ஒரு கடிகாரம், சோமுவிடம் ஒரு கடிகாரம், அந்த நட்சத்திரத்தில் ஒரு கடிகாரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ராமுவும், சோமுவும் இந்த மூன்று கடிகாரங்களையும் எந்த நேரத்திலும் பார்க்க முடியும் என்றும் வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது ராமு, சோமுவிடம் உள்ள கடிகாரம் இரண்டும் ஜனவரி ஒன்று 2000 என்று காண்பிக்கும். நட்சத்திரத்தில் இருக்கும் கடிகாரம் 1 ஜனவரி 1992 என்று காண்பிக்கும் ஏனெனில் அந்த நட்சத்திரத்தில் இருக்கும் ஒளி நம்மை அடைய 8 ஒளி ஆண்டுகள் பிடிப்பதால் 8 வருடங்களுக்கு முன் அந்த நட்சத்திரத்தில் இருந்து தோன்றிய ஒளிதான் நம்மை வந்து அடைந்திருக்கும். ஆக இந்த நேரத்தில் இருவருடைய பார்வைகள், நேரம் எப்படி இருக்கும் கீழே காணலாம்.

Image Hosted by ImageShack.us

சரி ராக்கெட் கிளம்பும் சமயம் என்னவாகும் என்று பார்க்கலாம். ராமுவுக்கும் இது வரை 3,00,000 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த வெளிச்சம் இப்பொழுது 3,00,000 + 2,40,000 = 5,40,000 கிலோமீட்டர் வேகத்தில் வந்து சேரும். இது ஏன் என்றால் உங்களை நோக்கி ஒரு ரயில் வந்து கொண்டிருக்கிறது அது 80 கிலோமீட்டர் வேகத்தில் வருகிறது நீங்கள் அதனை நோக்கி 80 கிலோமீட்டர் வேகத்தில் போகிறீர்கள் என்றால் அந்த ரயில் உங்களை நோக்கி 160 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது அல்லவா அதாவது அதன் வேகம் அதிகரிக்கவில்லை நீங்கள் வேகமாக போவதால் அதன் வேகம் அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள் இல்லையா?அது போலத்தான் இதுவும். ராமு ஒளியை நோக்கி 2,40,000 வேகத்தில் பயணம் செய்யும் சமயம் அந்த வெளிச்சம் நம்மை அவ்வளவு வேகமாக வந்தடையும்.

நாம் மேலும் இங்கு புரிந்து கொள்ள வேண்டியது டைம் ஸ்பேஸ் டைலேஷன்(time-space dilation) பற்றி. அதாவது நாம் எவ்வளவு வேகமாக பயணம் செய்கிறோமோ அந்த அளவு நேரம் மெதுவாக செல்ல ஆரம்பிக்கும்.இது கண்டிப்பாக ஒத்துக் கொள்ள கடினமாகத்தான் இருக்கும் இருந்தாலும் நாம் எவ்வளவு வேகமாக பயணம் செய்கிறோமோ அதற்கு ஏற்றது போல நாம் பயணம் செய்யும் இடைவெளி குறையும். இதனை Space Warp, Time warp என்று சொல்லுவார்கள். இதற்கு time-space dilation formula என்று ஒன்று உண்டு இதனை வைத்து இதனை கணக்கிடுவார்கள். இந்த எடுத்துக்காட்டில் ராமுவுக்கும் 2,40,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்வதால் space-time dilation factor 60% ஆக இருக்கும். அதாவது ராமு இப்பொழுது ராமுவிற்கும் அந்த நட்சத்திரத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 60% ஆக குறைந்து விடும்.

இது எப்படி சாத்தியம் என்றால் சாத்தியம்தான். இது விஞ்ஞானப் பூர்வமாகவும் நிரூபிக்க பட்டுள்ளது. 1970 களில் சில விஞ்ஞானிகள் அடாமிக் கிளாக் எனப்படும் மிக குறைவான நேரத்தை கணக்கிட உதவும் சில கடிகாரங்களை ஒரே நேரத்தைக் காட்டுமாறு synchornize செய்து அதில் சில கடிகாரங்களை பூமியிலும் சில கடிகாரங்களை ஒரு வானவூர்த்தியிலும் எடுத்துச் சென்று சில மணி நேரம் கழித்து வந்த பொழுது வான ஊர்த்தியில் இருந்த கடிகாரங்கள் அனைத்துமே பூமியில் இருந்த கடிகாரங்களை விட சற்று குறைவான நேரத்தில் ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள்.குறைந்திருந்த மணித்துளி பார்முலாவின் படி அமைந்திருந்தது.

ஆக இந்த நேரத்தில் இருவருடைய பார்வைகள், நேரம் எப்படி இருக்கும் கீழே காணலாம்.

Image Hosted by ImageShack.us

ஆகவே இப்பொழுது ராமுவுக்கு தொலைவு 60% ஆகி விட்டதால் ராமு 10 வருடங்களுக்கு பதிலாக 6 வருடங்களிலேயே அந்த நட்சத்திரத்தை அடைந்து விடுவான்.

சரி இப்பொழுது ராமு பாதி தூரத்தை கடந்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம் இப்பொழுது என்னவாகும்?

இப்பொழுது பூமியில் நேரம் 2005 ஆக இருக்கும் ராமுவின் நேரம் 2003 ஆக இருக்கும்.

இங்கு மேலும் சில விஷயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

Dopplers effect

அதாவது நம்மை நோக்கி ஒரு வண்டி வேகமாக வந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு ஹாரன் அடிக்கப் படுகிறது அப்பொழுது நம்மை நோக்கி வருவதால் அந்த சத்தத்தின் அலைகள் நம்மை நோக்கி கொண்டு வருகிறது அதனால் அந்த சத்தம் அதிகமாக இருப்பதாக தோன்றும் அந்த வண்டி நம்மை விட்டு செல்லும் சமயம் அதாவது நம்மைக் கடந்து செல்லும் சமயம் அந்த வண்டியின் சத்தம் அது நம்மை விட்டு விலகிச் செல்வதால் அதிகமாக இருக்காது. இது மீண்டும் ஒரு மிகவும் எளிமை படுத்திச் சொல்லப் பட்ட விளக்கம். ஆனால் இதுதான் டாப்ளர் விதி.

அதோடு மட்டும் அல்லாமல் நம்மை வெளிச்சம் வந்து சேர நேரமாகும் ஆகவேதான் ராமு கிளம்பும் முன் நாம் நட்சத்திரத்தின் நேரம் 1992 ஆக இருந்தது.

இதனால் சோமு 2005ல் பூமியில் இருந்து பார்க்கும் சமயம் சோமுவின் நேரம் 2001 ஆகத்தான் இருக்கும். அதாவது 2001ல் சோமு எந்த தூரத்தில் இருந்தானோ அதுதான் சோமுவுக்கு தெரியும்.

இதே தூரத்தில் இருக்கும் ராமுவுக்கு டாப்ளர் மற்றும் வெளிச்சத்தைப் பார்க்கும் விதத்தால் நேரம் 2001 ஆகத்தான் தெரியும்.

ஆக இந்த நேரத்தில் இருவருடைய பார்வைகள், நேரம் எப்படி இருக்கும் கீழே காணலாம்.

Image Hosted by ImageShack.us

ராமு நட்சத்திரத்தை அடைந்த சமயம் திரும்பும் சமயம் நேரம் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை அடுத்து விளக்க முயற்சி செய்கிறேன்.

Tuesday, August 08, 2006

ரக்ஷா பந்தன்

இன்று ரக்ஷா பந்தன் தங்கையர் தம் அண்ணனுக்கு ராக்கி அணிவிக்கும் நாள். எனக்கு அக்கா தங்கை யாரும் கிடையாது. சொந்த பந்தங்களிலும் யாரும் அக்கா தங்கை என்று கிடையாது. அதனால் சிறு வயது முதலே அக்கா தங்கை வேண்டும் என்ற ஏக்கம் மனதில் உண்டு.

ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடம் தான் முழுமையான Emotional Support கிடைக்கும். நண்பர்கள் எவ்வளவுதான் நெருக்கமாக பழகினாலும் ஆணுக்கு துன்பம் வரும் சமயம் நண்பர்கள் அவனுக்கு தேவையான Emotional Support கொடுப்பது கடினம். இது போன்ற சந்தர்பங்களில் அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியாது Freeze ஆகி விடுவார்கள் இல்லை தண்ணி அடிக்க கம்பெனி கொடுப்பார்கள்.ஆனால் பெண்களிடம் ஆணுக்கு தேவையான Emotional Support கண்டிப்பாக கிடைக்கும்.

நான் பல இடங்களில் கண்டிருக்கிறேன் தன் அக்காவை ஐடியலைஸ் செய்து, அக்கா வளர்த்து வந்த தம்பிகளை, உற்ற தோழியாக நல்ல நண்பியாக பழகும் அண்ணன் சந்தோசத்துக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் தங்கைகளை. அது போன்ற உறவு எனக்கில்லாதது ஒரு மிகப் பெரிய குறையே.

எனக்கு தெரிந்து இந்தியாவில் கலாச்சாரத்தில் ரக்ஷா பந்தன் ஒன்றுதான் உறவைக் கொண்டாடும் பண்டிகை. மற்ற Fathers day, Mothers day எல்லாமே மேற்கத்திய கலாச்சாரங்கள்தான்.

ஆகவே இன்று இந்த நாளில் தன் அன்பை வெளிப்படுத்தலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் இது போன்ற சந்தர்ப்பமே இல்லாத என் போன்றவர்களைப் பாருங்கள் பார்த்து விட்டு அன்பை வெளிப்படுத்தி விடுங்கள்.

இன்று இந்த பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.

Monday, August 07, 2006

செம்புலப் பெயல் நீர்

எனக்கு மிகவும் பிடித்த கவி வரிகளை ஒட்டி தேன்கூட்டின் போட்டிக்காக இந்தப் பதிவு.

முதலில் என் கண்கள் கண்டது உன் கண்களை.

என் அன்னையின் மேலுள்ள பூ வாசம் போன்ற உன் வாசம் என்னையடைந்தது பின்புதான்.

வாசம் என்னை அடைவதற்குள் மனதுள் வந்தடைந்து விட்டாய்.

கண்கள் கலந்த சமயத்தில் இருந்து உன் வாசனையை நான் கண்டறிவதற்குள்தான் எத்தனை மாற்றங்கள்.

என்னைச் சுற்றி எல்லாமே குழந்தையின் சிரிப்பைப் போல மாசு மருவில்லாமல் கள்ளம் கபடமற்றதாகி விட்டதே.

நான் கேட்கும் ஓசை அனைத்துமே ராஜாவின் மெல்லிசையைப் போன்றதொரு அற்புதமான சுவரங்களுடன் ஒலிக்கிறதே.

புள்ளியாய் இலக்கில்லாமல் இருந்த வாழ்க்கை ரங்கோலியாய் மாறி வண்ணச் சிதறல்களுடன் கவித்துவமாகி விட்டதே.

மாமலையும் மடுவாவது கடைக் கண் பார்வையால் தான் என்று சொன்னவரின் கல்லறையில் சென்று கடைக்கண் பார்வை தேவையில்லை அவள் கண் என் பார்வையில் பட்டதே போதும் என்று உரக்க சொல்ல தோன்றுகிறது.

வாசம் நாசி தொட்ட கணம் சர்வ நாடியும் நிறைந்தாய்.

இங்கு என்ன நிகழ்கிறது உன் கண்களில் கலங்கி நிற்கிறேனே ஏன்? உன்னை யாரென்றே அறியேன். உன் கண்களை என் கண்கள் அறியும் உன் வாசனை என் நாசி அறியும் இதனைத் தவிர வேறு ஒன்றும் அறியேனே.

போன ஜென்மத்து உறவா? விட்ட குறை தொட்ட குறையா? எதனால் இந்த மாற்றம்? உன் தந்தை இருக்கிறார் இந்த உலகில் என்று என் தந்தை தான் அறிவாரா? இல்லை என் தந்தை இவ்வுலகில் இருக்கிறார் என்று உன் தந்தை அறிவாரா?

இவர்கள் ஒருவர் இருப்பதை ஒருவர் அறியாமல் இருந்தாலும் நீ இருக்கிறாய் என்று நான் கண்டிப்பாக அறிந்தே இருந்தேன். கவிதைகளின் உவமைகளிலும், கதைகளின் வர்ணணைகளிலும், திரை அரங்குகளில் நெஞ்சைத் தொடும் காட்சிகளிலும் உன்னை உணர்ந்திருக்கிறேன். இன்றுதான் அந்த உணர்வுக்கு ஒரு உருவம் கிடைத்திருக்கிறது எனக்கு.

கண்கள் கலந்ததுமே காதலா? நம் குணங்கள் ஒத்துப் போகுமா? நம் விருப்புகள் என்ன வெறுப்புகள் என்ன கண்டதும் காதல் சரியா? உன்னைப் பற்றி என்ன தெரியும் எனக்கு? பெயர் கூடத் தெரியாதே பின் எப்படி இந்த காதல் சரியாகும்?

மழை செம்மண் பூமியை அடையும் சமயம் மழை யோசித்ததா மண்ணின் தன்மைகளைப் பற்றி? எப்பொழுதோ ஒட்டி உறவாடிக் கொண்டிருந்த இந்த மண்ணும், நீரும் தற்காலிகமாக பிரிந்து மழையாகி வந்து இன்று கலப்பது போல நம் நெஞ்சங்கள் இங்கு கலக்கின்றது .
1000 வருடங்களாக மாறாதிருக்கும் ஒரே உணர்வு காதல்

ரத்தத்தாலான உறவுமில்லை
முத்தத்திலான உறவுமில்லை
பழக்கத்தாலான நட்புறவில்லை
அன்புடை நெஞ்சம் கலக்கும் இவ்வுறவு
இக்கவி சொல்லும் செம்புலப் பெயல் நீர் போலத்தான்

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே..."

Monday, July 31, 2006

புதையல்

கோவி கண்ணன் தன்னிடம் இருக்கும் புத்தகங்களைப் பற்றி சொல்லி இருந்தார் என்னையும் சொல்லச் சொல்லி கூப்பிட்டு இருந்தார். நிறைய புத்தகங்கள் இருக்கிறது நாலைந்து மூட்டை பரண் மேல் இருக்கிறது ஆகவே அனைத்தையும் பட்டியலிட முடியாது ஆகவே உடனே நினைவுக்கு வந்தது குறித்து பட்டியலிடுகிறேன் உடனே நினைவுக்கு வந்தது பிடித்த நாவலாகவும் இருக்கும் என்பதால் அதனைப் பற்றி சிறு குறிப்பும் கொடுத்திருக்கிறேன். தற்சமயம் நிறைய ஆங்கிலப் புத்தகங்களை வாங்குவதால் ஆங்கிலப் புத்தகங்கள் பட்டியலில் அதிகமாக இருக்கும் ஆனால் நான் அதிகமாக தமிழ் புத்தகங்களையே படித்திருக்கிறேன்.

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்தீபன் கனவு

இந்தப் புத்தகங்களின் சிறப்பைக் குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை

இரும்புக் குதிரைகள், மெர்குரிப் பூக்கள், இனிது இனிது காதல் இனிது

பாலகுமாரனின் நாவல்கள் நிறைய என்னிடம் இருக்கிறது. ஒரு காலத்தில் பாலகுமாரன் எழுதிய அனைத்து நாவல்களையும் படிக்கும் பழக்கம் இருந்தது ஆனால் பின்னாளில் அவர் கருத்துக்களுடன் என்னால் ஒத்துக் கொள்ள இயலவில்லை. இவரின் நாவல்களில் வரும் வாழ்வியல் குறித்த இவருடைய பார்வை மிகவும் பிடிக்கும். அவருடைய நாவல்களில் இவை மூன்றும் எனக்கு பிடித்தவை.

சங்கர்லால் கதைகள்

இது இரண்டு மூன்று நாவல்கள் இருக்கிறது இதுவும் மிகவும் பிடிக்கும் நம்ம ஜேம்ஸ்பாண்ட் martini shaken but not stirred என்று ஸ்டைலாக சொல்வது போல இவர் ஸ்டைலுக்கு தேநீர் குடிப்பது, கருப்புக் கண்ணாடி என்று இவரைப் பற்றி மனதில் ஒரு இமேஜே உண்டு.

குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி அவர்களின் நாவல் ஒன்று

பெயர் ஞாபகம் இல்லை கதையும் ஒன்றும் அசாதாரணமான கதை கிடையாது ஆனால் அற்புதமான நடை கொண்ட நாவல்.

A Breif History of Time, 2 more novels about Stephen Hawkings

ஸ்டீபன் ஹாகிங்ஸுடைய நாவல் நம் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய நாவல். சில இடங்கள் புரிந்து கொள்ள கடினமாக இருந்தாலும். வலைத் தளங்களில் தேடித் தேடி புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய ஆன்மீக சிந்தனைகளை பல வகையில் மாற்றி அமைத்த நாவல். ஆன்மீகத்துக்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள் நான் எழுதி வரும் ஆன்மீகம், அறிவியல், அகங்காரம் தொடரில் இதனை விளக்க முயற்சி செய்து வருகிறேன்.

ஹாரிப் பாட்டர் அனைத்து புத்தகங்களும்

இந்த புத்தகத்தை குழந்தைகள் புத்தகம் என்று ஒதுக்கி வைத்து விட்டு குழந்தையாகவே இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்குபவர் பலரைப் பார்த்திருக்கிறேன். இதில் உள்ள புதிர்கள் முதல் நாவலில் ஏதேச்சையாக நாம் அறிந்து கொண்ட விஷயங்கள் 5ம் நாவலிலோ 6ம் நாவலிலோ நம்மை ஆச்சர்யப்பட வைக்க, 5ம் நாவலைப் படித்தவுடன் முதல் நாவலைப் படித்தால் அது வித்தியாசமாக தோன்ற வைப்பது என்று கிளாஸிக் நாவல் இது.

Eragon and Eldest

ஹாரிப் பாட்டர் போலவே வந்த இன்னும் ஒரு நாவல் இது. எரகான் நாவலை வெளியிட்ட பொழுது இந்த நாவலாசிரியரின் வயது 16. ஹாரிப் பாட்டர் ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல். ஹாரிப் பாட்டரின் க்டைசி நாவல் போலவே இந்த புத்தகத்தின் கடைசி நாவலை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

டான் பிரவுனின் எல்லா நாவல்களும்

டாவின்ஸி கோட் மூலமாக பிரபலமானாலும் இவருடைய அனைத்து நாவல்களுமே அற்புதமாக இருக்கும். பல சரித்திர விஷயங்களை நமக்கு சொல்லி விறுவிறுப்பான நடையில் செல்லும் ஏஞ்சல்ஸ் அண்ட் டிமன்ஸ் எனக்கு இவருடைய நாவல்களிலேயே பிடித்த நாவல்.

Alchemist, Veronica decides to die, Eleven Minutes

Paulo Coelho அவருடைய நாவலகள் வித்தியாசமானவை Alchemist பலர் படித்திருப்பீர்கள் அவருடைய மற்ற நாவல்களும் நன்றாகவே இருக்கும் அனைவரும் படிக்க வேண்டியவை இவை.

எனக்கு பிடித்த நாவல்களை உடனே நினைவுக்கு வந்த நாவல்களை இங்கு கொடுத்திருக்கிறேன். இன்னும் Kane and Abel, பச்சை வயல் மனது, சில நேரங்களில் சில மனிதர்கள், லைப் ஆப் பை, Chronicles of narnia என்று சொல்லிக் கொண்டே போகலாம் நிறைய புத்தகங்கள் உள்ளன. எந்தெந்த புத்தகங்கள் உள்ளன என்பது கூட ஞாபகம் இல்லை.அனைத்தையும் என்றாவது எடுத்துப் பார்க்க வேண்டும்.

Saturday, July 29, 2006

ஆன்மீகம் அறிவியல் அகங்காரம் - 2

ஐன்ஸ்டினின் சார்பு நிலைத் தத்துவத்தை( Theory of Relativity ) அறிந்தவர்கள் இந்த உலகில் நான்கு பேர்தான் என்று கூறுவார்கள். அந்த நான்கு பேரில் நான் கண்டிப்பாக கிடையாது.ஆகவே இதனை நான் விளக்குவது சரி இருக்காது இருந்தாலும் சிறிது முயற்சி செய்கிறேன்.நீங்கள் ஒரு புகை வண்டியில் மிக வேகமாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்பொழுது கிழக்கில் இருந்தும் மேற்கில் இருந்தும் இரண்டு ஒளிக் கதிர்கள் புறப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மிக வேகமாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செயது கொண்டு இருப்பதால் மேற்கில் இருந்து வரும் ஒளிக் கதிர் உங்களை முதலில் வந்து சேரும் பின்தான் கிழக்கில் இருந்து வந்த ஒளிக் கதிர் வந்தடையும் அல்லவா? அதனால் உங்களுக்கும் மேற்கில் இருந்து புறப்பட்ட ஒளிக் கதிர் தான் உருவானது என்று நினைப்பீர்கள் ஆனால் பூமியில் நின்று கொண்டிருக்கும் ஒருவருக்கு அவை இரண்டுமே ஒரே நேரத்தில் உருவானது என்று நினைப்பார் இல்லையா?அப்படியானால் உங்களுக்கு ஒரு நிகழ்வு வேறு நேரத்தில் நடந்ததாக தோன்றுகிறது. பூமியில் உள்ளவருக்கு வேறு நேரத்தில் நடந்ததாக தோன்றுகிறது அல்லவா?

அப்படியானால் நேரம் என்பது நிலையானது அல்ல என்ற முடிவுக்கு வர வேண்டியதிருக்கிறது அல்லவா? இது சாதாரணமான ஒரு கண்டுபிடிப்பாக தோன்றினாலும் இது மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாகும். அந்த சமயம் வரை உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் நிலையான நேரம் என்ற ஒன்றையே நம்பி வந்தார்கள். இது அந்த நம்பிக்கைகள் அனைத்தையுமே தகர்த்து எறியும் வகையில் அமைந்தது.

ஆனால் ஐன்ஸ்டினின் இந்தக் கண்டுபிடிப்பு அவர் எதிர்பார்க்காத ஒரு விளைவையும் ஏற்படுத்தியது. அவரின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்த ஒரு சக விஞ்ஞானி இந்த பிரபஞ்சமும் நிலையானது இல்லை அது வேகமாக பரந்து விரிந்து கொண்டிருக்கிறது அல்லது சுருங்கி கொண்டிருக்க வேண்டும் என்று கண்டுபிடித்தார். இது ஐன்ஸ்டினை மிகவும் தர்ம சங்கடமான ஒரு நிலையில் தள்ளியது. மதத்தின் மேல் தீவிர நம்பிக்கை கொண்ட ஐன்ஸ்டின் இந்தக் கண்டுபிடிப்பு தன் மத நம்பிக்கைகளுக்கு எதிராக இருப்பதை உணர்ந்தார். அந்த சமயத்தில் தான் இவருடைய மிக புகழ் பெற்ற "GOD DOESNT PLAY DICE WITH THIS UNIVERSE". அதாவது கடவுள் இந்த உலகில் தாயம் விளையாடவில்லை எல்லாமே எழுதி வைத்தது போலத்தான் நடக்கும் என்று கூறினார்.அதனால் தன்னுடைய கண்டுபிடிப்பில் சில மாற்றங்களைச் செய்து இந்த பிரபஞ்சம் நிலையானது என்று மாற்றி வெளியிட்டார்.

ஆனால் ஹீபில் 1928 தன்னுடைய தொலை நோக்கி மூலம் இந்த உலகம் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது என்று நிருபித்தார்.

பிறகு ஐன்ஸ்டின் தான் தன்னுடைய கண்டுபிடிப்பில் மாற்றம் செயத்தது தன் வாழ்க்கையின் மிகப் பெரிய தவறு என்று கூறினார்.

இந்த சமயத்தில் அறிவியலில் இருந்து ஆன்மீகத்திற்கு நாம் மாற வேண்டி இருக்கிறது. இங்கே நாம் யோசிக்க வேண்டியது இந்தக் கண்டுபிடிப்பு உலகில் உள்ள எல்லா மதங்களும் கொண்டிருந்த நம்பிக்கைக்கு மிக புறம்பாக உள்ளது என்பதைக் காண வேண்டும். இந்த கண்டுபிடிப்பு கடவுள் இல்லை என்று கூறவில்லை ஆனால் எல்லாமே எழுதி வைத்தபடிதான் நடக்கிறது போன்ற நம்பிக்கைகளை உடைத்து எறியும் விதமாக உள்ளது. அதாவது கடவுளை நம்முடைய மதங்கள் நமக்கு என்ன சொல்லிக் கொடுத்திருக்கிறதோ அது அத்தனையும் உண்மை இல்லை என்று அறிவியல் பூர்வமாக நிருபிக்கும் வகையில் உள்ளது. ஐன்ஸ்டின் மிகப் பெரிய அறிவாளி அவர் தன்னுடைய தவறுகளை ஒத்துக் கொண்டார். ஆனால் அகங்காரம் கொண்ட எத்தனை மனிதர்களால் இது போல ஒத்துக் கொண்டு மத துவேஷங்கள் கொள்ளமால் இருக்க முடியும்? எத்தனை பேர் ராமரும் இல்லை அல்லாவும் இல்லை கிறிஸ்துவும் இல்லை என்பதை ஒப்புக் கொள்ள முடியும்? தெரியவில்லை.

அடுத்த பகுதியில் இந்த பிரபஞ்சம் விரிவடைகிறதனால் என்ன என்ன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன அது மேலும் நம்முடைய ஆன்மீக சிந்தனைகளை மாற்றி அமைக்கும் விதமாக இருக்கிறது. மனிதனின் அகங்காரம் எப்படி அப்படியே இருக்கிறது என்று எழுத முற்படுகிறேன்.

Thursday, July 27, 2006

பஞ்சப் பா

அவள் மேனி
தொடும் ஆசையினாலேயே
மீண்டும் மழையாகிறது கடல்

******************************

அவளைக் தீண்டும்
ஆசையில் விரைந்தது
காற்று - சூறாவளி

******************************

அவள் தூங்கும் சமயம்
பார்க்க இயலாததால் வெப்பமிழக்கிறது
சூரியன் - இரவு

*******************************

அவள் நாணத்தால் தலை
குனியும் நேரம் எல்லாம்
தன்னிலை மறக்கிறது பூமி

*******************************

அவளிடம் உள்ள
அதிசயங்களை விடவா
அதிகமாகவுள்ளது பிரபஞ்சத்திடம்

*******************************