Monday, August 07, 2006

செம்புலப் பெயல் நீர்

எனக்கு மிகவும் பிடித்த கவி வரிகளை ஒட்டி தேன்கூட்டின் போட்டிக்காக இந்தப் பதிவு.

முதலில் என் கண்கள் கண்டது உன் கண்களை.

என் அன்னையின் மேலுள்ள பூ வாசம் போன்ற உன் வாசம் என்னையடைந்தது பின்புதான்.

வாசம் என்னை அடைவதற்குள் மனதுள் வந்தடைந்து விட்டாய்.

கண்கள் கலந்த சமயத்தில் இருந்து உன் வாசனையை நான் கண்டறிவதற்குள்தான் எத்தனை மாற்றங்கள்.

என்னைச் சுற்றி எல்லாமே குழந்தையின் சிரிப்பைப் போல மாசு மருவில்லாமல் கள்ளம் கபடமற்றதாகி விட்டதே.

நான் கேட்கும் ஓசை அனைத்துமே ராஜாவின் மெல்லிசையைப் போன்றதொரு அற்புதமான சுவரங்களுடன் ஒலிக்கிறதே.

புள்ளியாய் இலக்கில்லாமல் இருந்த வாழ்க்கை ரங்கோலியாய் மாறி வண்ணச் சிதறல்களுடன் கவித்துவமாகி விட்டதே.

மாமலையும் மடுவாவது கடைக் கண் பார்வையால் தான் என்று சொன்னவரின் கல்லறையில் சென்று கடைக்கண் பார்வை தேவையில்லை அவள் கண் என் பார்வையில் பட்டதே போதும் என்று உரக்க சொல்ல தோன்றுகிறது.

வாசம் நாசி தொட்ட கணம் சர்வ நாடியும் நிறைந்தாய்.

இங்கு என்ன நிகழ்கிறது உன் கண்களில் கலங்கி நிற்கிறேனே ஏன்? உன்னை யாரென்றே அறியேன். உன் கண்களை என் கண்கள் அறியும் உன் வாசனை என் நாசி அறியும் இதனைத் தவிர வேறு ஒன்றும் அறியேனே.

போன ஜென்மத்து உறவா? விட்ட குறை தொட்ட குறையா? எதனால் இந்த மாற்றம்? உன் தந்தை இருக்கிறார் இந்த உலகில் என்று என் தந்தை தான் அறிவாரா? இல்லை என் தந்தை இவ்வுலகில் இருக்கிறார் என்று உன் தந்தை அறிவாரா?

இவர்கள் ஒருவர் இருப்பதை ஒருவர் அறியாமல் இருந்தாலும் நீ இருக்கிறாய் என்று நான் கண்டிப்பாக அறிந்தே இருந்தேன். கவிதைகளின் உவமைகளிலும், கதைகளின் வர்ணணைகளிலும், திரை அரங்குகளில் நெஞ்சைத் தொடும் காட்சிகளிலும் உன்னை உணர்ந்திருக்கிறேன். இன்றுதான் அந்த உணர்வுக்கு ஒரு உருவம் கிடைத்திருக்கிறது எனக்கு.

கண்கள் கலந்ததுமே காதலா? நம் குணங்கள் ஒத்துப் போகுமா? நம் விருப்புகள் என்ன வெறுப்புகள் என்ன கண்டதும் காதல் சரியா? உன்னைப் பற்றி என்ன தெரியும் எனக்கு? பெயர் கூடத் தெரியாதே பின் எப்படி இந்த காதல் சரியாகும்?

மழை செம்மண் பூமியை அடையும் சமயம் மழை யோசித்ததா மண்ணின் தன்மைகளைப் பற்றி? எப்பொழுதோ ஒட்டி உறவாடிக் கொண்டிருந்த இந்த மண்ணும், நீரும் தற்காலிகமாக பிரிந்து மழையாகி வந்து இன்று கலப்பது போல நம் நெஞ்சங்கள் இங்கு கலக்கின்றது .
1000 வருடங்களாக மாறாதிருக்கும் ஒரே உணர்வு காதல்

ரத்தத்தாலான உறவுமில்லை
முத்தத்திலான உறவுமில்லை
பழக்கத்தாலான நட்புறவில்லை
அன்புடை நெஞ்சம் கலக்கும் இவ்வுறவு
இக்கவி சொல்லும் செம்புலப் பெயல் நீர் போலத்தான்

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே..."

8 comments:

')) said...

:)

')) said...

பாண்டு கண்ணுக்கு தெரியாத அளவுக்கு சிறுசாயிருக்குங்க...

படிக்கவே கோராமையா இருக்கு...

')) said...

குமரன் ... உணர்வுகள் தேடும் உறவு ... அற்புதமாக இருக்கிறது ... ஓட்டு போடுவேன் உங்களுக்கும் :)

')) said...

ரவி அடுத்த பதிவிலிருந்து சரி பண்ணீடுறேன். என்ன எங்கே போனாலும் ஒரு ஸ்மைலி?

ரொம்ப நன்றி கோவி.

')) said...

நல்லதொரு பதிவு. ஆழமான உறவு புலப்படுகிறது. கண்டிப்பா ஓட்டு போடுறேன்.

')) said...

நன்றீங்க ஜெஸிலா

')) said...

குமரன் உணர்வுக்குவியல் போங்க

எத்தனை காலங்களானாலும் மாறாதது காதலென்பதற்கு சாட்சியமா இது

தலைப்பும் செம்புலப்பெயல் நீர்
முடிவிலும் பாடல்

')) said...

முதல் முறையாக வந்திருக்கிறீர்கள் ரொம்ப நன்றிங்க மதுமிதா...