Sunday, July 16, 2006

மரணம் தேன்கூடு போட்டி

"எவ்வளவு வெளிச்சமாக உள்ளது" இதுதான் முதலில் எனக்கு தோன்றியது ஆனால் இந்த வெளிச்சம் கொஞ்சம் கூட உறுத்தவில்லையே? வெளிச்சம் அதிகமாக இருந்தால் வெப்பமாக இருக்குமே அதனையும் உணர முடியவில்லையே? வெப்பம் மட்டுமா எதையுமே உணர முடியவில்லையே என்னவாயிற்று? ஆகா நானும் அல்லவா வெளிச்ச வடிவாக உள்ளேன்? ஆனால் என்னைச் சுற்றி உள்ள வெளிச்சத்திற்கும் எனக்கும் எவ்வளவு வித்தியாசம் என் வடிவம் சுற்றி உள்ள வெளிச்சம் எவ்வளவு வெளிச்சமாக இருக்கிறது நான் அந்த அளவு வெளிச்சமாக இல்லையே? ஆ என்ன இது என் எண்ணங்கள் எல்லா இடங்களிளும் எதிரொலிக்கிறதே?"

"எண்ணமே இல்லாத இடம் இது. பூமியில் மண்ணை விட அதிகமாக எண்ணங்கள் இருப்பதால் இங்கு உன் எண்ணம் எதிரொலிப்பதாக தெரிகிறது." பதில் எங்கிருந்து வருகிறது என்று என் எண்ணமும் எதிரொலிக்க பதில் வந்த இடம் என்னருகிலேயே இருப்பதாகப் பட்டது. அருகில் நோக்கினால் என்னை விட வெளிச்சமாக ஆனால் வெளிச்சம் அளவுக்கு வெளிச்சமாக இல்லாத ஒரு உருவம் தென்பட்டது. காலா காலமாக ஒரு கூட்டில் அடைந்திருந்ததால் இது காலனா? அல்லது மரண தேவதையா? என்ற எண்ணம் ஏற்பட்டதில் வியப்பில்லை. நகைப்போ, கேலியோ எதோ அது போன்ற உணர்வு என்னைச் சுற்றி பரவியது போன்ற உணர்வு. உடனே எனக்கு பதில் அளித்த அந்த வெளிச்சத்தை பார்த்து "நான் மரித்து விட்டேன் என்று உணர்கிறேன். இது என்ன இடம் இதுதான் சொர்க்கமா இல்லை நரகமா? நீ யார் எமனா மரண தேவனா? இது என் கர்மா தீர்க்கும் இடமா இல்லை என் வாழ்க்கையை பட்டியலிடும் நீதித்தளமா?" பேசினேனா இல்லை யோசித்தேனா தெரியவில்லை ஆனால் என் கேள்வி எங்கும் எதிரொலித்தது.

"அப்பா எத்தனை கேள்விகள்? எல்லாவற்றிற்கும் பதில் வேண்டுமா உனக்கு? கேள்விகள் இல்லாமல் காண்பதை கண்டு உணர்ந்து, பார்ப்பதை மட்டும் ரசித்து, யோசனைகள் இல்லாமல் அனுபவித்து கொண்டிருக்க முடியாதா? எல்லாவற்றிருக்கும் பதில் வேண்டுமா? சொல்கிறேன் கேள்". உணர்ச்சிகளுக்கு மட்டுமில்லை உணர்வுகளுக்கும் இடமில்லை என்பதை உணர்த்துவது போல இருந்தது எதிரொலிகள். எதிரொலிகளில் ஏற்றத் தாழ்வுகள் இல்லை அதனால் பேசப் படும் தோனியில் கோபமில்லை, சோகமில்லை, கருணையில்லை உணர்வேயில்லை. உண்மை மட்டுமே இங்கு பேசப் படும் என்பது போல உணர்வேயில்லாது இருந்தது அந்த எதிரொலி.

"நீ இங்கு நீயில்லை நானும் நீயும் வேறில்லை உனக்கு என்று தனியாக ஒன்றுமில்லை.ஒரே ஆற்றலே இயங்குகிறது உன்னுள்ளும் என்னுள்ளும். அனைத்துமே ஒன்றுதான் இங்கு. இருப்பினும் அனைத்துமே ஒன்றாக இருக்க இயலாது என்பதால் நம்முள்ளும் வித்தியாசம் உண்டு. ஆனால் பூமியில் இருந்து வந்ததால் வித்தியாசம் இருக்கிறதே அதனால் கலகம் உண்டாக்கலாம் என்று எண்ணாதே பூமியில் இருக்கும் மூட மதிகள் போல் அல்லாமல் நாம் அனைவரும் ஒன்றே என்பதை இங்கு அனைவரும் அறிவர்" பதில் கேட்ட எனக்கு சிறிது தெளிவானது என் வெளிச்சம் அதிகமானது போல தோன்றியது. "அப்படி என்றால் இறைவன் என்பவன் இல்லையா?" கேள்விகள் உருவானது மேலும் என்னுள்.

"இதுதான் இறை. இங்கு நீயும் இறை நானும் இறை இங்குள்ள அனைத்துமே இறை. அனைத்துமே கலந்து ஒன்றாக விளங்குகிறதே இந்த நிலையே இறை. பூமியில் தான் மசூதி உடைத்து கோயில் எழுப்பி இறை காணலாம் என்ற மூடத்தனம் உண்டு. மசூதியிலும் காணலாம், கோயிலும் காணலாம், காணும் இடமெல்லாம் காணலாம், காணா இயலாத காட்சிகளிலெல்லாம் இறை உண்டு என்பதை அறியாமல் இருக்கும் மூடத்தனமில்லை இங்கே. பெயர் இட்டு தன் நம்பிக்கையே இறையை அடைய வழி என்ற எண்ணம் பூமியில் மட்டுமே உண்டு தன் நம்பிக்கையின் மேல் உள்ள ஆங்காரத்தில் இறை உணரவே நம்பிக்கை என்பதை மறந்து அந்த நம்பிக்கைகளுக்காக மனிதனை இரையாக்கும் கொடூரம் இல்லை இங்கு. இங்கு அனைத்துமே இறை அனைத்தும் சேர்ந்திருக்கிறதே இதுவே இறை."

மேலும் தெளிவடைந்தேன் நான் மேலும் வெளிச்சமானது போன்ற உணர்வு. மேலும் கேள்விகள் எழுந்தன என்னுள். "இதுதான் இறை என்றால் சாத்தான் என்பது எது. பேய்கள் உண்டா? பிசாசுகள் உண்டா?" எண்ணம் எதிரொலிக்க. "இருக்கிறது ஆனால் அது அனைத்துமே பூமியில் மட்டுமே உண்டு. பிறக்கும் குழந்தைக்குளுள்ள இறை உண்ண உணவில்லாமல் மிக சீக்கிரமாக இங்கு வந்தடைகிறது அதற்கு உதவ வாய்ப்பிருந்தும் கேளிக்கைகளில் இறையை மறக்கிறானே அந்த மனிதன்தான் சாத்தான். தன் நம்பிக்கைகளுக்காக மதம் என்றும் ஜாதி என்றும், வேற்றுமை உண்டாக்குகிறானே அவன்தான் பேய். மனிதனின் மனதில் தோன்றுகிறதே அவனுள் இருக்கும் இறையை வெட்கப்பட வைக்கும் எண்ணம் அதுவே பிசாசு."

மேலும் கேள்வி எழுந்தது என்னுள் வெளிச்சத்தின் வெளிச்சத்தை போல வெளிச்சமாகி கொண்டிருந்த எனக்கு "விதி என்ற ஒன்று உண்டா? நான் இப்படித்தான் இங்கே சேர்வேன் என்று ஏற்கனவே முடிவானதா? இறை எழுதி வைத்தது போலத்தான் இங்கே நடக்கிறதா?" பதிலளிக்கும் வெளிச்சம் என் அளவே வெளிச்சமாக இருக்க பதில் வந்தது அதனிடமிருந்து, "விதி எல்லாம் இல்லை விதி என்பதெல்லாம் மனிதனின் மதியே. அவனுடைய வசதிக்காக முட்டாளாக்க மனிதர் இருப்பதால் உருவாக்கப் பட்டது. விதி என்று ஒன்று இல்லையென்றாலும் உன் செயல் உன் எதிர்காலம் தீர்மானிக்கும் நீ ஒவ்வொரு நொடியும் செய்யும் காரியம் உன் வாழ்க்கை தீர்மானிக்கும். உன் விதி எழுதுவதைத் தவிர வேறு வேலை இல்லையா இறைக்கு? இந்த அண்ட சராசரத்தில் மனிதன் ஒரு கணக்கே இல்லை மனிதனுக்கு அணுவைப் போல் இந்த அண்ட சராசரத்திற்கு மனிதன் சிறிதானவன்.நீ வாழும் காலம் ஒரு கணக்கே இல்லை இங்கு ஆகவே உன் விதி எழுத தேவையேயில்லை. உன் விதி நீ செய்யும் செயலால் அமைகிறது."

மேலும் தெளிவடைந்தேன் வெளிச்சத்தின் வெளிச்சமளவுக்கு வெளிச்சமானேன். எனக்கு பதில் கூறும் வெளிச்சத்தை விட வெளிச்சமானேன். இப்பொழுது அந்த வெளிச்சத்திடமிருந்து எண்ணம் என்னை அடைந்தது. "நீ என்னை விடவும் தெளிவாகி விட்டாய் அதெப்படி?" ஒவ்வொரு நிமிடமும் எண்ணமில்லாமல் காண்பதை கண்டு உணர்ந்து, பார்ப்பதை ரசித்து, யோசனைகள் இல்லாமல், அறிய வேண்டியதை ஆராயாமல் அறிந்து கொண்டிருந்த நான் பதிலுரைத்தேன். "பூமி சென்று மனிதனாகி இருக்கிறாயா?" என்று எண்ணம் எழுப்பி. "நான் பல கோள்களில் பல ரூபம் எடுத்திருக்கிறேன். பூமியில் கூட மனிதனாகாமல் எல்லாமாகியிருக்கிறேன். மனிதன் உருவம் மட்டும் எடுத்ததில்லை. போட்டி, சுயநலம், பொறாமை, இரைக்காக அல்லாமல் இறைக்காக என்று எண்ணி தன் நம்பிக்கைகளுக்காக கொன்று இறையை விட்டு விலகும் மனிதனாக மட்டும் இருந்ததில்லை."

வெளிச்சத்தோடு வெளிச்சமாக வெளிச்சமாகிக் கொண்டிருந்த நான் என் எண்ணத்தை பகிர வேண்டி "மனிதனின் குறைகள் மட்டும் அறிந்துள்ள என் போன்ற ஒரு இறையே மனிதன் என்பவனிடம் இருக்கும் குறைகள் மட்டுமே அறிந்திருக்கும் நீ மனிதானாகி உணர வேண்டும் எதையும் எதிர்பார்க்காத அன்பை. மிருகத்திடம் இருந்து தாய் பாசத்தை தொட்டு உணர்ந்திருக்கும் நீ முழுமையாக உணர்தறியவாக மனிதனாக வேண்டும். தான் என்ற எண்ணமே இல்லாத தாயன்பை உணர வேண்டும், உயிரை கூட தர வைக்கும், உன்னுடையது என்பது மறைந்து எல்லாமே நம்முடையதாக்கும் இரு உயிரை இணைக்கும் காதலை அறிய வேண்டும், முல்லைக்கு தேர் கொடுத்த கருணையை எப்படி இருக்கும் என்பதை அறிய வேண்டும். இங்குள்ள அமைதியை, ஆனந்த உணர்வை பூமியிலேயே கொடுக்கும் இசையை கேட்க வேண்டும். ஆயிரம் குறை இருந்தாலும் எல்லா இறையும் மனிதன் ஆனால் மட்டுமே முழுமையாக முடியும்" என்று எண்ணி வெளிச்சமான வெளிச்சமானேன்.

அப்பொழுது "கண்ட கண்ட புக்ஸை ராத்திரி லேட்டா படிச்சுட்டு இப்படியா தூங்கறதுங்குறது" அம்மாவின் குரல் கேட்டு எழுந்தேன். எல்லா மனிதனுக்குள்ளும் Electro magnetism, Strong Nuclear, Weak nuclear, Gravity என்ற நாலு forceதான் இயங்குகிறது, இயக்குகிறது என்ற ஸ்டிபென் ஹாகிங்ஸின் புக்கை படித்ததன் விளைவாக உருவான கனவை எண்ணி கனவில் நான் உணர்ந்ததை எல்லோரும் உணர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே பெட் காபி குடித்தேன்.

4 comments:

said...

Naan Unarnthu Vittaen Ayaa

')) said...

நன்றி அனானி அய்யா/அம்மா...

நன்றி tamilatamila கனமா இருக்குன்னெல்லாம் சொல்றீங்க நீங்க சொல்றதுனால நம்பீடுறேன்....

')) said...

செந்தில் குமரன், உங்க தலையச்சுத்தி எதாச்சும் ஒளிவட்டம் தெரியுதா? பக்கத்துல இருக்கறவங்கள கேட்டு சொல்லுங்க! ஆசிரமம் ஏதும் ஆரம்பிக்கறச்ச நாந்தான் உங்க பிரதம சிஷ்யர். அய்யா குருவே!

')) said...

ஜெய. சந்திரசேகரன் விட்டா கைல கமண்டலம், உத்திராட்சம் எல்லாம் கொடுத்து விடுவீர்கள் போல இருக்கு....
:-))))
கருத்துக்கு நன்றி.