Sunday, September 17, 2006

ஒரு மாலை இள வெயில் நேரம்

தமிழ் மணம் அறிமுகமான சமயத்தில் இருந்து 3 மாதங்களுக்கு முன் வரை மும்பையில் இருந்ததால் எந்த ஒரு வலைப் பதிவாளரையும் சந்தித்தது இல்லை. பெங்களூர் வரும் வரை எந்த ஒரு வலைப் பதிவாளருடனும் தொடர்பு கொண்டதும் இல்லை.

மேலும் சிறப்பான எழுத்தாற்றல் இல்லாததாலும், வலை அரசியலில் சார்பு நிலை எடுக்காமல் இருந்ததாலும் அதிகமாக வலைப் பதிவாளர்களுடன் தொடர்பு இருந்ததில்லை.

வலைப் பூக்களில் அரசியல் இருக்கலாம், சண்டைகள் இருக்கலாம் அது எல்லை மீறியும் செல்லலாம் இருப்பினும் திராவிடர், பிராமிணர், ஹிந்து, முஸ்லீம், இது எதிலும் சாராதவர் என்று குழு குழுவாக பிரிந்து செயல் படும் அனைவரையும் இணைப்பது தமிழ் மேல் நம் அனைவருக்கும் இருக்கும் ஈர்ப்புதான்.

என்ன பிரிவினைகள் இருந்தாலும் தமிழ் தாயின் குழந்தைகள் என்று நாமெல்லாம் இணைந்திருப்பதால் அப்படி ஆர்வம் உள்ள அனைவரையும் சந்திக்கும் ஆவல் எனக்குள் இருந்தது.

இது போக வலைப் பதிவுகளில் ஒரு வருடமாக மட்டுமே இருப்பதால் கொஞ்சம் முன்னால் இருந்து இருக்கும் சிலரை சந்தித்து history of blogging தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருந்தேன்.

பெங்களூர் வந்ததில் இருந்து அதற்கு கிடைத்த முதல் வாய்ப்பாக டோண்டு அவர்களின் பெங்களூர் வருகை அமைந்திருந்தது.

பெங்களூர் புதிது என்பதால் எப்படி லால் பார்க் செல்வது என்பதெல்லாம் தெரியாததால் முழித்துக் கொண்டிருந்த எனக்கு சிவ பிரகாசம் அவர்கள் தானும் அந்த வழியாக செல்வதாக கூறியதால் அவரை வீட்டருகே சந்தித்து அவருடன் இணைந்து லால் பார்க் சென்றேன்.

செல்லும் வழியிலேயே டோண்டு அவர்கள் லால் பார்க் வந்து விட்டதாக சிவ பிரகாசம் அவர்களில் கை தொலை பேசிக்கு அழைப்பு வந்தது. ஒரு வழியாக கடைசியாக லால் பார்க் சென்று வண்டியைப் பார்க் செய்த சமயம் சிறிது பதட்டமாகக் கூட இருந்தது.

லால் பார்க் கண்ணாடி வீட்டிற்கு பக்கத்தில் சென்று ஒரு வழியாக கடைசியாக டோண்டு, மியூஸ், மகாலிங்கம் ஆகியோரை சந்தித்தோம். அதன் பின் ஹாய் கோபி, மௌள்ஸ், செந்தழல் ரவி அவருடைய நண்பர் மோகன் குமார் ஆகியோர் வந்திருந்தனர்.

டோண்டு அவர்கள் போட்டோவில் பார்ப்பதை நிறம் கம்மியாக இருந்தார், நிறைய பேசுகிறார். மியூஸ் இவருடைய பின்னூட்டங்கள் சில இடங்களில் மிக புத்திசாலித்தனமாக ஆழமான சிந்தனையுடன் இருக்கும். சில இடங்களில் பைத்தியக்காரத்தனமாக இருக்கும். ஆனால் ஆள் பார்ப்பதற்கு சாதுவாக இருக்கிறார் பிறை வடிவில் ஒரு சந்தனப் பொட்டு வைத்துக் கொண்டு அமைதியாக இருந்தார். இவரை eccentric ஆக கற்பனை செய்து வைத்திருந்த எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது. ஹாய் கோபி அவர்களின் பதிவுகள் எனக்கு பழக்கம் இல்லை ஆனால் மிகவும் நன்றாக பேசுகிறார் jovial டைப் நல்லா அரட்டை அவரோட. ஆனால் எல்லா பேச்சிலர்கள் போலவேதான் இவரும் இருக்கிறார். இதற்கு மேல் அவர் சென்சார் செய்யுமாறு கேட்டுக் கொண்டதால் அவ்வளவுதான். மௌள்ஸ் வலைப் பதிவுகளை ஒரு 15 நாட்களாகத் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார். பைஜாமா ஜிப்பாவில் ஸ்மார்ட்டாக வந்திருந்தார். சிவப் பிராகசம் அவர்கள் வலைப் பதிவுகளில் பின்னூட்டம் மட்டும் இடுபவர் ஒரு ஸ்கூட்டர் வைத்திருக்கிறார் மிக மெதுவாக ஓட்டுகிறார் அவரைத் தொடர்ந்து என்னுடைய பைக்கில் வருவது மிகக் கடினமாக இருந்தது. மகாலிங்கம் அவர்கள் வலைப் பதிவுகளை படிப்பதுடன் சரி என்றும் ஆர்வத்தில் வந்துள்ளதாகவும் கூறினார். அமைதியாக அங்கு நடப்பதை கவனித்து வந்தார். அனுபவம் நிறைந்த அவரைப் போன்றவர்கள் எல்லாம் கூட தமிழ் மணம் படிப்பதை நினைக்கும் பொழுது, இது போன்று எத்தனைப் பேர் படிக்கிறார்கள் என்று எண்ணும் பொழுது தமிழ் மணத்தில் எழுதும் அனைவருக்கும் எத்தனை பொறுப்புகள் உள்ளது என்று தோன்றியது. கடைசியாக செந்தழல் ரவி இவர் இருக்கும் இடமெல்லாம் இருப்பார்கள் அனானி என்பது போல மோகன் குமார் என்ற அனானி நண்பருடன் வந்தார். போட்டோவில் பார்ப்பதை விட இளமையாக இருக்கிறார். வரும் பொழுதே என்னையும், மியூஸையும் என்ன நான் சண்டை போடுற ஆளுங்க எல்லாம் இருக்கீங்களா? சண்டையை ஆரம்பிக்கலாமா என்று கேட்டுக் கொண்டே வந்தார்.

சந்திப்பில் பேசியது டோண்டுவுடனான சந்திப்பில் போண்டா இல்லாமலா ஆகவே போண்டா போன்றவைகள் குறித்து மீண்டும் எழுதுகிறேன்.

9 comments:

')) said...

//டோண்டு அவர்கள் போட்டோவில் பார்ப்பதை நிறம் கம்மியாக இருந்தார், நிறைய பேசுகிறார். //
:))

')) said...

சும்மா பூந்து விளையாடுங்க குமரன் எண்ணம் அவர்களே. ஆல் தி பெஸ்ட்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//மேலும் சிறப்பான எழுத்தாற்றல் இல்லாததாலும்//

சந்திப்பில்தான் அடக்கமாக இருந்திற்களென்றால் எழுத்திலுமா?....

')) said...

//மேலும் சிறப்பான எழுத்தாற்றல் இல்லாததாலும்//

சந்திப்பில்தான் அடக்கமாக இருந்திற்களென்றால் எழுத்திலுமா?....

')) said...

நல்ல தொடக்கம் செந்தில் குமரன்..

இதையா நல்ல எழுத்தாற்றல் இன்மைங்கிறீங்க?! :)

')) said...

ஹைகோபி பேச்சுலர் என்று சொன்னதாக நினைவில்லையே...அவர் பேச்சு இலராகி ஒரு ஆண்டு ஆனதாக அல்லவா சொன்னார் ?

7 மணிக்குள் வீட்டுக்கு போகனும் என்று அடம்பிடித்ததாக நியாபகம்..

சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள்...

')) said...

///
ஹைகோபி பேச்சுலர் என்று சொன்னதாக நினைவில்லையே...அவர் பேச்சு இலராகி ஒரு ஆண்டு ஆனதாக அல்லவா சொன்னார் ?
///

பேச்சிலர்ன்னு தாங்க சொல்லீருக்கேன்.

பேச்சு + இலர் = பேச்சிலர்

"உயிர்வரின் உக்குரல் மெய்விட்டோடும்" நன்னூல் சூத்திரம் படி எழுதி இருக்கேன் :-)))).

')) said...

அட ஆமாம்...நான் சரியா பார்க்காமல் விட்டுட்டேன்..

')) said...

கோவி. கண்ணன், டோண்டு சார் வருகைக்கு நன்றி.
மௌல்ஸ், பொன்ஸ் வருகைக்கு நன்றி நான் சொல்லியிருந்தது என் சுய மதிப்பீடு.