Monday, November 20, 2006

இலவசம் இளப்பம் காதல்

"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியெடுக்கும்
தேடல் என்பது உள்ள வரை வாழ்வில் ருசியிருக்கும்
பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே”

கல்பனா பக்கத்தில் கொஞ்ச நேரம் இருந்தா இந்தப் பாடலைக் கேட்கலாம். கல்பனாவுக்கு எல்லாமே தேடல் தான். அவங்க அப்பா கத்துக் கொடுத்தது. சின்ன வயசில் அது என்ன? இது என்ன? என்று கேள்வி கேட்கும் போது பொறுமையா அது என்ன என்று சொல்லிக் கொடுப்பார். ஆனால் அதற்கு அப்புறம் வேற எதைப் பத்தியும் கேட்க முடியாது. அதுக்குள்ள இவங்க அப்பா அதைப் பத்தி கேள்வி கேட்க ஆரம்பிச்சிடுவார். பேரை மட்டும் தெரிந்து கொள்ளாமல் அதனைப் பற்றி கொஞ்சம் விவரமும் தெரியும் வரை விட மாட்டார்.

சாமின்னா என்னான்னு தெரியணுமா? எனக்கு தெரிஞ்சது இது. இது அவங்க சொன்னது. இது இன்னொருத்தர் சொன்னது. இங்க இது மாதிரி சொல்லி இருக்கு. ஆக இதில் இருந்து சாமின்னா என்னான்னு நீயே முடிவு பண்ணிக்கோ அப்படின்னு சொல்லீடுவார்.

"இன்னைக்கும் எல்லாருமே கடிவாளம் போட்ட குதிரை மாதிரி எல்லாரும் யாரோ எப்பவோ சொன்னதை அப்படியே நம்பீட்டு இருக்காங்க, மாற்றம் ஒண்ணு மட்டும் தான் நிலையானதுன்னு எல்லோரும் புரிஞ்சுக்கணும். மனிதன்,மதம்,அரசாங்கம்,கொள்கைகள் எல்லாமே சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரியும் காலகட்டத்துக்கு தகுந்த மாதிரியும் மாறிகிட்டே இருக்கணும் அப்போ தான் நிலைக்க முடியும். பழையன் கழிதலும், புதியன புகுதலும் என்பது தொடர்ச்சியா நடந்துகிட்டே இருக்கணும்.

மாற்றங்களை யாரும் ஒத்துக்கலேன்னாலும் நடந்துகிட்டே தான் இருக்கும். அதை ஒத்துகிட்டு அமைதியா வழிவிடாம எங்க அப்பன் பாட்டன் காலத்தில் இருந்து இருக்கறதுன்னால நான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு சில பேர் நினைக்கறதுனால தான் எல்லாப் பிரச்சனையும்.

இதில என்ன ஒரு வேதனையான விஷயம்ன்னா ஒரு பழையதுக்கு பதிலா புதுசா ஒண்ணை நுழைக்கறவங்களே அது பழசாகும் வேற புதுசா ஒண்ணு வரும் பொழுது குறுக்கே நிற்கறாங்க இதனால் எத்தனை பிரச்சனைகள் தெரியுமா. மனித சரித்திரம் புல்லா இது போலத் தான் நடந்துட்டே இருக்கு."

என்று பேசிக் கொண்டே வந்த கல்பனா அபி கவனம் எங்கோயோ போவதைப் பார்த்து விட்டு

"ஏண்டா குரங்கு நான் எவ்வளவு சீரியஸா பேசீட்டு இருக்கேன் அங்க அந்த மஞ்ச சுடிதாரைப் பார்த்து ஜொள்ளு விட்டுட்டு இருக்கியா?" என்று தோளில் ஓங்கிக் குத்தினாள்.

"இல்லை இல்லை. மதங்கற அமைப்பு ரொம்ப தப்புதான். உலகில் பல அநியாயத்துக்கும் அதுதான் காரணமா இருக்கு நான் ஒத்துக்கறேன்." என்றான் அபி.

"ஏண்டா நான் பேசுன ஒரு வார்த்தையைக் கூட கவனிக்கலியா?" என்று மீண்டும் குத்தினாள் கல்பனா.

"இல்லை இல்லை மதம் பத்தி பேசலியா? அப்போ பிளாக் ஹோல்சைப் பத்தியா? ஐய்யோ அடிக்காத ப்ளீஸ். அப்போ தேடல் பத்தி பேசினியா? ஐயோ அடிக்காத அடிக்காத ப்ளீஸ்" என்றான் அபி.

"போடா பன்னி, குரங்கு, கரடி எங்கூட பேசாத போடா" என்று திட்டிக் கொண்டே வந்தாள்.

"அய்யோ சாரிமா சாரிமா நீ என்ன டாபிக்கைப் பத்தி பேசினேன்னு சொல்லு நீ என்ன பேசுனேன்னு நான் அப்படியே திரும்பி பேசிக் காட்டுறேன். ப்ளீஸ் ப்ளீஸ்." என்றான் அபி.

அவனுடன் சண்டைப் போட்டாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை ரெண்டு நிமிஷம் கூட தாங்காது என்று தெரிந்து வைத்திருந்த கல்பனா. "ஏண்டா நான் எவ்வளவு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசிட்டு இருக்கேன். போயும் போயும் அந்த யெல்லோ சுடிதாருக்காக நீ இப்படி பண்ணீட்டியேடா?" என்றாள்.

"எல்லாத்துலேயும் தொலை நோக்குப் பார்வை வேணும்ன்னு சொல்லுவே இதில் மட்டும் உனக்கு அது இல்லையே. நான் அந்த யெல்லோ சுடிதாரைப் பார்க்கலே. அதையும் தாண்டி ஒரு பிங்க் கலர் டாப்ஸ் போட்டுகிட்டு ஒரு குட்டி நிக்குது பாரு அதைத் தான் பார்த்தேன்." என்றான் அபி.

"டேய் உன் ரேஞ்சுக்கு தகுந்த மாதிரி பாருடா. குரங்கு மாதிரி இருந்துட்டு உனக்கு கிளி கேட்குதா? அடங்குடா" என்றாள் கல்பனா.

ஏன் எனக்கு என்ன குறைச்சல் என்று ஒரு ஒரு நிமிஷ சண்டை மீண்டும் ஆரம்பமானது.

அபி கல்பனா அப்பாவின் உயிர் தோழனின் பிள்ளை. இருவரும் சிறு வயதில் இருந்து இணைபிரியாத நண்பர்கள். அபி கல்பனாவிற்கு நேர் எதிர். எல்லாத்தையும் அனுபவிக்கணும் ஆராயக் கூடாது என்று நினைக்கும் ஆள்.

வாழ்க்கையே கண் மூடி கண் திறக்கறதுக்குள்ளே முடிந்து விடும் அதனால் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கை கொண்டவன்.

இந்த இரு துருவங்களும் பிறந்ததில் இருந்து பிரிந்ததை கிடையாது. ஒட்டிப் பிறந்த சயாமீஸ் டிவின்ஸ் மாதிரி சேர்ந்தே இருப்பார்கள்.

பூப்பெய்திய காலத்தில் கல்பனா அம்மா சொன்ன தகவல்களைக் கல்பனா அபியிடம் சொல்ல கல்பனாவை விட அதிக கவலைப் பட்டு ஒரு நாள் முழுக்க சாப்பிடவே இல்லை அபி.

இருவரும் ஒருவர் காலை ஒருவர் வாரி விடுவதிலும் வல்லவர்கள்.

அதுவும் கல்பனாவோட ரகசிய டைரி பத்தி அபி கிண்டல் அடிக்க ஆரம்பிச்சா கல்பனா உடனே டென்ஷன் ஆகி விடுவாள்.

கல்பனா பத்தி அபிக்கு தெரியாதது என்று ஒன்றுமே இல்லாவிட்டாலும் கல்பனா ரகசியமா ஒரு டைரி எழுதி வந்தாள். அதை அபிக்கு தெரியாமல் பல காலம் ஒளித்து வைத்தாலும் கடைசியா அபி கண்ணில மாட்டீடுச்சு. விடுவானா அன்னைக்கு இருந்து ஒரே கிண்டல்தான்.

கல்பனாவுக்கு ராஜகுமாரன் வெள்ளைக் குதிரையில் வந்து இளவரசியை மீட்டுச் செல்வது போன்ற கதைகள் மிகவும் பிடிக்கும். அவளும் அவளுடைய ராஜகுமாரனைப் பற்றி கற்பனைகளை எழுதி வைத்திருந்தாள் அதுதான் அபி கையில் சிக்கிக் கொண்டு விட்டது. அன்றையில் இருந்து பயங்கரக் கிண்டல்தான்.

அதுவும்

தென் பொதிகைக் காற்றும்
தேமதுர இசையும்
அந்தி நேர வண்ணங்களும்
காற்றில் தவழுந்து சேரும் சாரல்களும்
நீ இருக்கிறாய் என்பதை
உறுதிப் படுத்திக் கொண்டிருக்கின்றன

இதை ஒவ்வொரு தடவையும் சொல்லி கிண்டல் பண்ணி சிரிப்பது அபியின் வழக்கம்.

கல்பனாவுக்கு கல்யாண வயது வந்து விட்டதாக அவளுடைய அம்மா புலம்ப ஆரம்பித்து 3 வருடங்கள் ஆன பிறகு கல்பனாவின் அப்பா கல்யாணப் பேச்சை மெதுவாக கல்பனாவிடம் ஆரம்பித்தார்.

"அம்மா ரொம்ப புலம்ப ஆரம்பிச்சிட்டா. இதை பத்தி என்ன யோசனை பண்ணி இருக்கே?" என்று கேட்டார்.

அம்மா கேட்கும் போதெல்லாம் போம்மா உனக்கு வேற வேலையே இல்லை என்று முகம் சுழித்துக் கொண்டிருந்த கல்பனாவுக்கு இப்பொழுது என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் அப்பா நன்றாக யோசிக்காமல் அவளிடம் பேச்சை ஆரம்பிக்க மாட்டார் என்று அவளுக்குத் தெரியும்.

"எனக்கு ஒண்ணும் யோசனையே இல்லைங்க அப்பா?" என்று கூறினாள் கல்பனா.

"ஒரு நல்ல வரன் வந்திருக்கு பையன் உனக்கு ஏத்த மாதிரி இருப்பான்னு தோணுது. பார்க்க வரச் சொல்லாமா?" என்று கேட்டார் கல்பனாவின் அப்பா.

அதற்குள் ஒரே குழப்பத்தில் ஆழ்ந்த கல்பனா "நீங்க பார்த்து எது செய்தாலும் ஓகே தான்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

நேராக அபியின் வீட்டுக்கு வந்து அவனுடைய ரூமுக்கு சென்றாள் அங்கே ஒரு கர்ண கொடூரமான ஓசையுடன் குறட்டை விட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான் அபி. பக்கத்தில் சென்று "டே சனியனே எந்திரிடா" என்று அவனை உலுக்கினாள் கல்பனா.

"ஏய் குட்டிச் சாத்தான் நிம்மதியா தூங்க விடுடி" என்றபடி புரண்டு படுத்தான் அபி.

"எந்திரிடா" என்று மீண்டும் உலுக்கினாள் கல்பனா.

"ஏண்டி என்னை இப்படி வதைக்கற" என்றபடியே கண்களைத் திறந்த அபி கல்பனாவின் முகத்தை பார்த்தவுடன் "என்ன ஆச்சு?" என்றான் சீரியஸாக.

"வீட்டுல கல்யாணத்தைப் பத்தி திரும்ப பேசறாங்கடா" என்றாள்.

"அவ்வளவுதானா? நான் என்னமோன்னு நினைச்சேன். அதான் ஸ்டாண்டர்டா பதில் வைச்சிருப்பியே உனக்கு வேலையே இல்லைன்னு. நானும் ஆண்டிக்கிட்ட சொல்லீட்டே தான் இருக்கேன் சீக்கரம் கல்யாணம் பண்ணிக் குடுங்க நானாவது நிம்மதியா தூங்குவேன். காலைல 6 மணிக்கு எழுப்பி விடுறியே உனக்கே இது நியாயமா இருக்கா?" என்று சொல்லிக் கொண்டே வந்தவன் கல்பனாவின் முகத்தைப் பார்த்து அமைதியானான்.

"இந்த தடவை அப்பா இந்த விஷயத்தை பத்தி பேசினார்" என்றாள் கல்பனா.

ஒரு இரண்டு நிமிட மௌனம் நிலவியது அறையில். "அப்பா பேசினாரா? என்ன சொன்னார்?"

"நாளைக்கு காலைல பொண்ணு பார்க்க ஒருத்தர் வராங்களாம்"

"ஓ அப்படியா?" என்றான் அபி ஒரு இரண்டு நிமிட மௌனத்திற்கு பிறகு

"அது சரி உன்னோட டைரி எழுதி இருந்ததெல்லாம்?"

பேசாமல் அமைதி காத்தாள் கல்பனா.

"அதெல்லாம் அப்படியே மறந்திடப் போறியா?" என்றான் அபி.

"எல்லாப் பொண்ணுங்களுக்கும் ஒரு ராஜகுமாரன் வருவான்னு கனவு இருக்கத்தான் செய்யுது ஆனா எத்தனை பேருக்கு அந்த மாதிரி வாய்ப்பு அமையுது?"

அபி பேச்சை மாற்றுவதற்காக "ஹீம் விடு பார்த்துக்கலாம் இந்தப் பையன் தான் நீ நினைச்ச ராஜகுமாரனோ என்னமோ? சரி பொண்ணு பார்க்க வரப் போறாங்க எந்த டிரெஸ் போடப் போறே?"

"டிரெஸ் என்ன எதையாவது போட வேண்டியது தான்"

"என்ன எதையாவது போடறியா? ஒரு நாளைக்காவது ஊரில பொண்ணுங்க எல்லாரும் டிரெஸ் போடுற மாதிரி போட மாட்டியா? ஆம்பிளைப் பசங்க மாதிரியே இன்னைக்கும் டிரெஸ் போடாதே சரியா? இன்னைக்கு முதல் வேலையா உனக்கு ஷாப்பிங் பண்ணி டிரெஸ் எடுக்கணும் வீட்டுக்குப் போய் கிளம்பு நானும் இன்னும் 1/2 மணி நேரத்தில கிளம்பி வர்றேன்."

அன்று முழுவதும் ரெண்டு பேரும் ஊர் முழுக்க சுற்றி ஷாப்பிங் செய்து திரும்பினார்கள் இருவரும்.

அடுத்த நாள் காலை 8 மணிக்கு எல்லாம் கல்பனாவின் வீட்டுக்கு வந்த அபி "ஆண்டி அவளுக்கு இந்த பிங்க் கலர் சாரி, அப்புறம் இந்த பெரிய நகையா எதுவும் போட்டு விட்டுடாதீங்க. சும்மா மெல்லிசா ஒரு தங்க நகை, அப்புறம் இந்த முத்து வாங்கி வைச்சீங்களே அதை போட்டு விடுங்க. அப்புறம் அவளுக்கு மேக்கப்ன்னா என்னான்னே தெரியாது. உங்க முகத்தில இருக்கற மாதிரி நிறைய பவுடர் அப்பி விட்டுடாதீங்க." என்றெல்லாம் கல்பனாவின் அம்மாவுக்கு இன்ஸ்டிரக்ஷன் கொடுத்துக் கொண்டிருந்தான்.

"சரி பொண்ணு பார்க்க வரவங்ககிட்ட நீ யாரையாவது புதுசா மீட் பண்ணும் போது uncomfortableஆ முகத்தில் தெரியற மாதிரி uncomfortable ஒரு சிரிப்பியே அது மாதிரி சிரிச்சிடாதே. வீட்டில இருக்கும் போது இளையராஜா பாட்டு கேட்டா உன்னோட முகத்தில ஒரு அப்படியே லைட்டா ஸ்மைல் பண்ணுவியே அது மாதிரி முகத்தை வைச்சுக்கோ. இளையராஜா பாட்டு ஒண்ணை ஞாபகப்படுத்திக்கோ சரியா?" என்று படபடவென்று பொரிந்தான் அபி.

"சார் நீங்க கொஞ்சம் வெளியே இருந்தீங்கன்னா அவளை ரெடியாக்குவோம் நீங்க இங்க இப்படியே இருந்தீங்கன்னா ஒண்ணும் பண்ண முடியாது. சரியா?" என்று சொன்னாள் கல்பனாவின் அக்கா முறை வரும் சொந்தக்காரர்களில் ஒருவர்.

"ஹீம் சரி சரி" என்றபடி வெளியே சென்றான் அபி.

அரை மணி நேரம் கழித்து "டேய் இங்க வாடா" என்ற குரல் கேட்டு உள்ளே சென்றான் அபி.

அங்கே முழு அலங்காரத்தில் அன்றலர்ந்த மலர் போல நின்றிருந்தாள் கல்பனா.

"என்னடா அப்படி பார்க்கறே எப்படி இருக்கு டிரெஸ்?"

"Perfect. ஒரு நிமிஷம் இரு வெளியே என்னைக் கூப்பிட்டாங்க வந்திடறேன்"

"டேய் இருடா" என்று கூப்பிட கூப்பிட வெளியே சென்றான் அபி.

10 மணி ஆயிற்று மாப்பிளை வீட்டுக்காரர்கள் வந்து விட்டார்கள். மாப்பிளை பொண்ணு பார்க்க பகட்டா எல்லாம் இல்லாமல் சும்மா சாதாரணமாக ஜீன்ஸ் டீசர்டில் வந்திருந்தார்.

கல்பனா வெளியே வந்து அவர்களுக்கு எல்லாம் வணக்கம் சொல்லி விட்டு உட்கார்ந்தாள். மனதிற்குள் எங்கே போனான் இந்த அபி இதோ வர்றேன்னுட்டு காணாம போயிட்டான். மாப்பிளையைப் பார்த்து ஒப்பீனியன் சொல்லாம எங்கே போயிட்டான் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாள்.

கல்பனாவின் அப்பா என்னோட அந்த கலெக்ஷனைப் பாக்கறீங்களா? என்று தனியா பேச வைக்கலாம் என்று மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை தனியாக அழைத்து சென்றார்.

கொஞ்ச நேரம் அங்கே ஒரு விதமான அமைதி நிலவியது.

"ஹாய்" என்றார் மாப்பிள்ளை கல்பனாவிடம். "ஹாய்" என்றாள் கல்பனா.

"போட்டோவில பார்த்தை விட வித்தியாசமா இருக்கீங்க. ரொம்ப மாடர்னா போட்டோவில இருந்தீங்க. இப்போ டிரெடிசனலா டிரெஸ் பண்ணிட்டு இருக்கீங்க."

"By the bye உங்க டிரெஸ் செலக்ஷன் சூப்பர் ரொம்ப அழகா இருக்கீங்க" என்றார் மாப்பிள்ளை.

கல்பானவுக்கு தன்னுடைய போட்டோ கொடுக்கப் பட்டதெல்லாம் தெரியாது. ஆகவே மௌனம் காத்தாள்.

"இது மாதிரி பொண்ணு பார்க்க வர்றது எல்லாம் எனக்கு அவ்வளவா இஷ்டம் இல்லை அம்மா சொன்னாங்களேன்னு வந்தேன்." என்றார் மாப்பிள்ளை.

கல்பனா புன்னகைத்தாள்.

"நம்ம சிஸ்டமே இது மாதிரிதான் இருக்கு பாருங்க உங்களுக்கும் எனக்கும் எவ்வளவு ஒத்து வருமுன்னு கூடத் தெரியாது ஆனா வாழ்க்கை முழுக்க சேர்ந்தே இருக்கறதைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சிட்டோம்" என்றார் மாப்பிள்ளை.

"எனக்கும் இது போலத்தான் தோணுது. கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி ஒருத்தரைப் பத்தி தெரியாமா கல்யாணம் பண்ணிக்கறது கஷ்டம்தான்" என்றாள் கல்பனா.

"கரெக்ட்டுங்க. காதல்ங்கறது என்ன? நுணுக்கமா இன்னொருத்தரைப் பத்தி தெரிந்து வைச்சிக்கறது தானே? கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி நான் கல்யாணம் பண்ணிக்க போற பெண்ணுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது. என்ன டிரெஸ் போட்டா நல்லா இருக்கும் இருக்காது. அந்தப் பெண் எத்தனை விதமா ஸ்மைல் பண்ணுவீங்க? உங்க ஸ்மைலை வைச்சே அந்தப் பெண் என்ன நினைக்கிறாங்க. அப்படீன்னெல்லாம் நினைச்சேன். உங்களுக்கு கடவுள் பத்தி என்ன views? உங்களுக்கு என்ன பேசினா பிடிக்கும் என்ன பேசினா பிடிக்காது? என்ன சாப்பாடு பிடிக்கும் என்ன பிடிக்காது. இப்படி எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் நினைச்சேன். அதே மாதிரி என்னைப் பத்தியும் எல்லாமே தெரிஞ்சிருக்கணுமுன்னு நினைச்சேன். ஆனா பாருங்க நம்ம ரெண்டு பேருக்குமே அது மாதிரி எல்லாமே தெரிஞ்சவங்கன்னு யாருமே இல்லைன்னு நினைக்கறேன்?" என்றார் மாப்பிள்ளை.

கல்பனாவின் முகம் அதற்குள் மாறி இருந்தது. "என்னங்க ஆச்சு ஏன் என்னமோ மாதிரி ஆயிட்டீங்க" என்று கேட்டார் மாப்பிள்ளை

"என்னைப் பத்தி தெரியாத சில விஷயங்களைக் கூட தெரிஞ்சுகிட்ட ஒருத்தர் இருக்காருங்க. எல்லாத்திலேயும் தேடல் இருக்கணுமுன்னு நினைப்பேன் நான் அதனால என் பக்கத்திலேயே இத்தனை நாள் இருந்த ஒருத்தரை கவனிக்காம இருந்திருக்கிறேன் நான் எப்பவுமே என் பக்கத்தில இருந்ததால கொஞ்சம் தள்ளி நின்னு கவனிக்காம விட்டுட்டேன் நான். இலவசமா கிடைச்சதால இளப்பமா நினைச்சிட்டேன் நான்" என்றாள் கல்பனா.

ஒரு இரண்டு நிமிட மௌனத்திற்கு பிறகு கல்பனா "சாரிங்க இதனால் எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க" என்றாள்.

"இல்லீங்க தப்பா நினைக்கறதுக்கு ஒண்ணுமே இல்லை." என்றார் மாப்பிள்ளை.

கல்பனா அபியின் ரூமுக்குள் நுழையும் சமயம் கம்ப்யூட்டரில்

"Its only words and words are all I have to take your heart away"

என்று பாட்டு கசிந்து கொண்டிருந்தது.

மெதுவாக நுழைந்த கல்பனா "நீ ரெண்டு வகையா சிரிப்பேன்னு தெரியுமா உனக்கு? ஒண்ணு உன்னோட அசட்டு சிரிப்பு. இன்னொன்னு தினமும் காலைல என்னைப் பார்க்கும் போது இப்போ உன்னோட முகத்தில இருக்குதே அந்த மாதிரி சிரிப்பு."

"இத்தனை நாள் இதைப் பத்தி நான் யோசிச்சதே இல்லை" என்றாள் கல்பனா.

மெதுவாக பக்கத்தில் வந்த அபி அவளுடைய கரங்களைப் பற்றினான். எத்தனையோ தடவை ரெண்டு பேரும் கையோட கை தோளோடு தோள் என்றிருந்தாலும் இந்த தடவை வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தாள் கல்பனா. தன்னுடைய ராஜகுமாரன் கவர வந்ததை உணர்ந்த கல்பனா முதல் முறையாக சிலிர்ப்பு அடைந்து வெட்கப் பட்டு தலை குனிந்தாள்.

Thursday, November 16, 2006

ஆன்மீகமும் மதமும் நாத்திகமும்

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"

இல்வாழ்க்கைக்கு பண்பு உண்டெனில் அது அன்புடனும், அறத்துடனும் வாழ்க்கையை நடத்துவதே என்ற இந்த ஒன்றரை வரிக் குறள் சொல்லி இருப்பதை விட சிறப்பாக வாழ்க்கை நெறிமுறைகளைப் எந்த மத நூல்களும் சொல்லி விட முடியாது. சராசரி மனிதன் ஒருவனுக்கு இந்த ஒன்றரை வரிகளே போதுமானது. வாழ்க்கை நெறிகளை அமைத்துக் கொள்ள மற்ற ஆயிரத்து முன்னூற்றி இருபத்தொன்பது குறள்களும் கூட அவசியமற்றதாகி விடுகிறது.

உண்மையான ஆன்மீகத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது வேதாத்திரி மகரிஷி அவர்கள். அகத்தாய்வு என்றும் குண்டலினி என்று பல வேறு அற்புதமான விஷயங்களை எனக்கு சொல்லி கொடுத்த ஆன்மீக குரு அவர்.

மகரிஷியின் சிந்தனைகளில் மிக முக்கியமானது "பிறருக்கு உடலாலும் மனதாலும் துன்பம் நினையாதே" என்பதுதான்.

வள்ளுவரின் குறளுக்கும் மகரிஷியின் சிந்தனைக்கும் பல ஒற்றுமைகளைக் காணலாம்.

அவர் தன் வாழ்க்கையின் கடைசி கால கட்டத்தைக் கழித்தது ஓம்கார மண்டபத்தில்.

சைவ சிந்தாதத்தின் ஒரு முக்கியமான அம்சமான ஓம் வடிவிலான அந்த மண்டபத்தில் யார் நுழைந்தாலும் அங்கே எழுதப் பட்டிருக்கும் இந்த வாக்கியத்தைக் காணலாம்.

"உலகில் உள்ள மதங்களை எல்லாவற்றையும் நீக்கி மக்களிடையே ஒற்றுமை வளரச் செய்ய வேண்டும்." என்பது தான் அந்த வாக்கியம்.

மதமும் ஆன்மீகமும் ஒன்றே என்பதை எனக்கு உடைத்துக் காட்டிய வாக்கியம் இது.

மதம் என்ற அரசியல் அமைப்புக்கும் ஆன்மீகம் என்ற சிந்தனைக்கும் உள்ள பல வேறுபாடுகளை உணர்ந்தும் வாக்கியம் இது.

இன்றைய மதம் என்பது மனிதனுக்கு புரியாத வகையிலும் அவனை ஒரு பிரமிப்புக்கு ஆட்படுத்தி, பயமுறுத்தி, பரவச நிலை போன்ற தந்திரமான வார்த்தைகளை பயன் படுத்தி ஆளுமை செய்யவே பயன்படுகிறது.

சமஸ்கிரத மந்திரங்கள் சக்தி வாய்ந்தவை என்று மாயையை உண்டாக்குவது. ஏன் என்று கேட்டால் அதனை விளக்க மறுப்பது(பதில் தெரியாமல் முழிப்பது என்றும் வைத்துக் கொள்ளலாம்) இப்படி மந்திர தந்திரங்கள் மூலமாக ஆளுமை செய்யவே ஆசைப் படுகிறது.

இந்து மதம் என்று மட்டும் இல்லை இஸ்லாம் கிறிஸ்துவம் எல்லாமே இதைத் தான் செய்ய ஆசைப்படுகிறது. ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு மிக மட்டமான தலைமைகள் இருக்கின்றன.

இன்று பால் தாக்கரே, நரேந்திர மோடி இந்து மதக் காவலர்கள் தலைவர்கள் என்று கூறி செய்யும் அக்கிரமங்கள் இல்லையா?

அதே போல சிலுவைப் போர் தொடுக்க சொன்ன போப், பல கொலைகளை தன்னுடைய அதிகாரத்தின் மூலம் செய்த போப் என்று கிறிஸ்துவத்திலும் பல அக்கிரமக்கார தலைவர்கள் இருக்கிறார்கள்.

பாகிஸ்தானில் ஒரு பெண் அதிகமாக படித்து விட்டாள் என்று அந்த கிராமத்தின் மதத் தலைமை ஒரு வாரம் அந்தப் பெண்ணை அடைத்து வைத்து கற்பழித்ததாக குமுதத்தில் படித்தேன்.

மதம் என்னும் அரசியல் அமைப்பை எதிர்ப்பதற்கு இதுவே காரணிகள்.

மிதவாதிகள் இதன் பெயரில் நடக்கும் அக்கிரமங்களை கண்டு கொள்ள மாட்டார்கள். மதம் என்னும் அரசியல் அமைப்பு தன்னுடைய கைகளில் அதிகாரம் வேண்டும் என்பதற்காக மக்களை கொன்று எடுத்தாலும் யாருக்கும் கவலை இல்லை.

இன்று வேற்று மதத்தை சாடி தன் மதம் பெரிது என்று பேசும் அனைவரும் அதிகாரம் மாயை என்பது எல்லாம் தன் கைகளை விட்டு போய் விடக் கூடாது என்பதற்காக துவேசங்களை வளர்ப்பதே மதத்தின் அசிங்கமான அரசியல் பக்கத்தைக் காட்டுகிறது.

நாத்திகம், ஆன்மீகம் என்பதற்கு எந்த அளவு வித்தியாசம் இருந்ததோ என்னைப் பொறுத்த வரை அதே அளவு வித்தியாசம் ஆன்மீகத்திற்கும் மதங்களுக்கும் உண்டு

நாத்திகம் என்பதற்கும் பகுத்தறிவிற்கும் அதே போல வித்தியாசங்கள் உண்டு. ஆன்மீகத்தில் பகுத்தறிவிற்கு அவசியமாகிறது.

மதம் என்பதற்கு பகுத்தறிவுதான் எதிரி. கேள்விகள் கேட்டு உண்மை அறிவது பகுத்தறிவு ஆன்மீகம். கேள்வி கேட்டவர்களை பகுத்து அறிய முற்படுபவர்களை heretic என்று தூக்கில் இடுவது கொலை செய்வது ஒதுக்கி வைப்பது மதம்.

ஆன்மீகம் என்பது இறைவனை அறிவது வாழ்க்கையில் யாருக்கும் துன்பம் விளைவிக்காமல் இருப்பது.

மதவாதிகளுக்கு இந்த இரண்டு கொள்கைகளுமே கிடையாது. இறைவனை உணர தனக்கு சொல்லிக் கொடுக்கப் பட்ட வழிமுறைகளை பெரிது என்று சண்டை போட்டுக் கொள்வது. பிறரை துன்பம் அடைவதைப் பற்றி கவலைப் படாமல் இன்பமுறுவது இது தான் மதம்.

தீண்டாமையை எதிர்க்க காந்தியடிகள் ஒரு ஊருக்கு சென்ற பொழுது அவருக்கு அங்கே மிகப் பெரிய எதிர்ப்பு கிடைத்ததாக "இந்து மதம் எங்கே போகிறது" என்ற புத்தகத்தில் எழுதப் பட்டிருந்தது.

ஜாதிகளை எதிர்ப்பதும் தவறு என்று இன்றும் கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால் ஜாதி என்பது தான் மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே மிக கீழ்தரமானது என்பது வெள்ளிடமலை.

மதம் என்பதை இன்று எதிர்க்கும் சமயமும் இன்று எதிர்க்கும் சமயம் அதே போலத்தான் எதிர்ப்புகள் வருகின்றன. ஜாதியைப் பற்றிய மிதவாத சிந்தனை சில காலங்களுக்கு முன் எப்படி இருந்ததோ அதே போலத் தான் இன்றைய மத மிதவாத சிந்தனைகளும் உள்ளன.

இன்றுள்ள பல மதங்களும் சண்டை போட்டுக் கொள்வது பல அரசியல் அமைப்புகள் அடித்துக் கொள்வதும் ஒன்றே தான். எல்லாமே தவறானவை அவற்றுள் எந்த அரசியல் அமைப்பு வெற்றி பெரும் என்றே அடித்துக் கொள்கின்றன.

ஜாதிகள் விட மத அமைப்புகள் மிக மிக கீழ்தரமானவை என்ற சிந்தனைகளும் தோன்றும் காலம் வரும்.

மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் பலருக்கும் புரியும் காலம் வரும்.

அந்த சமயத்தில் மதம் என்ற அரசியல் அமைப்பிற்கு ஆதரவு தராமல் உண்மையான ஆன்மீக சிந்தனைகள் அறிவுப் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் பரவும். அன்று எல்லா மதங்களும் outdated ஆகிவிட்டது என்று மக்கள் உணரும் சமயம் வரும்.

மதம் மனித குலத்தை அழிக்காமல் விட்டால் அந்தக் காலமும் வரும்.

கடைசியாக 10000 வருடங்களுக்கு முன்னால் தோன்றிய நாகரீகத்தின் சின்னங்களை 4000 வருடங்கள் கழித்து மதம் தனக்குள்ளே எடுத்துக் கொண்டது, 4000 வருடங்கள் கழித்து தோன்றிய மதத்தின் சின்னங்களை 10000 வருடம் முன்பே தோன்றிய நாகரீகம் எடுத்துக் கொள்ளவில்லை என்பதாவது சிலருக்குப் புரியும்( கடைசி பத்தி என்னுடைய சென்ற பதிவையும் அதற்கு வந்த பின்னூட்டங்களையும் படித்தால் மட்டுமே புரியும் :-))) )

Sunday, November 05, 2006

மதம், வாழ்க்கை நெறி புடலங்காய்

பலர் மதம் என்பது நாகரீகங்களைத் தோற்றுவித்தது. மதம் என்ற அமைப்பு புனிதமானது சிலரால் மட்டுமே மதம் என்ற அமைப்புக்கு கெட்ட பெயர் வருகிறது என்பது போலவும் கருதுகிறார்கள். மறுபடியும் சரித்திரத்தை புரட்டிப் பார்க்கிறேன்.

ஹிந்து மதம் என்பது 3500 ஆண்டுகளுக்கு முன்னால் உருவானதாக தெரிகிறது. ஜுடாயிஸம்(வஜ்ராவால் சுட்டிக் காட்டப்பட்டு திருத்தப்பட்டிருக்கிறது) 3000 ஆண்டுகளுக்கு முன்னால் உருவானது.

ஹரப்பா நாகரீகம் 9000-10000 ஆண்டுகள் முன் கூட இருந்திருக்கிறது என்பதை இன்று கண்டறிந்திருக்கிறோம்.

அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள ஹரப்பா மொகஞ்தாரோ ஆகியவற்றின் புகைப்படங்களைக் கீழே உள்ள சுட்டியில் பாருங்கள்.

http://www.mohenjodaro.net/index.html

கிண்றுகள், நெல் சேமிக்கும் கிடங்கு, குளியலறை, சுகாதார மையம் எல்லாம் பார்க்கலாம் ஆனால் இதில் எங்கேனும் மதம் சம்பந்தமான கோயில்லகளோ மசூதிகளோ இல்லை வேறு அடையாளங்களோ தென் படுகிறதா? நாகரீகத்தின் தோற்றத்திற்கும் மதங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை இதை விட தெளிவாக நாம் அறிய முடியுமா?

இந்த உலகில் நடந்த மிகக் கொடூரமான இனப் படு கொலைகளுக்கு மதமே காரணியாக இருந்திருக்கிறது. இனப் படு கொலை என்றதும் holocaust மட்டுமே நமக்கெல்லாம் ஞாபகம் வரும். யூதர்கள் பல வகையில் நமக்கு அதனை நினைவுறுத்திக் கொண்டே இருப்பதால் அது மட்டுமே நமக்கு ஞாபகம் இருக்கிறது.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் மதம் நுழைந்தவுடன் என்ன நடந்தது?

முதலில் ஆஸ்திரேலியா இங்கு நடந்த இனப் படுகொலை போல எங்குமே நடந்ததில்லை. பழங்குடியினரைக் கொன்றால் ஒரு கொலைக்கு ஒரு பவுண்ட் என்று நடத்த படுகொலைகள் நமக்கு ஞாபகம் இருக்காது. complete wipe out ஆனது ஒரு இனம் ஆஸ்திரேலியாவில். What is history but a fable agreed upon? இது எவ்வளவு உணமை என்று தான் தோன்றுகிறது.

அமெரிக்கா சிவப்பிந்தியர்கள் மேல் நடத்திய தாக்குதல்கள் இனப் படுகொலைகள் அதிகம் வெளியே வராது இன்று,

ஆப்பிரிக்காவின் நிற வெறி கொடுமை(apartheid) பற்றி சொல்வவே தேவையில்லை.

அப்புறமாக யூதர்கள். யூதர்கள் ஒரு சாராரை மதத்தால் அடிமைப் படுத்தினர். மோஸஸ் காலத்தில் இருந்து இது கிறிஸ்து என்ற யூதர் வரும் வரை தொடர்ந்தது. பின்னர் பல யூதர்களே கிறிஸ்துவர்களானார்கள். அதற்கு பிறகு பின்னர் கிறிஸ்துவர்கள் இப்பொழுது குறைவான அளவில் இருந்த யூதர்களைக் கொன்று குவிக்கின்றனர். எதற்காக கொல்கிறார்கள் என்றால் அவர்களும் யூதர்கள் என்பதால். இவர்கள் மூதாதையினர் பலர் யூதர் என்பதே தெரியாமல்.

இந்தியாவில் இந்து - முஸ்லீம் பிரச்சனையும் இதே போலத்தான். எந்த மன்னன் வந்தாலும் காலை முத்தமிட்டு தலையில் ஏறி உட்கார்ந்து கொள்ளும் கூட்டம் முஸ்லீம் மன்னன் காலில் விழ அவர்கள் தலை துண்டிக்கப்பட்டது(இது ஒரு சாராரைக் குறிப்பது போல இருந்தாலும் இவை சரித்திர உண்மைகள்). அந்தக் காலத்தில் இருந்து தணியாத வெறி கொண்ட கூட்டம் முஸ்லீம்கள் மேல் வெறி கொண்டு அழைகிறது.

இன்று முஸ்லீம்களாய் இருப்பவர் பலர் ஒரு காலத்தில் இந்துக்களாக இருந்திருக்கலாம். அது கூட புரியாத வெறி கொண்ட கூட்டம் இன்று ஒருவர் மேல் ஒருவர் வெறி கொண்டு சுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மதம் என்பது இதற்கு தான் பயன் படுகிறது.

மிருகத்தில் இருந்து மனிதனானான். இன்று மதம் கொண்டு தன்னுடைய irrational உணர்வுகளால் மிருகமாகிக் கொண்டிருக்கிறான்.

வாழ்க்கை நெறி வாழ்க்கை நெறி என்று சொல்பவர்கள் அனைவரிடமும் கேட்கிறேன். விதவைகள் கொலை செய்யும் சதி பழக்கம் வாழ்க்கை நெறியா? சின்ன பெண்களை பால்ய விவாகம் என்ற பெயரில் கல்யாணம் செய்து வைத்து அவர்கள் கணவர்கள் இறந்தவுடன் வாழ்க்கை முழுவதும் கொடுமைப் படுத்துவதுதான் வாழ்க்கை நெறியா? ஜாதி மூலம் அடிமைப் படுத்துவது வாழ்க்கை நெறியா?

வாழ்க்கை நெறியாம் வாழ்க்கை நெறி, புடலங்காய் வாழ்க்கை நெறி.

இவை தான் இந்து மதத்தின் வாழ்க்கை நெறிகளாக கடைபிடிக்கப் பட்டது, மிகச் சிறப்பான வாழ்க்கை நெறிகள் இல்லையா?

இன்று நரேந்திர மோடி போன்ற கொலையாளிகள் தான் இது போன்ற வாழ்க்கை நெறிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இன்னொரு பக்கம் இன்னும் அழகான வாழ்க்கை நெறி சொல்லப் படுகிறது. சானியா மிஸ்ராவின் fore handஐயும் back handஐயும் பார்க்காமல் அவர் தொடையை பார்த்து ரசித்த சிலர் அவர் தொடை தெரிகிறது என்று கத்தகிறார்கள். இவர்கள் மனது விகாரம் பிடித்திருப்பதால் அந்த பெண்மணியின் ஆடை அணியும் விதம் மாறவில்லை? உலகம் எங்கிலும் எல்லோரும் இதே போல ஆடை தான் அணிகிறார்கள். இவர் மட்டுமா அணிந்தார்?

யார் யாருடைய மனதின் விகாரத்தைப் பற்றி பேசுகிறார்கள். விகாரங்களின் உற்பத்தி நிலையமாக செயல் படுவதே மதம் என்னும் மாயை சூழ்ந்திருக்கும் மனங்கள்தான்.

mystic என்பதை விளக்குவதிலும் மதங்கள் மிகவும் பின்தங்கியே இருக்கின்றன. எத்தனை காலத்திற்குதான் ஆறு நாள், ஏழு நாள், முட்டை, இல்லை யாருக்கும் புரியாத வகையில் ஒரு touch of mystery உடன் கூடிய பழம் கதைகளையே கேட்டுக் கொண்டிருப்பது? யாரேனும் புது மதம் ஆரம்பித்து Black Holes, Singularity என்று இன்று அவர்களுக்கு தெரிந்ததை எழுதி வைத்தால் பரவாயில்லை. அதுவும் கொஞ்ச நாளில் விளக்க வர outdate ஆகி விடும் என்பது வேறு விஷயம்.

அல் கொய்தா அமைப்பு அமெரிக்காவை எதிர்ப்பதாலும், அமெரிக்கா இஸ்ரேலுக்கு இருக்கும் நட்பால், அல் கொய்தாவை உலகமெங்கிலும் உள்ள முஸ்லீம்கள் ஆதரித்தால் எப்படி முட்டாள் தனமாக இருக்குமோ அதே போலத் தான் மதமும்.

சானியா மிஸ்ரா விஷயத்தில் மன விகாரங்களை வெளிப்படுத்துகிறவர்கள் மதத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள். நரேந்திர மோடி போன்ற பயங்கரவாதிகள் மதத்தின் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள். படித்த பெண்களை சூனியக்காரிகள் என்று எரிக்க மதம் உதவுகிறது. எத்தனை காலம் தான் ஒரு பயங்கரவாத அமைப்பை நாம் ஆதரித்துக் கொண்டிருக்கப் போகிறோம்.

உங்கள் மனது சஞ்சலப் படும் பொழுது தேவை என்றால் நல்ல மியூசிக் கேளுங்கள். மதங்களை ஆதரித்து முட்டாள்தனம் செய்யாதீர்கள்.

மதம் நாகரீகத்தை வளர்க்க உதவுகிறது என்று யாரோ சொன்னார்கள். எனக்கு என்னவோ அது காட்டு மிராண்டித் தனத்தை வெளிக்காட்டவே உதவுவது போலத் தோன்றுகிறது.

இன்று மதத்தை பின்பற்ற விரும்புவர்கள் அனைவரும் அவர்கள் அமைப்பு தவறு செய்யும் பொழுது அதற்கு மிக அதிக அளவில் எதிர்ப்பு காட்டி அதனை மாற்ற முயலவில்லை என்றால் மதத்தின் பெயரால் நடக்கும் ஒவ்வொரு கொடுமைகளுக்கு நீங்களும் ஒரு காரணம்.

Thursday, November 02, 2006

எது மிக தீங்கான மதம்?

இந்தப் பதிவு சரித்திர நிகழ்வுகளின் ஒரு நினைவூட்டல் மட்டுமே.

பொதுவாக ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இஸ்லாம் மீதும், கிறிஸ்துவம் மீதும் புழுதி வாரி போட்டுக் கொண்டு அவர்கள் மதம் எதோ புனிதமானது என்பது போல பேசிக் கொண்டிப்பார்கள். அதே போல இஸ்லாமியர்கள் ஹிந்து மதத்தின் மேல் புழுதி வாரிப் போட்டு தங்கள் மதம் எதோ ரொம்ப புனிதமானது என்பது போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லா மதங்களிலும் பொதுவானது.

மற்றவர் மேல் புழுதி வாரி அடித்து தன் தவறுகளை மூடி மறைக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு நினைவூட்டல். அவரவர் முதுகில் இருக்கும் அழுக்கை சுட்டிக் காட்டலே இதன் நோக்கம்.

அது மட்டும் அல்லாமல் அரசியல் ரீதியாக சிலர் ஒரு மதத்தின் மேல் மட்டும் காட்டம் கொண்டவர்களாக இருப்பதால் இஸ்லாமியர்கள் அவர்களுக்கு ஆதரவாகவும் இவர்கள் அவர்களுக்கு ஆதரவாகவும் செயல் படுவதுமாக இருக்கிறது.

இன்று நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் என்று கூறி கொள்ளும் பல அரசியல்வாதிகளே நம்முள் நிறைந்திருக்கிறார்கள். ஆகவே ஒரு உண்மையான பகுத்தறிவாளனின் பதிவு இது.

இன்றுள்ள சூழ்நிலையில் எல்லா மதங்களுமே தீங்கானவை என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை ஆகவே இதில் ஒவ்வொரு மதத்தினரின் கடந்த கால சாதனைகள், சமீப கால சாதனைகள், நீண்ட கால சாதனைகள் எல்லாவற்றையும் பட்டியலிடலாம் என்று யோசித்து இந்தப் பதிவை இட்டிருக்கிறேன்.

ஹிந்து மதம்

கடந்த கால சாதனைகள்

ஒற்றுமை என்ற ஒன்றே இல்லாமல் இருந்தது. அடிக்க வேறு மதத்தினர் இல்லாமல் இருந்த சமயம் தன்னுள்ளேயே அரி, சிவன் என்று அடித்துக் கொண்டது. அடிப்படைக் கொள்கையான எல்லாமே இறைமயம் என்பதை கொஞ்சம் கூட பின்பற்றப் படாதது.

சமீபத்திய சாதனைகள்

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை, பாபர் மசூதி இடிப்பு, கோத்ரா, இஸ்லாம் தீவிரவாதம் வளர ஊற்றுக் கண்ணாக திகழ்வது என்று கணக்கற்றவை.

நீண்ட கால சாதனை

ஜாதி என்ற விஷச் செடியை மக்கள் மனதிற்குள் விதைத்தது. பலவாயிரம் வருடங்கள் ஒரு சாராரை அடிமைப் படுத்தி வைத்தது.

இஸ்லாம்

கடந்த கால சாதனைகள்

அடிப்படையிலேயே தன் மதத்தினரைத் தவிர எல்லோரையும் காபிர் என்று ஒதுக்கி பிரிவினைகளை உண்டாக்கியது. இவரைக் கொல்லலாம் அவரைக் கொல்லலாம் என்று வன்முறையை சரி என்று சொல்லும் ஒரே மதம். இறை தூதராக கருதப்படும் முகமதுவே பல போர்களை தன்னுடைய வாழ்நாளில் மேற்கொண்டதுவே இதற்கு உதாரணம்.

சமீபத்திய சாதனைகள்

கணக்கற்ற தீவிரவாத செயல்கள், செப் 11, போப்பைக் கொல்ல பகிரங்கமாக அறிவித்தது. ஜிகாத் புனிதப் போர் என்ற பெயரில் அப்பாவிகளை கொலை செய்வது.

நீண்ட கால சாதனை

கணக்கிலடங்காத குண்டுவெடிப்புகள், பெண்களை அடிமையாக நடத்துவது.

கிறிஸ்துவம்

கடந்த கால சாதனைகள்

சிலுவை யுத்தம், சூனியக்காரிகள் எரிப்பு என்று படித்த பெண்களை எரித்தது.

சமீபத்திய சாதனைகள்

ஜீஸஸ் வெள்ளையானவர் என்று நிற வெறி காலத்தில் கருப்பர்களை கொலை செய்தது.

நீண்ட கால சாதனை

மதத்தின் பெயரால் போர் என்பதை தொடங்கி வைத்தது. மதத்தின் பெயரால் இன்று உலகில் நடக்கும் பல பிரச்சனைகளை (பாலஸ்தீனப் பிரச்சனை உட்பட) தொடங்கி வைத்தது.

மனித குலத்திற்கு தீங்கு விளைவிப்பதில் எல்லா மதங்களும் 100/100 மதிப்பெண் பெறுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இதில் ஒன்றோடு ஒன்று சளைத்தது அல்ல என்றும் எனக்குத் தோன்றுகிறது. இதில் குறிப்பிட்டுள்ள மதங்கள் மட்டும் அல்ல ஜியோனிஸம், பௌத்தம் என்று எல்லா மதங்களுக்கும் இந்தப் பெருமை உண்டு.