Sunday, September 23, 2007

சிற்சில வருத்தங்கள், ராமர், சிந்தனைகள்

திருமணம் என்பது பல அழகான உறவுகளின் தொடக்கம். திசை இல்லாமல் திக்கித் திரியும் ஆணுக்கும் பிடிப்பும், பெண்களுக்கு பாதுகாப்பு உணர்வும் கொடுக்கும் ஒரு மிக அற்புதமான ஒரு சடங்கு திருமணம்.

கடந்த இரண்டு வருடங்களில் மிக விரைவாக குறைந்து கொண்டிருக்கிறது எங்களுடைய நட்பின் பேச்சுலர் பட்டாளம்.

இந்த இரு வருடங்களில் மிக மகிழ்ச்சியான தருணங்கள் எது என்று யோசித்துப் பார்த்தால் நண்பர்களின் திருமணங்களுக்கு மற்ற நண்பர்களுடன் சென்று மேலும் மற்ற ஊர்களில் இருந்து வந்திருக்கும் மற்ற நண்பர்களைப் பார்த்து பேசித் திரிந்த தருணங்கள் மனதிற்கு வருகிறது.

ஒவ்வொரு கல்யாணமும் ஒவ்வொரு மாதிரி, ஆனால் எல்லாமே ஆண் பெண்ணும் ஒரு அழகான பந்தத்தில் நுழைவது பற்றியது தானே?

இந்த கல்யாணங்களுக்கு செல்லும் சமயம் எல்லாம் நண்பர்களுக்காக மனதில் மகிழ்ச்சி கொண்டாலும் மனதின் ஓரத்தில் சின்ன உறுத்தல்.

4 தோசை வாங்கி 20 பேர் அதில் கை வைத்து 4 தோசையில் 1 தோசையை மேஜைக்கு தாரை வார்த்துக் கொண்டு உணவு உண்ட நாங்கள், 5 Dew வாங்கி 20 பேர் குடித்துக் கொண்டிருந்த நாங்கள்,பழகும் சமயம் நீ செட்டியாரா? கவுண்டரா? வன்னியாரா? இல்லை ஐய்யரா? என்று பார்த்து பார்த்து பழகாத நாங்கள். திருமணத்தில் மட்டும் கவுண்டராய், வன்னியராய், செட்டியாராய், ஐய்யராய் பிரிந்து போகிறோம்.

எங்க ஜாதியில் படித்த பெண்கள் கிடைப்பது மிக கஷ்டம்டா, எங்க கேஸ்ட்ல வேலைக்கு போற பொண்ணுங்க மாப்பிளை பாரின்ல இருக்கணும்ன்னு நினைக்கிறாங்க என்று கல்யாண விஷயத்தில் ஜாதி ஜாதி என்று 5 வருடங்களாக யார் எந்த ஜாதி என்று அறிந்து கொள்ளாத நான் எல்லோருடைய ஜாதியையும் தெரிந்து கொண்டு விட்டேன்.

இதில் இன்னும் வருத்தப்பட வைக்கும் விஷயம் ஏண்டா கல்யாணம் வேற கேஸ்ட்ல பண்ணிக்க வேண்டியது தானே போன்ற கேள்விகள் இது போன்ற சமயத்தில் எழாமலே இருந்து விடுவதுதான்.

ஜாதியை ஒழிக்கவே முடியாதா?

ராமர் விவகாரம் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது. நாசா புகைப்படம் என்ற ஒரு பொய்யான தடயத்துடன் ஒரு அற்புதமான அரசியல் நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மூட மதி கொண்ட மக்கள் பலர் இதற்கு துணையாக பல துணைக்காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

ராமர், கிறிஸ்து, நபிகள் போன்றவர்கள் உண்மையில் இறைவனாகவும் இறை தூதர்களாகவும் இருந்தால் அவர்கள் அனைவரும் வெட்கி தலை குனிய வேண்டும். ஏனெனில் அவர்கள் பேரில் மக்கள் வக்கிரத்தை வெளிப்படுத்தி மனித இனத்துக்கே துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் இதனை தடுத்து நிறுத்தாமல் இருக்கிறார்களே அதனால்.

இந்த மூடத்தனத்தை தடுத்து நிறுத்த இயலாததாலேயே இவர்கள் இறைவனாகவும் இறை தூதுவர்களாகவும் இருக்க முடியாது.

சில நாட்களுக்கு முன்னால் எங்கேயோ படித்த செய்தி ஒன்று விஞ்ஞானிகள் மனிதனின் எண்ணங்களை படித்து அதன் மூலம் வாகனங்களை நகர்த்தும் டெக்னிக்கை கண்டு பிடித்து இருக்கிறார்கள். இந்த டெக்னாலஜி மிக ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது ஆனால் சில காலங்களில் இது எல்லா இடங்களிலும் உபயோகப்படுத்தப்படும் டெக்னாலஜியாகி விடும்.

இது ஸ்டீபன் ஹாகிங்க்ஸ் போன்ற உடல் அசைக்க முடியாத வாய் பேச முடியாதவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும். ஆனால் இந்த டெக்னாலஜியின் உபயோகம் இதனுடன் முடிந்து விடப் போவதில்லை இது சில வருடங்களில் மனிதன் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் ஒரு டெக்னாலஜியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.