Sunday, March 26, 2006

எழுதப்படாத கடிதம்

உயிரே,

உடல் எழுதும் மடல். பொதுவாக மடல்களில் நலம் விசாரித்து ஆரம்பிப்பதுதான் வழக்கம். நாம் நலம் விசாரித்துக் கொண்டால் அது வேடிக்கையாக இருக்கும். உடல் உயிரிடம் நலம் விசாரிப்பதா? பின் மடல் வரைவது மட்டும் எதற்கு? உயிர் உறங்கும் நேரம் உடல் இயங்குகிறது அந்த நேரத்தில் உணர்வால் இணைந்து இருந்தாலும், ஏதோ பிரிந்துள்ளது போல போன்றுகிறதே அது போலதான் நாம் வாழ்கிறோம். உண்மையில் உடலும் உயிரும் என்றுமே பிரிந்து செயல் படுவது இல்லை நாமும் அதை போலத்தான் உணர்வுகளாலும், உணர்ச்சிகளாலும், காதலினாலும் இணைந்துள்ளோம்.

நாம் கடிதங்களில் என்ன பரிமாறிக் கொள்ளப் போகிறோம். உன் மகிழ்ச்சியில் நான் புன்னகைக்கிறேன் என் கவலைகளில் நீ கண்ணீர் வடிக்கிறாய். இப்படி உன் உணர்வுகளில் காலம் கடத்தும் நான், நீ இங்கே நலம் நான் அங்கு நலமா என்று விசாரிக்க கடிதம் எழுதவில்லை.

பின் எதற்கு கடிதம்?

குழந்தையின் புன்னகை, இசை தரும் அமைதி, கவிதைகளில் உவமை, எழுத்தின் கற்பனை, பனி நடுவே உதிக்கும் சூரியன், தோழமையுடன் உரையாடல், மழைச் சாரல், நெகிழ்ச்சியான தருணங்கள், எதிர்பார்த்து கிடைக்கும் பரிசு, எதிர்பாராமல் நிகழும் சந்திப்பு, மாலை நேர தென்றல், மலர்களின் சுகந்தம், சில நேரம் கொள்ளும் ஏகாந்த உணர்வு, போன்றவற்றை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் வெளிப்படுத்துவது எதற்காக? இப்படி வெளிப்படுத்துவதும் ஒரு வகை மகிழ்ச்சி. அப்படி ஓரு முயற்சியே இந்தக் கடிதம்.

நான் உன்னை முதன் முதலில் பார்த்தது எப்பொழுது என்று நினைவில்லை, முதல் பல் முளைத்து, அது விழும் முன்னம் இருந்தே ஒருவரை ஒருவர் அறிவோம். முதன் முதலில் உன் மீது காதல் வயப்பட்டது எப்போழுது என்றும் எனக்கு நினைவில்லை, காதல் என்றால் என்னவென்றே அறியா பருவத்தில் இருந்து பேசி, பழகி, சண்டை போட்டு, விளையாடி இருக்கிறோம்.

உன்னை பற்றிய நினைவுகள், என் குழந்தைப் பருவ நினைவுகளை விட பழமையானதாக இருக்கின்றதால் நான் உன்னிடம் எப்பொழுது காதல் கொண்டேன் என்று நிச்சயமாக தெரியவில்லை எனக்கு.

ஆனால் முதன் முதலில் எப்பொழுது காதலை உணர்ந்தேன் என்று மட்டும் நினைவு உள்ளது எனக்கு.

பள்ளியில் விடலைப் பருவத்தில் விளையாட்டாக பெண்களை கிண்டல் செய்யும் நேரம் உன் பெயர் அடிபடும் சமயம் எல்லாம் கோபம் வந்ததே அந்த சமயத்தில்தான் சிந்திக்க ஆரம்பித்தேன் ஏன் கோபம் கொள்கிறேன் என்று.

சிந்தித்தும் உடனே உணரவில்லை காதலை. கோடை விடுமுறையில் நண்பர்களுடன் கூத்தடிக்கும் நேரம் போக வீட்டில் உள்ள நேரங்களில் உன்னை பற்றி நினைக்க ஆரம்பித்தேனே அப்பொழுதுதான் எனக்கு ஆரம்பித்து குழப்பம் எனக்கு.

குழப்பம் கொண்டேனே தவிர காதல்தான் கொண்டேன் என்று அறியவில்லை அப்பொழுதும். பின் கோடை விடுமுறை முடிந்து பல நாட்கள் குழப்பத்துடன் களித்த பின் ஒரு நாள் ஏதோ யாரோ பேசிக் கொண்டு இருக்கும் நேரம் நீ சிரிக்க தூரத்தில் இருந்த என் மனதில் உண்டான சலனம் சொல்லியது மடையா குழப்பம் கொள்ளாதே நீ காதலிக்க ஆரம்பித்து விட்டாய் என்று.

கடிதம் தொடரும்.

0 comments: