Thursday, May 25, 2006

மதம்தனைப் புறக்கணிப்போம் - 5

நான் இந்தப் தொடர் பதிவுகளில் நாத்திகம் பேசவில்லை. நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு ஆனால் நான் இறை இருப்பதை மறுக்கவில்லை. இறையை நோக்கி செல்ல பயன்படும் பாதைகளான மதங்கள் மனிதனை அழிவுப் பாதையில் திசை திருப்பி விட்டு விடுகின்றன. அதனால் அந்த மதங்கள்தான் கூடாது என்கிறேன்.

எல்லையில்லாத சக்தி வடிவான இறையை உணர்ந்த ஆன்றோர் "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற எண்ணத்தில் சராசரி மனிதர்களுக்கு அந்த சக்தி வடிவை உணர செய்ய எண்ணினர். எல்லா மனிதர்க்கும் இறையை காண்பது எளிதல்ல என்பதை உணர்ந்த சான்றோர் அவரவர் வாழ்ந்த சூழ்நிலை, கலாச்சரங்களுக்கும் ஏற்ப இறை நிலையை போதனை செய்ய மதங்களைப் படைத்தனர்.

நாம் கோயில்களில் நின்று கை சேர்த்து கண்மூடி கும்பிடும் போதும், தர்க்காவில் கைகளை உயர்த்தி கண்மூடி இறையை தொழுகை செய்யும் சமயமும், தேவாலயங்களில் கண்மூடி கை குவித்து பிராத்தனைகள் செய்யும் சமயமும் நாம் ஒரே இறை நிலையைத்தான் உணர்கிறோம்.

இதனை நாம் உணராமல் இன்று மதங்களில் பெயரால் மனிதன் புரியும் கொடுமைகள் எத்தனை என்று யோசிக்க வேண்டிய தருணம் இது.

நான் இந்தப் பதிவின் மூலம் இறையை புறக்கணிக்க சொல்லவில்லை, மதத்தை புறக்கணிக்க சொல்கிறேன்.

மத அடையாளங்கள் துறப்பதன் மூலம் இறையை அடையச் சொல்கிறேன்.

மதங்கள் மனிதனை இறையை சென்றடைய வழி காண்பிக்கின்றன. ஆனால் அந்த வழிகளில் எல்லாவற்றிலுமே இன்று மனித ரத்தம் தெளிக்கப் பட்டிருக்கிறது. நாம் அந்த வழிகளிலேயே செல்வதால் மேலும் பல மனிதர்களின் ரத்தங்கள் உதிரப் போகிறது.

நம் பெயரால் இன்னும் மனித ரத்தம் உதிர வேண்டாம் என்று நினைத்தால் மதங்களைப் புறக்கணியுங்கள்.

மனித நேயத்தின் பெயரால் இணைவோம்.

நம் நம்பிக்கைகளில் பெயரால் நடக்கும் கொடுமைகளை நடக்க விடாமல் தடுப்போம்.