Sunday, August 19, 2007

GOD must be alien !!!! - 3

சமீபத்தில் Star Gate என்ற படம் பார்த்தேன். பிரமாதமான படம் ஒன்றும் இல்லை. எகிப்து பிரமீடுகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் சமயம் ஒரு வித்தியாசமான ஒரு யந்திரம் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்கள். பழங்காலமாக பூமிக்கு அடியில் புதைந்து கிடந்திருந்த அந்த யந்திரம் மூலம் பல வெளிச்ச வருடங்கள் தள்ளி இருக்கும் ஒரு கிரகத்திற்கு அதனை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியும் வேறு சிலரும் செல்கிறார்கள்.

அந்த கிரகத்தில் பல காலங்களுக்கு முன்னால் கொண்டு வரப்பட்ட மனிதர்கள் அவர்களுடைய வம்சாவளியினர் ஆகியோர் அடிமையாக நடத்தப்படுவதைக் கண்டறிகிறார்கள். அந்த கிரகத்தின் உயிரினம் ஒன்று மனிதர்களை தன்னுடைய சக்தியால் இது போல நடத்துகிறது. இப்போது சென்ற மனிதர்கள் அந்த உயிரினத்தை முறியடித்து மனிதர்களை காப்பாற்றுகிறார்கள்.

இந்தப் படத்தில் என்னுடைய ஆர்வத்தைக் கிளறிய விஷயம் என்னவெனில் இந்த உயிரினம் மனிதர்களை எப்படி அடிமையாக்குகிறது என்றால், தான் ஒரு கடவுள் என்றும் அனைவரும் தன்னை வழிபட வேண்டும் என்று சொல்லி அடிமையாக்குகிறது. அந்த உயிரினத்தின் அறிவியல் நுட்பம் மூலம் கண்டு பிடித்த விமானம் போன்ற கருவிகளை பயன்படுத்தி தான் தான் கடவுள் என்று மக்களை நம்ப வைக்கிறது.

மனிதனுக்கு உள்ள ஒரு உணர்வு என்னவெனில் தன் அறிவுக்கு புலப்படாத விஷயங்களும் அனைத்துமே அனைத்தையும் இயக்கும் கடவுளால் தான் இயங்குகிறது என்று நம்புவது இல்லை அது தான் கடவுள் என்று நம்புவது.

இதனை உபயோகித்து தான் மனிதனை அந்த உயிரினம் அடிமைப் படுத்துகிறது.

இதே முட்டாள் தனம் பூமியிலும் நடக்கிறது. அடுத்தவனை அடக்கியாள வேண்டும் என்ற வேட்கையிலும் தனக்குத் தெரிந்தது தான் உண்மை என்ற மனிதனின் ஆணவத்தை நம்பித் தான் இன்றைய மதங்கள் இயங்கி வருகின்றன. மதங்கள் காலம் காலமாக அதன் உதவியால் அனுபவித்த வந்த அதிகாரம் போகம் போன்றவைகள் பறி போய் விடக் கூடாதே என்பதால் பலர் செத்தாலும் பரவாயில்லை என்று மூடத்தனத்தை இன்னும் மக்கள் மத்தியில் பரவச் செய்ய முற்பட்டுக் கொண்டிருக்கிறது சில கூட்டங்கள்.

மக்களும் ஆட்டு மந்தை போல அதன் பின்னாலேயே சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த படத்தில் அந்த உயிரினத்திற்கு எதிராக பல வருடங்களுக்கு முன்னால் ஒரு புரட்சி வெடித்திருப்பதை கண்டு பிடிப்பான் கதாநாயகன். அந்த புரட்சியை பல வருடங்களுக்கு முன்னாலேயே அடக்கிய அந்த உயிரினம் மீண்டும் புரட்சி வெடிக்காமல் இருக்க மனிதர்களுக்குள் படிப்பு சொல்லிக் கொடுப்பதை நிறுத்த சொல்லி விடும். படிப்பு அறிவு இல்லாததால் அப்படி ஒரு புரட்சி நடந்த விஷயம் அப்படியே காற்றில் கரைந்து விடும்.

நம்முடைய வரலாற்றிலும் இது போன்ற பல தடவை நடந்திருக்கிறது என்பதும் ஆச்சரியப்படுத்தும் விஷயம். சூனியக்காரிகள் என்று படித்த பெண்காளை எரித்தது. கலிலியோவை சிறையில் அடைத்து, மக்களை பாகுபடித்தி 1% மக்கள் மட்டுமே படித்தவர்களாக வைத்திருந்தது, பெண்கள் முகத்தை மூடி அடிமைப் படுத்துவது இன்னும் எத்தனை எத்தனை உதாரணங்கள் எடுக்கலாம் நம்முடைய வரலாற்றில் இருந்து.

இன்றைய அறிவியல் யுகத்தில் வரலாற்றில் புரிந்த இதே கொடுமைகளை வேறு முகம் கொண்டு இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது ஆதிக்க வாத சக்திகள். ஆனால் வரலாற்றில் மக்களுக்கு இல்லாத ஒரு விஷயம் இன்று நம்மிடத்தில் இருக்கிறது. அது தான் பல விஷயங்களைப் பற்றிய புரிதல், புரியாத விஷயங்களை புரிந்து கொள்ள முயலுதல்.

மனிதன் வடிவமைத்த இறைவனின் எந்த வடிவத்தை எடுத்துக் கொண்டாலும் மாயங்கள் நிறைந்ததாகவே அவை இருக்கின்றன. அப்படி மாயங்கள் நிறைந்தது தான் இறைவன் என்று நினைத்துக் கொண்டிருந்தால் மனிதன் இறைவனை அல்ல மாயம் செய்யத் தெரிந்த அவனை விட சற்று அறிவு அதிகம் கொண்டிருக்கும் ஒரு வேற்றுகிரகவாசியைத்(Alien) தான் தேடிக் கொண்டிருக்கிறான்.

உண்மையில் இறைவனை உணர மார்க்கங்கள் தேவையில்லை மதங்கள் மனிதனை இறைவன் அருகில் இல்லை அவனை தூர விலக்குகின்றன என்றே கருதுகிறேன்.

கடவுளை அவருடைய கட்டளைகள் அவருடைய வழி என்று கடவுளை மனிதனின் உருவாகவே வடித்து வந்திருக்கிறான் மனிதன். இந்த பிரபஞ்சத்தில் பூமி என்பதே ஒரு தூசி இந்த பிரபஞ்சத்தின் சக்தி வடிவம் தான் இறைவன் என்றால் மனிதன் என்பவன் ஒன்றுமே இல்லாத ஒரு துகள் அதனை அறிந்து அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த சின்ன வாழ்வில் அமைதியாக வாழ்ந்து வருவதே அறிவுள்ளவன் செயல்.

Tuesday, August 14, 2007

ரௌலிங் முட்டாளாக்குகிறாரா?

சில சமயம் சில பதிவுகளைப் படிக்கும் போது எரிச்சல் வரும் கோபம் வரும்.

எனக்கும் இந்தப் பதிவைப் படித்த உடன் கோபம் எரிச்சல் தான் வந்தது ஆனால் அதனை விட மிகுந்து வருத்தம் வந்தது.

அந்தப் பதிவில் இருந்து சில Excerpts

"இந்த ரெளலிங் எப்படி உன்னை ஒரு முட்டாளாக்கி வச்சிருக்கா, பார்த்தியா? முதல் நாள் ஹாரி போட்டர் புத்தகத்தின் விலை ஆயிரம் ரூபாய். ஒரு வாரம் வெயிட் பண்ணினால், பிளாட்பாரத்தில் பைரேட்டட் எடிஷன் நூறு ரூபாய்க்கு கிடைக்கும். அல்லது பேப்பர் பேக் எடிஷன் நானூறு ரூபாய்க்கு கிடைக்கும்."

ரெளலிங்கிற்கு உன்னைப் போன்ற ஏழ்மையான நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது உண்மையிலேயே அக்கறையிருந்தால், மூன்றாம் உலக நாடுகளில், குறைந்த விலைக்கு விற்கட்டுமே! தெரியுமா?

ஏதோ ஹாரி போட்டருக்காக இந்தியாவே ஏங்கிக் கிடப்பது போன்ற ஒரு தோற்றத்தினை, இவ்வாறு முழுப்பைத்தியம் பிடித்து அலையும் ஒரு சிறு கூட்டத்தினைக் காட்டி மற்றவர்களையும் முட்டாளாக்குகிறார்கள்.

இதுவெல்லாம் பிஸினென்ஸ் ஸ்டிராடஜி என்று மேனேஜ்மெண்ட் மாணவர்கள் வியக்கலாம். முன்னாபாய் படத்தில் நோயாளியை சப்ஜெக்ட் என்று சொல்லும் மருத்துவருக்கும், இண்டிபெண்டஸ் டே படத்தில், “ in the past twenty four hours, it has become very exciting” என்று வேற்று கிரக வாசிகளின் தாக்குதலை ஜனாதிபதியிடம் வியக்கும் விஞ்ஞானிக்கும் அவர்களுக்கும் ஒற்றுமை உண்டு!!

முதலில் ரௌலிங் பற்றியும் அவரது பதிப்பகத்தாரான Bloomsbury பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ரௌலிங்க்கு முதன் முதலில் இந்த கதை உருவான இடம் ஒரு ரயில் பயணத்தில் 1990ல். அவர் கதை புத்தகமாக வெளியானது 1996ன் கடைசியில். இந்த ஏழு வருட காலகட்டத்தில் ரௌலிங்கின் வாழ்க்கையை சற்றுப் பார்க்கலாம். இங்கிலாந்தில் பிறந்த ரௌலிங் போர்ச்சுகலை சேர்ந்த ஒருத்தரைக் திருமணம் செய்து கொண்டு போர்ச்சுகல் செல்கிறார். அங்கு அவருக்கு ஒரு குழந்தை பிறந்தவுடன் திருமணம் ரத்தாகி இங்கிலாந்து வருகிறார்.

வேலை எதுவும் இல்லாததால் இங்கிலாந்து அரசாங்கம் கொடுக்கும் Welfareல் சில காலம் ஒரு வயது கூட முடியாத குழந்தையுடன் காலம் தள்ளுகிறார். குழந்தை தூங்கிய உடன் கிடைக்கும் நேரத்தில் மட்டும் எழுதுகிறார். இப்படியே 6 வருடம் எழுதிய முடித்த உடன் ஒரு ஏஜண்டுக்கு இரு பிரதிகள் அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காக எழுதிய அனைத்தையும் இரு முறை டைப் அடிக்கிறார்(ஜெராக்ஸ் எடுக்க பணம் இல்லாததால்). முதல் ஏஜண்ட் அவருடைய கதையை பிடிக்காமல் திருப்பி அனுப்பும் சமயம் ரௌலிங் அனுப்பிய பைல் பெரியதாக இருந்ததால் அதனை திருப்பி அனுப்பாமல் விட்டு விடுகிறார்.

மீண்டும் அவர் எழுதிய அனைத்தையும் இரு முறை டைப் செய்து இரண்டாவது ஏஜெண்டிடம் அனுப்புகிறார். இரண்டாவது ஏஜெண்ட் கதை பிடித்துப் போய் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்கிறார்.

அதே சமயத்தில் ஒரு டீச்சராக வேலைக்கு ஒரிடத்தில் சேருகிறார். இரண்டாவது புத்தகம் வெளியாகும் வரை டீச்சராகவே பணி புரிகிறார். இரண்டாவது புத்தகம் வெளியான அதே சமயம் அமெரிக்க பதிப்பகத்தார்(Scholastic) முதல் கதையை அமெரிக்காவில் வெளியிட அந்த சமயத்தில் மிக அதிகமான தொகையாக கருதப்பட்ட 1 லட்சம் டாலருக்கு எடுத்துக் கொள்கிறார்(இன்று ரௌலிங்கின் மதிப்பு ஒரு பில்லியனுக்கு மேலே என்று கணக்கிடப்படுகிறது).

Bloomsbury குழந்தைகள் புத்தகங்களை வெளியிட்டு வந்த ஒரு சாதாரண நிறுவனம். இந்தியாவில் குழந்தைகள் பதிப்பகங்களின் கதை எப்படியோ அதே போலத்தான் Bloomsbury கதையும். மிகப் பெரிய பதிப்பகம் கிடையாது. சில நூறு புத்தகங்களை மட்டுமே வெளியிட்டு வந்த ஒரு சாதாரண நிறுவனம். ஹாரிப்பாட்டரின் முதல் புத்தகம் 1000த்துக்கும் குறைவாகவே வெளியிடப் பட்டது.

இன்று ஹாரிப்பாட்டர் புத்தகங்கள் வெளியாகும் முன்னரே 30 லட்சம்(இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும்) விற்றுத் தீர்ந்திருக்கின்றன. வெளியான முதல் நாள் மட்டும் 1.1 கோடி புத்தகம் வெளியான 10 நாளில் 15 கோடி புத்தகம் விற்றிருக்கிறது.

ஏழு புத்தகங்களும் சேர்த்து 350 மில்லியன் அதாவது 35 கோடி புத்தகங்கள் 64 மொழிகளில் விற்றிருக்கிறது.

குழந்தைகள் நாவல் என்று இல்லை எந்த ஒரு நாவலும் இது வரை ஹாரி பாட்டர் அளவுக்கு விற்றதில்லை விற்கவும் போவதில்லை.

இந்தப் புத்தகம் வெளியான சமயம் ரௌலிங்கோ இல்லை Bloomsburyயோ ஒன்றும் பெரிய players கிடையாது. எதோ 1 கோடி போட்டி இரு கோடி எடுக்கும் வியாபாரத் தந்திரம் எல்லாம் ரௌலிங்கோ இல்லை Bloomsburyயோ ஆரம்ப காலத்தில் நினைத்திருந்தாலும் செய்திருக்க முடியாது. இந்த நாவலைப் படித்த ஒவ்வொருவரும் மற்றொருவரிடம் சொல்லி அப்படியே தான் பிரபலமானது ஹாரி பாட்டர்.

இந்த உலகம் ஐடியல் உலகம் கிடையாது. 1000 ரூபாய் சட்டை வாங்கி போடும் சமயம் 100 ரூபாய்க்கு சட்டை இருக்கு அதை வாங்கிப் போட்டுட்டா போதும் மீதி 900 ரூபாய் அடுத்த வேலை சோற்றுக்கு வழி இல்லாமல் தவிப்பவர்களுக்கு உதவலாம் என்று எத்தனை பேர் நினைத்துப் பார்க்கிறோம்.

இவ்வளவு பேரும் புகழும் கிடைத்ததால் ரௌலிங் கெட்டவரா? இந்தியாவின் மீடியாக்களுக்கு காசு கொடுத்து அவர் தான் இது போன்ற செய்திகளை காட்டச் சொல்கிறாரா? கண்டிப்பாக ஹாரி பாட்டர் புத்தகங்களுக்கு அப்படி செய்ய வேண்டும் என்று அவசியமே கிடையாது.

இது போல எத்தனை புத்தகங்கள் இதே போன்ற வியாபாரத் தந்திரம் மூலம் விற்றுத் தீர்ந்திருக்கிறது? இந்தப் பதிவில் எழுதி வைத்திருக்கிறேன் இனி மேல் ரௌலிங் நினைத்தால் கூட ஹாரி பாட்டர் போன்ற பிரபலமான ஒரு புத்தகம் எழுத முடியாது இது போன்ற ஒரு euphoria இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஒரு புத்தக வெளியீட்டால் வராது.

ஹாரிபாட்டர் வெளியாகும் அதே நாளில் அந்தப் புத்தகம் பல லைப்ரரிகளுக்கும் அனுப்ப பட்டுள்ளது.

ரஜினி படத்திற்கு 1000 ரூபாய் வரை டிக்கெட் விற்றது அதற்கு ரஜினி எப்படி பொறுப்பாக முடியும்? ரஜினி இதில் எல்லாம் தலையிட்டு கூடாது என்று சொல்ல வேண்டுமா?

அப்படி சொல்ல வேண்டும் என்று கருதுபவர் 100 ரூபாய் சட்டைக்காரரைப் போல Ideal நபராக இருக்க வேண்டும் இல்லை என்றால் முதுகைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

Thursday, August 09, 2007

GOD must be alien !!!! - 2

நமக்கு காய்ச்சல் தலைவலி போன்றவை வருவதற்கு காரணியாக இருக்கும் வைரஸ், பாக்டீரியா போன்ற கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை உயிரினம் என்று சொல்லலாமா? சொல்லலாம் என்றே தோன்றுகிறது உயிரினங்களில் மிக முக்கியமான ஒரு ஆற்றல் சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னை மாற்றிக் கொள்வது தான். மனிதன் ஒரு நுட்பம் வாய்ந்த மிருகம் என்று அறியப்படுவதற்கு பலர் அவனுடைய மூளை தான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவனுக்கு பரிணாம வளர்ச்சி மூளையை விட மிக முக்கியமான ஆயுதம் ஒன்றைக் கொடுத்திருக்கிறது. அதுதான் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப காலகட்டத்தில் மனிதன் மற்ற மிருகங்களிடத்தில் இருந்து தாக்குப் பிடிக்க வைத்தது. அதுதான் Opposable Thumb( எதிர்மறையான வளையக் கூடிய பெருவிரல்).

ஒரு நாய் நம் மீது கல் எடுத்து எறிய முடியுமா? இல்லை கம்பு எடுத்து சுற்ற முடியுமா? அதற்கு கை இல்லை அதனால் முடியாது என்றால் உண்மை இல்லை. நாய்க்கு நம் போலவே கை இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் கூட அது முடியுமா? முடியாது ஏனென்றால் அதனுடைய பெருவிரல் அமைப்பு அது போல இல்லை. கீழ்கண்ட விஷயங்களை பெருவிரல் உதவி இல்லாமல் செய்து பார்க்க முயற்சி செய்தால் இதன் மகத்துவம் நமக்குத் தெரியும்.

1. ஒற்றைத் தாள் பேப்பரை எடுத்துப் பாருங்கள்
2. ஒரு மேஜை மேல் இருக்கும் பேனா இல்லை பேப்பரை எடுத்துப் பாருங்கள்.
3. புத்தகத்தை கையில் எடுத்து பக்கங்களை பெருவிரல் உதவி இல்லாமல் திருப்பிப் பாருங்கள்.

இது போல நாம் அன்றாடம் செய்யும் பல விஷயங்களுக்கு பெருவிரலை எவ்வளவு தூரம் நம்பி இருக்கிறோம் என்று தெரியும். ஏகலைவன் பெருவிரலை துரோணர் கேட்டது என்ன ஒரு கோழைத்தனமான செயல் எனபது பெருவிரல் மகிமை புரிந்தால் தான் தெரியும்.

இப்படிப்பட்ட மகத்துவமான பெருவிரல் மனிதர்களுக்கு மட்டும்தான் மிக சரியான முறையில் அமைந்திருக்கிறது. நம் முன்னோர்களான குரங்குகளுக்கும் இது ஒரு அளவு வளர்ச்சி அடைந்திருந்தாலும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை.

மனிதன் இனம் இன்று பெருமிதம், சிறுமிதம் கொள்ளும் பல ஆற்றல்களுக்கு மிக முக்கியமாக நன்றி சொல்ல வேண்டியது இயற்கையின் இந்த சிறிய பரிணாம வளர்ச்சி மாற்றத்திற்கு தான்.

இதே போல பரிணாம வளர்ச்சி மாற்றங்கள் இந்த கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளிடத்திலும் இருக்கிறது. எய்ட்ஸ் நோய் உருவாக்கும் வைரஸ் கிருமி இந்த பரிணாம வளர்ச்சி மாற்றத்திற்கு ஒரு மிக மிக சிறந்த உதாரணம்.

இந்த கிருமிகளை ஆங்கிலத்தில் பாராசைட் என்று சொல்லுவார்கள். பாராஸைட் என்பதற்கு விளக்கம் என்னவெறால் மற்ற உயிரினங்களிடத்தில் ஒட்டிக் கொண்டு அதனால் உயிர் வாழ்ந்து கொண்டு அதற்கு துன்பம் விளைவிக்கும் உயிரினம்(மனிதனையும் பூமியின் பாராஸைட் என்று சொன்னால் தவறில்லையோ?).

இந்த வைரஸ்கள் மனிதனுக்கு துன்பம் விளைவிக்கின்றன என்பதால் மனிதன் அதற்கு எதிராக மருந்துகளை கண்டு பிடித்தான். இந்த வைரஸ்கள் அந்த மருந்துகளுக்கு எதிராக பரிணாம வளர்ச்சி அடைந்து உருவானதுதான் எய்ட்ஸ் வைரஸ்.

இதனை சற்று வேறு மாதிரியாக யோசித்துப் பார்க்கிறேன் நமக்கு துன்பம் விளைவிக்கும் ஆற்றல் இல்லாமல் இருந்திருந்தால் இந்த கிருமிகளைப் பற்றி நாம் அறிந்திருப்போமா இல்லை இவற்றை எதிர்க்கும் ஆற்றலாகிய மருந்துகளை கண்டுபிடித்திருப்போமா இல்லை இவற்றைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்போமா?

ஒரு வகையில் பார்த்தால் மனிதன் என்பவன் இந்த கிருமிகளுக்கு கடவுள் போல. மனிதன் இல்லையென்றால் பல கிருமிகள் உருவாகி கூட இருக்காது அதே போல் மனிதன் நினைத்தால் இந்த கிருமிகளை அழித்து விட முடியும்.

நாம் கடவுளைப் எந்த வகையில் பார்க்கிறோமோ இந்த கிருமிகளுக்கு யோசிக்கும் திறன் இருந்தால் மனிதனைப் பற்றி அதே போல யோசிக்கலாம்.

ஆனால் மனிதன் என்பவனுக்கு இந்த கிருமிகளைப் பற்றி கவலையே இல்லை காய்ச்சல் வந்தால் மருந்து சாப்பிட்டு அவற்றைக் கட்டுப்படுத்துவது மட்டுமே அவனுக்கு முக்கியம் மற்றபடி வேறு கவலைகள் இல்லை.

இந்த பிரபஞ்சத்துடன் மனிதனை ஒப்பிட்டால் அவன் ஒரு கிருமி கூட கிடையாது.

இந்த கிருமிகளையும் மனிதனையும் ஒரே சமயத்தில் பெரிது படுத்துகிறோம் என்று வைத்துக் கொள்ளுவோம் இந்த கிருமி மனிதன் அளவுக்கு பெரிது படுத்தினால் அதே அளவில் பெரிதுபடுத்தப்பட்ட மனிதன் இமய மலை அளவுக்கு இருப்பான்.

ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன் இமய மலை அளவு பெரியதாக இருக்கும் ஒன்று மனிதன் அளவில் இருக்கும் கிருமிகளை துன்பம் விளைவிக்கிறது என்பதற்காக மட்டும் கண்டு கொண்டிருந்தால், இந்த பிரபஞ்சத்தை, இது போன்ற பல பிரபஞ்சங்களை ஆட்டுவிக்கும் சக்தி ஒன்று மனிதனை ஏன் கண்டு கொள்ள வேண்டும் இல்லை மனிதன் ஏன் இங்கு முக்கியத்துவம் வாய்ந்தவனாக வேண்டும்?

இந்த பிரபஞ்சத்தையே இயக்கும் சக்திதான் கடவுள் என்றால் கண்டிப்பாக மனிதன் என்பவன் சும்மா இந்த சக்தி தான் நம்மை இயக்குகிறது என்பது கப்ஸா நாமும் ஏதோ அப்படியே இருக்கிறோம் அவ்வளவுதான் மற்றபடி கடவுள் என்ற அந்த சக்திக்கு மனிதன் என்ன செய்கிறான் அவன் எப்படி இருக்கிறான் என்ற கவலை எல்லாம் இருக்காது என்றே தோன்றுகிறது.

கடவுள் விதித்தபடி நான் வாழ்கிறேன் என்பது போன்ற வாக்கியங்கள் என் கடவுள் விதித்த விதி உன் கடவுள் விதித்த விதி என்பதெல்லாம் மூடத்தனத்தின் உச்சகட்டம் இல்லை ஆணவத்தின் இமயம்.

எல்லாவற்றையும் இயக்கும் சக்திதான் கடவுள் என்றால் அந்த சக்தி மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று விதிப்பதெல்லாம் முக்கியத்துவமாக இருக்காது. அல்லா, கிறிஸ்து, ராமர் என்பதெல்லாம் இந்த சக்தியை குறிக்காது. கடவுள் விதித்தது என்று ஒன்றுமே இருக்காது.

மனிதனுடைய உடல் இல்லாமல் இயங்க முடியாது கிருமிகள் போலத்தான் நாமும் இந்த பூமியில். இந்த பூமி இல்லை என்றால் இயங்க முடியாத ஒரு கிருமி. அந்த கிருமியை நாம் எப்படி கண்டு கொள்ளாமல் விடுகிறோமோ அதே போலத்தான் இந்த பூமியில் நாமும் இருக்கிறோம்.

பிரபஞ்ச இயக்கும் சக்திதான் கடவுள் என்றால் நாம் கடவுள் என்று யோசித்துக் கொண்டிருப்பது உருவகித்துக் கொண்டிருப்பது எதனை அல்லது எவற்றை?

ஆடு மாடுகளை நாம் நடத்துவது போல நம்மை நடத்தும் ஒரு சக்தியைத்தான் நாம் கடவுள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆடு மாடுகளுக்கு மின்சாரம் என்பது எப்படி ஒரு மாயாஜாலமோ அதே போல நமக்கு மாயாஜாலமாக தெரியும் அல்லது தெரிவிக்கும் சக்திதான் நமக்குக் கடவுள் அது வேற்றுகிரகவாசிகளாக இருக்கலாமா? இருக்கலாம் என்றே தோன்றுகிறது ஏனென்றால்....