Thursday, August 09, 2007

GOD must be alien !!!! - 2

நமக்கு காய்ச்சல் தலைவலி போன்றவை வருவதற்கு காரணியாக இருக்கும் வைரஸ், பாக்டீரியா போன்ற கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை உயிரினம் என்று சொல்லலாமா? சொல்லலாம் என்றே தோன்றுகிறது உயிரினங்களில் மிக முக்கியமான ஒரு ஆற்றல் சூழ்நிலைக்கு தக்கவாறு தன்னை மாற்றிக் கொள்வது தான். மனிதன் ஒரு நுட்பம் வாய்ந்த மிருகம் என்று அறியப்படுவதற்கு பலர் அவனுடைய மூளை தான் காரணம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவனுக்கு பரிணாம வளர்ச்சி மூளையை விட மிக முக்கியமான ஆயுதம் ஒன்றைக் கொடுத்திருக்கிறது. அதுதான் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப காலகட்டத்தில் மனிதன் மற்ற மிருகங்களிடத்தில் இருந்து தாக்குப் பிடிக்க வைத்தது. அதுதான் Opposable Thumb( எதிர்மறையான வளையக் கூடிய பெருவிரல்).

ஒரு நாய் நம் மீது கல் எடுத்து எறிய முடியுமா? இல்லை கம்பு எடுத்து சுற்ற முடியுமா? அதற்கு கை இல்லை அதனால் முடியாது என்றால் உண்மை இல்லை. நாய்க்கு நம் போலவே கை இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் கூட அது முடியுமா? முடியாது ஏனென்றால் அதனுடைய பெருவிரல் அமைப்பு அது போல இல்லை. கீழ்கண்ட விஷயங்களை பெருவிரல் உதவி இல்லாமல் செய்து பார்க்க முயற்சி செய்தால் இதன் மகத்துவம் நமக்குத் தெரியும்.

1. ஒற்றைத் தாள் பேப்பரை எடுத்துப் பாருங்கள்
2. ஒரு மேஜை மேல் இருக்கும் பேனா இல்லை பேப்பரை எடுத்துப் பாருங்கள்.
3. புத்தகத்தை கையில் எடுத்து பக்கங்களை பெருவிரல் உதவி இல்லாமல் திருப்பிப் பாருங்கள்.

இது போல நாம் அன்றாடம் செய்யும் பல விஷயங்களுக்கு பெருவிரலை எவ்வளவு தூரம் நம்பி இருக்கிறோம் என்று தெரியும். ஏகலைவன் பெருவிரலை துரோணர் கேட்டது என்ன ஒரு கோழைத்தனமான செயல் எனபது பெருவிரல் மகிமை புரிந்தால் தான் தெரியும்.

இப்படிப்பட்ட மகத்துவமான பெருவிரல் மனிதர்களுக்கு மட்டும்தான் மிக சரியான முறையில் அமைந்திருக்கிறது. நம் முன்னோர்களான குரங்குகளுக்கும் இது ஒரு அளவு வளர்ச்சி அடைந்திருந்தாலும் முழுமையாக வளர்ச்சி அடையவில்லை.

மனிதன் இனம் இன்று பெருமிதம், சிறுமிதம் கொள்ளும் பல ஆற்றல்களுக்கு மிக முக்கியமாக நன்றி சொல்ல வேண்டியது இயற்கையின் இந்த சிறிய பரிணாம வளர்ச்சி மாற்றத்திற்கு தான்.

இதே போல பரிணாம வளர்ச்சி மாற்றங்கள் இந்த கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளிடத்திலும் இருக்கிறது. எய்ட்ஸ் நோய் உருவாக்கும் வைரஸ் கிருமி இந்த பரிணாம வளர்ச்சி மாற்றத்திற்கு ஒரு மிக மிக சிறந்த உதாரணம்.

இந்த கிருமிகளை ஆங்கிலத்தில் பாராசைட் என்று சொல்லுவார்கள். பாராஸைட் என்பதற்கு விளக்கம் என்னவெறால் மற்ற உயிரினங்களிடத்தில் ஒட்டிக் கொண்டு அதனால் உயிர் வாழ்ந்து கொண்டு அதற்கு துன்பம் விளைவிக்கும் உயிரினம்(மனிதனையும் பூமியின் பாராஸைட் என்று சொன்னால் தவறில்லையோ?).

இந்த வைரஸ்கள் மனிதனுக்கு துன்பம் விளைவிக்கின்றன என்பதால் மனிதன் அதற்கு எதிராக மருந்துகளை கண்டு பிடித்தான். இந்த வைரஸ்கள் அந்த மருந்துகளுக்கு எதிராக பரிணாம வளர்ச்சி அடைந்து உருவானதுதான் எய்ட்ஸ் வைரஸ்.

இதனை சற்று வேறு மாதிரியாக யோசித்துப் பார்க்கிறேன் நமக்கு துன்பம் விளைவிக்கும் ஆற்றல் இல்லாமல் இருந்திருந்தால் இந்த கிருமிகளைப் பற்றி நாம் அறிந்திருப்போமா இல்லை இவற்றை எதிர்க்கும் ஆற்றலாகிய மருந்துகளை கண்டுபிடித்திருப்போமா இல்லை இவற்றைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்போமா?

ஒரு வகையில் பார்த்தால் மனிதன் என்பவன் இந்த கிருமிகளுக்கு கடவுள் போல. மனிதன் இல்லையென்றால் பல கிருமிகள் உருவாகி கூட இருக்காது அதே போல் மனிதன் நினைத்தால் இந்த கிருமிகளை அழித்து விட முடியும்.

நாம் கடவுளைப் எந்த வகையில் பார்க்கிறோமோ இந்த கிருமிகளுக்கு யோசிக்கும் திறன் இருந்தால் மனிதனைப் பற்றி அதே போல யோசிக்கலாம்.

ஆனால் மனிதன் என்பவனுக்கு இந்த கிருமிகளைப் பற்றி கவலையே இல்லை காய்ச்சல் வந்தால் மருந்து சாப்பிட்டு அவற்றைக் கட்டுப்படுத்துவது மட்டுமே அவனுக்கு முக்கியம் மற்றபடி வேறு கவலைகள் இல்லை.

இந்த பிரபஞ்சத்துடன் மனிதனை ஒப்பிட்டால் அவன் ஒரு கிருமி கூட கிடையாது.

இந்த கிருமிகளையும் மனிதனையும் ஒரே சமயத்தில் பெரிது படுத்துகிறோம் என்று வைத்துக் கொள்ளுவோம் இந்த கிருமி மனிதன் அளவுக்கு பெரிது படுத்தினால் அதே அளவில் பெரிதுபடுத்தப்பட்ட மனிதன் இமய மலை அளவுக்கு இருப்பான்.

ஒரு உதாரணத்திற்காக சொல்கிறேன் இமய மலை அளவு பெரியதாக இருக்கும் ஒன்று மனிதன் அளவில் இருக்கும் கிருமிகளை துன்பம் விளைவிக்கிறது என்பதற்காக மட்டும் கண்டு கொண்டிருந்தால், இந்த பிரபஞ்சத்தை, இது போன்ற பல பிரபஞ்சங்களை ஆட்டுவிக்கும் சக்தி ஒன்று மனிதனை ஏன் கண்டு கொள்ள வேண்டும் இல்லை மனிதன் ஏன் இங்கு முக்கியத்துவம் வாய்ந்தவனாக வேண்டும்?

இந்த பிரபஞ்சத்தையே இயக்கும் சக்திதான் கடவுள் என்றால் கண்டிப்பாக மனிதன் என்பவன் சும்மா இந்த சக்தி தான் நம்மை இயக்குகிறது என்பது கப்ஸா நாமும் ஏதோ அப்படியே இருக்கிறோம் அவ்வளவுதான் மற்றபடி கடவுள் என்ற அந்த சக்திக்கு மனிதன் என்ன செய்கிறான் அவன் எப்படி இருக்கிறான் என்ற கவலை எல்லாம் இருக்காது என்றே தோன்றுகிறது.

கடவுள் விதித்தபடி நான் வாழ்கிறேன் என்பது போன்ற வாக்கியங்கள் என் கடவுள் விதித்த விதி உன் கடவுள் விதித்த விதி என்பதெல்லாம் மூடத்தனத்தின் உச்சகட்டம் இல்லை ஆணவத்தின் இமயம்.

எல்லாவற்றையும் இயக்கும் சக்திதான் கடவுள் என்றால் அந்த சக்தி மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று விதிப்பதெல்லாம் முக்கியத்துவமாக இருக்காது. அல்லா, கிறிஸ்து, ராமர் என்பதெல்லாம் இந்த சக்தியை குறிக்காது. கடவுள் விதித்தது என்று ஒன்றுமே இருக்காது.

மனிதனுடைய உடல் இல்லாமல் இயங்க முடியாது கிருமிகள் போலத்தான் நாமும் இந்த பூமியில். இந்த பூமி இல்லை என்றால் இயங்க முடியாத ஒரு கிருமி. அந்த கிருமியை நாம் எப்படி கண்டு கொள்ளாமல் விடுகிறோமோ அதே போலத்தான் இந்த பூமியில் நாமும் இருக்கிறோம்.

பிரபஞ்ச இயக்கும் சக்திதான் கடவுள் என்றால் நாம் கடவுள் என்று யோசித்துக் கொண்டிருப்பது உருவகித்துக் கொண்டிருப்பது எதனை அல்லது எவற்றை?

ஆடு மாடுகளை நாம் நடத்துவது போல நம்மை நடத்தும் ஒரு சக்தியைத்தான் நாம் கடவுள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆடு மாடுகளுக்கு மின்சாரம் என்பது எப்படி ஒரு மாயாஜாலமோ அதே போல நமக்கு மாயாஜாலமாக தெரியும் அல்லது தெரிவிக்கும் சக்திதான் நமக்குக் கடவுள் அது வேற்றுகிரகவாசிகளாக இருக்கலாமா? இருக்கலாம் என்றே தோன்றுகிறது ஏனென்றால்....

1 comments:

')) said...

வித்தியாசமான சிந்தனை...ஆனால் விவாதம் இழுத்துக் கொண்டே போகுமென்று நினைக்கிறேன்.