Thursday, June 29, 2006

தூக்கம் வராத ஒரு இரவில்

தூக்கம் வராத ஒரு இரவில் மாடியில் நின்று கண் சிமிட்டி சினேகமாக வரவேற்கும் நட்சத்திரங்களையும், தனிமையை களைத்து விட்டதால் கோபம் கொண்டு மேகங்களுக்கு இடையில் சென்று மறையும் நிலவையும் கண்டு கொள்ளாமல் குளிருக்கு இதமாக கைகளைக் கட்டிக் கொண்டு, சுகமான குளிர் காற்றை நன்றாக மூச்சிழுத்து கொண்டிருக்கும் வேளையில் நானென்ன உலக சமாதானாம் பற்றியா யோசிக்கப் போகிறேன் எல்லாம் உன்னைப் பற்றிய நினைவுகள் தான். ஆனால் வழக்கமான உன்னை பற்றிய நினைவுகள் என் இதழில் குறுநகையையோ, என் விழியில் உன் விழி போன்ற மீன் வாழ எதுவான சூழ்நிலையையோ, எண்ணக் கடலில் நினைவு முத்தெடுக்க என்னுள் என்னையையே மூழ்கடித்து, சுற்றுப் புறச் சூழலுக்கு மூச்சிழுக்கும் ஜடமாக என்னை மாற்றி விட்டு விடும் சூழ்நிலை அமைவதுதான் வழக்கம். ஆனால் இன்று ஏனோ மனதில் பல கேள்விகள்.

உறக்கம் வராததால் மனம் எழுந்த கேள்விகளை அசை போட்டது. நீ ஏன் என்னுள் நான் விரும்பும் நீயானாய்? மீன் எப்படி நீந்தக் கற்றுக் கொண்டது என்பது போன்ற கேள்வி இது. நீயல்லாமால் வேறு யாரை விரும்பியிருப்பேன் நான். இன்று நீ விரும்பவில்லை என்று தெரிந்தும் உன்னை மட்டுமே விரும்பும் நான் நீயில்லை என்றால் யாரையுமே விரும்பி இருந்திருக்க மாட்டேனே. உலகில் உள்ள மனிதர்களை எல்லாம் தரையில் பிடித்து வைத்திருக்கும் புவியீர்ப்பு விசை போல நீ என் உயிரை என் கூட்டிக்குள் பிடித்து வைத்திருக்கிறாய். நான் உன்னைக் காணாமலே இருந்திருந்தால் வாழ்க்கை எவ்வளவு இனிமையானது என்பதை உணர்ந்திருக்கவே முடியாது.

எதற்காக விரும்புதல்? இதனால்தான் என்று பட்டியலிடவா முடியும் என்ன கேள்வி இது?3900000000 ஆண்டுகளுக்கு முன் பூமியில் சீதோஷண நிலை மாறியதால் தான் என்று நினைக்கிறேன். அதனால்தான் உலகின் முதல் உயிர் தோன்றியதாம் அப்படி முதல் உயிர் இவ்வுலகில் உருவாகாமலே போயிருந்தால் கண்டிப்பாக நான் உன்னை விரும்பியிருக்க மாட்டேன். என்ன செய்வது உயிர் தோன்றியதால் நான் உன்னை விரும்ப வேண்டியதாயிற்று.

என்ன எதிர்பார்க்கிறேன் இந்த விரும்புதலில்? சந்தோசத்தை பகிர வேண்டும், துக்கம் நம் அருகில் வந்தால் நம் விரும்புதலில் திகைத்து திரும்பிப் போக வேண்டும். உன்னுடன் சண்டை போட வேண்டும் பின் கண்ணீருடன் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். உன்னை சீண்டி கோபம் கொள்ள வேண்டும், அந்த கோபத்தில் சிரித்து அதனை அதிகப் படுத்த வேண்டும், பின் சமாதானம் செய்ய வேண்டும். சொல்லிக் கொண்டே போனால் இந்த வலைப் பதிவுதான் போதுமா? அல்லது இந்த வலைத் தளங்களை சேமிக்கும் கருவியின் அளவுதான் போதுமா? அதனால் நிறுத்துகிறேன் இங்கே ஒன்றே ஒன்றை மட்டும் சேர்த்துக் கொண்டு. கடைசியில் உன் மடியில் உயிர் விட வேண்டும்.

நீ என்னை விரும்பவில்லையே என் விரும்புதல் என்னவாகும்? விரும்புதல் ஆரம்பிக்கும் சமயம் நீ என்னை விரும்புவாய் என்றெல்லாம் ஆரம்பிக்கவில்லை. ஆகவே இப்பொழுதும் அதில் மாற்றமில்லை.இளையராஜாவின் பாடலைக் கேட்கும் சமயம் அன்னிச்சையாக கண்கள் மூடுகிறதே, குழந்தை சிரிக்கும் சமயம் மனதில் ஒரு ஆனந்தம் உண்டாகுகிறதே, மழைச் சாரல் மேனியைத் தொடும் சமயம் உடல் சிலிர்க்கிறதே அதைப் போல தன்னிச்சையாக வந்தது இந்த விரும்புதல் நீ விரும்பாததால் அது மாறி விடப் போவதில்லை.

Sunday, June 25, 2006

மதம்தனைப் புறக்கணிப்போம் - 8

GOD is too big to fit into any religion....

சக்தி வடிவமான இறை அருளை எந்த ஒரு மதத்தினுள்ளும் அடக்கி விட இயலாது...

தருமி அவர்களின் நான் ஏன் மதம் மாறினேன் இப்பொழுதுதான் படிக்கக் கிடைத்தது, அறிவுப் பூர்வமாக அணுகியிருந்தார். மதம் ஏன் பின்பற்றக்கூடாது என்று கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களில் உள்ள குறைகளை எடுத்துக் காட்டியிருந்தார். மிகவும் நன்றாக இருந்தது. அவரளவுக்கு அறிவுப் பூர்வமாக என்னால் அணுக இயலாவிட்டாலும் என் கருத்துக்களை இங்கு கூறுகிறேன்.

இந்து மதத்தில் தொடங்கி, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்கள் வரை எந்த மதமும் 100 சதவீதம் குறையில்லாத மதங்கள் என்று யாராலும் சொல்ல இயலாது.மதம் மனிதனை பாகுபடுத்துகிறது, பெண்களை அடிமைபடுத்துகிறது, கல்வரங்களுக்கு வித்திடுகிறது. ஒவ்வொரு மதங்களுக்குள்ளும் ஆயிரம் ஆயிரம் குறைகளை நம்மால் காண முடிகிறது.இப்படி குறைகள் உள்ள மதங்களா இறை நிலையை உணர நமக்கு வழிகாட்டப் போகின்றன?

மதங்கள் மனிதனை தன் மதத்தை வழிபடச் செய்ய என்னென்ன வழிமுறைகளை கையாளுகின்றன. கொள்ளிவாய் பிசாசுகள் உண்டாம் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் விபூதி, குங்குமம் அணிந்து கொண்டால் நம்மை அவைகள் ஒன்றும் செய்யாதாம். ரத்தக் காட்டேரிகள் உண்டாம் சிலுவை காட்டினால் அவைகள் மிரண்டு போகுமாம்.

இந்து மதத்தை பின் பற்றினால் நாம் சொர்க்கம் செல்லலாம், அது போலவேதான் கிற்ஸ்துவ இஸ்லாமிய மதங்களும்.

மனிதனுக்கு இருட்டைக் கண்டால் இருக்கும் பயத்தையும், மரணம் குறித்து இருக்கும் பயத்தையும் துணையாகக் கொண்டு தன்னை வளர்த்துக் கொள்ளும் மதம் எப்படி இறை நிலையை உணர நமக்கு துணை செய்யும்.

When something is so flawed how can someone blindly following it be any different?

இன்று நாம் நம் கண்ணை திறந்து பார்த்தால் தெரியும் இன்று ஒரு மதமும் குறையில்லாததில்லை என்று. நாம் கண் திறந்து பார்த்தால் தெரியும் இன்று உலகில் மதத்தின் பெயரால் மனிதன் தன்னைத் தானே எப்படி எல்லாம் அழித்துக் கொண்டிருக்கிறான் என்று, மதத்தின் பெயரால் இன்று நாம் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அந்த அழிவை நாம் சந்திக்கும் சமயம் நம் மதங்கள் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லப் போவதில்லை என்று.

இன்று ஜாதி பாகுபாடுகள் ஒழிய ஜாதிகள் ஒழிந்தால் மட்டும் போதாது ஜாதி பாகுபாடுகளை உண்டாக்கிய மதமும் ஒழிய வேண்டும். புனிதப் போர் என்ற பெயரில் நடக்கும் தீவிரவாதமும் மதங்கள் ஒழிந்தாலே ஒழியும். அறிவியல் வளர்ச்சியை எதிர்க்கும் மதம் நமக்கு தேவையே இல்லை என்று மக்கள் உணர வேண்டும்.

Monday, June 19, 2006

பெண்

நாகரீகங்கள் தோன்றியதும் இவளால்தான்
கலாச்சாரங்கள் உருவானதும் இவளால்தான்

நாகரீகங்கள் மாறுவதும் இவளால்தான்
கலாச்சாரங்கள் அழிவதும் இவளாலேதான்

தாயாய் என்னை நானாக்குவாள்
தோழியாய் நமக்கு ஆறுதலழிப்பாள்
காதலியாய் நம்மை முழுமையாக்குவாள்

இவள் மென்மையில் மலைகள் உடையும்
இவளின் மேன்மையிலேயே உலகம் சுழலும்

ஒவ்வொரு ஆணுக்கு பின்னும்
ஒரு பெண் தேவை
எல்லா நேரமும் தாயாய்
பல நேரங்களில் தோழியாய்
உயிரோடு கலந்த காதலியாய்
சில நேரங்களில் நினைவுகளாய்

இப்படி ஆணுக்கு பின்னால் பெண்
தேவை என்பதால்தானோ பெண்ணை
எப்பொழுதும் பின்னுக்கு தள்ளும்
பழக்கம் பல ஆண்களுக்கு?

Saturday, June 17, 2006

மதம்தனைப் புறக்கணிப்போம் - 7

மதங்களால் மனிதன் அடைந்த இன்னல்கள், அடைந்து வரும் இன்னல்கள் எத்தனை எத்தனை?.

பெண்ணடிமைத்தனத்தை ஆரம்பித்து வைத்ததே மதங்கள் தானே இந்த உலகில்? ஹிந்து மதத்தில் இருபது வருடம் முன் வரை விதவைகள் மறுமணம் என்பது ஒரு புரட்சியாகத்தானே கருதப்பட்டது ராஜராம் மோகன் ராய் இல்லையெனில் சதி என்ற பெயரில் பெண்களை படு கொலை செய்யும் பழக்கம் இன்னும் எத்தனை காலங்களுக்கு தொடர்திருக்குமோ? கிறிஸ்துவ மதம் சூனியக்காரிகள் எரிப்பு என்ற பெயரில் பெண்களை எரித்தது பெண்களை தொட்டாலே பாவம் செலிபஸி(celibacy) புனிதம் என்று பெண்களை மட்டம் என்றே சொல்வது போன்ற பழக்கம் உடையதுதானே?இஸ்லாமும் இந்த விசயத்தில் ஒன்றும் குறைந்து போய் விடவில்லை. பெண்களின் முகங்களை வெளியில் காண்பிக்க கூடாது என்று பெண்களை சிறுமை படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.

மதங்கள் பெண்ணடிமைத்தனத்துடன் நின்று விடவில்லை. மாற்று மனிதனை சிறுமைபடுத்தி ஆனந்தப் படுத்துவதிலும் மதமே முதன்மையில் நிற்கிறது. ஹிந்து மதம் இதில் கரை கண்டது என்றால் மிகையாகாது. ஹிந்து மதம் இதில் கரை கண்டது என்றால் மிகையாகாது. 2000 வருடங்கள் மனிதனை சிறுமைபடுத்தி ஆனந்தம் கொண்ட மதம் அல்லவா பெருமைக்குறிய ஹிந்து மதம்.கிறுஸ்துவ மதம் மனிதனை சிறுமைபடுத்துவதில் மிக பின்தங்கி இல்லை. நிறம் கறுப்பாக இருந்தால் கீழானவர்கள் என்று அடிமைபடுத்திய மதம் அல்லவா இது. GOD is white என்று என்னென்ன கொடுமைகள் நடந்தது என்பது வேதனைக்குறிய சரித்திரம் அல்லவா.இன்று ஒரு கோயிலுக்கோ, தேவாலதிற்க்கோ மாற்று மதங்களைச் சார்ந்தவர்கள் செல்ல இயலும் ஒரு மசூதியில் அது போல செல்ல இயலுமா? இஸ்லாமியர்களும் தாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்களே.

மதங்களில் பெயரால் கலவரங்கள் எத்தனை போர்கள் எத்தனை? பாட புத்தகத்தில் படிக்கிறோமே உலகில் நடந்த மிக அதிக காலம் நடந்தப் போர் சிலுவைப் போர்கள் என்று, நாம் இதனை பற்றி சிந்திக்க வேண்டாமா நாம்? பாபர் மசூதி இடிப்பு என்று ஹிந்து மதக்காரர்கள் தொடங்கி வைத்துள்ள ரத்த வேட்கையை பற்றி சிந்திக்க வேண்டாமா நாம்? புனிதப் போர் என்ற பெயரில் நடக்கும் குண்டு வெடிப்புகள் நம் காதில் விழுகிறதா இல்லையா?

தார்மீக பொறுப்பு என்ற ஒரு சொல் உண்டு அதாவது எந்த ஒரு விசயமாக இருந்தாலும் நாம் அதற்கு முழுப் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே இதன் அர்த்தமாக அமையும். நீங்கள் கிறிஸ்துவராக, ஹிந்துவாக அல்லது முசஸ்மானாக இருந்து ஒரு கேள்வியை உங்களுக்கும் எழுப்பிக் கொள்ளுங்கள் என் மதத்திற்கு நான் தார்மீக பொறுப்பு எடுத்துக் கொள்கிறேனா இல்லையா என்று?

அப்படி பொறுப்பு உண்டெனில் உங்கள் மதங்களில் பெயரால் நடக்கும் கொடுமைகளுக்கு நீங்களும் துணை நிற்கிறீர்கள் என்றே பொருள். நான் ஹிந்து, கிறிஸ்துவன், முசல்மான் என்று கூறிக் கொள்ளும் ஒவ்வொருவரும் அந்தந்த மதங்களின் பெயரில் நடக்கும் கலவரங்களில் மடிகிறார்களே பச்சிளம் பாலகர்கள் அவர்களுக்கும் அவர்களே பொறுப்பு.