"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"
இல்வாழ்க்கைக்கு பண்பு உண்டெனில் அது அன்புடனும், அறத்துடனும் வாழ்க்கையை நடத்துவதே என்ற இந்த ஒன்றரை வரிக் குறள் சொல்லி இருப்பதை விட சிறப்பாக வாழ்க்கை நெறிமுறைகளைப் எந்த மத நூல்களும் சொல்லி விட முடியாது. சராசரி மனிதன் ஒருவனுக்கு இந்த ஒன்றரை வரிகளே போதுமானது. வாழ்க்கை நெறிகளை அமைத்துக் கொள்ள மற்ற ஆயிரத்து முன்னூற்றி இருபத்தொன்பது குறள்களும் கூட அவசியமற்றதாகி விடுகிறது.
உண்மையான ஆன்மீகத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது வேதாத்திரி மகரிஷி அவர்கள். அகத்தாய்வு என்றும் குண்டலினி என்று பல வேறு அற்புதமான விஷயங்களை எனக்கு சொல்லி கொடுத்த ஆன்மீக குரு அவர்.
மகரிஷியின் சிந்தனைகளில் மிக முக்கியமானது "பிறருக்கு உடலாலும் மனதாலும் துன்பம் நினையாதே" என்பதுதான்.
வள்ளுவரின் குறளுக்கும் மகரிஷியின் சிந்தனைக்கும் பல ஒற்றுமைகளைக் காணலாம்.
அவர் தன் வாழ்க்கையின் கடைசி கால கட்டத்தைக் கழித்தது ஓம்கார மண்டபத்தில்.
சைவ சிந்தாதத்தின் ஒரு முக்கியமான அம்சமான ஓம் வடிவிலான அந்த மண்டபத்தில் யார் நுழைந்தாலும் அங்கே எழுதப் பட்டிருக்கும் இந்த வாக்கியத்தைக் காணலாம்.
"உலகில் உள்ள மதங்களை எல்லாவற்றையும் நீக்கி மக்களிடையே ஒற்றுமை வளரச் செய்ய வேண்டும்." என்பது தான் அந்த வாக்கியம்.
மதமும் ஆன்மீகமும் ஒன்றே என்பதை எனக்கு உடைத்துக் காட்டிய வாக்கியம் இது.
மதம் என்ற அரசியல் அமைப்புக்கும் ஆன்மீகம் என்ற சிந்தனைக்கும் உள்ள பல வேறுபாடுகளை உணர்ந்தும் வாக்கியம் இது.
இன்றைய மதம் என்பது மனிதனுக்கு புரியாத வகையிலும் அவனை ஒரு பிரமிப்புக்கு ஆட்படுத்தி, பயமுறுத்தி, பரவச நிலை போன்ற தந்திரமான வார்த்தைகளை பயன் படுத்தி ஆளுமை செய்யவே பயன்படுகிறது.
சமஸ்கிரத மந்திரங்கள் சக்தி வாய்ந்தவை என்று மாயையை உண்டாக்குவது. ஏன் என்று கேட்டால் அதனை விளக்க மறுப்பது(பதில் தெரியாமல் முழிப்பது என்றும் வைத்துக் கொள்ளலாம்) இப்படி மந்திர தந்திரங்கள் மூலமாக ஆளுமை செய்யவே ஆசைப் படுகிறது.
இந்து மதம் என்று மட்டும் இல்லை இஸ்லாம் கிறிஸ்துவம் எல்லாமே இதைத் தான் செய்ய ஆசைப்படுகிறது. ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு மிக மட்டமான தலைமைகள் இருக்கின்றன.
இன்று பால் தாக்கரே, நரேந்திர மோடி இந்து மதக் காவலர்கள் தலைவர்கள் என்று கூறி செய்யும் அக்கிரமங்கள் இல்லையா?
அதே போல சிலுவைப் போர் தொடுக்க சொன்ன போப், பல கொலைகளை தன்னுடைய அதிகாரத்தின் மூலம் செய்த போப் என்று கிறிஸ்துவத்திலும் பல அக்கிரமக்கார தலைவர்கள் இருக்கிறார்கள்.
பாகிஸ்தானில் ஒரு பெண் அதிகமாக படித்து விட்டாள் என்று அந்த கிராமத்தின் மதத் தலைமை ஒரு வாரம் அந்தப் பெண்ணை அடைத்து வைத்து கற்பழித்ததாக குமுதத்தில் படித்தேன்.
மதம் என்னும் அரசியல் அமைப்பை எதிர்ப்பதற்கு இதுவே காரணிகள்.
மிதவாதிகள் இதன் பெயரில் நடக்கும் அக்கிரமங்களை கண்டு கொள்ள மாட்டார்கள். மதம் என்னும் அரசியல் அமைப்பு தன்னுடைய கைகளில் அதிகாரம் வேண்டும் என்பதற்காக மக்களை கொன்று எடுத்தாலும் யாருக்கும் கவலை இல்லை.
இன்று வேற்று மதத்தை சாடி தன் மதம் பெரிது என்று பேசும் அனைவரும் அதிகாரம் மாயை என்பது எல்லாம் தன் கைகளை விட்டு போய் விடக் கூடாது என்பதற்காக துவேசங்களை வளர்ப்பதே மதத்தின் அசிங்கமான அரசியல் பக்கத்தைக் காட்டுகிறது.
நாத்திகம், ஆன்மீகம் என்பதற்கு எந்த அளவு வித்தியாசம் இருந்ததோ என்னைப் பொறுத்த வரை அதே அளவு வித்தியாசம் ஆன்மீகத்திற்கும் மதங்களுக்கும் உண்டு
நாத்திகம் என்பதற்கும் பகுத்தறிவிற்கும் அதே போல வித்தியாசங்கள் உண்டு. ஆன்மீகத்தில் பகுத்தறிவிற்கு அவசியமாகிறது.
மதம் என்பதற்கு பகுத்தறிவுதான் எதிரி. கேள்விகள் கேட்டு உண்மை அறிவது பகுத்தறிவு ஆன்மீகம். கேள்வி கேட்டவர்களை பகுத்து அறிய முற்படுபவர்களை heretic என்று தூக்கில் இடுவது கொலை செய்வது ஒதுக்கி வைப்பது மதம்.
ஆன்மீகம் என்பது இறைவனை அறிவது வாழ்க்கையில் யாருக்கும் துன்பம் விளைவிக்காமல் இருப்பது.
மதவாதிகளுக்கு இந்த இரண்டு கொள்கைகளுமே கிடையாது. இறைவனை உணர தனக்கு சொல்லிக் கொடுக்கப் பட்ட வழிமுறைகளை பெரிது என்று சண்டை போட்டுக் கொள்வது. பிறரை துன்பம் அடைவதைப் பற்றி கவலைப் படாமல் இன்பமுறுவது இது தான் மதம்.
தீண்டாமையை எதிர்க்க காந்தியடிகள் ஒரு ஊருக்கு சென்ற பொழுது அவருக்கு அங்கே மிகப் பெரிய எதிர்ப்பு கிடைத்ததாக "இந்து மதம் எங்கே போகிறது" என்ற புத்தகத்தில் எழுதப் பட்டிருந்தது.
ஜாதிகளை எதிர்ப்பதும் தவறு என்று இன்றும் கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால் ஜாதி என்பது தான் மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே மிக கீழ்தரமானது என்பது வெள்ளிடமலை.
மதம் என்பதை இன்று எதிர்க்கும் சமயமும் இன்று எதிர்க்கும் சமயம் அதே போலத்தான் எதிர்ப்புகள் வருகின்றன. ஜாதியைப் பற்றிய மிதவாத சிந்தனை சில காலங்களுக்கு முன் எப்படி இருந்ததோ அதே போலத் தான் இன்றைய மத மிதவாத சிந்தனைகளும் உள்ளன.
இன்றுள்ள பல மதங்களும் சண்டை போட்டுக் கொள்வது பல அரசியல் அமைப்புகள் அடித்துக் கொள்வதும் ஒன்றே தான். எல்லாமே தவறானவை அவற்றுள் எந்த அரசியல் அமைப்பு வெற்றி பெரும் என்றே அடித்துக் கொள்கின்றன.
ஜாதிகள் விட மத அமைப்புகள் மிக மிக கீழ்தரமானவை என்ற சிந்தனைகளும் தோன்றும் காலம் வரும்.
மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் பலருக்கும் புரியும் காலம் வரும்.
அந்த சமயத்தில் மதம் என்ற அரசியல் அமைப்பிற்கு ஆதரவு தராமல் உண்மையான ஆன்மீக சிந்தனைகள் அறிவுப் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் பரவும். அன்று எல்லா மதங்களும் outdated ஆகிவிட்டது என்று மக்கள் உணரும் சமயம் வரும்.
மதம் மனித குலத்தை அழிக்காமல் விட்டால் அந்தக் காலமும் வரும்.
கடைசியாக 10000 வருடங்களுக்கு முன்னால் தோன்றிய நாகரீகத்தின் சின்னங்களை 4000 வருடங்கள் கழித்து மதம் தனக்குள்ளே எடுத்துக் கொண்டது, 4000 வருடங்கள் கழித்து தோன்றிய மதத்தின் சின்னங்களை 10000 வருடம் முன்பே தோன்றிய நாகரீகம் எடுத்துக் கொள்ளவில்லை என்பதாவது சிலருக்குப் புரியும்( கடைசி பத்தி என்னுடைய சென்ற பதிவையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் படித்தால் மட்டுமே புரியும் :-))) )
Thursday, November 16, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//ஜாதிகளை எதிர்ப்பதும் தவறு என்று இன்றும் கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால் ஜாதி என்பது தான் மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே மிக கீழ்தரமானது என்பது வெள்ளிடமலை.
மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் பலருக்கும் புரியும் காலம் வரும்.
//
நல்ல நச் !
அழுத்தமான பதிவு !
வெல் டன் !
//( கடைசி பத்தி என்னுடைய சென்ற பதிவையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் படித்தால் மட்டுமே புரியும் :-))) )//
கவனத்தில் கொள்கிறேன்
Post a Comment