தூக்கம் வராத ஒரு இரவில் மாடியில் நின்று கண் சிமிட்டி சினேகமாக வரவேற்கும் நட்சத்திரங்களையும், தனிமையை களைத்து விட்டதால் கோபம் கொண்டு மேகங்களுக்கு இடையில் சென்று மறையும் நிலவையும் கண்டு கொள்ளாமல் குளிருக்கு இதமாக கைகளைக் கட்டிக் கொண்டு, சுகமான குளிர் காற்றை நன்றாக மூச்சிழுத்து கொண்டிருக்கும் வேளையில் நானென்ன உலக சமாதானாம் பற்றியா யோசிக்கப் போகிறேன் எல்லாம் உன்னைப் பற்றிய நினைவுகள் தான். ஆனால் வழக்கமான உன்னை பற்றிய நினைவுகள் என் இதழில் குறுநகையையோ, என் விழியில் உன் விழி போன்ற மீன் வாழ எதுவான சூழ்நிலையையோ, எண்ணக் கடலில் நினைவு முத்தெடுக்க என்னுள் என்னையையே மூழ்கடித்து, சுற்றுப் புறச் சூழலுக்கு மூச்சிழுக்கும் ஜடமாக என்னை மாற்றி விட்டு விடும் சூழ்நிலை அமைவதுதான் வழக்கம். ஆனால் இன்று ஏனோ மனதில் பல கேள்விகள்.
உறக்கம் வராததால் மனம் எழுந்த கேள்விகளை அசை போட்டது. நீ ஏன் என்னுள் நான் விரும்பும் நீயானாய்? மீன் எப்படி நீந்தக் கற்றுக் கொண்டது என்பது போன்ற கேள்வி இது. நீயல்லாமால் வேறு யாரை விரும்பியிருப்பேன் நான். இன்று நீ விரும்பவில்லை என்று தெரிந்தும் உன்னை மட்டுமே விரும்பும் நான் நீயில்லை என்றால் யாரையுமே விரும்பி இருந்திருக்க மாட்டேனே. உலகில் உள்ள மனிதர்களை எல்லாம் தரையில் பிடித்து வைத்திருக்கும் புவியீர்ப்பு விசை போல நீ என் உயிரை என் கூட்டிக்குள் பிடித்து வைத்திருக்கிறாய். நான் உன்னைக் காணாமலே இருந்திருந்தால் வாழ்க்கை எவ்வளவு இனிமையானது என்பதை உணர்ந்திருக்கவே முடியாது.
எதற்காக விரும்புதல்? இதனால்தான் என்று பட்டியலிடவா முடியும் என்ன கேள்வி இது?3900000000 ஆண்டுகளுக்கு முன் பூமியில் சீதோஷண நிலை மாறியதால் தான் என்று நினைக்கிறேன். அதனால்தான் உலகின் முதல் உயிர் தோன்றியதாம் அப்படி முதல் உயிர் இவ்வுலகில் உருவாகாமலே போயிருந்தால் கண்டிப்பாக நான் உன்னை விரும்பியிருக்க மாட்டேன். என்ன செய்வது உயிர் தோன்றியதால் நான் உன்னை விரும்ப வேண்டியதாயிற்று.
என்ன எதிர்பார்க்கிறேன் இந்த விரும்புதலில்? சந்தோசத்தை பகிர வேண்டும், துக்கம் நம் அருகில் வந்தால் நம் விரும்புதலில் திகைத்து திரும்பிப் போக வேண்டும். உன்னுடன் சண்டை போட வேண்டும் பின் கண்ணீருடன் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். உன்னை சீண்டி கோபம் கொள்ள வேண்டும், அந்த கோபத்தில் சிரித்து அதனை அதிகப் படுத்த வேண்டும், பின் சமாதானம் செய்ய வேண்டும். சொல்லிக் கொண்டே போனால் இந்த வலைப் பதிவுதான் போதுமா? அல்லது இந்த வலைத் தளங்களை சேமிக்கும் கருவியின் அளவுதான் போதுமா? அதனால் நிறுத்துகிறேன் இங்கே ஒன்றே ஒன்றை மட்டும் சேர்த்துக் கொண்டு. கடைசியில் உன் மடியில் உயிர் விட வேண்டும்.
நீ என்னை விரும்பவில்லையே என் விரும்புதல் என்னவாகும்? விரும்புதல் ஆரம்பிக்கும் சமயம் நீ என்னை விரும்புவாய் என்றெல்லாம் ஆரம்பிக்கவில்லை. ஆகவே இப்பொழுதும் அதில் மாற்றமில்லை.இளையராஜாவின் பாடலைக் கேட்கும் சமயம் அன்னிச்சையாக கண்கள் மூடுகிறதே, குழந்தை சிரிக்கும் சமயம் மனதில் ஒரு ஆனந்தம் உண்டாகுகிறதே, மழைச் சாரல் மேனியைத் தொடும் சமயம் உடல் சிலிர்க்கிறதே அதைப் போல தன்னிச்சையாக வந்தது இந்த விரும்புதல் நீ விரும்பாததால் அது மாறி விடப் போவதில்லை.
Thursday, June 29, 2006
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இதை பிச்சி பிச்சி அஞ்சஞ்சு வரிகளில் போட்டீர்கள் என்றால் .. . பின் நவீனத்துவ கவிதை கிடைத்துவிடும்.
:-)))
கோவி. கண்ணன் நானும் அப்படித்தான் எழுதிக் கொண்டிருந்தேன் இப்போதான் கொஞ்சம் மாத்தி எழுதலாமேன்னு
Post a Comment