Wednesday, October 17, 2007

ஓ மனமே!!!

அழகான பெண்கள் எல்லோருமே உன்னையே ஞாபகப்படுத்துகின்றனர். அவர்கள் ஏன் அழகாக தெரிகிறார்கள் என்பதை உன்னை வைத்தே நிர்ணயம் செய்கின்றேன் நான். முகவெட்டு உன்னைப் போலவே இருக்கிறதே, உயரம் உன்னை விட எத்தனை இஞ்ச் கூட இல்லை குறைவு அந்தப் பெண்ணின் மூக்கு உன் மூக்கு போல கூர்மையாக இல்லையே என்று அழகைப் பார்க்கும் இடத்தில் எல்லாமே நீதான் எனக்குத் தெரிகிறாய்.

கடவுள் ஒரு வரம் கொடுத்தால் மூன்று வரம் வேண்டும் என்பவன் முட்டாள் எனக்கு ஒரு வரம் மட்டும் போதும் ஒரு நொடிப் பொழுதேனும் நான் நானாகவே இருந்தாலும் நீ என்னை நீ நீயாகவே விரும்ப வேண்டும் என்ற வரம் என்று கேட்பேன். நூறு ஜென்மம் வேண்டும் சாகா வரம் வேண்டும் என்ற பேராசை இருந்தாலும் ஒரு நொடிப் பொழுது போதும் எனக்கு வேறு ஒன்றுமே தேவையில்லை உன்னோடு நூறு ஜென்மம் உட்பட.

ஆப்பிள் வட்டமாக சிகப்பு நிறத்தில் இருக்கும், சிகப்பு என்றால் இப்படி இருக்கும், வட்டம் என்றால் இப்படி இருக்கும் என்று சொல்லிக் கொடுத்தவர் வாத்தியார் என்றால் நீயும் எனக்கு வாத்தியார் தான் அழகு என்றால் என்ன கவிதை ஏன் எல்லோரும் ரசிக்கிறார்கள், ராத்திரியில் தூக்கம் இல்லாமல் இருப்பது கூட எத்தனை இனிமையானது என்பதை கற்றுக் கொடுத்தது நீயல்லவா?

0 comments: