Monday, October 16, 2006

விடுதலை தேன்கூடு-போட்டி

"எனக்கு விடுதலை வேணும்" என்றான் அபி கல்பனாவிடம்.

பெரும் பாலும் சின்ன வயதில் இருந்து ஒருவரை இன்னொருவர் அறிந்திருக்கும் சமயம் எப்படி சந்தித்தோம், எப்பொழுது முதன் முதலில் பார்த்தோம் என்பதெல்லாம் தெரிந்திருக்காது. சிறு வயதில் சேர்ந்து செய்த தவறுகள், சேர்ந்து விளையாடிய விளையாட்டு என்றெல்லாம் வேண்டுமானால் ஞாபகம் இருக்கலாம். ஆனால் முதன் முதலில் எப்பொழுது சந்தித்தோம் என்பதெல்லாம் ஞாபகம் இருப்பது கடினம்.

ஆனால் சில சந்திப்புகள் மனதை விட்டு விலகாது.

காதல் காரணமாக இருக்கலாம் பார்த்த கணத்தில் அழகைப் பற்றிய அனைத்து வர்ணணைகளும் அர்த்தம் பொதிந்ததாக மாறிய கணமாக இருக்கலாம்.

ஆனால் சிலரைப் பார்த்த உடன் மனதில் ஒரு வெறுப்பு தோன்றும், ஏன் என்றே தெரியாமல் அங்கே போய் அவனை அப்படியே என்று நாடி நரம்பெல்லாம் ஒரு கோபம் படரும். அப்படிப் பட்டவர்கள் சிலர் மேல் இருக்கும் கோபம் நாளாக நாளாக குறைந்து கூட போய் விடலாம் ஆனால் அது அதிகரித்தால் அந்த முதல் சந்திப்பு எப்படி மறக்கும்?

அபியும், கல்பனாவும் முதன் முதலாக சந்தித்துக் கொண்ட பொழுது அப்படித்தான் ஒருவர் மேல் மற்றொருவருக்கு கோபம் வந்தது. அந்த கோபம் வாழ்க்கை முழுவதும் அவர்களுடனே தங்கி விட்டது.

அபியின் அம்மா அவன் ஐந்தாவது படித்துக் கொண்டிருக்கும் பொழுது அபியின் அப்பாவின் வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் கடவுள் கிட்ட போய் விட்டதால் அவன் வேறு ஊருக்கு வர வேண்டியதாகி விட்டது.

புது பள்ளி புதிதான சூழ்நிலை முதல் நாள் முதல் பாடம் சரித்திரம். அபி ஒரு குட்டி ஜீனியஸ் என்று அவன் அம்மா அவனை எப்பவும் கொஞ்சுவார் அதில் அவனுடைய பள்ளி ஆசிரியர்களுக்கும் அவ்வளவு கருத்து வேறுபாடு இல்லை. அவன் இருக்கும் வரை அவன் வகுப்பில் யார் இரண்டாவது ரேங்க் என்பதற்கு மட்டுமே போட்டி இருக்கும். அபியை மிஞ்ச ஆள் இல்லை என்பதில் யாருக்குமே இரண்டாவது கருத்தே இல்லை. அதிலும் அவனுக்கு மிகவும் பிடித்த பாடம் சரித்திரம்.

சரித்திர ஆசிரியருக்கு பழுத்த பழம் முதல் நாளே பாடம் ஆரம்பித்தால் விடுமுறை முடிந்து வந்திருக்கும் மாணவர்களுக்கு அது அயர்ச்சியாக இருக்கும் என்பதை தெரிந்திருந்தது. ஆகவே முதல் நாளே போட்டி ஒன்றை வைத்து பரிசு கொடுத்தால் மாணவர்களை உற்சாகப் படுத்தலாம் என்று திட்டமிட்டிருந்தார்.

போட்டி என்று வந்து விட்டால் யார் வெற்றி பெறுவார் என்பதும் சரித்திர ஆசிரியருக்குத் தெரியும் இருந்தாலும் போட்டி வைத்தால் மாணவர்கள் உற்சாகப் படுவார்கள் அது மட்டும் இல்லாமல் சென்ற வருடம் படித்ததை அப்படியே நினைவு படித்திய மாதிரியும் இருக்கும் என்று நினைத்திருந்தார்.

முதல் கேள்வியாக இந்திய தேசிய காங்கிரஸைக் கண்டு பிடித்தவர் யார் என்று கேட்டார்.

"ஹுயூம்" என்று பதில் வர வழக்கமாக கேட்கும் பெண் குரல் இல்லாமல் ஆண் குரல் கேட்கிறதே என்று தன் மேஜையை விட்டு நிமிர்ந்து பார்த்தார் சரித்திர ஆசிரியர். அவர் மட்டும் அல்ல வகுப்பில் உள்ள பலரும் அபியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களும் வழக்கமாக கேட்கும் கல்பனாவின் குரலைத் தான் எதிர் பார்த்து இருந்தார்கள்.

ஏன் எல்லோரும் இப்படிப் பார்க்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டே அப்படியே திரும்பி எல்லோரையும் பார்த்த அபியின் கண்கள் அவனுக்கு முன்னால் உட்கார்ந்து யார் என்று எட்டிப் பார்க்க முயற்சித்துக் கொண்டிருந்த பெண் கண்களுக்குத் தெரிந்தாள்.

"கேள்வி கேட்டால் யாருக்குத் தெரியுமோ அவர்கள் கையை தூக்கினால் போதும்" என்ற சரித்திரப் பேராசிரியரின் குரல் அனைவரையும் மறுபடியும் அவரை பார்க்கும் படி வைத்தது.

"மூன்றாம் பானிபட் யுத்தம் எந்த ஆண்டு துவங்கியது?" இரண்டு கைகள் உடனே மேலே சென்றன. முதல் கேள்விக்கு பதில் அபி சொன்னதால் "கல்பனா" என்று சொன்னார் சரித்திர பேராசிரியர் "January 14, 1761" என்று வந்தது பதில். அபிக்கு உடனே ஒரு எரிச்சல் சரித்திர ஆசிரியர் மீது. எனக்கு பதில் தெரியுன்னு கையைத் தூக்கி இருக்கறேன் என்னைக் கேட்காம என்ன இந்தப் பொண்ணைக் கேட்டுகிட்டு? அடுத்த கேள்வி "தியோசோபிக்கல் சொஸைட்டி இந்தியாவில் ஆரம்பித்தது யார்" இரண்டு கைகள் வழக்கம் போல மேலே உயர்ந்தன. இந்த முறை "அபி" என்றார் சரித்திர ஆசிரியர். "ஆல்காட், பிளவாட்ஸ்கி" என்று சொன்னான் அபி. இந்த முறை எரிச்சல் கல்பனாவுக்கு. இப்படி சரித்திர ஆசிரியர் கேள்வி மேல் கேள்வி மாற்றி மாற்றி கேட்க சரித்திர ஆசிரியர் மேலிருந்த எரிச்சல் எல்லாம் எரிச்சலாகவும் கோபமாகவும் கல்பனாவுக்கு அபி மேலும் அபிக்கு கல்பனா மேலும் திரும்ப ஆரம்பித்தது.

வகுப்பின் இறுதியில் சரித்திர ஆசிரியர் அவருடைய வகுப்பில் இரண்டு ஜீனியஸ் இருப்பதை கண்டு மனம் மகிழ்ந்தார். அவருக்கு தெரிந்து விட்டது இந்தப் போட்டி இந்த வகுப்புடன் முடிந்து விடாது என்பதில் மேலும் மகிழ்ச்சி அடைந்தார்.

இவர்கள் இருவரின் திறமையும் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் வெகு சீக்கிரம் பரவி விட்டது. இருவரும் போட்டி போட்டுக் கொண்டு இருவரும் ஆசிரியர்களுக்கு மேல் தெரிந்து கொண்டு விட ஆசிரியர்களின் பாடு திண்டாடமாகி விட்டது.

இது இன்னொரு வகைப் போட்டியையும் தூண்டி விட காரணமாகி விட்டது. அவர்கள் வகுப்பில் இருக்கும் ஆண்கள் அனைவரும் அது வரை கல்பனாவின் திறனுடன் போட்டி இட முடியாததால் சில ஆசிரியர்கள் பெண் பிள்ளைகளிடம் தோற்கிறீர்களே என்று சொல்லி வர, அபியின் வரவு அவர்களுக்கு வரப் பிரசாதமாகி விட்டது. எப்பொழுது அபி கல்பனாவை விட போட்டியில் முன்னேறுகிறானோ அப்பொழுது எல்லாம் வகுப்பில் இருக்கும் ஆண் பொடுசுகள் பெண்களைச் சீண்டுவதும் அதனாலேயே கல்பனா முண்ணனியில் இருக்கும் சமயம் பெண் பிள்ளைகள் ஆண்களை சீண்டுவதுமாக இந்தப் போட்டி பொறாமை எப்பொழுதும் உச்சத்தில் இருந்தது.

இதற்கு நடுவில் அபி ஒரு ஈர்ப்புக்குறிய ஆணாகவும். பள்ளியில் உள்ள அனைவருக்கும் காதல் பற்றிய சிந்தனைகளை உண்டாக்கும் அளவு அழகிய பெண்ணாகவும் மாறுவதை இருவருமே அறிந்திருக்கவில்லை. இவர்களுக்கு இடையில் இருக்கும் போட்டி தான் முக்கியமாகப் பட்டது இருவருக்குமே.

இப்படியே பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கல்பனா ஒரு மார்க் அதிகமாக எடுத்தது, அபி +2 பொதுத் தேர்வில் ஒரு மார்க் கல்பனாவை விட அதிகமாக எடுத்தது என்று இருவருமே தமிழகத்தின் முதல் நிலை பொறியியல் கல்லூரியில் இருவரும் காலெடுத்து வைத்தார்கள்.

இருவருக்குமே ஆச்சரியம் என்னவென்றால் இருவருமே பொறியியல் பாடம் தேர்வு செய்தது தான். இருவருமே மருத்துவத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இருவருமே அதைத் தேர்வு செய்யாமல் ஒரே பொறியியல் கல்லூரியில் ஒரே பாடப் பிரிவை தேர்தெடுத்திருப்பது ஆச்சர்யமளித்தது. ஆனால் இன்னும் நான்கு வருடம் இவனுடனே போட்டி போட வேண்டும் என்பது மேலும் எரிச்சல் அளித்தது.

அதுவும் இவர்களின் போட்டி உச்சத்தில் இருந்தது +2 பொதுத் தேர்வின் சமயம்தான். அதுவும் அபி கல்பனா தன்னை விட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்திருந்தது அவனைக் காயப் படுத்தி இருந்தது. பொதுத் தேர்வு என்று வரும் சமயம் ஆசிரியரை சோப்பு போட்டு கல்பனா அளவுக்கு மார்க் எடுக்க முடியவில்லை என்று அவளது தோழியர் அடித்த கமெண்ட் அவனைப் புண்படுத்தி இருந்தது.

ஆகவே கஷ்டப்பட்டு ஒரு மார்க் +2 தேர்வில் அதிகம் பெற்று விட அவன் நண்பர்கள் கல்பனாவின் தோழிகளைப் பார்த்து அடித்த கமெண்ட் கல்பனாவை மேலும் புண்படுத்தி இருந்தது.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல் இருந்தால் போதும் என்ற சூழ்நிலை உருவாகி இருவரும் வேறு வேறு கல்லூரியில் சேர்வோம் என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரே கல்லூரியில் பார்த்துக் கொண்டது ஒரு ஆயாசத்தை ஏற்படுத்தியது.

அபி தன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வெளிநாடு சென்று மேல் படிப்பு படிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

ஆனால் அவன் கல்லூரி சேர்ந்த முதல் நாளே அந்த எண்ணம் மாறி விட்டது. அந்தக் கல்லூரியுடன் ஒரு நிறுவனம் இணைந்து செயல் பட்டு வந்தது. அந்த நிறுவனம் வருடா வருடம் அந்தக் கல்லூரியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவி வந்தது. எல்லா முண்ணனி தொழில் நுட்பங்களும் அந்தக் கல்லூரியில் இருப்பதற்கு அந்த முண்ணனி நிறுவனமே காரணியாக இருந்தது. அந்த நிறுவனம் அந்தக் கல்லூரியில் இருந்து ஒரே ஒரு மாணவரை மட்டும் வருடா வருடம் எடுப்பார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் வகுப்புகள் ஆரம்பிக்கும் முன் அந்த நிறுவனத்தின் தலைவர் புதிதாக தொடங்கும் வகுப்பில் ஒரு சின்ன உரை நிகழ்த்தி ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து கொள்ளச் சொல்லுவார். அதோடு ஏன் அந்த மாணவரை இந்த நிறுவனம் கவனிக்க வேண்டும் என்ற கேள்வியும் வைக்கப்படும். அறிமுகத்தின் சமயத்தில் இருந்தே அந்தக் நிறுவனம் மாணவர்களை கவனிக்கத் தொடங்கி விடும்.

அபிக்கு இதில் ஆர்வமே இல்லை அவன் ஆர்வமெல்லாம் அவன் மேல்நாட்டுக்குச் சென்று மேல்படிப்பு படிப்பதில் தான் இருந்தது.

கல்பனா வழக்கம் போல முதல் வரிசையில் அமர்ந்திருந்தாள். இந்தப் பெண்களுக்கு முதல் வரிசையில் அமர்வது குறித்து அப்படி என்ன ஆர்வமோ என்று நினைத்துக் கொண்டான் அபி. கல்பனாவை நிறுவனத் தலைவர் அறிமுகம் கொடுக்கச் சொன்னதும் மிடுக்காக நடந்து சென்ற கல்பனா "என் பெயர் கல்பனா. என் தந்தையார் பால்ராஜ், அம்மா சுசிலா. எனக்கு வாழ்க்கையில் இரண்டாவதாக வருவது பிடிக்கவே பிடிக்காது. ஒரே முறை தான் இரண்டாவதாக வந்திருக்கிறேன். இனி மேல் அப்படி வரும் எண்ணம் இல்லை. உங்கள் நிறுவனம் முதல் வரும் மாணவர்களை எடுக்கும் என்று எனக்குத் தெரியும். ஆகையால் தான் சொல்கிறேன் என்னை உங்கள் நிறுவனம் எடுக்க வேண்டும்." என்று சொல்லி விட்டு அமர்ந்தாள். அவளுடைய தன்னம்பிக்கையைக் கண்டு அங்கு உள்ளவர்களுக்கு ஆச்சர்யம் மிகுந்தது ஒருவனைத் தவிர.

அடுத்து அபி வந்து பேசும் சமயம் அவனுக்கு மேல்படிப்பு மேல் இருந்த ஆர்வம் அனைத்தும் காணாமல் போயிருந்தது. தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டு "நான் கடைசியாக வந்தத் தேர்வில் முதலாக வந்தவன். எனக்கு இரண்டாவதாக போவது பிடிக்காது. ஆகவே முதல் மாணாக்கனாகப் போவது நானே. எனவே உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த நபர் நானே" என்று சொல்லி அமர்ந்தான்.

பிறகு நடந்த தேர்வு, பேச்சுப் போட்டி, விவாத மேடைகளில் அனல் பறக்க ஆரம்பித்தது. இருவரும் மட்டுமே போட்டி இருக்கும் என்று தெரிந்தாலும் இருவரின் பகையும் கல்லூரி முழுக்க பரவி இருந்ததால் இவர்கள் கலந்து கொள்ளும் போட்டிகளில் கூட்டமும் மிகுந்தது.

இப்படி மூன்று ஆண்டுகள் சென்ற நிலையில் கல்பனாவின் அப்பா திடீர் என மரணமடைந்தார். கல்லூரி முழுக்க தன் அழகாலும் அறிவாலும் நண்பர்களைப் பெற்றிருந்த கல்பனாவின் தந்தை மரணத்திற்கு அவனுடைய வகுப்பில் இருந்த அனைவரும் சென்றார்கள். அபியும் உடன் சென்றான். முதல் முறையாக தன் தந்தையின் மரணத்தின் பொழுதுதான் கல்பனாவை போட்டியாளராகப் பார்க்காமல் ஒரு சராசரி மகளாக மனுஷியாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அழுகையுடனே எல்லா ஏற்பாடுகளையும் மேற்பார்வை செய்து கொண்டு இருக்கும் கல்பனாவைப் பார்க்கும் பொழுது ஏனோ அவனுக்கு அவன் அம்மா ஞாபகம் வந்தது. கல்பனாவுக்கு அவ்வளவு சோகத்திலும் அபி முன் அழுகிறோமே என்ற கவலை இருந்தது. அதனால் அவன் பக்கம் இரண்டு மூன்று முறை திரும்பிப் பார்க்க அவன் முகத்தில் தெரிந்த சோகம், கரிசனம் எல்லாம் உண்மையாகப் பட முதன் முறையாக அவனை வேறு விதமாக பார்க்க தொடங்கினாள்.

காரியம் எல்லாம் முடிந்து வந்த சில நாட்களிலேயே ஒரு தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. இருவருக்கும் மதிப்பெண்களில் அதிக இடைவெளி இல்லாததால் இருவரும் மீண்டும் கடினமாக உழைக்கத் தொடங்கினர்.

கல்லூரி அருகே ஒரு பூங்கா இருக்கிறது. பொதுவாக மாணவர்கள் அங்கு சென்று அமர்ந்து கொண்டிருப்பது உண்டு.

ஒரு சமயம் அந்த சமயம் நடந்து போய்க் கொண்டிருந்த அபிக்கு பெண் ஒருத்தி விசும்புவது போலக் கேட்டது. என்னவென்று அந்தப் பக்கம் சென்று பார்த்தால் கல்பனா அங்கு அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அபிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை தந்தை இறந்த சமயம் கூட இந்தப் பெண் இவ்வளவு அழுததில்லையே என்னவாயிற்று என்று அருகே சென்று அமர்ந்தான்.

யாரோ பக்கத்தில் வந்து அமர்ந்ததை உணர்ந்த கல்பனா சட்டென்று தன் அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள் அங்கு அபி உட்கார்ந்திருந்ததைக் கண்டு அவளுக்கு வெட்கமாக போய் விட்டது.

தன்னை நிலைப் படுத்திக் கொண்டு இரண்டு நிமிடம் அங்கு அமர்ந்திருந்தாள். பின் எழுந்து செல்ல முயற்சிக்க சட்டென அபி "எனக்கும் எங்க அம்மா ஞாபகம் அடிக்கடி வரும்" என்று கூறினான்.

எழுந்து செல்ல முயற்சித்த கல்பனா அப்படியே உட்கார்ந்தாள். "எனக்கு 10 வயசு இருக்கும் போதே எங்க அம்மா இறந்துட்டாங்க. அம்மாதான் எனக்கு எல்லாம் ஸ்கூலைத் தவிர எங்க அம்மா பின்னாடியே தான் சுத்துவேன். கடைக்கும் எங்க போனாலும் என்னை விட்டுட்டே போக மாட்டாங்க." என்ன இது அவன் கண்களிலும் கண்ணீரா? இல்லை நம்ம கண்ல கண்ணீர் இருக்கறதுனால அப்படித் தெரியுதா என்று யோசித்தாள் கல்பனா. "எங்க அம்மா என்னை விட்டுப் போன சமயம் தான் எனக்கு வாழ்க்கையிலேயே ரொம்ப கஷ்டமான நேரம் எனக்கு. எனக்கு எல்லாப் பிரச்சனைகளும் வந்தது அந்த சமயம்தான்" என்று சொல்லி ஒரு இடைவெளி விட்டு "உன்னோடு மீட் பண்ணிணது கூட அந்த சமய்த்தில தானே?" என்று ஒரு சின்ன புன்னகையுடன் சொன்னான்.

கல்பனாவிற்கும் புன்னகை வந்தது அடக்கிக் கொண்டு போலிக் கோபத்துடத்துடன் "என் வாழ்க்கையில கூட ஏழரை நாட்டுச் சனி அப்போதான் ஆரம்பிச்சிருக்கணும்" என்றாள்.

"அறிவியல் இந்த அளவு வளர்ந்திருச்சு என்ன இன்னும் சனி, வெள்ளின்னுட்டு இருக்கே நீ" என்றான் அபி. உடனே "எந்த அளவு வளர்திருச்சு? சிங்குலாரிட்டின்னு ஒரு சிக்கல். Evolutionல probablity கம்மி இப்படி எல்லாத்திலயும் பதில் தெரியாம முழிச்சுட்டு தானே இருக்கு?" என்றாள் கல்பனா.

இப்படியாக இவர்களின் விவாதம் தொடர்ந்தது. விவாதம் முழுவதும் அபியின் புன்னகையின் நீளம் அதிகமாகிக் கொண்டே தான் சென்றது. கல்பனாவிற்கும் மனது லேசான மாதிரி இருந்தது. கடைசியாக இருவரும் ஒருவரை மற்றொருவர் திட்டிக் கொண்டே பிரிந்து சென்றார்கள். அடுத்த ஒரு வாரம் அந்த கல்லூரியே அவர்களை வேடிக்கை பார்க்கும் அளவுக்கு இருவரும் பக்கத்தில் அமர்ந்து விவாதிப்பதும் கடைசியாக சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து செல்வதுமாக இருந்தார்கள். முதலில் இவர்கள் இருவருடைய நண்பர்களும் சண்டையா இருக்கே பிரச்சனையாகி விடுமோ என்று பயந்தார்கள். ஆனால் ஒவ்வொரு தடவை தனியாக செல்ல வேண்டிய சமயம் வரும் போது சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து செல்வதை ஆச்சர்யமாக பார்த்தார்கள்.

மேலும் படத்திற்கு செல்வது என்ற ஆச்சர்யகரமான செயல்களையும் இருவரும் செய்ய ஆரம்பித்தார்கள். இதற்கு முன் இவர்கள் படத்திற்கு கூப்பிட்டால் அவன் என்னை விட அதிகமாக படித்து விடுவானோ என்றோ இல்லை அவள் என்னை மிஞ்சி விடுவாளோ என்றோ செல்லாமல் இருந்தார்கள். ஆனால் இருவருமே செல்வதால் ஒருவர் மற்றொருவரை விட அதிகமாக முன்னேறி விட முடியாது என்று நம்பிக்கையில் செல்ல ஆரம்பித்தார்கள்.

அந்த முறை தேர்வு முடிவுகள் வரும் சமயமும் இருவரும் மற்றவர்களை விட பல மடங்கு அதிக மதிப்பெண் எடுத்திருந்ததைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். அவர்களுக்குத் தெரியாது ஒவ்வொரு முறையும் இவர்கள் இருவரும் தேர்வுக்கு பாடம் ஆரம்பிக்கும் முதல் நாளே தயாராக இருந்ததும், மற்றவர் மேல் கொண்டிருந்த போட்டியினாலேயே திரும்ப திரும்ப படித்ததையும்.

ஒவ்வொரு முறை இவர்கள் சந்திக்கும் பொழுதும் பயங்கரமாக சண்டை போடுவதும் உடனே மறுபடியும் ஒன்று சேர்ந்து கொள்வதும் எல்லோருக்கும் ஆச்சரியம் அளித்தது.

இது இவர்கள் இருவருக்குள் இருக்கும் போட்டியை குறைக்கவில்லை. இருவரும் முன் போலவே ஆக்ரோஷத்துடன் போட்டி போட்டுக் கொண்டார்கள்.

ஆனால் பொறாமை இருக்கவில்லை. இப்பொழுது எல்லாம் இருவரும் போட்டியில் எந்த அளவு போட்டியில் வெல்ல வேண்டும் என்று எண்ணிணார்களோ அதே அளவு தோற்க வேண்டும் என்றும் விரும்ப ஆரம்பித்தார்கள்.

இதற்காக வென்ற பின் ஒருவரை ஒருவர் நக்கல் அடிப்பதை நிறுத்திக் கொள்ளவில்லை. ஆனால் மற்றொருவர் வென்றதால் மனம் மகிழ்ந்த ஒருவரும், மற்றவர் தோற்றதால் லேசாக கவலை கொண்ட மற்றொருவரும் இருந்ததால் எல்லா வெற்றிகளும் இவர்களது வெற்றிகளானது, எல்லாத் தோல்விகளும் இவர்களின் வெற்றியானது.

இப்படி அந்த நிறுவனம் நடத்தும் நேர்முகத் தேர்வு நாள் நெருங்க நெருங்க எல்லோருக்கும் தெளிவாகி விட்டது போட்டி இவர்கள் இருவருக்கும் தான் என்று ஆகவே இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று பெரிய விவாதமே நடக்க ஆரம்பித்து விட்டது.

அதற்கு முந்திய நாள் தான் கல்பனா அபியை சந்தித்து முதல் வரிகளைக் கூறினான்.

கல்பனா என்ன சொல்கிறான் என்று நிமிர்ந்து பார்த்தாள்.

"உன் கூட இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் நான் சண்டை போட்டுகிட்டே இருக்கேன். என்னோட கருத்துகளுக்கு இவ்வளவு எதிர்பதமா இருக்கற ஆளை நான் பார்த்ததே இல்லை. நீ என்னை எடுத்து எறிஞ்சு பேசறது, மட்டமா எனக்கு ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசறது, உனக்கு இருக்கற அகம்பாவம் எல்லாத்தையும் நினைச்சா எனக்கு எவ்வளவு கோபம் வருது தெரியுமா? நான் எதாவது புத்திசாலித் தனமா சொன்னாலும் அதுக்கு அதை விட புத்திசாலித்தனமா எதாவது சொல்லி விவாதத்துக்கு ஒரு புல் ஸ்டாப்பே வைக்க விடாம செய்யறதை நினைக்கும் போது பயங்கர கோபம் வருது." என்று சொல்லி ஒரு சின்ன இடைவெளி விட்டான்.

கல்பனா அவன் இன்னும் முடிக்கவில்லை என்று எப்படியோ தெரிந்தது அதனால் அமைதியாக இருந்தாள்.

"ஆனால் உன்னை விட்டு பிரிஞ்சதுக்கு அப்புறம் உன்னைப் பத்தி யோசிக்காம இருக்கவே முடியல. என் மேல கோபப் படும் போது கண்ணை பெருசாகி அதை உருட்டுவியே அதை ஏன் நினைச்சு நினைச்சுப் பார்க்கறேன்னு தெரியல. என்னை எதாவது நல்லா திட்டீட்டு இருக்கும் போது பாதில அந்தத் திட்டை நிறுத்த உதட்டைக் கடிச்சுக்குவியே அதையும் நினைச்சுப் பார்க்காம இருக்க முடியல.நாம பேசும் போது நீ பேசறதை கவனிக்காம உன்னோட கை முடியை ஒதுக்கி விடுதே அந்த அழகை ரசிக்கறனே அது ஏன்னு தெரியல. உன் கூட நடக்கற சமயம் வேற எதுவுமே இந்த உலகத்தில தேவை இல்லைன்னு தோணுதே அது ஏன்னு தெரியல. எனக்கு நீ வேணும் என்னோட தனிமை ஒரு சிறைன்னு உன்னைப் பார்த்ததில் இருந்து தான் தெரிஞ்சுகிட்டேன். அந்தச் சிறைல இருந்து எனக்கு விடுதலை வேணும்" என்றான் அபி.

புண்கண்ணீர் பூசல் தருமா தெரியலை ஆனால் கல்பனாவின் கண்களில் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. ஆனா அதெல்லாம் பத்திக் கவலைப் படாம "என்ன நீ லவ் பண்ணறேன்னு சொன்ன நான் அப்படியே திரும்ப சொல்லீருவேனா? லவ் பண்ணறேன்னு ஒரு ரொமான்டிக்கா கூட சொல்ல தெரியல. கோபப்படுறேன் திட்டறேன்னு சொல்லீட்டு உன்னைப் போய் லவ் பண்ணணுமா? சரியான லூஸ் நீ" என்றெல்லாம் திட்டிக் கொண்டே அவன் அருகில் வர இருவரும் அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.

அடுத்த நாள் இருவருக்குமே வேலை கிடைத்தது என்று சொன்னால் கல்பனாவுக்கு கோபம் வந்து விடும். முதலில் கல்பனா பெயர் சொன்னதால் அவளுக்குத் தான் வேலை கிடைத்ததாம் அப்புறம் போனாப் போகுதுன்னு அவனுக்கும் கொடுத்தார்களாம். இப்படித் தான் சொல்லி வருகிறாள். அபிக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை அவன் இப்பொழுது தேனில் குளிக்கும் வண்டாகி விட்டானே.

11 comments:

')) said...

ஒரு ஜெப்ரி ஆர்ச்சர் கதையை ஞாபகப் படுத்துது. அதுவும் அதில் பாதி மட்டும் படித்த ஒரு உணர்வு. முடிந்தால் அதை படித்து பாருங்கள். அவருடைய சிறுகதை தொகுப்பில் வந்தது.

')) said...

அட்டகாசமா இருக்குங்க... இன்னும் நிறைய எழுதுங்க... வெற்றி பெற வாழ்த்துக்கள்...

')) said...

ஏனுங்க, அபி பொண்ணு பேர் மாதிரி தெரியுதுங்களே ;)

அப்பறம் இந்த மாதிரி எல்லாம் படிப்புல போட்டி போட கூடாது. பசங்களுக்கு அவமானம்னு அபிட்ட சொல்லிடுங்க ;)

')) said...

குமரன் ... !

நீண்ட கதை...! கொஞ்சம் *குஷி* யாக இருக்கு !

வெற்றி பெற வாழ்த்துக்கள் !
:)

')) said...

//என்ன இது அவன் கண்களிலும் கண்ணீரா? இல்லை நம்ம கண்ல கண்ணீர் இருக்கறதுனால அப்படித் தெரியுதா என்று யோசித்தாள் கல்பனா//
குமரன், ரொம்ப நல்ல கதை மிக இயல்பாக வந்திருந்தது.

கொத்ஸ் -> நீங்கள் சொல்வது "Old Love" கதைதானே மிக அருமையான கதை அந்த தொகுப்பிலே எனக்கு மிகப் பிடித்த கதை அது. அப்புறம் brittannia little hearts விளம்பரம் வருமே தன்னுடைய பிஸ்கட் பாக்கெட் விட்டுட்டு அடுத்தவனுத தன்னுதுன்னு நினச்சு சாப்டுவாங்களே அதுகூட J.A வின் ஒரு கதையின் தழுவல்தான்!

')) said...

வெட்டிப்பயல் நன்றீங்க வருகைக்கு. அபி ஆமா சுருக்கமா சொன்னா அபிராமி அது மாதிரி இருக்கு. ஆனா அபிஷேக், அபினாஷ் இந்த பேரெல்லாம் கூட சுருக்கமா ஔஅபின்னுதான் சொல்றது.

கோவி. நன்றி குஷியும் இந்தக் கதைக்கு ஒரு இம்பிரஷன்தான்.

')) said...

இலவசக் கொத்தனார் ராசுக்குட்டி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இலவசக் கொத்தனார், ராசுக்குட்டி அந்த JA கதையைப் படித்திருக்கிறேன். அந்தக் கதை குஷி படம் இரண்டும் இந்தக் கதைக்கு ஒரு தூண்டுகோல்.

லவ்ல போட்டி போடக் கூடாது ஒருவருக்கு இன்னொருத்தர் விட்டுத் தந்தால் தான் காதல் என்பது போல எல்லா இடங்களில் சொல்லப் பட்டிருக்கும். ஆனா ரெண்டு பேருக்குள்ளயும் இருக்கற காதல் போட்டிக்கு எல்லாம் அப்பாற்பட்டு இருக்கும் என்பதைத் தான் சொல்ல வந்தேன். காதல் பொறாமையை வென்று விடும் என்பது போல எனக்குத் தோன்றியதை எழுதி இருக்கிறேன்.

')) said...

ஏனுங்க...
நேத்து போட்ட Template நல்லா இருந்துச்சு :-)

மக்கா இந்த கதைக்கு இவ்வளவுதான் பின்னூட்டமா???

குமரன், கொஞ்சம் விளம்பரப்படுத்தலாமா???

')) said...

குமரன் ஐயா,
அசத்திட்டிங்க போங்க.செயம் உங்கப் பக்கம்தான்.
இத்தனை அழகா எழுதியிருக்கீங்களே,
உங்களோட உண்மை கதையா?.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

')) said...

நல்ல கதை. ஆனால், சற்று நீளம் ஜாஸ்தி.
கொஞ்சம் குட்டியா இருந்திருந்தா இன்னும் ஜாலியா இருந்திருக்கும் படிக்க.
போட்டிக்கு நல்ல கதை.

')) said...

நல்ல கதைங்க குமரன்.

வாழ்த்துக்கள்!