Monday, July 31, 2006

புதையல்

கோவி கண்ணன் தன்னிடம் இருக்கும் புத்தகங்களைப் பற்றி சொல்லி இருந்தார் என்னையும் சொல்லச் சொல்லி கூப்பிட்டு இருந்தார். நிறைய புத்தகங்கள் இருக்கிறது நாலைந்து மூட்டை பரண் மேல் இருக்கிறது ஆகவே அனைத்தையும் பட்டியலிட முடியாது ஆகவே உடனே நினைவுக்கு வந்தது குறித்து பட்டியலிடுகிறேன் உடனே நினைவுக்கு வந்தது பிடித்த நாவலாகவும் இருக்கும் என்பதால் அதனைப் பற்றி சிறு குறிப்பும் கொடுத்திருக்கிறேன். தற்சமயம் நிறைய ஆங்கிலப் புத்தகங்களை வாங்குவதால் ஆங்கிலப் புத்தகங்கள் பட்டியலில் அதிகமாக இருக்கும் ஆனால் நான் அதிகமாக தமிழ் புத்தகங்களையே படித்திருக்கிறேன்.

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்தீபன் கனவு

இந்தப் புத்தகங்களின் சிறப்பைக் குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை

இரும்புக் குதிரைகள், மெர்குரிப் பூக்கள், இனிது இனிது காதல் இனிது

பாலகுமாரனின் நாவல்கள் நிறைய என்னிடம் இருக்கிறது. ஒரு காலத்தில் பாலகுமாரன் எழுதிய அனைத்து நாவல்களையும் படிக்கும் பழக்கம் இருந்தது ஆனால் பின்னாளில் அவர் கருத்துக்களுடன் என்னால் ஒத்துக் கொள்ள இயலவில்லை. இவரின் நாவல்களில் வரும் வாழ்வியல் குறித்த இவருடைய பார்வை மிகவும் பிடிக்கும். அவருடைய நாவல்களில் இவை மூன்றும் எனக்கு பிடித்தவை.

சங்கர்லால் கதைகள்

இது இரண்டு மூன்று நாவல்கள் இருக்கிறது இதுவும் மிகவும் பிடிக்கும் நம்ம ஜேம்ஸ்பாண்ட் martini shaken but not stirred என்று ஸ்டைலாக சொல்வது போல இவர் ஸ்டைலுக்கு தேநீர் குடிப்பது, கருப்புக் கண்ணாடி என்று இவரைப் பற்றி மனதில் ஒரு இமேஜே உண்டு.

குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி அவர்களின் நாவல் ஒன்று

பெயர் ஞாபகம் இல்லை கதையும் ஒன்றும் அசாதாரணமான கதை கிடையாது ஆனால் அற்புதமான நடை கொண்ட நாவல்.

A Breif History of Time, 2 more novels about Stephen Hawkings

ஸ்டீபன் ஹாகிங்ஸுடைய நாவல் நம் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய நாவல். சில இடங்கள் புரிந்து கொள்ள கடினமாக இருந்தாலும். வலைத் தளங்களில் தேடித் தேடி புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய ஆன்மீக சிந்தனைகளை பல வகையில் மாற்றி அமைத்த நாவல். ஆன்மீகத்துக்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்காதீர்கள் நான் எழுதி வரும் ஆன்மீகம், அறிவியல், அகங்காரம் தொடரில் இதனை விளக்க முயற்சி செய்து வருகிறேன்.

ஹாரிப் பாட்டர் அனைத்து புத்தகங்களும்

இந்த புத்தகத்தை குழந்தைகள் புத்தகம் என்று ஒதுக்கி வைத்து விட்டு குழந்தையாகவே இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்குபவர் பலரைப் பார்த்திருக்கிறேன். இதில் உள்ள புதிர்கள் முதல் நாவலில் ஏதேச்சையாக நாம் அறிந்து கொண்ட விஷயங்கள் 5ம் நாவலிலோ 6ம் நாவலிலோ நம்மை ஆச்சர்யப்பட வைக்க, 5ம் நாவலைப் படித்தவுடன் முதல் நாவலைப் படித்தால் அது வித்தியாசமாக தோன்ற வைப்பது என்று கிளாஸிக் நாவல் இது.

Eragon and Eldest

ஹாரிப் பாட்டர் போலவே வந்த இன்னும் ஒரு நாவல் இது. எரகான் நாவலை வெளியிட்ட பொழுது இந்த நாவலாசிரியரின் வயது 16. ஹாரிப் பாட்டர் ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நாவல். ஹாரிப் பாட்டரின் க்டைசி நாவல் போலவே இந்த புத்தகத்தின் கடைசி நாவலை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

டான் பிரவுனின் எல்லா நாவல்களும்

டாவின்ஸி கோட் மூலமாக பிரபலமானாலும் இவருடைய அனைத்து நாவல்களுமே அற்புதமாக இருக்கும். பல சரித்திர விஷயங்களை நமக்கு சொல்லி விறுவிறுப்பான நடையில் செல்லும் ஏஞ்சல்ஸ் அண்ட் டிமன்ஸ் எனக்கு இவருடைய நாவல்களிலேயே பிடித்த நாவல்.

Alchemist, Veronica decides to die, Eleven Minutes

Paulo Coelho அவருடைய நாவலகள் வித்தியாசமானவை Alchemist பலர் படித்திருப்பீர்கள் அவருடைய மற்ற நாவல்களும் நன்றாகவே இருக்கும் அனைவரும் படிக்க வேண்டியவை இவை.

எனக்கு பிடித்த நாவல்களை உடனே நினைவுக்கு வந்த நாவல்களை இங்கு கொடுத்திருக்கிறேன். இன்னும் Kane and Abel, பச்சை வயல் மனது, சில நேரங்களில் சில மனிதர்கள், லைப் ஆப் பை, Chronicles of narnia என்று சொல்லிக் கொண்டே போகலாம் நிறைய புத்தகங்கள் உள்ளன. எந்தெந்த புத்தகங்கள் உள்ளன என்பது கூட ஞாபகம் இல்லை.அனைத்தையும் என்றாவது எடுத்துப் பார்க்க வேண்டும்.

Saturday, July 29, 2006

ஆன்மீகம் அறிவியல் அகங்காரம் - 2

ஐன்ஸ்டினின் சார்பு நிலைத் தத்துவத்தை( Theory of Relativity ) அறிந்தவர்கள் இந்த உலகில் நான்கு பேர்தான் என்று கூறுவார்கள். அந்த நான்கு பேரில் நான் கண்டிப்பாக கிடையாது.ஆகவே இதனை நான் விளக்குவது சரி இருக்காது இருந்தாலும் சிறிது முயற்சி செய்கிறேன்.நீங்கள் ஒரு புகை வண்டியில் மிக வேகமாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்பொழுது கிழக்கில் இருந்தும் மேற்கில் இருந்தும் இரண்டு ஒளிக் கதிர்கள் புறப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மிக வேகமாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செயது கொண்டு இருப்பதால் மேற்கில் இருந்து வரும் ஒளிக் கதிர் உங்களை முதலில் வந்து சேரும் பின்தான் கிழக்கில் இருந்து வந்த ஒளிக் கதிர் வந்தடையும் அல்லவா? அதனால் உங்களுக்கும் மேற்கில் இருந்து புறப்பட்ட ஒளிக் கதிர் தான் உருவானது என்று நினைப்பீர்கள் ஆனால் பூமியில் நின்று கொண்டிருக்கும் ஒருவருக்கு அவை இரண்டுமே ஒரே நேரத்தில் உருவானது என்று நினைப்பார் இல்லையா?அப்படியானால் உங்களுக்கு ஒரு நிகழ்வு வேறு நேரத்தில் நடந்ததாக தோன்றுகிறது. பூமியில் உள்ளவருக்கு வேறு நேரத்தில் நடந்ததாக தோன்றுகிறது அல்லவா?

அப்படியானால் நேரம் என்பது நிலையானது அல்ல என்ற முடிவுக்கு வர வேண்டியதிருக்கிறது அல்லவா? இது சாதாரணமான ஒரு கண்டுபிடிப்பாக தோன்றினாலும் இது மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாகும். அந்த சமயம் வரை உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் நிலையான நேரம் என்ற ஒன்றையே நம்பி வந்தார்கள். இது அந்த நம்பிக்கைகள் அனைத்தையுமே தகர்த்து எறியும் வகையில் அமைந்தது.

ஆனால் ஐன்ஸ்டினின் இந்தக் கண்டுபிடிப்பு அவர் எதிர்பார்க்காத ஒரு விளைவையும் ஏற்படுத்தியது. அவரின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்த ஒரு சக விஞ்ஞானி இந்த பிரபஞ்சமும் நிலையானது இல்லை அது வேகமாக பரந்து விரிந்து கொண்டிருக்கிறது அல்லது சுருங்கி கொண்டிருக்க வேண்டும் என்று கண்டுபிடித்தார். இது ஐன்ஸ்டினை மிகவும் தர்ம சங்கடமான ஒரு நிலையில் தள்ளியது. மதத்தின் மேல் தீவிர நம்பிக்கை கொண்ட ஐன்ஸ்டின் இந்தக் கண்டுபிடிப்பு தன் மத நம்பிக்கைகளுக்கு எதிராக இருப்பதை உணர்ந்தார். அந்த சமயத்தில் தான் இவருடைய மிக புகழ் பெற்ற "GOD DOESNT PLAY DICE WITH THIS UNIVERSE". அதாவது கடவுள் இந்த உலகில் தாயம் விளையாடவில்லை எல்லாமே எழுதி வைத்தது போலத்தான் நடக்கும் என்று கூறினார்.அதனால் தன்னுடைய கண்டுபிடிப்பில் சில மாற்றங்களைச் செய்து இந்த பிரபஞ்சம் நிலையானது என்று மாற்றி வெளியிட்டார்.

ஆனால் ஹீபில் 1928 தன்னுடைய தொலை நோக்கி மூலம் இந்த உலகம் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது என்று நிருபித்தார்.

பிறகு ஐன்ஸ்டின் தான் தன்னுடைய கண்டுபிடிப்பில் மாற்றம் செயத்தது தன் வாழ்க்கையின் மிகப் பெரிய தவறு என்று கூறினார்.

இந்த சமயத்தில் அறிவியலில் இருந்து ஆன்மீகத்திற்கு நாம் மாற வேண்டி இருக்கிறது. இங்கே நாம் யோசிக்க வேண்டியது இந்தக் கண்டுபிடிப்பு உலகில் உள்ள எல்லா மதங்களும் கொண்டிருந்த நம்பிக்கைக்கு மிக புறம்பாக உள்ளது என்பதைக் காண வேண்டும். இந்த கண்டுபிடிப்பு கடவுள் இல்லை என்று கூறவில்லை ஆனால் எல்லாமே எழுதி வைத்தபடிதான் நடக்கிறது போன்ற நம்பிக்கைகளை உடைத்து எறியும் விதமாக உள்ளது. அதாவது கடவுளை நம்முடைய மதங்கள் நமக்கு என்ன சொல்லிக் கொடுத்திருக்கிறதோ அது அத்தனையும் உண்மை இல்லை என்று அறிவியல் பூர்வமாக நிருபிக்கும் வகையில் உள்ளது. ஐன்ஸ்டின் மிகப் பெரிய அறிவாளி அவர் தன்னுடைய தவறுகளை ஒத்துக் கொண்டார். ஆனால் அகங்காரம் கொண்ட எத்தனை மனிதர்களால் இது போல ஒத்துக் கொண்டு மத துவேஷங்கள் கொள்ளமால் இருக்க முடியும்? எத்தனை பேர் ராமரும் இல்லை அல்லாவும் இல்லை கிறிஸ்துவும் இல்லை என்பதை ஒப்புக் கொள்ள முடியும்? தெரியவில்லை.

அடுத்த பகுதியில் இந்த பிரபஞ்சம் விரிவடைகிறதனால் என்ன என்ன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன அது மேலும் நம்முடைய ஆன்மீக சிந்தனைகளை மாற்றி அமைக்கும் விதமாக இருக்கிறது. மனிதனின் அகங்காரம் எப்படி அப்படியே இருக்கிறது என்று எழுத முற்படுகிறேன்.

Thursday, July 27, 2006

பஞ்சப் பா

அவள் மேனி
தொடும் ஆசையினாலேயே
மீண்டும் மழையாகிறது கடல்

******************************

அவளைக் தீண்டும்
ஆசையில் விரைந்தது
காற்று - சூறாவளி

******************************

அவள் தூங்கும் சமயம்
பார்க்க இயலாததால் வெப்பமிழக்கிறது
சூரியன் - இரவு

*******************************

அவள் நாணத்தால் தலை
குனியும் நேரம் எல்லாம்
தன்னிலை மறக்கிறது பூமி

*******************************

அவளிடம் உள்ள
அதிசயங்களை விடவா
அதிகமாகவுள்ளது பிரபஞ்சத்திடம்

*******************************

Wednesday, July 26, 2006

அறிவியல் ஆன்மீகம் அகங்காரம் - 1

Bubble vs Bang எதோ ஹாலிவுட் திரைப்படத் தலைப்பு போன்று இருந்தாலும், இன்று காஸ்மாலஜி(Cosmology) என்னும் துறையில் இன்று பல மில்லியன் வருடக் கேள்வி இதுதான்.

காஸ்மாலஜி என்பது நம்முடைய பிரபஞ்சத்தை பற்றிய ஆராய்ச்சி செய்யும் துறையாகும். ஐன்ஸ்டீன், நீயூட்டன், ஹாகிங்ஸ் போன்ற அறிவியல் துறையில் மிக புகழ் பெற்று இருக்கும் அனைவருமே இந்த துறையில் ஆராய்ச்சி செய்தே புகழ் பெற்றார்கள்.

இது ஆன்மீகத்துடனும் மிகவும் நெருக்கமான ஒரு துறையாக நாம் கருதலாம். இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது? போன்ற கேள்விகளுக்கு நாம் இது நாள் வரையிலும் ஏன் இன்று கூட ஆன்மீகத்தையே நாடியுள்ளோம்.

இது போன்ற கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக விடை அறியும் தெரியும் சமயம் நாம் நம்முடைய ஆன்மீகச் சிந்தனைகளை நம்முடைய நம்பிக்கைகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியதாகிறது(அப்பாடி தலைப்பின் ஒரு பகுதியை விளக்கியாச்சு இன்னொரு பகுதியையும் விளக்கணும்.)

அகங்காரம் வடமொழி சொல் மாதிரி இருக்கு(தெரியவில்லை குமரனிடம் கேட்க வேண்டும்) வட மொழி தமிழ் மொழி எதுவாக இருந்தாலும் இது ஒரு உலகப் பொது உணர்வு. இது அவரவரின் மத சம்பந்தமான விஷயங்களில் தலை தூக்கி இருக்கும். அசுரனின் உலக பயங்கரவாதி இஸ்ரேல் பதிவைப் பார்த்த பிறகு இது உண்மை என்பதை எல்லோரும் ஒப்புக் கொண்டேயாக வேண்டும்.

இந்தத் துறையின் கண்டுபிடிப்புகள் இந்த அகங்காரத்தை முழுவதுமாக அகற்றிவிட வேண்டும் ஏனென்றால் In the grand scheme of things in the universe Humans are nothing.ஆனால் அது சாத்தியமில்லை என்று எல்லோருக்கும் தெரியும். தன்னுடைய நம்பிக்கைகளுக்காக மனிதனை மனிதன் கொன்று குவிப்பது அவனுடைய நம்பிக்கைகள் தவறுகளின் அடிப்படையில் உருவானது என்று தெரிவதால் நின்று விடப் போகிறதா என்ன?

Cosmology என்னும் இத் துறையில் இன்று நடக்கும் எல்லா ஆராய்ச்சிகளுக்கும் அடிப்படை Hubble என்பவரால் 1929ம் கண்டுபிடிக்கப் பட்ட ஒன்றின் அடிப்படையிலேயே நடை பெறுகிறது.

இவரின் கண்டுபிடிப்பே ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தை ஐன்ஸ்டீனுக்கே விளக்கியது;-).

இவரின் கண்டுபிடிப்பு பற்றி நாம் அறிந்து கொள்ளும் முன் அது வரை இந்த துறையில் நடந்தது என்னென்ன என்று காணலாம். இந்த துறையின் முதல் முக்கிய கண்டுபிடிப்பு எது என்று நாம் அறிய முற்பட்டால் அது காப்பர்னிக்கஸ் இந்த உலகை உருண்டை என்று கண்டு பிடித்தைத் தான் சொல்ல வேண்டும். அது வரை இருந்து வந்த நம்பிக்கையான தட்டை உலகம் என்ற நம்பிக்கையை தகர்த்து எறியும் வகையில் இருந்த கண்டுபிடிப்பாகும் அது.

பின் நீயூட்டன் புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்ததை சொல்லலாம். புவியீர்ப்பு சக்தி தான் என்பது நாம் இந்த பூமியின் பகுதியில் ஒட்டிக் கொண்டு இருக்க வைக்கிறது. புவியீர்ப்பு சக்திதான் இந்த சந்திரன் பூமியை சுற்றி வரச் செய்கிறது. பூமி சூரியனைச் சுற்றி வரச் செய்கிறது. இது அனைத்தும் தான் ஐன்ஸ்டினின் சார்பு நிலை கண்டுபிடிப்பு வரும் வரை இந்தத் துறையில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளாக கருதப்பட்டது.

ஐன்ஸ்டினுக்கு ஹூபில் எப்படி சார்பு நிலை தத்துவத்தை விளக்கினார். அந்தக் கண்டுபிடிப்பு எப்படி மத நம்பிக்கைகளை மாற்றும் விதமாக உள்ளது மற்றும் மனிதனின் அகங்காரம் குறித்து அடுத்த பதிவில்.

Friday, July 21, 2006

பிரிவினைவாதம், கோபம் கொள்பவர்களுக்கு

என் 50 பதிவுகள்( என்னடா எல்லாரும் ஆயிரத்தை நோக்கி போயிட்டு இருக்காங்க நீ என்ன 50 50ன்னு குதிக்கறன்னு கேக்காதீங்க) முடிந்து விட்ட நிலையில் என்னுடைய சுயமதிப்பீடு பதிவு இது. என்னுடைய நிலைப்பாடுகள் சிலவற்றை கீழே கொடுக்கிறேன். "டோண்டுவிடம் சில கேள்விகள்" என்று அவரோட சண்டை, பின்னாடி சந்தோஷ் பக்கங்களில் டோண்டுவோட அவர் சண்டை போட்டுகிட்டு இருந்தப்ப சந்தோஷ் கிட்ட தப்புன்னு தோணிணதுனால "இது விவாதப் பதிவா தனி மனித தாக்குதல் பதிவான்னு?" கேள்வி. நேசக்குமார், வஜ்ரா ஷங்கர்கிட்ட முஸ்லீம் மதத்தை எதிர்க்காதீங்கன்னு விவாதம். சந்திப்பு கிட்ட ஹிந்துத்துவா ஹிட்லர்ன்னு எல்லாம் சொல்லாதீங்கன்னு வேற அறிவுரை. இங்க உஷா அவர்களின் பதிவுல விடாது கருப்பு வஜ்ரா ஷங்கர் போன்றவர்களை தடை செய்யணும்ன்னு கருத்து. பின்னாடி அதே அவர்களுடைய பதிவில கோபப்படாதீங்க அறிவுரை. அதே சமயம் விடாது கருப்பு பதிவுல போய் பிராமிணர்களை எதிர்க்கறது தவறுன்னு கருத்து. அப்புறம் முத்து தமிழினி பதிவில் போய் உ.வே சாமிநாத ஐய்யர் மேல தப்பு சொல்லாதீங்கன்னு கருத்து. நம்ம செந்தழல் ரவி அவர்களோட பதிவுல அன்னை தெரசா பத்தி ஜயராமனின் கருத்துக்கு மதிப்பு கொடுக்கணும்ன்னு ரவிகிட்ட கருத்து. அப்புறம் ம்யூஸ், வஜ்ரா சங்கரோட சர்ச்சை. இங்க ராபின் ஹுட் கிட்ட நீங்க பாட்டுக்கு ஒருத்தரை போட்டுத் தாக்கறீங்களே ஆதாரம் இருக்கான்னு கேள்வி. இங்க டாவின்ஸி கோட் கருத்து சுதந்திரத்துக்கு தடை அதை தடை தடை செய்த்தது தவறுன்னு கருத்து. அதிலயே பயர் படத்துக்கு ஹிந்துக்கள் அதிக அளவில் இருப்பதால் அவங்க அளவுக்கு பிரச்சனை செய்தாங்க, கிறிஸ்துவர்கள் அவங்க அளவுக்கு பிரச்சனை செய்கிறார்கள். ஆகவே இந்த மதம் இருந்தாலே பிரச்சனைன்னு ராகவன், ஜோசப் இவர்களுடன் விவாதம்.

அப்புறம் பல பேரோட பதிவுகளுக்கு போய் கோபப்படாதீங்கன்னு அறிவுரை( குப்புசாமி சார், குழலி இன்னும் பல பேர் ). இதெல்லாம் டக்கு ஞாபகம் வந்தது இன்னும் பல இடங்களில் பல கருத்துகள்.

இவ்வளவு நேரம் நான் என்ன பண்ணினேன்னு சொன்னேன். இதுக்கு கிடைத்த மரியாதைகள் பலன்களைப் பத்தி சொல்ல வேண்டாம். புனித பிம்பங்கள்(நன்றி முத்து தமிழினி), நடுநிலைவாந்திகள்(நன்றி மாயவரத்தான்), திம்மி(நன்றி வஜ்ரா ஷங்கர்), அச்சிடப்பட முடியாத வார்த்தைகள்(நன்றி போலி). அதாவது இந்த திட்டுக்கள் எல்லாம் என்னைத் நோக்கித்தான் சொல்லப்பட்டதுன்னு சொல்லலை(போலியின் திட்டுக்களை தவிர) ஆனால் என்னைப் போன்றவர்களைத்தான் குறிக்கிறது. இதுல அங்கங்க பதிவின் நோக்கை திசை திருப்பிகிறேன் என்னை நானே யோக்கியனா காட்டிக்கிறதுக்காக பின்னூட்டமிடறேன்னு எல்லாம் திட்டு.

நான் தமிழ் மணத்தில் சேரும் போது இதை பத்தி எல்லாம் தெரியாம சேர்ந்தேன், இப்போ பெரிய கருத்து கந்தசாமியாயிட்டேன். சத்தியமாச் சொல்லுறேன் கருத்து சொல்லணும் என்றெல்லாம் நான் தமிழ் மணத்துக்கு வரலை. தமிழ்ல எழுதணும் என்ற ஒரே ஆர்வம் தாம் காரணம்.

நான் இப்படி எல்லாம் கருத்து சொல்லி என்ன ஆச்சு எதாவது பலன் இருக்கா( நான் திட்டு வாங்குனதைத் தவிர ) ஒண்ணும் கிடையாது. இதில என்னமோ இப்பல்லாம் தார்மீக கோபத்தை ரசிக்கணும் என்றெல்லாம் வேற எனக்கு அறிவுரை.

நான் எழுதறது எல்லாமே எனக்கு தோன்றது மட்டும்தான். இது பலருக்கு பிரச்சனை தருவதால் கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்லி இனிமே புனித பிம்பமாவோ, இல்லை நடுநிலைவாந்தியாவோ, இல்லை திம்மியாகவோ இல்லை தார்மீக கோபத்துக்கு குறுக்கே நிற்பவனாகவோ செயல் படுவதில்லை என்று முடிவெடுத்துக்கிறேன்.

மனிதன் மட்டும் தான் உணவுக்காகவோ அல்லாமல் தன் கொள்கைகளுக்காக, தன் நம்பிக்கைகளுக்காக தன் இனத்தையே அழித்துக் கொண்டிருக்கும் ஒரே பிராணி. மனிதன் தோன்றியதிலிருந்தே இது உண்டு என்றாலும். அப்போ எல்லாம் போர் என்று வந்தால் சாவது கொஞ்ச பேர் மட்டுமே. ஆனால் இன்னைக்கு போர் என்று வந்தால் மனித இனமே அழிந்து விடும் என்ற நிலை உள்ளது. ஆகவே முன் எப்பொழுதும் இருந்ததை விட மனிதன் இன்று அமைதியையும், அன்பையும் வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளான்.

இன்னைக்கு உள்ள சூழ்நிலையில் மாற்றங்களைக் கொண்டு வர கோபம் கொள்வது சண்டை போடுறது மூலமாக செய்வதைவிட அமைதி வழியில், அன்பு வழியில் செய்வாதுதான் சரியானதாகும் என்பது என் கருத்து.

இதெல்லாம் நடை முறைக்கு ஒத்து வராது என்று சொல்பவர்கள். விவேகானந்தர், வெள்ளையனை வெளியேறு என்று சொன்ன காந்தி, I have a dream என்று ஒரு புரட்சியையே உண்டாக்கிய மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, யாசர் அராபத், இயேசுநாதர்( எதாவது ஒருவரை சொன்னால் அவரை ஜல்லியடித்து விடுவார்கள் என்று தான் பலரை சொல்லியிருக்கிறேன் இவர்கள் அனைவரையும் உங்களால் ஜல்லி அடிக்க முடிந்தாலும் உங்களுக்கு பிடித்த யாரவது ஒருவர் அன்பு வழியில் கண்டிப்பாக சாதித்திருப்பார் அவரை எடுத்துக் கொள்ளுங்கள்)ஆகியோரைப் பற்றி சிந்தித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இனி கடைசியாக இங்குள்ள பிரிவினைவாதிகள் ஒவ்வொருவருக்கும் கடைசியாக சொல்லிக் கொள்வது என்னவென்றால்

திராவிடர்களுக்கு - திராவிடர் என்று ஒரு இனம் இருந்திருக்கலாம் அதில் உங்களுக்கு பெருமையாகக் கூட இருக்கலாம் ஆனால் இன்று இதை வைத்து பிரிவினை செய்வது மற்றவர்கள் மேல் சேற்றை வாரி இறைப்பதற்காக பயன் படுத்துவது சரியல்ல.

விடாது கருப்பு மற்றும் பிராமிண எதிர்ப்பாளர் அனைவருக்கும் - காந்தி பிராமிணர்தான் உடனே அவர் அப்படிப் பண்ணிணார் இப்படி பண்ணிணார் என்றெல்லாம் சொல்ல வேண்டாம் இதை ஒத்துக் கொள்ள முடியவில்லை என்றால் உங்களுக்கு தெரிந்த பிராமிணர் யாராவது நல்லவராக இருப்பார் அவரை உதாரணமாக எடுத்துக் கொண்டு பிராமிணர் அனைவருமே கெட்டவர் இல்லை என்பதை உணருங்கள். யூதர்களை ஹிட்லர் கையாண்ட விதம் சரியா என்று யோசியுங்கள்.

ஹிந்து முஸ்லீம் கிறிஸ்துவ நண்பர்களுக்கு - இந்த பிரபஞ்சத்தை ராமர் ஒரு இடத்தில் இருந்து ஆட்சி செய்கிறார், கிறிஸ்து ஒரு இடத்தில் இருந்து ஆட்சி செய்கிறார், அல்லா ஒரு இடத்தில் இருந்து ஆட்சி செய்கிறார் நாம் எந்த மதத்தை பின்பற்றுகிறோமோ அந்த மத ஆட்சி செய்யும் இடத்துக்கு நாம் சென்றடைவோம் என்றெல்லாம் எண்ணுபவர்கள் இதற்கு மேல் படிக்க வேண்டாம். எல்லாமே ஒரே இறைதான் என்று எண்ணுபவர்கள் யோசிக்க வேண்டியது மற்றவரின் நம்பிக்கைகளை புண்படுத்துவது மத துவேசங்களைப் பரப்புவது போன்றவை செய்வதன் மூலம் நீங்கள் உங்கள் இறைவனைதான் நிந்திக்கிறீர்கள். கோயிலை இடித்து மசூதி கட்டினாலும், மசூதி இடித்து கோயில் கட்டினாலும் நாம் உணர்வது ஒரு இறையையே என்று உணருங்கள்.மத துவேஷங்கள் பரப்புவதாலோ, இல்லை மத மாற்றங்கள் நிகழ்வதோ ஒரு வித்தியாசமும் ஏற்படப் போவதில்லை. மதம் மாறினாலும் ஒரே இறைவன் தான், மத துவேஷங்கள் பரப்பப் படும் சமயம் அவரவர் மதத்தின் அன்பு சார்ந்த சிந்தனைகளை பற்றி சிந்தித்துக் கொள்ளுங்கள்.

கடைசியாக கோபம் கொள்பவர்களுக்கு மேலே சொன்னது போலத்தான் காந்தி கோபம் கொண்டு வெள்ளையனே வெளியேறு என்று சொல்லி இருந்தால் அவர் அமைதியாக சொன்னவுடன் உண்டான புரட்சி உண்டாகி இருக்காது. மார்டின் லூதர் கிங் கோபம் கொண்டு பேசி இருந்தால் புரட்சி உண்டாகி இருக்காது. விவேகானந்தர் கோபம் கொண்டிருந்தால் அவருடைய கருத்துக்கள் மக்களை சென்றடைந்திருக்காது. ஆகவே அமைதியாக பலருக்கு சென்று அடையும் வகையில் உங்கள் கருத்துக்க்ளை சொல்லுங்கள்.

நான் எதோ எனக்கு தோணினதை கடைசி முறையா இந்த தமிழ் மணத்தில சொல்லிட்டேன். இனிமே நான் யாரோட எந்த விவாதத்திலயும் வந்து யாரைப் பத்தியும் எதுவும் சொல்லப் போறதில்லை பதிவும் இடப் போறதில்லை.

நான் பதிவிட்டா கோவி. கண்ணன் வந்து நக்கலா ஒரு கமெண்ட் அடிப்பார் அந்த கமெண்ட் அந்த கமெண்ட் வந்தா அது இல்லையா என்னோட தமிழ் ஆர்வத்தை வைச்சுக்கிட்டு நான் இனிமே தமிழ் மணத்துல காலத்தை ஓட்டிடறேன். மத்தது எதுவுமே தேவை இல்லை எனக்கு.

இந்தப் பதிவு ஒரு desperationல மனசு கேக்காம எழுதினது இதனால ஒரு மாற்றமும் ஏற்படப் போறதில்லைன்னு இதை யாரும் முழுசாக் கூட படிக்கப் போறதில்லைன்னு நீங்க நினைச்சீங்கன்ன என்னோட எண்ணத்தை பகிர்ந்துக்கிறீங்கன்னு நினைச்சுக்கோங்க.

Tuesday, July 18, 2006

ப்ளாக்கர் தீர்வு

கோவி.கண்ணன் said...
//http://www.proxylord.com//
முதல்வரியில் இந்த இணைய தளத்தை கொடுத்திருந்தீர்கள் என்றால் தமிழ்மண முகப்பில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். கடைசியில் போட்டிருப்பதால் தமிழ்மண முகப்பில்
தெரியாது. எதற்கும் பதிவை அழித்துவிட்டு மீண்டும் மாற்று தமிழ்மணத்தில் சேருங்கள்... மற்றபடி www.proxylord.com நன்றாக வேலை செய்கிறது.

நீங்கள் சொன்னதை சற்றே மாற்றி செய்துள்ளேன் கோவி ஒகேவா?...

:-))))

சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி ப்ளாக்கர் தீர்வு

இந்தோனேஷியாவில் சுனாமியால் 340 பேர் பலி அவர்களுக்கு என் அஞ்சலிகள்.

இந்தியாவில் ப்ளாக்கர் தடை பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை, ப்ளாக்கர் இல்லாமல் தவிப்பவர்களுக்கு ஒரு எளிய தீர்வு ப்ராக்ஸி வலைப் பதித்தல். கீழே கொடுக்கப்பட்டுள்ள வலைத் தள முகவரிக்கு சென்று இங்குள்ள பெட்டியில் URL இட்டால் நீங்கள் எந்த வலைப் பதிவை வேண்டுமானாலும் பார்க்கலாம் அது தடை செய்யப் பட்டிருந்தாலும். வேலை செய்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள். நான் இந்த வலைப் பதிவை பதித்ததே இப்படித்தான். இந்த முறை சரியா என்று டெக்னிக்கல் நண்பர்கள் சொல்ல வேண்டும்.

http://www.proxylord.com

Sunday, July 16, 2006

மரணம் தேன்கூடு போட்டி

"எவ்வளவு வெளிச்சமாக உள்ளது" இதுதான் முதலில் எனக்கு தோன்றியது ஆனால் இந்த வெளிச்சம் கொஞ்சம் கூட உறுத்தவில்லையே? வெளிச்சம் அதிகமாக இருந்தால் வெப்பமாக இருக்குமே அதனையும் உணர முடியவில்லையே? வெப்பம் மட்டுமா எதையுமே உணர முடியவில்லையே என்னவாயிற்று? ஆகா நானும் அல்லவா வெளிச்ச வடிவாக உள்ளேன்? ஆனால் என்னைச் சுற்றி உள்ள வெளிச்சத்திற்கும் எனக்கும் எவ்வளவு வித்தியாசம் என் வடிவம் சுற்றி உள்ள வெளிச்சம் எவ்வளவு வெளிச்சமாக இருக்கிறது நான் அந்த அளவு வெளிச்சமாக இல்லையே? ஆ என்ன இது என் எண்ணங்கள் எல்லா இடங்களிளும் எதிரொலிக்கிறதே?"

"எண்ணமே இல்லாத இடம் இது. பூமியில் மண்ணை விட அதிகமாக எண்ணங்கள் இருப்பதால் இங்கு உன் எண்ணம் எதிரொலிப்பதாக தெரிகிறது." பதில் எங்கிருந்து வருகிறது என்று என் எண்ணமும் எதிரொலிக்க பதில் வந்த இடம் என்னருகிலேயே இருப்பதாகப் பட்டது. அருகில் நோக்கினால் என்னை விட வெளிச்சமாக ஆனால் வெளிச்சம் அளவுக்கு வெளிச்சமாக இல்லாத ஒரு உருவம் தென்பட்டது. காலா காலமாக ஒரு கூட்டில் அடைந்திருந்ததால் இது காலனா? அல்லது மரண தேவதையா? என்ற எண்ணம் ஏற்பட்டதில் வியப்பில்லை. நகைப்போ, கேலியோ எதோ அது போன்ற உணர்வு என்னைச் சுற்றி பரவியது போன்ற உணர்வு. உடனே எனக்கு பதில் அளித்த அந்த வெளிச்சத்தை பார்த்து "நான் மரித்து விட்டேன் என்று உணர்கிறேன். இது என்ன இடம் இதுதான் சொர்க்கமா இல்லை நரகமா? நீ யார் எமனா மரண தேவனா? இது என் கர்மா தீர்க்கும் இடமா இல்லை என் வாழ்க்கையை பட்டியலிடும் நீதித்தளமா?" பேசினேனா இல்லை யோசித்தேனா தெரியவில்லை ஆனால் என் கேள்வி எங்கும் எதிரொலித்தது.

"அப்பா எத்தனை கேள்விகள்? எல்லாவற்றிற்கும் பதில் வேண்டுமா உனக்கு? கேள்விகள் இல்லாமல் காண்பதை கண்டு உணர்ந்து, பார்ப்பதை மட்டும் ரசித்து, யோசனைகள் இல்லாமல் அனுபவித்து கொண்டிருக்க முடியாதா? எல்லாவற்றிருக்கும் பதில் வேண்டுமா? சொல்கிறேன் கேள்". உணர்ச்சிகளுக்கு மட்டுமில்லை உணர்வுகளுக்கும் இடமில்லை என்பதை உணர்த்துவது போல இருந்தது எதிரொலிகள். எதிரொலிகளில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை அதனால் பேசப் படும் தோனியில் கோபமில்லை, சோகமில்லை, கருணையில்லை உணர்வேயில்லை. உண்மை மட்டுமே இங்கு பேசப் படும் என்பது போல உணர்வேயில்லாது இருந்தது அந்த எதிரொலி.

"நீ இங்கு நீயில்லை நானும் நீயும் வேறில்லை உனக்கு என்று தனியாக ஒன்றுமில்லை.ஒரே ஆற்றலே இயங்குகிறது உன்னுள்ளும் என்னுள்ளும். அனைத்துமே ஒன்றுதான் இங்கு. இருப்பினும் அனைத்துமே ஒன்றாக இருக்க இயலாது என்பதால் நம்முள்ளும் வித்தியாசம் உண்டு. ஆனால் பூமியில் இருந்து வந்ததால் வித்தியாசம் இருக்கிறதே அதனால் கலகம் உண்டாக்கலாம் என்று எண்ணாதே பூமியில் இருக்கும் மூட மதிகள் போல் அல்லாமல் நாம் அனைவரும் ஒன்றே என்பதை இங்கு அனைவரும் அறிவர்" பதில் கேட்ட எனக்கு சிறிது தெளிவானது என் வெளிச்சம் அதிகமானது போல தோன்றியது. "அப்படி என்றால் இறைவன் என்பவன் இல்லையா?" கேள்விகள் உருவானது மேலும் என்னுள்.

"இதுதான் இறை. இங்கு நீயும் இறை நானும் இறை இங்குள்ள அனைத்துமே இறை. அனைத்துமே கலந்து ஒன்றாக விளங்குகிறதே இந்த நிலையே இறை. பூமியில் தான் மசூதி உடைத்து கோயில் எழுப்பி இறை காணலாம் என்ற மூடத்தனம் உண்டு. மசூதியிலும் காணலாம், கோயிலும் காணலாம், காணும் இடமெல்லாம் காணலாம், காணா இயலாத காட்சிகளிலெல்லாம் இறை உண்டு என்பதை அறியாமல் இருக்கும் மூடத்தனமில்லை இங்கே. பெயர் இட்டு தன் நம்பிக்கையே இறையை அடைய வழி என்ற எண்ணம் பூமியில் மட்டுமே உண்டு தன் நம்பிக்கையின் மேல் உள்ள ஆங்காரத்தில் இறை உணரவே நம்பிக்கை என்பதை மறந்து அந்த நம்பிக்கைகளுக்காக மனிதனை இரையாக்கும் கொடூரம் இல்லை இங்கு. இங்கு அனைத்துமே இறை அனைத்தும் சேர்ந்திருக்கிறதே இதுவே இறை."

மேலும் தெளிவடைந்தேன் நான் மேலும் வெளிச்சமானது போன்ற உணர்வு. மேலும் கேள்விகள் எழுந்தன என்னுள். "இதுதான் இறை என்றால் சாத்தான் என்பது எது. பேய்கள் உண்டா? பிசாசுகள் உண்டா?" எண்ணம் எதிரொலிக்க. "இருக்கிறது ஆனால் அது அனைத்துமே பூமியில் மட்டுமே உண்டு. பிறக்கும் குழந்தைக்குளுள்ள இறை உண்ண உணவில்லாமல் மிக சீக்கிரமாக இங்கு வந்தடைகிறது அதற்கு உதவ வாய்ப்பிருந்தும் கேளிக்கைகளில் இறையை மறக்கிறானே அந்த மனிதன்தான் சாத்தான். தன் நம்பிக்கைகளுக்காக மதம் என்றும் ஜாதி என்றும், வேற்றுமை உண்டாக்குகிறானே அவன்தான் பேய். மனிதனின் மனதில் தோன்றுகிறதே அவனுள் இருக்கும் இறையை வெட்கப்பட வைக்கும் எண்ணம் அதுவே பிசாசு."

மேலும் கேள்வி எழுந்தது என்னுள் வெளிச்சத்தின் வெளிச்சத்தை போல வெளிச்சமாகி கொண்டிருந்த எனக்கு "விதி என்ற ஒன்று உண்டா? நான் இப்படித்தான் இங்கே சேர்வேன் என்று ஏற்கனவே முடிவானதா? இறை எழுதி வைத்தது போலத்தான் இங்கே நடக்கிறதா?" பதிலளிக்கும் வெளிச்சம் என் அளவே வெளிச்சமாக இருக்க பதில் வந்தது அதனிடமிருந்து, "விதி எல்லாம் இல்லை விதி என்பதெல்லாம் மனிதனின் மதியே. அவனுடைய வசதிக்காக முட்டாளாக்க மனிதர் இருப்பதால் உருவாக்கப் பட்டது. விதி என்று ஒன்று இல்லையென்றாலும் உன் செயல் உன் எதிர்காலம் தீர்மானிக்கும் நீ ஒவ்வொரு நொடியும் செய்யும் காரியம் உன் வாழ்க்கை தீர்மானிக்கும். உன் விதி எழுதுவதைத் தவிர வேறு வேலை இல்லையா இறைக்கு? இந்த அண்ட சராசரத்தில் மனிதன் ஒரு கணக்கே இல்லை மனிதனுக்கு அணுவைப் போல் இந்த அண்ட சராசரத்திற்கு மனிதன் சிறிதானவன்.நீ வாழும் காலம் ஒரு கணக்கே இல்லை இங்கு ஆகவே உன் விதி எழுத தேவையேயில்லை. உன் விதி நீ செய்யும் செயலால் அமைகிறது."

மேலும் தெளிவடைந்தேன் வெளிச்சத்தின் வெளிச்சமளவுக்கு வெளிச்சமானேன். எனக்கு பதில் கூறும் வெளிச்சத்தை விட வெளிச்சமானேன். இப்பொழுது அந்த வெளிச்சத்திடமிருந்து எண்ணம் என்னை அடைந்தது. "நீ என்னை விடவும் தெளிவாகி விட்டாய் அதெப்படி?" ஒவ்வொரு நிமிடமும் எண்ணமில்லாமல் காண்பதை கண்டு உணர்ந்து, பார்ப்பதை ரசித்து, யோசனைகள் இல்லாமல், அறிய வேண்டியதை ஆராயாமல் அறிந்து கொண்டிருந்த நான் பதிலுரைத்தேன். "பூமி சென்று மனிதனாகி இருக்கிறாயா?" என்று எண்ணம் எழுப்பி. "நான் பல கோள்களில் பல ரூபம் எடுத்திருக்கிறேன். பூமியில் கூட மனிதனாகாமல் எல்லாமாகியிருக்கிறேன். மனிதன் உருவம் மட்டும் எடுத்ததில்லை. போட்டி, சுயநலம், பொறாமை, இரைக்காக அல்லாமல் இறைக்காக என்று எண்ணி தன் நம்பிக்கைகளுக்காக கொன்று இறையை விட்டு விலகும் மனிதனாக மட்டும் இருந்ததில்லை."

வெளிச்சத்தோடு வெளிச்சமாக வெளிச்சமாகிக் கொண்டிருந்த நான் என் எண்ணத்தை பகிர வேண்டி "மனிதனின் குறைகள் மட்டும் அறிந்துள்ள என் போன்ற ஒரு இறையே மனிதன் என்பவனிடம் இருக்கும் குறைகள் மட்டுமே அறிந்திருக்கும் நீ மனிதானாகி உணர வேண்டும் எதையும் எதிர்பார்க்காத அன்பை. மிருகத்திடம் இருந்து தாய் பாசத்தை தொட்டு உணர்ந்திருக்கும் நீ முழுமையாக உணர்தறியவாக மனிதனாக வேண்டும். தான் என்ற எண்ணமே இல்லாத தாயன்பை உணர வேண்டும், உயிரை கூட தர வைக்கும், உன்னுடையது என்பது மறைந்து எல்லாமே நம்முடையதாக்கும் இரு உயிரை இணைக்கும் காதலை அறிய வேண்டும், முல்லைக்கு தேர் கொடுத்த கருணையை எப்படி இருக்கும் என்பதை அறிய வேண்டும். இங்குள்ள அமைதியை, ஆனந்த உணர்வை பூமியிலேயே கொடுக்கும் இசையை கேட்க வேண்டும். ஆயிரம் குறை இருந்தாலும் எல்லா இறையும் மனிதன் ஆனால் மட்டுமே முழுமையாக முடியும்" என்று எண்ணி வெளிச்சமான வெளிச்சமானேன்.

அப்பொழுது "கண்ட கண்ட புக்ஸை ராத்திரி லேட்டா படிச்சுட்டு இப்படியா தூங்கறதுங்குறது" அம்மாவின் குரல் கேட்டு எழுந்தேன். எல்லா மனிதனுக்குள்ளும் Electro magnetism, Strong Nuclear, Weak nuclear, Gravity என்ற நாலு forceதான் இயங்குகிறது, இயக்குகிறது என்ற ஸ்டிபென் ஹாகிங்ஸின் புக்கை படித்ததன் விளைவாக உருவான கனவை எண்ணி கனவில் நான் உணர்ந்ததை எல்லோரும் உணர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே பெட் காபி குடித்தேன்.

Tuesday, July 11, 2006

மரணம் பற்றிய என் கோர்வையில்லா சிந்தனைகள்...

தேன் கூடு போட்டிக்காகாக என்னுடைய இன்னுமொரு கிறுக்கல்...

தினமும் ஆயிரம் பேர் சாகறான் ஆனாலும் சாவுங்கறதை சாதாரண விசயமா ஏன் எடுத்துக்க முடியல? பொறந்த குழந்தைல இருந்து கிழவன், கிழவி வரைக்கும் எல்லோரும் செத்துட்டுதான் இருக்காங்க. இருந்தாலும் எதோ ஆக்ஸ்டெண்டு நிலநடுக்கம் இத்தனை பேரு செத்தாங்க அத்தனை பேரு செத்தாங்க அப்படின்னாலே ஏன் திக்குன்னு ஆயிடுது? நான் நினைக்கிறேன் இப்படி எதாவது சாவு செய்தி பார்த்தாலே நமக்கும் சங்கு இன்னும் கொஞ்ச நாளல் ஊதீடுவாங்கன்னு ஒரு பயம் மனசுக்குள்ள வந்துடுதுன்னு நினைக்கிறேன் அதான்.

ஆமாமா அதனால்தான் இருக்கணும். எல்லோருக்கும் சாவுன்னா ஒரு பயம்தான்ல? இந்த சாவை பொறுத்த வரை ஒரு பிரச்சனை என்னான்னா இது எப்படி இருக்கும்னே யாருக்கு தெரியாது. இந்த கடவுள கூட நான் கண்டேன்னு சொல்றாங்க இந்த சாவை கண்டவங்கன்னு ஒருத்தனுமே இல்லையே? யாராவது ஒருத்தர் செத்துப் போயிட்டு வந்து சாவுன்னா இது இது மாதிரிதாம்பா ஒண்ணும் பிரச்சனையில்லை இப்படி இப்படிதான் இதுக்கப்புறம்ன்னு சொல்லிட்டாங்கன்னா சாவு பத்தி இவ்வளவு பயம் இருக்காதுன்னு நினைக்கிறேன். ஆனா அதுதான் முடியாதுல்ல.

இந்த சாவுல மனுஷனுக்கு இருக்கிற சோகம் என்னான்னா அவன் செத்துப் போனவனை அவன் சாகற வரைக்கும் பிரிஞ்சறான் அதுதான். என்னதான் மனசை சமாதானப் படுத்திகிட்டாலும் செத்துத்டாங்கன்னா தொட முடியாது, பேச முடியாது, கூட சேந்து சிரிக்க முடியாது, தோள்ல சாஞ்சு அழுக முடியாதுங்கிற போது துக்கம் நெஞ்சை லேசா அடைக்கதான் செய்யுது.ஆனா இப்படி எல்லாம் நினைக்கிற மனுஷன் வாழும் போது அவன் நினைக்கறப்ப போய் இதெல்லாம் செய்யறானா? வாழும் போது தொடக் கூடிய தொலைவுல இல்லாம, போனுல மட்டும் பேசற, சேந்து சிரிக்க கூட முடியாம இருக்கிற மனுஷன்களுக்கு சாவால மட்டும் என்ன வித்தியாசம் வந்துடப் போகுது? அவங்களுக்கு செத்தவங்க இப்போ சாகல எப்போ தூரம் போனாங்களோ அப்பவே அவங்க செத்துடறாங்க.

நான் மட்டுமா சொல்றேன் எத்தனை பேரு சொல்லறாங்க உன்னோட ஒவ்வொரு நிமிஷத்தையும் நீ விரும்பும் மனிதர்களோடு சேர்ந்து கொண்டாடு நொடிப் பொழுதுல அந்த நொடி நேரம் கிடைக்காமல் போய் விடலாமுன்னு? மனுஷனுக்கு அதெல்லாம் புரிஞ்சு உபயோகப்படுற நேரத்துல புரிஞ்சுக்க மாட்டான். புரிஞ்சும் உபயோகம் இல்லாத நேரத்துல தான் புரியும் அவனுக்கு.

இந்த ரத்தத்துல கூட குரூப் வைச்சு மனுஷனைப் பிரிச்சடறாங்க ஆனால் சாவுல பிரிக்க முடியுதா? ஆனாலும் மனுஷன் இதை புரிஞ்சுக்கறானா? ஹீம்... எல்லாரும் செத்துதான் போகப் போறாங்க அதுல ஒண்ணும் மாத்தமில்லை ஆனால் வாழுறவரைக்கும் எப்படி வாழ்ந்தாங்கறதுதான் முக்கியம் இதை யாரு சொன்னாங்களோ தெரியல ஆனா சொன்னவங்க நம்மள மாதிரி ஒரு புத்திசாலியாத்தான் இருந்திருக்கணும்( நினைக்கறப்ப உனக்கே சிரிப்பு வருதே இது தேவையா? ) இந்த சொல்லுல பல குழப்பம் இருந்தாலும் மத்தவங்க உடலளவிலும் மனசளவிலும் கஷ்டப் படுத்தாம இருக்குறான்தான் அவனோட வாழ்க்கையை ஒழுங்கா வாழ்ந்தான்னு சொல்லலாம்.

மனுஷன் வாழ்வு பூமி சூரியனை அறுபது தடவை சுத்தி வரதுக்குள்ள முடிஞ்சுடுற ஒண்ணு பூமி நம்ம சூரியனை எத்தனை தடவை சுத்தி வருது வரப் போகுது. இதுல அவனவனோட கொள்கை மனுசன் இருக்கற வரைக்கும் இருக்கப் போறது இதுக்கு எதுக்கு பிரச்சனை? மனுஷனைத் தாண்டி பூமி இருக்கப் போகுது. அந்த பூமியைத் தாண்டியும் அண்ட வெளி இருக்கப் போகுது. இதையெல்லாம் பாக்குறப்ப சுண்டைக்காய் மனுஷன் என்னா ஆட்டம் போடுறான்? அதாவது எந்த ஒரு மனுஷனுக்கும் இனிமையா வாழறதுதான் புடிக்கும் ஆனா அவன் அடுத்தவனை இனிமையா வாழ விடாதவரைக்கும் அவனாலயும் இனிமையா வாழவே முடியாது. எதாவது ஒரு சந்தர்ப்பத்துல யாராவது ஒருத்தர் மன்னிக்கலேன்னா இல்லை விட்டுக் கொடுக்கலேன்னா அந்தப் பிரச்சனை என்னைக்குமே ஓயாது. மதத்திலிருந்து எல்லா பிரச்சனையும் இது போலத்தான்.

சாவைப் பத்தி யோசிச்சா தத்துவம் எல்லாம் வருது ஆமாமா சாவில்லாட்டி தத்துவம் எல்லாம் எங்க இருந்திருக்கப் போகுது அதனால சாவை பத்தி யோசிச்சாலே தத்துவம் வர்றதுல ஆச்சர்யமில்லை.

ஒவ்வொரு மனுஷனும் சாகிற வரைக்கும் சந்தோசமா வாழணும் ஆனா உண்மையான சந்தோஷம் எங்க இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கணும். உண்மையான அன்பு செலுத்தறப்ப நெகிழ்ச்சியில கிடைக்கிற சந்தோஷம்தான் என்னைப் பொறுத்த வரைக்கும் நமக்கு கிடைக்கற உண்மையான சந்தோசம். உண்மையில் நம்மோட அனைத்து புலன்களும் உணரக்கூடிய சந்தோசம் அன்பில்தான் கிடைக்கிறது. அந்த அன்பை நாம நினைக்கும் சமயத்தில எல்லாம் நாம சாகிற வரைக்கும் வெளிப்படுத்த முடிஞ்சுதுன்னா மனுஷன் செத்துப் போறப்ப நிம்மதியா போய்ச் சேரலாம்.

Friday, July 07, 2006

எண்ணமாறு

ஆறு போட என்னை அழைத்த சோழநாடான் அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்....

நம்மையும் மதித்து ஒருவர் கூப்பிட்டு இருக்கார் ஆகவே என் எண்ணவாற்றை திறக்கிறேன் இங்கே...

வாழ்க்கையாற்றின் நினைவலைகள் ஆறு

மரணம் வாழ்க்கையை சுயமதிப்பீடு செய்ய உதவுவது போல எதுவுமே உதவுவதில்லை. உலகைப் புது கோணத்தில் பார்க்க வைப்ப்து மரணமே. அதுவும் மரணம் கல்யாணம் செய்து ஆறு மாதங்களே ஆன அண்ணண் அவர்களுக்கு, அதுவும் எங்கள் குடும்பமே கண்ணண் குடும்பம் என்று அண்ணண் பெயரால் அறியப் படி இருந்த அண்ணணுக்கு, அனைவருக்கும் பிடித்த அண்ணணுக்கு, அனைவரையும் வழிநடத்தும் அண்ணணுக்கு என்னும் பொழுது இந்த நிகழ்விற்கப்புறம் என் வாழ்க்கையே திசை மாறிவிட்டது போன்ற சொற்களை நம்மையும் சொல்ல வைத்து விடுகிறது. என் வாழ்க்கையை என் அண்ணணின் மரணம் புரட்டி போட்ட மாதிரி எதுவுமே புரட்டிப் போட்டதில்லை.

நமக்கு ஏன் ஒருத்தரை பிடிக்கிறது? ஏன் ஒருத்தரை பற்றி சிந்திக்கும் சமயமெல்லாம் தன்னிலை மறக்கிறோம்? ஏன் ஒருத்தரோடு பேசும் சமயம் மட்டும் காலம் உறைகிறது? நாம் ஏன் காதல் கொள்கிறோம்? விடை தெரியவில்லை. 15 வருடங்களாக காதல் எனக்குள். 9 வருடம் என்னுள் மட்டுமே வாழ்ந்த காதலுக்கு துணையானது 2 வருட மௌனம். மௌனம் கலைத்து 2 வருடம் கழித்து என் காதலுக்கு ஒரு தலை என்று தெரிந்தாலும் இன்னும் மிச்சம் உள்ளது காதல் என்னுள், தோழமையுடன் மட்டும் பழக்கம் எங்களுக்குள். காதலுக்கு ஒரு தலை என்று தெரிந்த கணம் என்னுள் என்றுமே உறைந்திருக்கும்.

சிறு வயது முதலே கோபம் கன்னாபின்னா என்று வரும். வீட்டில் நான் நினைத்தது நடக்க வேண்டும் இல்லையென்றால் நடப்பதே வேறு. அப்படி ஒரு சமயம் வீட்டில் மிகப் பெரிய சண்டை போட்டு விட்டு கோபித்துக் கொண்டு பஸ் ஏறி சென்னை சென்று விடலாம் என்று முடிவெடுத்து வீட்டை விட்டு கிளம்ப( எப்போதுமே கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விடுவதால் வீட்டில் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை ) தண்ணித் தாகம் வந்து ஒரு அடி பம்பில் தண்ணீர் குடிக்க அங்கே வந்த பெரியவர் ஒருத்தர் எதேச்சையாக பேச்சு கொடுக்க அவருடன் பேசி கொண்டிருந்ததில் மனது மாறி வீட்டுக்கு திரும்ப வந்து விட்டேன். அன்று பஸ் ஏறி சென்னை சென்றிருந்தால் என்னவாகியிருக்கும் தெரியவில்லை?

சின்ன வயதில் இருந்தே எனக்கு inferiority complex உண்டு அப்படி இருக்கும் சமயம் முது நிலை பட்டப் படிப்பு படிக்கும் சமயம் கல்லூரி விழாவில் சில போட்டிகளை நடத்தும் பொறுப்பு என்னை வந்து சேர ஒரு போட்டிக்காக நான் வடிவமைத்திருந்த ஒரு கம்ப்யூட்டர் புரோகிராகமுக்காக அந்த ஆடிட்டோரியத்திலிருந்த 250 பேரும் எழுந்து நின்று 5 நிமிடங்கள் கை தட்டியது, அந்த விழாவுக்கு வந்திருந்த எல்லா feedbackiலும் என் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது என்னை பற்றிய சிந்தனைகளை என்னுள் மாற்றிய சம்பவம் அது.

கடவுள் பற்றிய சிந்தனைகள் என்னுள் மாறிக் கொண்டே இருக்கிறது. எல்லா வியாழனும் கோயிலுக்கு சென்று பூஜை செய்தது, செவ்வாயன்று விரதமிருந்து மாலையில் முருகன் கோயிலுக்கு சென்ற பிறகே தண்ணீர் கூட குடிப்பது, மார்கழியில் தினமும் காலையில் கோயிலுக்கு செல்வது என்று மத நம்பிக்கைகள் பல இருந்தது. காலம் செல்லச் செல்ல மதம் மீது வெறுப்பு ஏற்படத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக மத அடையாளங்களை களையத் தொடங்கி ஒரு நாள் நான் இன்று முதல் ஹிந்து என்று எங்குமே குறிப்பிடப் போவதில்லை என்று முடிவெடுத்த தினம்.

ஒரு தடவை பள்ளியில் எனக்கு மிகவும் பிடித்த டீச்சர் ஒருவரிடம் பொய் சொல்லி அவர் என்னை அடித்து துவைத்து என்னை வெளியில் சென்று முட்டி போடச் சொல்லி விட்டார். அந்த டீச்சர் யாரையுமே அதுவரை அடித்ததில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முட்டி போட்ட பிறகு என்னை உள்ளே அழைத்த அந்த டீச்சர் கண்களும் லேசாக கலங்கி இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனது. அந்த சம்பவம் என் மனதுள் அப்படியே இருக்கிறது.

வாழ்க்கையாற்றில் பாதித்த சம்பவம் ஆறு

அப்போ அப்போ பார்டரில் சண்டைகள் நடந்து வந்திருந்தாலும் நான் பிறந்த பிறகு நடந்த யுத்தம் கார்கில் யுத்தம்தான். என்னை மிகவும் பாதித்த ஒரு சம்பவம் அது. குவைத் யுத்தம் நடக்கும் சமயம் ரொம்ப சின்னப் பையன். கார்கில் இந்தியாவில் நடந்தது என்பதாலும் எனக்கு மிகவும் பாதித்த விசயம் கார்கில் யுத்தம்.

கோயமுத்தூர் குண்டு வெடிப்பு எனக்கு சின்ன வயதில் இருந்தே பிடித்த ஊர்களில் கோயமுத்தூரும் ஒன்று. அதற்கு காரணம் நான் கோயமுத்தூருக்கு மிக அருகே காங்கேயத்தில் இருத்தால் இருக்கலாம். கோயமுத்தூர் குண்டு வெடிப்புதான் தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் நடந்த மதத் தீவிரவாதச் செயல் என்று நினைக்கிறேன். அதுவும் ஆர் எஸ் புரத்தில் கார் குண்டு செயலிலக்கப்படாமல் இருந்தால் என்னவாகியிருக்கும் என்று நினைத்தே பார்க்க முடியவில்லை.

டயானா மற்றும் அன்னை தெரசா அவர்களின் மரணம். எதற்கென்றே தெரியாது டயானா மீது எனக்கு ஒரு மதிப்பு அவர் முகத்தில் எதோ எல்லோரையும் கவரும் சக்தி இருக்கிறது. அது போலத்தான் அன்னை தெரசா அவர்கள் இருவரின் மரணமும் என்னை மிகவும் பாதித்தது.

தமிழக சுனாமி, குஜராத் பூகம்பம் எனக்கு சுனாமின்னா என்னனே தெரியாது ஆனால் அது ஏற்படுத்திய இயற்கை அழிவு அப்பா. அதே போலத்தான் குஜராத் பூகம்பம் இவை ஏற்படுத்திய அழிவுகள் மிகவும் பாதித்தது என்னை.கயா(gaia) என்று சில காலம் அந்த தத்துவத்தை ஆராய வைத்தது. இயற்கை முன் மனிதம் ஒன்றுமேயில்லை என்பதை எனக்கு உணர்த்தியது.

ராஜீவ் காந்தி கொலை இதுதான் எனக்கு முதன் முதலில் தீவிரவாதம் பற்றிச் சொல்லித் தந்த சம்பவம். சிறு வயதில் நடந்ததால் என்னை அப்பொழுது மிகவும் பாதித்த சம்பவம்.

பிரேமானந்தா கைது போலிச் சாமியார்களையும் கடவுள் பெயரால் அவர்கள் செய்யும் கொடுமைகளையும் முதன் முதலில் வெளிச்சம் போட்டுக் காட்டிய சம்பவம். மக்கள் எப்படி ஏமாளியாகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதுவும் என்னை பாதித்த சம்பவம்.

வலைப் பூக்களின் ஆற்றலாறு

கைப்புள்ள இவர் எந்தப் பதிவு போட்டாலும் உடனே படித்து விடுவது வழக்கம். இருந்தாலும் இவருக்கு மிக குறைவான பின்னூட்டமே இட்டிருக்கிறேன் ஏனென்று தெரியவில்லை. கைப்புள்ள என்று காமெடிக்காக பெயர் போயிருதாலும் இவர் எழுத்துக்கள் சீராகவும் பெரிய பதிவு என்றாலும் படிக்க ஆரம்பித்தால் முடிவு வரை படிக்க வைக்கும் விதமாகவும் அமைந்திருக்கும். மனிதருக்குள் ஒரு பெரிய ஆன்மீகவாதி ஒளிந்து கொண்டிருகிறார் என்று நினைக்கிறேன். இவருடைய மீள் பதிவான ஆங்கிலப் பதிவு, ஆறு பதிவு இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த பதிவுகள்.

என்னார் இவருடைய பதிவுகளில் இவருடைய தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்பிகாபதி அமராவதி போன்றவைகளில் இருந்து நான் கற்றுக் கொண்டது நிறைய. இவருடைய ஆன்மீகம் வரலாறும் எனக்கு பிடிக்கும். இவருடைய பதிவுகளை படிச்சா தமிழ் கத்துக்க முடியும் அதுவும் என்னை மாதிரி அரைகுறைக்கு எல்லாம் மிகவும் உபயோகமான பதிவுகள் இவருடையது.

பொன்ஸ் வெண்பா வடிப்பார் வ வா சா வில் கலக்குவார். வலைப் பதிவுகளுக்கு வந்த கொஞ்ச நாள்லயே ஒரு பெரிய வாசகர் வட்டம் இவருக்கு. மிக குறைந்த வலைப் பதிவாளர்களுக்கு மட்டுமே இது உண்டு. இவருடைய கற்பனைத் திறன் எனக்கு பிடிக்கும். தமிழ அறிவும் நிறைய உண்டு. இவர் ஆற்றல் இன்னும் வெளிப் படும் என்று நினைக்கிறேன். இவருடைய பதிவுகளில் எனக்கு பிடித்தது பொங்கியது போதும் வாளை எடு! பயணங்கள் முடிவதில்லை.

குமரன் பெரிய ரசிகர் வட்டம் வைத்திருப்பவர். நல்ல அறிவாளி. நமக்கும் ஆன்மீகத்திற்கும் காத தூரங்கறதுனால இவரோட பதிவை படிக்கறதோட சரி பின்னூட்டம் இடுவதில்லை. எதை எழுதினாலும் பின்னூட்டம் அள்ளீடுவார். சொல் ஒரு சொல் எனக்கு மிகவும் பிடிக்கும். இவருடைய புரோபைல் அறிமுகமே இவரைப் பற்றி பல விசயங்களைச் சொல்லும். அதே போல அடக்கமா பதில் சொல்லும் விதமும் ( நிறைய இடத்தில் ) எனக்கு பிடிக்கும்.

செந்தழல் ரவி வலைப் பூக்களில் எனக்கு முதல் நண்பர்( ரவி சொல்லலாமில்லையா நண்பர்ன்னு? ) டேக் இட் ஈஸி என்றிருப்பவர். சமீபத்தில் சில சர்ச்சைகளில் சிக்கி ஒரு மாதிரி இமேஜ் இருந்தாலும் இவர் கண்டிப்பாக அது போல இல்லை என்று என்னால் சொல்ல முடியும். நகைச்சுவையா எழுதுவார். தோணிணதை பண்ணுவார், போலி பின்னூட்டங்களை அனுமதிப்பதில் இருந்து ஆகவே கொஞ்சம் சர்ச்சைகளில் சிக்கி விடுகிறார் ஆனால் அடிப்படையில் நல்லெண்ணம் கொண்டவர்.

கவிதா இவருடைய எழுத்துக்கள் எல்லாமே எதாவது ஒரு கருத்தை மையமாக வைத்து எழுதியிருப்பார். அவர் எழுதிய கருத்துக்கள் எனக்கு சில சமயம் ஒப்பவில்லை என்றாலும் கருத்தா எழுதறதுனாலேயே எனக்கு இவரைப் பிடிக்கும். இவங்க மனசாட்சி அணில் குட்டிக்கு நானும் ஒரு பேன். இவருடைய எழுத்துக்கள் சீராகிக் கொண்டே வருகிறது இப்போவே சராமாரியா பின்னூட்டம் வாங்கறார் நான் இன்னும் நல்லா எழுதுவாங்கன்னு எதிர்பார்த்துட்டிருக்குற வலைப் பதிவாளர்களில் இவரும் ஒருவர்.

சரி இன்னும் நிறைய ஆறு எழுதணும்ன்னு தோணுது வெள்ளிக்கிழமை ஊருக்கு கிளம்பணும் ஆகவே இதோட நிறுத்திக்கிறேன். ஆறு பேரை அழைக்கணும் என்னடா எல்லாரும் ஆறு விளையாடறாங்க நம்ம விளையாட்டுக்கு சேர்த்திக்க மாட்டேங்கறாங்களேன்னு கொஞ்சம் வருத்தம் எனக்கு இருந்தது. அதே சமயம் இதை ஓபன் அழைப்பா எடுத்துட்டு யார் வேணும்னாலும் எழுதுங்க சொல்றதும் சரியில்லை அதை பார்த்து யாரு எழுத மாட்டாங்க.

இதுதான் இந்த ஆறு விளையாட்டுல எனக்கு புடிக்கறதில்லை.

சரி நான் கூப்பிடும் ஆறு பேர்
1. காசி
2. ஜெஸிலா
3. ராம்
4. சந்திரவதனா
5. ப்ரியன்
6. நந்தன்( திரும்ப வந்துட்டேன்னு ஒரு பின்னூட்டம் பார்த்தேன் ஆறோட வாங்க )

Thursday, July 06, 2006

மரணம் - தேன் கூடு போட்டி

பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் கலந்துக்கற போட்டி நான் எதோ எனக்கு தோன்றதை கிறுக்கீட்டு இருப்பவன். இருந்தாலும் ஆசை யாரை விட்டுது கிறுக்கியதை போட்டிருக்கேன். இதோட இன்னொரு கதையும் மனசில ஓடீட்டு இருக்கு. பார்ப்போம்.


மரணம் பற்றி சிந்திக்கும் சமயமெல்லாம்

மரணம் நிரந்தரப் பிரிவென்று வருந்துபவரே
நிரந்தரமில்லா உலகை பிரிவதெப்படி நிரந்தரமாகும்?


என்று கேட்கத் தோன்றுகிறது

மரணம் என்பது
சோகமா? நம்மவர்களைப் பிரிப்பதால் வருத்தமா? இல்லை புரியாததைப் பற்றிய பயமா?

இல்லை அப்பா மரணம்

ஆராய்ந்து உணர்ந்தறிய முடியாத ஞானம்
ஞானமனைத்தும் விளக்க இயலாத கேள்வி
அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் விளங்காத புதிர்
பயத்தால் உயிர் வழிநடத்தும் கர்மா

கர்மாவென்று சொல்வது சரியா?

உயிர்கள் இயங்குவது கூட்டை காக்கத்தானே
உயிரைப் பேணத்தானே உலகின் தொழிலெல்லாம்
மரணம்தானே அதிகபட்ச தண்டனை இவ்வுலகில்
ஆக இயக்கமனைத்திற்கும் அடிப்படை மரணமே!!!

ஒப்புக் கொள்ள முடியவில்லையே. ம்ம் ஹா மாட்டிக் கொண்டீர்.. தோற்றுவித்தலுக்கு மரணம் எப்படி காரணியாக்குவீர்?

கேளப்பா

தன்னெச்சம் இவ்வுலகில் மிச்சம் வைக்கவே
தோற்றுவிக்கிறான் இதிலடக்கம் கலையும் குழந்தையும்
அவரவரெச்சமே மிச்சமிருப்பின் தோற்றுவித்தல் எதற்காக
உயிருக்கு மரணமில்லையெனில் பிறப்பு எதற்காக

தோற்றுவிக்கிறது, வழி நடத்துகிறது மரணம் கடவுளா?

மரணமே முதல் பயம் மண்ணுயிர்கெல்லாம்
இறையை உணர்ந்தது அப்பயத்தை ஆராய்ந்துதான்
இறை நானேயென்றிருப்பானே மரணம் நீக்கினால்
இறையைத் தேடியிருப்பானா மரணத்தை மனிதனறிந்தால்?

என்னுள்ளோர் ஐயமுண்டு இவன் மடையனாயென்று
இன்றுதான் தெரிந்தது இவன் கிறுக்கனென்று

Tuesday, July 04, 2006

திருமணம் அவசியமா?

நீண்ட நாள் கழித்து நண்பர்கள் நிறைய பேருடன் சேர்ந்து கோவைக்கு ஒரு திருமணத்திற்கு சென்று திரும்பும் சமயம் பகல் நேர புகை வண்டியாக அமைந்ததாலும், 8 மணி நேரப் பயணமாக அமைந்ததாலும், 12 பேர் இரு வரிசையில் எதிரெதிரே உட்கார இடம் கிடைத்ததாலும் பல பேரின் கோபப் பார்வைகளுக்கு ஆளாக நேரிட்டாலும் பல விசயங்களைப் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. எல்லோரும் கல்யாண வயதை எட்டிவிட்டதால் எப்போ கல்யாணம் வீட்டில் பார்க்க ஆரம்பித்து விட்டார்களா என்ற கேள்விகளும் எழுந்தன. வேறு பல சுவாரஸ்யமான பல விசயங்களையும் பேசினோம் அதனை பற்றி தனியாக ஒரு இடுகை இட வேண்டும்.

இதில் எங்கள் நண்பன் ஒருவன் இருக்கிறான். சேவை மனப்பான்மை கொண்ட அவனுக்கு சில குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும், சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற சிந்தனைகள் உண்டு. அதற்கு திருமணம் ஒரு தடையாக அமையாவிட்டாலும் திருமணத்தால் பொறுப்புகள் உண்டாவதால் அவனால் தன்னுடைய சமுதாய சேவைகளை தான் நினைக்கும் அளவுக்கு நிறைவேற்ற முடியாமல் போய் விடுமோ என்று ஐயம் கொள்கிறான். அதனால் கல்யாணம் அவசியமா என்று எங்களைக் கேட்டான்.

எனக்குள் திருமணம் அவசியமா என்ற கேள்வி வேறு ஒரு காரணங்களுக்காக உண்டு. திருமணம் என்பது காதலை நாம் கொண்டாடுவதற்காக செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு( Marriage should be to celebrate Love ). காதல் செய்யாமல் திருமணம் புரிவது சரியல்ல என்பது என் கருத்து. நம் நாட்டில் திருமணம் என்பது ஒரு சமுதாயக் கடமையாக மாறி விட்டது என்பது என் கருத்து( Marriage in our country has become more social than personal ). ஆகவே எனக்கும் என் நண்பனுக்கு திருமணம் அவசியமா என்று மனதுள் எழுந்த கேள்வியை இங்கு உங்கள் முன் வைக்கிறேன்.

நீங்கள் கூறுவதை வைத்து நானோ என் நண்பனோ முடிவெடுக்கப் போவதில்லை இருப்பினும் எல்லோருக்கும் திருமணம் அவசியமா? நம் நாட்டுத் கல்யாணங்கள் நடக்கும் விதம் சரியானதுதானா அதாவது காதல் செய்யாமல் சமூகத்திற்காக திருமணம் புரிவது என்ற கேள்விகள் சுவாரஸ்யமாகவும் இருப்பதால் உங்கள் முன் இந்தக் கேள்விகளை வைக்கிறேன்.