Tuesday, August 14, 2007

ரௌலிங் முட்டாளாக்குகிறாரா?

சில சமயம் சில பதிவுகளைப் படிக்கும் போது எரிச்சல் வரும் கோபம் வரும்.

எனக்கும் இந்தப் பதிவைப் படித்த உடன் கோபம் எரிச்சல் தான் வந்தது ஆனால் அதனை விட மிகுந்து வருத்தம் வந்தது.

அந்தப் பதிவில் இருந்து சில Excerpts

"இந்த ரெளலிங் எப்படி உன்னை ஒரு முட்டாளாக்கி வச்சிருக்கா, பார்த்தியா? முதல் நாள் ஹாரி போட்டர் புத்தகத்தின் விலை ஆயிரம் ரூபாய். ஒரு வாரம் வெயிட் பண்ணினால், பிளாட்பாரத்தில் பைரேட்டட் எடிஷன் நூறு ரூபாய்க்கு கிடைக்கும். அல்லது பேப்பர் பேக் எடிஷன் நானூறு ரூபாய்க்கு கிடைக்கும்."

ரெளலிங்கிற்கு உன்னைப் போன்ற ஏழ்மையான நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது உண்மையிலேயே அக்கறையிருந்தால், மூன்றாம் உலக நாடுகளில், குறைந்த விலைக்கு விற்கட்டுமே! தெரியுமா?

ஏதோ ஹாரி போட்டருக்காக இந்தியாவே ஏங்கிக் கிடப்பது போன்ற ஒரு தோற்றத்தினை, இவ்வாறு முழுப்பைத்தியம் பிடித்து அலையும் ஒரு சிறு கூட்டத்தினைக் காட்டி மற்றவர்களையும் முட்டாளாக்குகிறார்கள்.

இதுவெல்லாம் பிஸினென்ஸ் ஸ்டிராடஜி என்று மேனேஜ்மெண்ட் மாணவர்கள் வியக்கலாம். முன்னாபாய் படத்தில் நோயாளியை சப்ஜெக்ட் என்று சொல்லும் மருத்துவருக்கும், இண்டிபெண்டஸ் டே படத்தில், “ in the past twenty four hours, it has become very exciting” என்று வேற்று கிரக வாசிகளின் தாக்குதலை ஜனாதிபதியிடம் வியக்கும் விஞ்ஞானிக்கும் அவர்களுக்கும் ஒற்றுமை உண்டு!!

முதலில் ரௌலிங் பற்றியும் அவரது பதிப்பகத்தாரான Bloomsbury பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ரௌலிங்க்கு முதன் முதலில் இந்த கதை உருவான இடம் ஒரு ரயில் பயணத்தில் 1990ல். அவர் கதை புத்தகமாக வெளியானது 1996ன் கடைசியில். இந்த ஏழு வருட காலகட்டத்தில் ரௌலிங்கின் வாழ்க்கையை சற்றுப் பார்க்கலாம். இங்கிலாந்தில் பிறந்த ரௌலிங் போர்ச்சுகலை சேர்ந்த ஒருத்தரைக் திருமணம் செய்து கொண்டு போர்ச்சுகல் செல்கிறார். அங்கு அவருக்கு ஒரு குழந்தை பிறந்தவுடன் திருமணம் ரத்தாகி இங்கிலாந்து வருகிறார்.

வேலை எதுவும் இல்லாததால் இங்கிலாந்து அரசாங்கம் கொடுக்கும் Welfareல் சில காலம் ஒரு வயது கூட முடியாத குழந்தையுடன் காலம் தள்ளுகிறார். குழந்தை தூங்கிய உடன் கிடைக்கும் நேரத்தில் மட்டும் எழுதுகிறார். இப்படியே 6 வருடம் எழுதிய முடித்த உடன் ஒரு ஏஜண்டுக்கு இரு பிரதிகள் அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காக எழுதிய அனைத்தையும் இரு முறை டைப் அடிக்கிறார்(ஜெராக்ஸ் எடுக்க பணம் இல்லாததால்). முதல் ஏஜண்ட் அவருடைய கதையை பிடிக்காமல் திருப்பி அனுப்பும் சமயம் ரௌலிங் அனுப்பிய பைல் பெரியதாக இருந்ததால் அதனை திருப்பி அனுப்பாமல் விட்டு விடுகிறார்.

மீண்டும் அவர் எழுதிய அனைத்தையும் இரு முறை டைப் செய்து இரண்டாவது ஏஜெண்டிடம் அனுப்புகிறார். இரண்டாவது ஏஜெண்ட் கதை பிடித்துப் போய் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்கிறார்.

அதே சமயத்தில் ஒரு டீச்சராக வேலைக்கு ஒரிடத்தில் சேருகிறார். இரண்டாவது புத்தகம் வெளியாகும் வரை டீச்சராகவே பணி புரிகிறார். இரண்டாவது புத்தகம் வெளியான அதே சமயம் அமெரிக்க பதிப்பகத்தார்(Scholastic) முதல் கதையை அமெரிக்காவில் வெளியிட அந்த சமயத்தில் மிக அதிகமான தொகையாக கருதப்பட்ட 1 லட்சம் டாலருக்கு எடுத்துக் கொள்கிறார்(இன்று ரௌலிங்கின் மதிப்பு ஒரு பில்லியனுக்கு மேலே என்று கணக்கிடப்படுகிறது).

Bloomsbury குழந்தைகள் புத்தகங்களை வெளியிட்டு வந்த ஒரு சாதாரண நிறுவனம். இந்தியாவில் குழந்தைகள் பதிப்பகங்களின் கதை எப்படியோ அதே போலத்தான் Bloomsbury கதையும். மிகப் பெரிய பதிப்பகம் கிடையாது. சில நூறு புத்தகங்களை மட்டுமே வெளியிட்டு வந்த ஒரு சாதாரண நிறுவனம். ஹாரிப்பாட்டரின் முதல் புத்தகம் 1000த்துக்கும் குறைவாகவே வெளியிடப் பட்டது.

இன்று ஹாரிப்பாட்டர் புத்தகங்கள் வெளியாகும் முன்னரே 30 லட்சம்(இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும்) விற்றுத் தீர்ந்திருக்கின்றன. வெளியான முதல் நாள் மட்டும் 1.1 கோடி புத்தகம் வெளியான 10 நாளில் 15 கோடி புத்தகம் விற்றிருக்கிறது.

ஏழு புத்தகங்களும் சேர்த்து 350 மில்லியன் அதாவது 35 கோடி புத்தகங்கள் 64 மொழிகளில் விற்றிருக்கிறது.

குழந்தைகள் நாவல் என்று இல்லை எந்த ஒரு நாவலும் இது வரை ஹாரி பாட்டர் அளவுக்கு விற்றதில்லை விற்கவும் போவதில்லை.

இந்தப் புத்தகம் வெளியான சமயம் ரௌலிங்கோ இல்லை Bloomsburyயோ ஒன்றும் பெரிய players கிடையாது. எதோ 1 கோடி போட்டி இரு கோடி எடுக்கும் வியாபாரத் தந்திரம் எல்லாம் ரௌலிங்கோ இல்லை Bloomsburyயோ ஆரம்ப காலத்தில் நினைத்திருந்தாலும் செய்திருக்க முடியாது. இந்த நாவலைப் படித்த ஒவ்வொருவரும் மற்றொருவரிடம் சொல்லி அப்படியே தான் பிரபலமானது ஹாரி பாட்டர்.

இந்த உலகம் ஐடியல் உலகம் கிடையாது. 1000 ரூபாய் சட்டை வாங்கி போடும் சமயம் 100 ரூபாய்க்கு சட்டை இருக்கு அதை வாங்கிப் போட்டுட்டா போதும் மீதி 900 ரூபாய் அடுத்த வேலை சோற்றுக்கு வழி இல்லாமல் தவிப்பவர்களுக்கு உதவலாம் என்று எத்தனை பேர் நினைத்துப் பார்க்கிறோம்.

இவ்வளவு பேரும் புகழும் கிடைத்ததால் ரௌலிங் கெட்டவரா? இந்தியாவின் மீடியாக்களுக்கு காசு கொடுத்து அவர் தான் இது போன்ற செய்திகளை காட்டச் சொல்கிறாரா? கண்டிப்பாக ஹாரி பாட்டர் புத்தகங்களுக்கு அப்படி செய்ய வேண்டும் என்று அவசியமே கிடையாது.

இது போல எத்தனை புத்தகங்கள் இதே போன்ற வியாபாரத் தந்திரம் மூலம் விற்றுத் தீர்ந்திருக்கிறது? இந்தப் பதிவில் எழுதி வைத்திருக்கிறேன் இனி மேல் ரௌலிங் நினைத்தால் கூட ஹாரி பாட்டர் போன்ற பிரபலமான ஒரு புத்தகம் எழுத முடியாது இது போன்ற ஒரு euphoria இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஒரு புத்தக வெளியீட்டால் வராது.

ஹாரிபாட்டர் வெளியாகும் அதே நாளில் அந்தப் புத்தகம் பல லைப்ரரிகளுக்கும் அனுப்ப பட்டுள்ளது.

ரஜினி படத்திற்கு 1000 ரூபாய் வரை டிக்கெட் விற்றது அதற்கு ரஜினி எப்படி பொறுப்பாக முடியும்? ரஜினி இதில் எல்லாம் தலையிட்டு கூடாது என்று சொல்ல வேண்டுமா?

அப்படி சொல்ல வேண்டும் என்று கருதுபவர் 100 ரூபாய் சட்டைக்காரரைப் போல Ideal நபராக இருக்க வேண்டும் இல்லை என்றால் முதுகைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

4 comments:

')) said...

நச்சென சொல்லியிருக்கிறீர்கள்

')) said...

செந்தில் குமரன்,
என்ன சொல்ல வரீங்க? ரௌலிங் ஏமாத்தலை.. அவங்க பேரைச் சொல்லி நம்ம ஊரூ ஊடகங்கள் தான் ஏமாத்துதுன்னு சொல்றீங்களா?

எப்பவோ ஏழையா இருந்த காரணத்துக்காக இப்ப ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்கும் ஹாரி பாட்டரை அதே நாள் வாங்கணும்னு தூண்டுவதை விமர்சிப்பது தப்புன்னு சொல்ல முடியாது..

ஹாரி பாட்டர் மேல ஒரு சாப்ட் கார்னரோட அணுகினால் அந்த இடுகை எரிச்சலை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது தான்..

')) said...

யாரும் யாரையும் ஏமாற்றலைங்க ரௌலிங் எப்பவாவது முதல் நாளே வாங்கிப் படிங்க சொன்னதா எங்கேயாவது சொன்னதை யாராலாவது எடுத்துக் காமிக்க முடியுமா?

15 வருடமா இந்தக் கதை எப்படி முடியும் என்று காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் தான் வெளியான உடனே வாங்கணும் என்று 11 நாளுக்கு முன்னால் இருந்து புத்தகக் கடைக்கு முன்னால் காத்துகிட்டு இருக்கறது போன்ற செயல்களை செய்யறாங்க. பெங்களூர் பாரமில் வெள்ளி இரவு 8 மணில இருந்து லாண்ட் மார்க்கு வெளியே உட்காந்து இருந்து புத்தகம் வாங்கியவர் புத்தகம் பற்றிய ஆர்வத்தில தான் வாங்கறார் ரஜினி படத்துக்கு செய்யற கோமாளித் தனம் மாதிரி இதுவும். ரஜினி எப்படி அந்த கோமாளித்தனத்திற்கு காரணம் ஆக முடியாதோ அதே போலத்தான் ரௌலிங்கும் இந்த மாதிரி கோமாளித்தனங்களுக்கு காரணம் ஆக முடியாது.

எப்பவோ ஏழையா இருந்ததை ஏன் குறிப்பிட்டு இருக்கேன்னா ஊடகங்கள் உள்ளே நுழைந்து இந்த மாதிரி பெரிய அளவு கவரேஜ் கொடுக்கும் முன்னரே இது ஒரு பெரிய ஹிட் ஆகி விட்டது என்பதைச் சுட்டிக் காட்டத்தான்.

ஒவ்வொரு குழந்தையும் இந்த புத்தகத்தை முதல் நாளே வாங்கணும்ன்னு துடிக்கறதுக்கு, ஏன் நான் முதல் நாளே வாங்கியதற்கு காரணம் ஊடகம் கிடையாது விளம்பர யுக்தி கிடையாது. அதுக்கு காரணம் முடிவைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தான். இந்த ஆர்வம் புத்தகத்தைப் படித்து அதனை என்ஜாய் செய்தவர்களுக்கு மட்டும் தான் புரியும்.

')) said...

நீங்கள் குறிப்பிடும் எனது அந்த பதிவு, ஹாரி போட்டரை விட அந்த பதிவு எழுதிய சமயத்தில் மிகுந்த பரபரப்பு ஏற்ப்படுத்திய் வண்ணம் வெளியான ஒரு திரைப்படத்தைப் பற்றி எழுதியது.

அந்த கதாநாயகனின் ரசிகர்களுக்கு பயந்து போட்டரை இழுத்தால்...ரெளலிங் ரசிகர்களிடம் மாட்டிக் கொண்டேன் போல:-)