Thursday, August 24, 2006

முதல் கதை முயற்சி

தாவணி கட்டிகிட்டு வந்த அந்த பெண்ணை ஏர்போர்ட்டில் பார்த்து 'தாவணி போட்ட பொண்ணா? ஆபீஸ், காலேஜ் மாதிரி இங்கயும் முழிச்சுகிட்டே கனவு காண ஆரம்பிச்சிட்டேனா? நம்ம வாழ்க்கையில திரும்பவும் தாவணி போட்ட பொண்ணை அதுவும் தாவணி போட்ட சிட்டிப் பொண்ணை அதுவும் தாவணி போட்டு சூட் ஆகிற சிட்டிப் பொண்ணை பார்ப்பேன்னு நினைச்சு கூட பார்க்கலயே டேய் நீ வாழ்க்கையில் எல்லாத்தையும் பாத்துட்டடா' இப்படி நினைச்சுட்டு இருக்கும் போதே மறுபடியும் டென்ஷன் ஆரம்பிச்சுடுச்சு.

'ஏண்டா மொத மொதல்ல பிளைட்டைப் பிடிச்சு பாரின் போற அந்த நேரத்தில என்னடா வாழ்க்கையில் எல்லாம் பாத்துட்டேன் வைச்சுட்டேன்னு? ஏற்கனவே வயிறு கலங்கிகிட்டு இருக்கு இதில இப்படி எல்லாம் யோசனை வேற. இந்த விசா பிராப்ளம் வந்து டீம் இல்லாம தனியா ஒரு பிளைட்டுல வந்து மாட்டீட்டேனே? டீம்ல கூட போயிருந்தாவாவது கடலை போடறதுக்கு ஒரு பொண்ணாவது இருந்தது. நீ கொஞ்ச நேரம் நான் கொஞ்ச நேரமுன்னு மாத்தி மாத்தி கடலை போட்டிட்டு இருந்தா? பிளைட்டுல என்ன ராக்கெட்டுலயே போனாக் கூட வித்தியாசம் தெரியாது.'

'ஆஹா செக்கிங் கூப்புட்டாங்க என்னய கூட செக்கிங்க் பண்ணுறாங்கன்னு நினைச்சா சிரிப்பா தான் இருக்கு? பால் வடியுற மூஞ்சின்னு சொல்லுற எங்க அம்மா, பலப் பல பிகருங்க எல்லாரையும் இங்க கூட்டிட்டு வந்து இவங்ககிட்ட காட்டணும் அப்பாடி ஒரு வழியா முடிஞ்சுது. என்ன இது? ஏரோபிளேனுக்குன்னு டிக்கெட் வாங்கீட்டு பஸ்ல ஏத்தறாங்க என்ன நடக்குது இங்க? யாரையாவது கேக்கலாமா? வேண்டாம் வேண்டாம் நாம பாட்டுக்கு பிளைட்ல போகப் போறோமுன்னு ஜீன்ஸ் ஜெர்கின்னு ஒரு ரேஞ்சா வந்திருக்கறோம் கேள்வியைக் கேட்டு அசிங்கபடக் கூடாது எல்லாம் தெரிஞ்சா மாதிரி அப்படியே மெயின்டெயின் பண்ணிக்கிடுவோம்.'

'என்னா பஸ் இது உட்கார இடம் கூட இல்லாம? நின்னுகிட்டு போக வேண்டியதா இருக்கு கம்பெனில அமெரிக்கா அனுப்புறோமுன்னு எங்கயா அனுப்புச்சீங்க. ஓ பிளைட்டு பக்கத்தில கொண்டு போய் நிறுத்தீட்டாங்க? இதுக்குதான் பஸ்ஸா? என்னமோ போ எல்லாமே தெரிஞ்சா மாதிரி எவ்வளவு நேரம்தான் நடிக்கிறது?'

'சரி சரி மேல ஏறியாச்சு. கொஞ்ச நேரமா கொஞ்சம் கம்மியாகி இருந்த டென்ஷன் இப்போ உச்சதுக்கு வந்துடுச்சே? அஹா பொம்பள புள்ளங்க கிட்ட பந்தா விடணும்கறதுக்காக சாமி உன்னைப் பத்தி கண்டதையும் பேசி இருக்கேன் அதையெல்லாம் மனசுல வைச்சுக்காதப்பா என்னை முன்னாடி காப்பாத்தின மாதிரி இப்பவும் காப்பாத்தீடு சாமி.'

'சரி சீட் பெல்ட் போடச் சொல்லுறாங்க இந்த டென்ஷன்ல கை எல்லாம் நடுங்கறதுல ஒண்ணுமே முடியலியே என்ன பண்ணறது. ஆஹா பக்கத்தில் இருக்கறவர் உதவி செய்யறாரு. முத முதல்ல பிளைட்டுல வர்றீங்களா கேக்கறார் ஆமா சொல்லுறேன் கவலைப் படாதீங்க எல்லாம் ஓகேவா இருக்கும்ன்னு சொல்லறாரு. பரவாயில்லை நல்ல மனுஷனா இருக்கறாரு. அவரும் முத தடவை போகும் போது யாராவது இப்படி சொல்லியிருப்பாக போல.'

'சரி பிளைட்டு கிளம்புதே பரவாயில்லை ஒண்ணும் தெரியல ஆஹா என்ன இது வேகமாப் போகுது மேலப் போக போக இந்த ஆட்டம் ஆடுது. சாமி என்னைக் காப்பாத்து சாமி இனிமே உன்னைப் பத்தி தப்பாவே பேச மாட்டேன் எம்புட்டு அழகான பிகரா இருந்தாலும் பந்தா விடறதுக்காக ஐடியல் வோர்க்சிப் மட்டம் மக்கள் மூடத்தனமா இருக்காங்கன்னு பேச மாட்டேன் ஆத்தா மாரியாத்தா என்னைக் காப்பாத்தாத்தா. முருகா என்னை காப்பாத்து. ஆஹா இப்போ மறுபடியும் பிளைட் ஒழுங்கா சீராடுச்சே எல்லா சாமியும் என்னைக் காப்பாத்தீட்டீங்களா?'

'சரி சரி என்ன இது பிளைட் ரொம்ப நேரமா போயிட்டு இருக்கு என்ன பண்ணறது. இதில பிஸினஸ் கிளாஸுன்னா ரொம்ப வசதியா இருக்குமாமே? எல்லா சவுகரியமும் இருக்குமாமாம் நிறைய சாப்பிட எல்லாம் தருவாங்களாமே? இந்த கம்பெனிக்கு என்ன குறைச்சல் பிஸினஸ் கிளாஸ் டிக்கெட் எடுத்துக் கொடுத்தா என்ன குறைஞ்சா போயிடுவாங்க? எங்க பீ.எம். ஒரு வேலையும் செய்யறதில்லை சும்மா ஒக்காந்து ஷேர் மார்கெட்டையும், எக்ஸல் ஷீட்டையும் வெறிச்சு வெறிச்சு பார்த்துகிட்டு இருக்கான் அவனுக்கு எல்லாம் பிஸினஸ் கிளாஸ் என்னை மாதிரி ராத்திரி எல்லாம் கண்ணு முழிச்சு கோட் அடிக்கறோம் நமக்கு மட்டும் எகானமி கிளாஸ்? என்ன உலகமடா இது? உழைக்கறவங்களுக்கு மதிப்பே இல்லை.'

ஆஹா என்ன இது மறுபடியும் பிளைட்டு இந்த ஆட்டம் ஆடுது? வயித்தைக் கலக்குதே? நான் பேஸ்து அடிச்சா மாதிரி உட்காந்திருக்கறதைப் பார்த்துட்டு பக்கத்தில இருக்கறவர்தான் ஏர் டர்புளன்ஸ் அப்படித்தான் இருக்குங்கறார். ஆத்தா என்ன இது இந்த ஆட்டம் ஆடுது நம்மூர் ஓட்ட பஸ்ஸும் இப்படிதான் ஆடும் ஆனா இது அந்தரத்தில இல்ல ஆடுது? இனிமே என்னதான் ஆனாலும் பிளைட்டுல மட்டுமே ஏறவே கூடாதுப்பா. என்ன விளையாட்டு இது நான் வரலை திரும்பிப் போகும் போது கப்பல்ல ஏறி போயிக்குறேன் அப்பா இது நமக்கு ஒத்து வராது. சாமி என்னை காப்பாத்து சாமி. ஆஹா மறுபடியும் சரியாயிடுச்சு. நல்ல வேலை டீசண்டா இருக்கட்டுமே சாக்லேட்டுல இருந்து எல்லாமே கம்மியா எடுத்துகிட்டேன். இல்லை எனக்கு வயித்த கலக்கற கலக்குக்கு பிளைட்டு நாறிருக்கும்.

அப்பாடி ஒரு வழியா வந்து இறங்கியாச்சு இப்போதான் நிம்மதி. செக்கிங் மறுபடியும் சிரிப்புதான் வருது என்ன சொல்லறது. இந்த அமெரிக்காவில ஜீன்ஸ் எல்லாரும் லோ ஹிப்புலதான் கட்டுவாங்க போல. அமெரிக்காகாரனுங்க குடுத்து வைச்சவனுங்க. இது என்ன இது என்னைப் பார்க்க டீம்ல இருந்து எல்லாரும். பக்கத்தில தான் இருக்கறதுனால வந்திருப்பாங்க போல. பிளைட் எப்படி இருந்துச்சுன்னு கேக்கற டீம் மேட் ஒருத்தி.

"Fantastic. ஏறுனதும் தெரியல இறங்கினதும் தெரியல." என்று சொல்லி விட்டு டீம் மேட்டிடம் "என்ன அமெரிக்க வந்தும் தாயத்து கயிறுன்னு கைல எல்லாம் கட்டீட்டு இருக்க. This is the land of technology. Grow up"ன்னுட்டு சொல்லிகிட்டே நடக்கிறேன்.

4 comments:

')) said...

குமரண்....!

ஆகா தாவணி தீபாவளி உங்களுக்கு முன்னமே வந்துட்டா ...!

அப்பறம் ப்ளைட் ட்ர்புளன்ஸ் பயம் நல்லா சொல்லியிருக்கிங்க ...!

நம்ம தாயத்து மேட்டர் எல்லாம் 'புரொடெக்ட் அகய்ன்ஸ்ட் ஈவில்' என்று அமெரிக்காகாரனுக்கு எப்படி தெரியும்...!

அப்பாடா முழுக்கதையும் படிச்சாச்சு என்று இதுக்கு மேல நம்ப வைக்க என்னால முடியாதுப்பா !

:))

')) said...

நல்லா விர்ர்ருன்னு பறக்குதுங்க உங்க ஏரோபிளேன் கதை!!

')) said...

கோவி எப்படியோ கதை நல்லா இருக்கா இல்லையான்னு சொல்லாம தப்புச்சிட்டீங்க. பாத்துக்கறேன் உங்களை.

நன்றி அருட்பெருங்கோ முதல் வருகைக்கும் சேர்த்து.

')) said...

குமரன்,

கதை நல்லா இருக்கு என்று சொல்ல ஆசைதான்... ஆரம்பமே தாவணி என்று இருப்பதால் ... நான் சரியான லொள்ளு பார்டி என்பதற்கு பதில் ஜொள்ளு பார்டி என்று எல்லோரும் விளங்கிக் கொள்ளக்கூடும்...!

அதற்காக ஒரு ப்ரிகாசன் !

:)