Friday, July 07, 2006

எண்ணமாறு

ஆறு போட என்னை அழைத்த சோழநாடான் அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்....

நம்மையும் மதித்து ஒருவர் கூப்பிட்டு இருக்கார் ஆகவே என் எண்ணவாற்றை திறக்கிறேன் இங்கே...

வாழ்க்கையாற்றின் நினைவலைகள் ஆறு

மரணம் வாழ்க்கையை சுயமதிப்பீடு செய்ய உதவுவது போல எதுவுமே உதவுவதில்லை. உலகைப் புது கோணத்தில் பார்க்க வைப்ப்து மரணமே. அதுவும் மரணம் கல்யாணம் செய்து ஆறு மாதங்களே ஆன அண்ணண் அவர்களுக்கு, அதுவும் எங்கள் குடும்பமே கண்ணண் குடும்பம் என்று அண்ணண் பெயரால் அறியப் படி இருந்த அண்ணணுக்கு, அனைவருக்கும் பிடித்த அண்ணணுக்கு, அனைவரையும் வழிநடத்தும் அண்ணணுக்கு என்னும் பொழுது இந்த நிகழ்விற்கப்புறம் என் வாழ்க்கையே திசை மாறிவிட்டது போன்ற சொற்களை நம்மையும் சொல்ல வைத்து விடுகிறது. என் வாழ்க்கையை என் அண்ணணின் மரணம் புரட்டி போட்ட மாதிரி எதுவுமே புரட்டிப் போட்டதில்லை.

நமக்கு ஏன் ஒருத்தரை பிடிக்கிறது? ஏன் ஒருத்தரை பற்றி சிந்திக்கும் சமயமெல்லாம் தன்னிலை மறக்கிறோம்? ஏன் ஒருத்தரோடு பேசும் சமயம் மட்டும் காலம் உறைகிறது? நாம் ஏன் காதல் கொள்கிறோம்? விடை தெரியவில்லை. 15 வருடங்களாக காதல் எனக்குள். 9 வருடம் என்னுள் மட்டுமே வாழ்ந்த காதலுக்கு துணையானது 2 வருட மௌனம். மௌனம் கலைத்து 2 வருடம் கழித்து என் காதலுக்கு ஒரு தலை என்று தெரிந்தாலும் இன்னும் மிச்சம் உள்ளது காதல் என்னுள், தோழமையுடன் மட்டும் பழக்கம் எங்களுக்குள். காதலுக்கு ஒரு தலை என்று தெரிந்த கணம் என்னுள் என்றுமே உறைந்திருக்கும்.

சிறு வயது முதலே கோபம் கன்னாபின்னா என்று வரும். வீட்டில் நான் நினைத்தது நடக்க வேண்டும் இல்லையென்றால் நடப்பதே வேறு. அப்படி ஒரு சமயம் வீட்டில் மிகப் பெரிய சண்டை போட்டு விட்டு கோபித்துக் கொண்டு பஸ் ஏறி சென்னை சென்று விடலாம் என்று முடிவெடுத்து வீட்டை விட்டு கிளம்ப( எப்போதுமே கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விடுவதால் வீட்டில் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை ) தண்ணித் தாகம் வந்து ஒரு அடி பம்பில் தண்ணீர் குடிக்க அங்கே வந்த பெரியவர் ஒருத்தர் எதேச்சையாக பேச்சு கொடுக்க அவருடன் பேசி கொண்டிருந்ததில் மனது மாறி வீட்டுக்கு திரும்ப வந்து விட்டேன். அன்று பஸ் ஏறி சென்னை சென்றிருந்தால் என்னவாகியிருக்கும் தெரியவில்லை?

சின்ன வயதில் இருந்தே எனக்கு inferiority complex உண்டு அப்படி இருக்கும் சமயம் முது நிலை பட்டப் படிப்பு படிக்கும் சமயம் கல்லூரி விழாவில் சில போட்டிகளை நடத்தும் பொறுப்பு என்னை வந்து சேர ஒரு போட்டிக்காக நான் வடிவமைத்திருந்த ஒரு கம்ப்யூட்டர் புரோகிராகமுக்காக அந்த ஆடிட்டோரியத்திலிருந்த 250 பேரும் எழுந்து நின்று 5 நிமிடங்கள் கை தட்டியது, அந்த விழாவுக்கு வந்திருந்த எல்லா feedbackiலும் என் பெயர் குறிப்பிடப் பட்டிருந்தது என்னை பற்றிய சிந்தனைகளை என்னுள் மாற்றிய சம்பவம் அது.

கடவுள் பற்றிய சிந்தனைகள் என்னுள் மாறிக் கொண்டே இருக்கிறது. எல்லா வியாழனும் கோயிலுக்கு சென்று பூஜை செய்தது, செவ்வாயன்று விரதமிருந்து மாலையில் முருகன் கோயிலுக்கு சென்ற பிறகே தண்ணீர் கூட குடிப்பது, மார்கழியில் தினமும் காலையில் கோயிலுக்கு செல்வது என்று மத நம்பிக்கைகள் பல இருந்தது. காலம் செல்லச் செல்ல மதம் மீது வெறுப்பு ஏற்படத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக மத அடையாளங்களை களையத் தொடங்கி ஒரு நாள் நான் இன்று முதல் ஹிந்து என்று எங்குமே குறிப்பிடப் போவதில்லை என்று முடிவெடுத்த தினம்.

ஒரு தடவை பள்ளியில் எனக்கு மிகவும் பிடித்த டீச்சர் ஒருவரிடம் பொய் சொல்லி அவர் என்னை அடித்து துவைத்து என்னை வெளியில் சென்று முட்டி போடச் சொல்லி விட்டார். அந்த டீச்சர் யாரையுமே அதுவரை அடித்ததில்லை. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முட்டி போட்ட பிறகு என்னை உள்ளே அழைத்த அந்த டீச்சர் கண்களும் லேசாக கலங்கி இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனது. அந்த சம்பவம் என் மனதுள் அப்படியே இருக்கிறது.

வாழ்க்கையாற்றில் பாதித்த சம்பவம் ஆறு

அப்போ அப்போ பார்டரில் சண்டைகள் நடந்து வந்திருந்தாலும் நான் பிறந்த பிறகு நடந்த யுத்தம் கார்கில் யுத்தம்தான். என்னை மிகவும் பாதித்த ஒரு சம்பவம் அது. குவைத் யுத்தம் நடக்கும் சமயம் ரொம்ப சின்னப் பையன். கார்கில் இந்தியாவில் நடந்தது என்பதாலும் எனக்கு மிகவும் பாதித்த விசயம் கார்கில் யுத்தம்.

கோயமுத்தூர் குண்டு வெடிப்பு எனக்கு சின்ன வயதில் இருந்தே பிடித்த ஊர்களில் கோயமுத்தூரும் ஒன்று. அதற்கு காரணம் நான் கோயமுத்தூருக்கு மிக அருகே காங்கேயத்தில் இருத்தால் இருக்கலாம். கோயமுத்தூர் குண்டு வெடிப்புதான் தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் நடந்த மதத் தீவிரவாதச் செயல் என்று நினைக்கிறேன். அதுவும் ஆர் எஸ் புரத்தில் கார் குண்டு செயலிலக்கப்படாமல் இருந்தால் என்னவாகியிருக்கும் என்று நினைத்தே பார்க்க முடியவில்லை.

டயானா மற்றும் அன்னை தெரசா அவர்களின் மரணம். எதற்கென்றே தெரியாது டயானா மீது எனக்கு ஒரு மதிப்பு அவர் முகத்தில் எதோ எல்லோரையும் கவரும் சக்தி இருக்கிறது. அது போலத்தான் அன்னை தெரசா அவர்கள் இருவரின் மரணமும் என்னை மிகவும் பாதித்தது.

தமிழக சுனாமி, குஜராத் பூகம்பம் எனக்கு சுனாமின்னா என்னனே தெரியாது ஆனால் அது ஏற்படுத்திய இயற்கை அழிவு அப்பா. அதே போலத்தான் குஜராத் பூகம்பம் இவை ஏற்படுத்திய அழிவுகள் மிகவும் பாதித்தது என்னை.கயா(gaia) என்று சில காலம் அந்த தத்துவத்தை ஆராய வைத்தது. இயற்கை முன் மனிதம் ஒன்றுமேயில்லை என்பதை எனக்கு உணர்த்தியது.

ராஜீவ் காந்தி கொலை இதுதான் எனக்கு முதன் முதலில் தீவிரவாதம் பற்றிச் சொல்லித் தந்த சம்பவம். சிறு வயதில் நடந்ததால் என்னை அப்பொழுது மிகவும் பாதித்த சம்பவம்.

பிரேமானந்தா கைது போலிச் சாமியார்களையும் கடவுள் பெயரால் அவர்கள் செய்யும் கொடுமைகளையும் முதன் முதலில் வெளிச்சம் போட்டுக் காட்டிய சம்பவம். மக்கள் எப்படி ஏமாளியாகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இதுவும் என்னை பாதித்த சம்பவம்.

வலைப் பூக்களின் ஆற்றலாறு

கைப்புள்ள இவர் எந்தப் பதிவு போட்டாலும் உடனே படித்து விடுவது வழக்கம். இருந்தாலும் இவருக்கு மிக குறைவான பின்னூட்டமே இட்டிருக்கிறேன் ஏனென்று தெரியவில்லை. கைப்புள்ள என்று காமெடிக்காக பெயர் போயிருதாலும் இவர் எழுத்துக்கள் சீராகவும் பெரிய பதிவு என்றாலும் படிக்க ஆரம்பித்தால் முடிவு வரை படிக்க வைக்கும் விதமாகவும் அமைந்திருக்கும். மனிதருக்குள் ஒரு பெரிய ஆன்மீகவாதி ஒளிந்து கொண்டிருகிறார் என்று நினைக்கிறேன். இவருடைய மீள் பதிவான ஆங்கிலப் பதிவு, ஆறு பதிவு இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த பதிவுகள்.

என்னார் இவருடைய பதிவுகளில் இவருடைய தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்பிகாபதி அமராவதி போன்றவைகளில் இருந்து நான் கற்றுக் கொண்டது நிறைய. இவருடைய ஆன்மீகம் வரலாறும் எனக்கு பிடிக்கும். இவருடைய பதிவுகளை படிச்சா தமிழ் கத்துக்க முடியும் அதுவும் என்னை மாதிரி அரைகுறைக்கு எல்லாம் மிகவும் உபயோகமான பதிவுகள் இவருடையது.

பொன்ஸ் வெண்பா வடிப்பார் வ வா சா வில் கலக்குவார். வலைப் பதிவுகளுக்கு வந்த கொஞ்ச நாள்லயே ஒரு பெரிய வாசகர் வட்டம் இவருக்கு. மிக குறைந்த வலைப் பதிவாளர்களுக்கு மட்டுமே இது உண்டு. இவருடைய கற்பனைத் திறன் எனக்கு பிடிக்கும். தமிழ அறிவும் நிறைய உண்டு. இவர் ஆற்றல் இன்னும் வெளிப் படும் என்று நினைக்கிறேன். இவருடைய பதிவுகளில் எனக்கு பிடித்தது பொங்கியது போதும் வாளை எடு! பயணங்கள் முடிவதில்லை.

குமரன் பெரிய ரசிகர் வட்டம் வைத்திருப்பவர். நல்ல அறிவாளி. நமக்கும் ஆன்மீகத்திற்கும் காத தூரங்கறதுனால இவரோட பதிவை படிக்கறதோட சரி பின்னூட்டம் இடுவதில்லை. எதை எழுதினாலும் பின்னூட்டம் அள்ளீடுவார். சொல் ஒரு சொல் எனக்கு மிகவும் பிடிக்கும். இவருடைய புரோபைல் அறிமுகமே இவரைப் பற்றி பல விசயங்களைச் சொல்லும். அதே போல அடக்கமா பதில் சொல்லும் விதமும் ( நிறைய இடத்தில் ) எனக்கு பிடிக்கும்.

செந்தழல் ரவி வலைப் பூக்களில் எனக்கு முதல் நண்பர்( ரவி சொல்லலாமில்லையா நண்பர்ன்னு? ) டேக் இட் ஈஸி என்றிருப்பவர். சமீபத்தில் சில சர்ச்சைகளில் சிக்கி ஒரு மாதிரி இமேஜ் இருந்தாலும் இவர் கண்டிப்பாக அது போல இல்லை என்று என்னால் சொல்ல முடியும். நகைச்சுவையா எழுதுவார். தோணிணதை பண்ணுவார், போலி பின்னூட்டங்களை அனுமதிப்பதில் இருந்து ஆகவே கொஞ்சம் சர்ச்சைகளில் சிக்கி விடுகிறார் ஆனால் அடிப்படையில் நல்லெண்ணம் கொண்டவர்.

கவிதா இவருடைய எழுத்துக்கள் எல்லாமே எதாவது ஒரு கருத்தை மையமாக வைத்து எழுதியிருப்பார். அவர் எழுதிய கருத்துக்கள் எனக்கு சில சமயம் ஒப்பவில்லை என்றாலும் கருத்தா எழுதறதுனாலேயே எனக்கு இவரைப் பிடிக்கும். இவங்க மனசாட்சி அணில் குட்டிக்கு நானும் ஒரு பேன். இவருடைய எழுத்துக்கள் சீராகிக் கொண்டே வருகிறது இப்போவே சராமாரியா பின்னூட்டம் வாங்கறார் நான் இன்னும் நல்லா எழுதுவாங்கன்னு எதிர்பார்த்துட்டிருக்குற வலைப் பதிவாளர்களில் இவரும் ஒருவர்.

சரி இன்னும் நிறைய ஆறு எழுதணும்ன்னு தோணுது வெள்ளிக்கிழமை ஊருக்கு கிளம்பணும் ஆகவே இதோட நிறுத்திக்கிறேன். ஆறு பேரை அழைக்கணும் என்னடா எல்லாரும் ஆறு விளையாடறாங்க நம்ம விளையாட்டுக்கு சேர்த்திக்க மாட்டேங்கறாங்களேன்னு கொஞ்சம் வருத்தம் எனக்கு இருந்தது. அதே சமயம் இதை ஓபன் அழைப்பா எடுத்துட்டு யார் வேணும்னாலும் எழுதுங்க சொல்றதும் சரியில்லை அதை பார்த்து யாரு எழுத மாட்டாங்க.

இதுதான் இந்த ஆறு விளையாட்டுல எனக்கு புடிக்கறதில்லை.

சரி நான் கூப்பிடும் ஆறு பேர்
1. காசி
2. ஜெஸிலா
3. ராம்
4. சந்திரவதனா
5. ப்ரியன்
6. நந்தன்( திரும்ப வந்துட்டேன்னு ஒரு பின்னூட்டம் பார்த்தேன் ஆறோட வாங்க )

6 comments:

')) said...

குமரன் உங்கள் அழைப்புக்கு நன்றி.ஆனால் ஏற்கனவே நான் ஆறுப்போட்டு வாங்கி கட்டிக்கிட்டேன்.பாருங்க அதுக்கு வந்த
பின்னூட்டங்களை....

வேணுமினா இன்னோரு ஆறுப்போடட்டா... அதுக்குதான் இந்த சட்டம் இடம் கொடுக்குமா

')) said...

ஆறு பதிவு குமரன் போட்டிருக்கிறாரே ... பார்கலாம் என்று வந்தேன் ... ஆறுவெள்ளம் போல் எண்ணங்களை எழுதியிருக்கிறார். மனம் திறந்து எழுதியிருக்கிறார். ஆற்றில் வெள்ளமும் இருக்கிறது .. அந்த வெள்ளத்தில் கண்ணீரும் இருக்கிறது பன்னீரும் இருக்கிறது. மொத்தத்தில் ஒரு டைரியை அனுமதியுடன் படிப்பதுபோல் இருந்தது.

குமரன் .. நான் படித்த ஆறுபதிவுகளில் எனக்கு மனது பாத்தித்த பதிவு இது ஒன்றே... பிடித்த ... பிடிக்காத என்று பொதுவாக சொல்லாமல் அதற்கு பின் உள்ள நிகழ்வுகளை நேர்த்தியாகவும் நேர்மையாகவும் எழுதியிருக்கிறீர்கள்.

சக பதிவாளர்
கோவி.கண்ணன்

')) said...

சொல்லிட்டீங்கள்ள இதோ வர்றேன்

')) said...

எட்டு போடுவது கோள்வி பட்டிருக்கேன் அது என்னங்க ஆறு? எட்டு போடாமலே நம்ம ஊருல இருசக்கிர வண்டில வலம் வந்திருக்கிறேன். ஆறு போடாம வலைப்பூல வலம் வர முடியாது போலயிருக்கு ;-)

அழைப்புக்கு நன்றி. என்ன எழுதுவதுன்னு புரியல பல ஆறுகளை கடந்து படித்துவிட்டு புதுசா எழுதுனும்னு பார்க்கிறேன்.

')) said...

ராம் எனக்கும் விளையாட்டு விதிகள் எல்லாம் தெரியாது... நீங்க போட்ட ஆறு பத்தி தெரியும் ஆறு போடணும்ன்னு தோணுச்சுன்னா போடுங்க...

வாங்க நந்தன் ஆவலோடு எதிர்பார்க்கிறேன்...

ஜெஸிலா புதுசா எழுதுங்க எதிர்பார்க்கிறேன்.

')) said...

கோவி. கண்ணன் நன்றி எதோ கிறுக்கியிருக்கேன் அவ்வளவுதான்... அது என்னங்க?
///
சக பதிவாளர்
கோவி.கண்ணன்
///