மோகன் தாஸ் கரம் சந்த் காந்தியே நீ ஒரு மஹான். உன்னில் குறைகள் இல்லை, நீ தவறுகள் செய்யவில்லை என்று சொன்னால் அது உண்மை இல்லை என்று எனக்குத் தெரியும்.
உன்னிடம் குறைகள் இருந்தால் என்ன? உன் குறைகளையா நான் பின்பற்றப் போகிறேன் உன் நிறைகள் அல்லவா எனக்கு முக்கியம்?
டிராபிக்கில் ரெட் விழுந்த உடன் வண்டியை கோட்டிற்கு அருகே நான் நிறுத்த பின்னால் வண்டியில் இருந்தவர் என்னை திட்ட, கோபம் பொத்துக் கொண்டு வந்தாலும் உன்னைப் போன்றவர்கள் எனக்கு சொல்லித் தந்ததால் அல்லவா என்னால் அமைதியாக அவருக்கு பதில் சொல்ல முடிந்தது. அங்கு திரும்ப திட்டி எல்லோருக்கும் சங்கடம் ஏற்படுத்தாமல் இருக்க எனக்குக் கற்றுக் கொடுத்தவர்களில் நீயும் ஒருவன் அல்லவா?
மரியாதையாக பேசாத பலரிடம் கூட திரும்ப முகம் சுழிக்காமல் நாம் கொடுக்க வேண்டிய மரியாதையுடன் பேச எனக்கு கற்று தந்தது நீ அல்லவா?
மத தலை தூக்கி ஆடிய நவகாளிக்குச் சென்றாய், அங்கிருந்து பல இடங்களுக்கும் சென்று அன்புதான் கடவுள் என்று பல கோரங்களை தவிர்த்து வைத்தாய். இன்று எனக்கு அன்புதான் கடவுள் என்று கற்றுக் கொடுத்த பலரில் நீயும் ஒருவன் அல்லவா?
பொறுமை எவ்வளவு அவசியம் உணர்த்தும் வகையில்தான் உன் வாழ்க்கையில் எத்தனை உதாரணங்கள், பொறுமையால் எத்தனை காரியங்களை செய்திருக்கிறாய். பொறுமையை எனக்கு கற்றுக் கொடுத்த பலரில் நீயும் ஒருவன் அல்லவா?
எதிரிக்கு துன்பம் நினைக்காதே என்று எனக்கு எனக்கு கற்றுக் கொடுத்த பலரில் நீயும் ஒருவன் அல்லவா?
இன்றைய உலகில் அன்பு அறம் மேல் யாருக்குமே நம்பிக்கை இல்லாத சமயத்தில் எல்லோரும் பொறுமை இல்லாமல் கோபம் கொண்டு இருக்கும் சமயத்தில் அன்பின் பலத்தை உன்னைப் போன்றவர்களாலேயே உணர்ந்திருக்கிறேன்.
மனித உயிரே மலிவாய் போய் விட்ட இன்றைய நிலையில் எல்லா உயிர்களையும் மதிக்க வேண்டும் என்று உன்னைப் போன்ற சிலரைக் கண்டே உணர்ந்து கொள்கிறேன்.
மத வெறி மனித குலத்தையே அழிக்கும் வல்லமை பெற்றிருக்கும் இக்காலத்தில் எல்லா மதங்களையும் எப்படி அரவணைக்க வேண்டும் என்பதை உன்னைப் போன்ற சிலரைக் கண்டே உணர்ந்து கொள்கிறேன்.
உன்னிடம் குறைகள் இருந்தால் என்ன? உன் குறைகளையா நான் பின்பற்றப் போகிறேன் உன் நிறைகள் அல்லவா எனக்கு முக்கியம்?
அன்பு அறன் மீது யாருக்குமே நம்பிக்கை இல்லாத இந்தக் காலத்தில் அன்பையும் அறனையும் எனக்குக் கற்றுத் தந்த நீ எனக்கு ஒரு மஹான்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வளமுடன்.
வாழ்க வையகம்.
Thursday, October 05, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள் செந்தில் குமரன். வாழ்க வளமுடன்.
வருகைக்கு வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க குமரன்.
Post a Comment